say no to cab1. குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) 2019 வந்ததற்குப் பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு (NCR) தயாரிப்பதற்கான அடிப்படையாகத் தேசிய மக்கள்தொகைப் பதிவு (NPR)க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லா மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப் போகிறோம் என்று அமித் ஷா சொன்னார். பின்னர் மோடி அப்படி ஒன்று இதுவரை பேசப்படவில்லை என்று சொன்னார். அதற்கு அடுத்து முரளிதரராவ் "பிரதமர் NCR இல்லை என்று சொல்லவில்லை இப்போதைக்கு இல்லை என்றுதான் சொன்னார்" என்று சொன்னார். ஏன் ஒரு விஷயத்தை இப்படி மாற்றி மாற்றிச் சொல்கிறார்கள்?

இது ஏமாற்றுகிற விஷயம்தான். அவர்கள் எப்பொழுதுமே தாங்கள் விரும்புவதை நடைமுறைப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். நாம் கேட்கும்போது இல்லை என்று சொல்வார்கள். புதிய கல்விக் கொள்கை கூட நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்திற்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். கேட்டால் நாங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று சொல்வார்கள். இது இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று வெளியில் பொய் சொல்வார்கள். நாடாளுமன்ற விதிகள் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. ஜனநாயக முறைகளைப் பற்றிக் கவலைப் படவில்லை. நினைத்ததை நடத்துவோம் என்கிற மாதிரிதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் நாங்கள் தேசியக் குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப் போகிறோம் என்று அமித் ஷா நாடாளுமன்றத்தில் சொன்னார். நாடாளுமன்றத்தில் மோடி அதை மறுக்கவில்லை. நாடாளுமன்றக் குறிப்புகளில் அது இருக்கிறது. அப்படி இருக்கிறது என்றால் அது அமைச்சருடைய உறுதியான திட்டம் என்று அர்த்தம். நாடாளுமன்றக் குறிப்புகளை நீக்காத வரைக்கும் எப்படி மோடியுடைய பேச்சை எடுத்துக் கொள்ள முடியும்? தன்னுடைய அமைச்சரைக் கண்டித்து, அவர் பேசியதை மறுக்காதவர் மக்களிடம் அப்படி ஒன்றும் இல்லை என்று கூறுகிறார். அதைப் பற்றிப் பேசவே இல்லை என்கிறார். முரளிதரராவ் இப்போதைக்கு இல்லை என்கிறார். அப்படியானால் எப்போது வைத்திருக்கிறார்கள்?

2. தேசிய மக்கள் தொகைப் பதிவு (NPR) என்பது 2010இல் காங்கிரஸ் கொண்டு வந்ததுதான் என்று அவர்கள் சொல்வது பற்றி.

இது ஏற்கனவே காங்கிரஸ் 2010 இல் கொண்டு வந்ததுதான். காங்கிரஸ் கொண்டு வந்த அந்த ஆவணங்களில் இல்லாத நிபந்தனைகள் இதில் வருகிறதா இல்லையா? காங்கிரஸ் கொண்டு வந்த ஆவண முறைகளைத் திருத்தித்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். காங்கிரஸ் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது. அவர்கள் ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஒரு ஒப்புதல் வாங்கிவிட்டு இதைச் செய்யவில்லை அவ்வளவுதான். மறைக்கப்பட்ட சதித் திட்டத்தை நிறைவேற்ற இதைக் கொண்டு வருகிறார்கள். இந்த நாட்டில் யாரெல்லாம் குடிமக்களாக இருக்க வேண்டும் என்று ஆளும் கட்சி மட்டும்தான் தீர்மானம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போங்கள் என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான், இந்துஸ்தான் என்று இவர்கள் சொல்வதில் அர்த்தம் கிடையாது.

prof karunanandham3. RSS தலைவர் மோகன் பகவத் இங்குள்ள எல்லோரும் இந்துக்கள்தான் என்று சொல்லியிருக்கிறார். CAA - NPR - NCR இவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் நிலையில் இந்தக் கருத்தை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

எல்லோரும் இந்துக்கள் என்று சொல்கிறவர்கள் எல்லோரும் இந்தியர்கள் என்று சொல்ல வேண்டியதுதானே. எல்லோரையும் குழப்புவதற்கும் ஏமாற்றுவதற்கும் திசை திருப்புவதற்கும் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. இந்துவுக்கும், இந்தியாவிற்கும் என்ன வித்தியாசம், அவர்கள் சொல்ல வேண்டும். எல்லோரும் இந்துக்கள் என்றால் இஸ்லாமியர்களுடைய பாபர் மசூதியை இடிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அப்படியானால் யார் இந்துக்கள், யார் இஸ்லாமியர்கள் என்ற வேறுபாட்டை அவர்கள் பார்க்கிறார்கள். இந்த நிலையில் இருக்கும்போது எல்லோரும் இந்துக்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? எல்லாமே மக்களைக் குழப்புவதற்குச் செய்யப்படுவது. ஏனென்றால் இவர்கள் திருட்டுத்தனமாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஒரே நாடு, எல்லோரும் இந்துக்கள் என்று சொல்கிறவர்கள் இந்துக்கள் எல்லோரும் ஒரே ஜாதி என்று சொல்ல வேண்டியது தானே. அப்படி அவர்கள் சொல்லவே இல்லையே.

4. பல மாநிலங்களில் தடுப்புக் காவல் முகாம்கள் கட்டப்படும் காட்சிகளை நாம் பார்க்கிறோம். எதற்காக இப்படி அவசர அவசரமாகத் தடுப்புக் காவல் முகாம்கள் கட்டப்படுகின்றன?

மாநில அரசுகளைத் தடுப்புக் காவல் முகாம்கள் அமைக்குமாறு இவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். முறையான ஆவணங்கள் இன்றித் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்காக இந்த முகாம்கள் கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். இது உண்மையில்லை. அந்த அளவிற்குப் பரவலாக வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டவர்கள் என்று சொன்னால், எந்தெந்த இடங்களில் விமான நிலையத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதோ, அங்கு மட்டும் இதுபோன்ற தடுப்புக் காவல் முகாம்கள் அமைத்தால் போதுமானது. ஆனால் இதை ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இங்கே வாழக் கூடியவர்கள் சிலரை அந்நியமாக்கப் பார்க்கிறார்கள். ஏனென்றால் ஈழ அகதிகள் வந்த பிறகுதான் இங்கு முகாம்கள் அமைக்கப்பட்டன. இங்கே இருக்கும் சிலரை அகதிகளாக மாற்ற அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த ஏற்பாட்டைச் செய்து வருகிறார்கள்.

5. தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்றவை இஸ்லாமிய மக்களைக் குறிவைத்து செய்யப் படுவதாகவே இருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் கிறிஸ்தவர்களைச் சேர்த்திருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இஸ்லாமியர்கள் முதலில். பின்னால் எல்லோரும் வரப் போகிறார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களையும் கொன்றவர்கள்தான். எல்லா எதிர்ப்புகளையும் ஒரே நேரத்தில் கொண்டு வர வேண்டாம் என்பதற்காக முதலில் இஸ்லாமியர்கள் மேல் கை வைக்கிறார்கள். இது ஒரு முன் உதாரணமாக ஆகிவிட்டால், அதற்குப் பிறகு சிறு பகுதியினரை எளிதில் வெளியேற்றி விடுவார்கள். ஆதார் என்பது தான் இறுதியான அடிப்படை ஆவணம் என்று சொன்னவர்கள், எத்தனை அடிப்படை ஆவணங்களை உருவாக்குவார்கள்? "ஒரே நாடு ஒரே ஆதார்" என்று நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே. அதிலேயே பயோமெட்ரிக் விவரங்கள் எல்லாம் இருக்கின்றனவே. அவர்களுக்கு உள்நோக்கம் வேறு இருப்பதால்தானே வேறு வேறு பெயரில் இப்போது கொண்டு வருகிறார்கள். அவர்கள் நோக்கம் நிறைவேறும் வரை புதுப்புது விளக்கங்களையும் முறைகளையும் கொண்டு வருவார்கள்.

- பேராசிரியர் கருணானந்தம்

நேர்காணல் மா. உதயகுமார்

Pin It