1) ‘சங்கராச்சாரியாரைக் கைது செய்தார் ஜெயலலிதா. கடவுளின் சாபம்தான் அவர் இப்போது சிறையில் இருக்கிறார்’ என்று சுப்பிரமணிய சுவாமி கூறியிருக்கிறாரே!

டான்சி ஊழலில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாரே! அப்போது சங்கராச்சாரியாரின் ‘பவர்’ காப்பாற்றாததால்தான் சங்கராச்சாரியைக் கைது செய்தாரோ என்னவோ? சுப்பிரமணிய சாமியின் உளறலுக்கு அளவே இல்லை. சரி, சங்கராச்சாரியார் சிறைக்கு போனதும் கடவுளின் சாபத்தால்தானா?

2) ஜெவுக்கு எதிரான தீர்ப்பைக் கலைஞர் வரவேற்கவில்லையே காரணம் என்ன?

 உடனடியாக எப்படி வரவேற்பார். குடும்பமே ஊழலில் ஊறித் திளைத்தது. இன்று உனக்கு! நாளை எனக்கு! அதனால் உடனடியாக வரவேற்க முடியுமா?

3) 66 வயதுப் பெண்ணைச் சிறையில் அடைப்பதா? ஊரில் யாரும் செய்யாத குற்றத்தையா ஜெயலலிதா செய்து விட்டார்?

thenthamizhan‘அய்யோ! கொல்றாங்களே! எனக் கூக்குரலிட்டுக் கத்தி கைதாகி சிறைக்குள் போனபோது கருணாநிதிக்கு வயது என்ன? 18 ஆண்டுகள் வாய்ப்பளித்தும் தாம் குற்றமற்றவர் என ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் உள்ளடங்கிய குற்றக் கும்பலால் நிரூபிக்க முடியவில்லை. பல்வேறு காரணங்களைக் கூறி இழுத்தடிக்கப்பட்டு, 18 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தண்டனை அளிக்கப்பட்டது. தண்டனை பெற்ற கைதி களுக்கு சிறை விதிகளின்படி சீருடை, உணவு, வசதிகள் கொடுக்கப்படாமல், சிறைக்குள்ளிருந் தார்க்கிறார் என்பதைத் தவிர அனைத்து வசதிகளும் அவருக்குச் செய்து கொடுக்கப்பட்டது. சிறைக்கு வெளியே தனியார் மருத்துவமனை தயார் நிலையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது

 விசாரணைக் கைதிகள் என்னும் நிலையில் நூற்றுக் கணக்கான இசுலாமியர்கள் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பிணை மறுக்கப்படுகின்றது. தண்டனைக் கைதிகள் என்னும் நிலையில் இராசீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் 22 ஆண்டுகள் தண்டனைக்குப் பிறகும் சிறையில் உள்ளனர். மாநில முதலமைச்சர் என்னும் முறையில் விடுதலை செய்ய வாய்ப்பிருந்தும், சட்டமன்றத் தீர் மானங்கள் மூலம் தள்ளி விட்டு சிக்கலுக் குள்ளாக்கியவர் இந்த ஜெயலலிதா.

தென்தமிழன் 20 ஆண்டு களுக்கும் மேல் சிறைத் தண்டனை அனுபவித்து, மனநலம் பாதிப்படைந்து, உடல்நலம் குன்றித் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள முடியாத சூழலில் திருச்சி மருத்துவமனையில், படுக்கையில் விலங்கிடப் பட்டு, உறவினர் துணையுடன் உள்ளவரை விடுதலை செய்ய ‘ஜெ’ அரசு மறுத்துவந்தது. ஊழல் மூலம் சொத்து சேர்ப்பது குற்றமில்லையெனில், செய்தவர் குற்றாவாளி இல்லையெனில், பின் யார் தான் குற்றவாளி? ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றக்கும்பலே!

இதய அறுவை சிகிச்சை செய்தும் இயங்கிக் கொண்டிருக்கும் அய்யா பழ.நெடுமாறன் ‘ஜெ’ அரசால் பொடா சட்டம் உட்பட பலமுறை கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தாரே. அவருடைய வயது என்ன - பதினாறா?

4. உசிலம்பட்டியில் விமலா என்கிற பெண் பெற்றோர்களாலேயே கொலை செய்யப்பட்டுள்ளாரே, ஏன்?

 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் விமலா என்கிற பிறன்மலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தப் பெண் ஒரு தலித் இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். குடும்பம், சாதி ஆதிக்க சக்திகள், காவல்துறை ஆகிய மூன்று தரப்பும் கூட்டணி சேர்ந்து இணையர்களைப் பிரித்து பெண்ணைப் படுகொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். உடனடியாக எரித்துச் சாம்பலாக்கியுள்ளனர். பையன் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டு தாய், தகப்பன், மயான ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளனர். துணைபோன காவல்துறை ஆய்வாளர் ஆனந்தி என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதை கௌரவக் கொலை என அழைக்கின்றனர். நாம் இதை ‘வறட்டுக் கௌரவக் கொலை’ எனக் குறிப்பிடலாம். சாதிய கௌரவம் பெண்ணைத் தன் சாதி மணமகனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதிலேயே காப்பாற்றப் படுகிறது. தம்பதிகள் இருவரையும் தூக்கில் தொங்கவிடுவது, பெரும்பாலும் பெண்ணைப் பிரித்து வைத்து விசம் கொடுத்தோ, தூக்கில் போட்டோ கொலை செய்வது, போன்ற வன்செயல்களுக்கு எதிரானச் சட்டப் படியான நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் சாதி மறுப்புத் திருமணங்கள் பெருகுவதும், ‘வரட்டுக் கௌரவக் கொலைகளுக்கு’ எதிரான முற்போக்கு இயக்கங்களின் போராட்டங்களும் மிக அதிகமாகத் தேவை. பெண்களை அமைப்பாக்கும் முயற்சிகளே இச்செயல்களை முறியடித்து முனைப்போடு செயலாற்ற உதவும்.

5. தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத் தேர்தல் பற்றி?

நடந்து முடிந்தது உள்ளாட்சி களுக்கான இடைத் தேர்தல். சில கட்சிகள் போட்டியிலிருந்து முன் கூட்டியே விலகிக் கொண்டன. பல இடங்களில் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதை, காவல் துறை துணைகொண்டு ஆளும் கட்சியினர் தடுத்துள்ளனர். பெரும்பாலும், ஆளுங் கட்சியான அதிமுகவினரே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளனர். ஊராட்சி தலைவர் பதவிகள் ஏற்கெனவே ஏலம் விடப் பட்டு, சாதி அதிகாரத்தைக் காப்பாற்ற போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது. பெண்கள், தலித் மக் களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சிப் பதவிகளுக்குப் பெயர ளவில் ஆள் நிறுத்தப்பட்டு, சாதி-ஆண் அதிகார மையங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கின்ற நிர்வாக முறையே உள்ளது! உள்ளூர் அரசியல் தலைவர்கள், ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள் கூட்டுக் கொள்ளையே ஊராட்சி நிர்வாகமாக அதிகாரம் செலுத்தி வருகின்றது. இக்கொள்ளைக் கூட்டுக்கு எதிரானப் போராட்ட எழுச்சி மாநில மட்டத்தில், உள்ளூர் மட்டத்தில் கட்டமைக் கப்பட வேண்டிய அவசியம் நம்முன் சவாலாக உள்ளது.

6. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் தசரா உரையைத் தூர்தர்சனில் ஒளிபரப்பியதில் என்ன தவறு?

mohan bhagwatஆர்.எஸ்.எஸ், பா.ச.க. காவிப்படையின் ‘தசரா ஆட்டம்’ ஏற்கெனவே தொடங்கிவிட்டது. கல்வி, பாடத்திட்டம், அரசின் ஊடகம் எனக் கைப்பற்றி தனது காவி நிகழ்ச்சி நிரலை செயலாக்கத் தொடங்கிவிட்டனர். பஜனைகள், ஏசுவின் எழுப்புதல் கூட்டங்கள், முல்லாக்களின் குரான் போதனைகள் ஏற்கெனவே அரசு ஊடகங்களில் ஒலி-ஒளி பரப்பப்பட்டு வருகின்றன. இவை மத, கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கான நிகழ்ச்சிகளாகச் சொல்லப்பட்டு ஒலி-ஒளி பரப்பப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பிரச்சாரம் இந்த வகைப் பட்டதல்ல. ‘அகண்ட இந்து ராஜ்ஜியக் கனவு’, ‘ஏக இந்து இந்தியா’ என சட்டவிரோத, சமூக விரோத, சனநாயக விரோத நிலைப்பாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைவரை, இசுலாமியர்கள், கிறுத்துவர்கள், கம்யூனிஸ் டுகள் எங்கள் எதிரிகள், மதச்சார்பற்றவர்கள் எங்கள் எதிரிகள் என அறிவித்துச் செயல்படும் காவிப்படை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலை வரை அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசு நிறுவனமான தூர்தர்சன் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் ஒளிபரப் புவது என்பது ஏற்கெனவே இந் நிறுவனங் களுக்குள் காவிப் படை சக்திகள் ஊடுருவி யுள்ளன என் பதையே காட்டுகிறது. இன்று மோகன் பகவத், நாளை தொகாடியா என மத அடிப்படைவாத சக்திகள் இனி அரசு ஊடகங்களைப் பயன் படுத்தக்கூடும்.

காந்திக்குப் பதிலாக நேருவைக் கொன்றிருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கத்தின் தலைவரின் பேச்சை அரசு தொலைக்காட்சியில் ஒளி பரப்புவது நியாயமா? என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

7. வடமாநிலத் தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாகிறது. தமிழ்த் தொழிலாளர்களின் வேலை பறிக்கப் படுகிறதே! தமிழினம் கலப்பினமாகப் போய்விடும், தடுக்க வேண்டும். வெளியாரை வெளி யேற்றுவோம்! அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க! என முழக்கங்கள் ஓரிரு அமைப்புகளால் “ தமிழ்த் தேசியம்” எனும் பெயரால் முன்வைக்கப் படுகிறதே! இது சரியான அணுகுமுறையா?

பஞ்சம் தலைவிரித்தாடிய காலங்களில் ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு சென்று பிழைக்கப்போவது பொதுவான பழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக உலகமயமாக்கச் சுரண்டல் இயந்திரமயமாக்கம், பயிர்மாற்றம், பாசன உத்திரவாதமின்மை, நதி நீர்ப்பங்கீடு தாவாக்கள் தீர்க்கப்படாமல் தள்ளிப்போடுவது, ரியல் எஸ்டேட் மூலம் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக்கப்படுவது, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக ஆயிரக் கணக்கான எக்டேர் நிலங்கள் கையகப் படுத்தப்படுவது, நான்கு, ஆறுவழிச் சாலைகள் விரிவாக்கம் என வளர்ச்சியின் பெயரால் திட்டமிட்டு விவசாயத்தை அழித்து விவசாயத் தொழிலாளர்களையும் விவசாயி களையும் மாற்றுத் தொழில்களை நோக்கியும், பெருநகரங்களை நோக்கியும் விரட்டுகிறது. கட்டு மானம், சாலைப் பணி, உணவு நிறுவனங்கள், நிரந்தரமற்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் போன்ற அமைப்பு சாராத தொழில்களில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர், தனியார்மயம் விரைவுபடுத்தப்படுவதனாலும், இந்திய, தமிழக அரசுகள் கடைப்பிடித்து வருகிற தொழிலாளர் விரோதப் போக்குகளினாலும் இலாபவெறி பிடித்த பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து உள்ளூர் தொழிலாளர்களைப் புறக்கணித்து, தப்பித்து குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களைத் தேடுகின்றனர். கோடிக்கணக்கான இளைஞர்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் வேலைத் தேடி, குடும்பங்களை விட்டு பெருநகர விரிவாக்கம் நடைபெறும் பிறமொழி பேசும் பகுதி களுக்கு அடிமாட்டுக் கூலிக்கு ஒப்பந்ததாரர்களால் கொண்டுவரப்படுகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து மும்பை, குஜராத் போன்ற பகுதிகளுக்கும், பிகார், ஓடிசா,வடகிழக்கு மாகாணங்களிலிருந்து தமிழ் நாட்டிற்கும் என இடப்பெயர்வு நடக்கிறது.

தமிழக அரசின் கட்டுமானப் பணிகள், தமிழ் நாட்டுக்குள் நடைபெறும் இந்திய அரசின் நெடுஞ்சாலை, இருப்புப் பாதைப் பணிகள் அனைத்தும் பன்னாட்டுப் பெருங்குழும கட்டுமான நிறுவனங் களுக்கே கோடிக்கணக்கான கமிசன் அடிப்படையில் ஒப்பந்த உரிமம் வழங்கப்படுகின்றன. எங்கே கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறதோ அங்கே வேலை வாய்ப்பளிப்பதும், கூடுதல் தேவையெனில் பிற மாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு வருவது எனும் அணுகுமுறைக்குப் பதிலாக, அடிமாட்டுக் கூலிக்கு, கொத்தடிமைபோல அதிகபட்ச நேரம் வேலை செய்யும், கொட்டடிகளில் அடைபட ஒத்துக் கொள்ளும் தொழிலாளர்களைக் கொண்டு வந்து இறக்குகின்றனர். கொண்டுவந்து இறக்குபவர்களில் தமிழன், தெலுங்கன், கன்னடன், வடநாட்டான், என ஏதும் வித்தியாசமில்லை. எங்கே எவன் கட்டுமான ஒப்பந்த உரிமம் பெறுகிறானோ அங்கே பஞ்சை, பரதேசிகளாக ஆயிரக்கணக்கான திறனுள்ள, திறனற்ற உடலுழைப்புத் தொழிலாளர்கள் குவிந்து உள்ளனர். மாநிலம் விட்டு மாநிலம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சக் கூலிச்சட்டங்கள், ஏனைய நலச் சட்டங்கள் அமுலாக்கப் படுவதில்லை.

வேலை கிடைக்காத தமிழ்நாட்டுத் தொழி லாளர்களின் இயல்பான கோபத்தை - குறைந்த கூலிக்கு கொத்தடிமைகளைத் தேடும் தமிழ்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளை நோக்கி, பிழைப்புத் தேடி அலையும் வடமாநிலத் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்திக் அவர்களைக் கொண்டு வந்து இறக்கும் உள்ளூர்,வெளியூர் கங்காணிகளை நோக்கி, தொழிலாளர் நலச் சட்டங்களைப் பன்னாட்டு முதலாளிகள் சுரண்டலுக்காக அமுலாக்க மறுக்கும் தமிழக, இந்திய அரசுகளை நோக்கி, ஏகாதிபத்தி யங்களின் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைக்கு எதிராகத் திருப்ப வேண்டும். ஆனால், தமிழ்த் தேசிய இயக்கங்கள் எனத் தங்களைக் கூறிக் கொள்பவர்கள் குறைந்த கூலிக்கு, வயிற்றுப்பிழைப்புக்காக, உறவுகளைப் பிரிந்து கொத்தடிமைகளாக, ஆரோக்கியமற்ற சூழலில், மழையிலும்,வெயிலிலும் ஓட்டச் சுரண்டப்படும் தொழிலாளர்களை நோக்கி தமிழகத் தொழிலாளர்களை, தமிழக அரசியல் முன்னணிகளைத், தமிழ்ச் சமூகத்தை திருப்புவதன் மூலம் தவறாக வழி நடத்துகிறார்கள்.

 கன்னடத்தில் ஒரு வட்டாள் நாகராஜ், மராட்டியத்தில் ஒரு தாக்கரே குடும்பம் போல் தமிழகத்தில் எளிமை யான மக்களுக்கு எதிரான முரண்பாட்டைத் தூண்டுகின்ற ஆபத்தான போக்கு இது. இந்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசுக்கு எதிராக, பல்வேறு மாநில அரசுகளுக்கு எதிராக, கங்காணிகளுக்கு எதிராக, ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக என எதிரிகளுக்கு எதிராகக் கூர்மைப்படுத்த வேண்டிய கோபாவேசத்தைப் பிழைக்க வந்த சக தேசிய இனங்களின் உழைக்கும் மக்களை நோக்கித் திருப்புவது, சொந்த மக்களைத் தவறான இனவெறி அரசியலை நோக்கித் தூண்டுவதாகும்.

சாதிகளுக்கிடையே கலப்பு கூடாது என இயக்கம் நடத்தும் சாதிவெறியர்களை எதிர்த்து நின்ற, நிற்கின்ற தமிழ் மண்ணில் இனக்கலப்பைத் தடுக்க வேண்டும் என மானுட விரோத இட்லர் அரசியலைப் பேசும் இயக்கங்களிடமிருந்து தமிழ்த் தேசிய அரசியலைக் காப்பாற்ற வேண்டும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் வாக்கை, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஒருபுறம் உச்சரித்துக் கொண்டே மறுபுறம் அதற்கு எதிரான கருத்தியலை விதைப்பது ஆபத்தானது. ஏக இந்து நாடு என காவிபயங்கர அரசியல் பேசிக் கலவரங்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. போல், பிற்போக்குத் தமிழ்த் தேசிய அரசியலும் உள்முரண்பாடுகளைக் களைந்து தேசிய சமூகம் உருப்பெறுவதிலிருந்து திசைதிருப்பி, சக உழைக்கும் மக்களை எதிரிகளாகக் காட்டி வெளி முரண்களை நோக்கித் தூண்டுகிறது. பழைய சாதியக் கட்டுமானங்களை நொறுக்கி, தமிழனைத் தமிழன் சுரண்டும், அரசியல் ஏமாற்று வேலை செய்யும் இழிசெயலுக்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக ஒன்றுபட்டு எழுவதே முற்போக்குத் தமிழ்த் தேசியம்.

8. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிரான போராட்டங்கள், ஊழல் ஒரு குற்றமில்லை எனச் சொல்கின்றனவோ?

ஒரு ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் எனச் சொன்ன ஜெயலலிதாவுக்கு 65 கோடி சொத்து எப்படி வந்தது? இது ஜெயலலிதா உள்ளிட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான வழக்கு. தமிழகத்தில் நடைபெற்ற வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு 18 வருடங்கள் ஜெயலலிதா குற்றக் கும்பலால் இழுத்தடிக்கப்பட்டு செப்டம்பர் மாதம்தான் தீர்ப்பு வந்தது. தகுந்த ஆதாரங்களுடன் தீர்ப்பு தரப்பட்டுள்ளது. ஜெயலலிதா குற்றக் கும்பல் சிறைக்கு அனுப்பப்பட்டனர். யார் ஊழல் செய்யவில்லை? குற்றம் சாட்டிய திமுக அன்பழகன் - கருணாநிதி குடும்பத்தின் ஊழலை அறியாதவரா? தெய்வத்திற்கே தண்டனையா? காவிரி உரிமையைப் பெற்றுக் கொடுத்ததால் கன்னட வெறியர்கள் பலி வாங்கி விட்டனர் என ஜெயலலிதா அம்மா.தி.மு.க. கட்சிக்காரகள், அமைச்சர்கள், பயனடைந்தவர்கள், பயனடைய முயல்பவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காவல்துறையின் துணையுடன் போராட்டங்கள், கடையடைப்புகள், பேருந்து எரிப்புகள், மறியல்கள்,மொட்டை போடுதல், தேர் இழுத்தல் எனப் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தனர். ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து கடையடைப்பு செய்த வணிகர்கள், பல்வேறு தனியார் நிறுவனங்கள், திரைத்துறையினர் போராட்டத்தில் இறக்கப்பட்டனர்.

அரசியல் களத்தில் தங்களுடைய எதிர்க் கட்சியினர் ஆட்சியில் இருக்கும் போது செய்த ஊழல் மட்டுமே ஊழல். தங்கள் கட்சித் தலைவர் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் எனும் நிலையே உள்ளது. அதே வேளை ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பான்’ என ஊழலை நியாயப்படுத்தும் கருத்தியல் ஊழல் அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டு, மக்கள் நலத் திட்டங்களின் நிதியைக் கொள்ளையடிக்க வாய்ப்பை உருவாக்கி உள்ளனர். நீதிமன்றங்களுக்கு செல்லும் அரசியல் தலைவர்களின் மீதான ஊழல் வாக்குகள் விசாரிக்கப்படாமல், கூட்டணி அரசியலால் சில பத்தாண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு நீர்த்துப் போகச் செய்து காலாவதியாக்கப்பட்டுள்ளது. இதை மக்களும் மறந்து போவது வழக்கமாக உள்ளது.

 பெரும்பாலும் இவ்வழக்குகள் தேர்தல் காலத்தில் ‘ஊழல்வாதி’ என முத்திரை குத்து வதற்கு பரஸ்பரம் பயன்படும். எப்போதாவது அதிசயமாகத் தண்டனை வழங்கப்படும். பீகாரில் லல்லு பிரசாத், கர்நாடகாவில் எடியூரப்பா என தண்டனையளிக்கப்பட்டதற்கு எனச் சில உதாரணங்களும் உண்டு. ஜெயலலிதாவின் அம்மா.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்ததால் இந்த சட்டம் - ஒழுங்கை மீறிய அட்டகாசம் நடந்தது. தமிழ்நாடே தீர்ப்பை எதிர்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள்.

கார்பரேட் பன்னாட்டு முதலாளிய ஆளும் வர்க்கம், அவர்களுக்காக ஆளும் அரசியல் கும்பல், அதிகார வர்க்கம் ஊழலைத் தனது அங்கமாக வைத்துள்ளது. மௌனம் கலைத்து இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ள ஊழல் எதிர்ப்பு, கார்ப்பரேட் சுரண்டல் எதிர்ப்பு இயக்கங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். கீழ்மட்ட ஊழல், மேல்மட்ட ஊழல் எதிர்ப்பு மனோபாவத்தை மீட்டெடுக்க கடும்முயற்சி மக்கள் இயக்கங்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். 

Pin It