காந்திப் படுகொலை, பாபர் மசூதித் தகர்ப்பு இரண்டுமே இந்திய வரலாற்றின் இரு பெரும் பயங்கரவாதச் செயல்கள் என 1992 டிசம்பர் 07ஆம் நாள் வெளியான முக்கிய நாளேடுகள் வர்ணித்தன. இந்துத்துவ சக்திகள் இவ்விரு கொடுஞ்செயல்களிலும் தங்களுக்குத் தொடர்பில்லை என விலகிக் கொண்டாலும், ஒன்று நிச்சயம்: இரு நிகழ்வுகளும் இந்துத்துவ பயங்கரத்தின் ஏரண நீட்சிகளே!

பாபர் மசூதி இடிப்பு நிகழ்வுக்குப் பெருந்திரளாய்க் கர சேவகர்களை அழைத்துச் சென்ற லால் கிருஷ்ணன், அங்கு கூத்தாடிக் கும்மாளமிட்ட முரளி மனோகர், உமா பாரதி உள்ளிட்ட இந்த்துவவாதிகள் அனைவரும் இதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என வெட்கமில்லாமல் பொய் சொன்னார்கள். ஆனால் பாஜகவினர் போல் பொய் சொல்ல மாட்டேன், எங்கள் சிவசேனைத் தொண்டர்களுக்கு இந்த மசூதி இடிப்பில் பங்குண்டு என்பதில் உள்ளபடியே பெருமைப்படுவதாகச் சொல்லி, பாஜக கும்பலின் பொய்யைப் போட்டுடைத்தார் பால் தாக்கரே.

modi-and-rajnath-singh

அன்று பாபர் மசூதி இடிப்பை பயங்கரவாதச் செயலெனக் கண்டித்த பத்திரிகைகள் எதுவும் இடிப்பில் தொடர்புடைய அத்வானி, ஜோஷி, தாக்கரே உள்ளிட்ட எவரையும் பயங்கரவாதிகள் என அழைக்க மறுத்தன. அவர்கள் நடத்திக் காட்டிய அந்தக் கொடுநிகழ்வே மும்பை தொடங்கி கோத்ரா, குஜராத் முடிய இந்தியாவெங்கும் பல்லாயிரம் கல்லறைகள் எழும்புவதற்கு அடிப்படைக் காரணமாயிற்று என்பதே வரலாற்று உண்மை. ஆனால் அதே கெடுமதியர்கள் வாஜ்பாய் தலைமையில் அமைச்சர்களாக வலம் வந்த போது இந்திய ஊடகர்கள் எவருக்கும் அறச் சீற்றம் பொங்கவில்லை. மாறாக, அந்த அமைச்சர்களின் மாண்புகளையும் 'ராஜதந்திர' நடவடிக்கைகளையும் போற்றிப் புகழ்ந்து வந்தனர், வடக்கத்திய ஊடகங்கள் அவர்களில் சிலருக்கு 'சிறந்த அரசியல்வாதிகள்' விருது கொடுத்தும் மகிழ்ந்தது.

அப்படியானால் காந்திக் கொலை, மசூதி இடிப்பு என்றதும் இவர்கள் பயங்கரவாதம் எனச் சீறிய வேகத்தை என்னென்பது? உள்ளபடியே அது வெறும் செல்லக் கோபமே. இந்துத்துவக் குருதிதான் இந்திய ஊடக வலைப்பின்னலில் ஊடிப் பரவி ஓடுகிறது. இந்துத்துவ ராஜ்ஜியத்தில் ஒரு சாதாரண ஐந்து நட்சத்திர விடுதியைத் தாக்கிய அஜ்மல் கசப் ஊரறியாது தூக்கிலிடப்பட வேண்டும். ஆனால் வரலாற்றுவழி வந்த பாபர் மசூதியைத் தாக்கிய ஒருவரையும் ஊரறியச் சிறையில் கூட அடைக்க வேண்டியதில்லை. இந்திய ஊடகங்களைப் பொறுத்த வரை, இஸ்லாமிய பயங்கரவாதம் தீட்டானது, இந்துத்துவ பயங்கரவாதம் புனிதமானது!

இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ஊடகர்களின், அரசியல் ஆய்வர்களின் மொன்னை விமர்சனங்களே பாஜகவுக்கு இன்னும் துணிச்சலைத் தந்தது. குஜராத்தில் இந்துத்துவக் கூத்தாடிய மோடியைக் கொண்டு போய் இந்தியத் தலைமைப் பீடத்தில் அமரச் செய்தது.

ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் பாஜக பாஜகவாக நடந்து கொள்கிறது, மோடி மோடியாக நடந்து கொள்கிறார். வாஜ்பாய் தலைமையிலான சிறுபான்மை தேஜகூ ஆட்சியே சரஸ்வதி வந்தன ஏற்பாடு, சோதிடப் பாடத் திட்டம் என இந்துத்துவ பஜனையில் இறங்கியது என்றால், இப்போது முரட்டுப் பெரும்பான்மையுடன் நடைபெறும் மோடியின் ஆட்சி ஓர் இந்துத்துவ வெறியாட்டத்தையே நடத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் புதுப் புது மொழிவெறி, மதவெறி அறிவிப்புகள் வந்த வண்ணமுள்ளன.

இந்து மதக் கருத்தியல் என்பது இறைவழிபாட்டோடும், அது சார்ந்த மெய்யியலோடும் முடிந்து விடுகிறது. ஆனால் சங்கப் பரிவாரத்தின் இந்துத்துவக் கருத்தியல் என்பது வர்ணாசிரம தர்மத்தை, சிறுபான்மைச் சமய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவேதான் அன்றாடம் பாஜகவினர் பலரும் பார்ப்பனிய நஞ்சையும் சிறுபான்மைச் சமூக வன்மத்தையும் கக்கி வருகின்றனர். அவர்களின் அறிவிப்புகள் பலவும் சமூகநீதியின் அடித்தளத்துக்கே வேட்டு வைக்கின்றன.

பாஜக பதவியேற்றதுமே குஜராத்தில் வல்லபாய்க்குச் சிலை வைக்க 200 கோடி ஒதுக்கியது, அவர் இத்தனை நாளும் மறக்கப்படிக்கப்பட்டாராம். எனவே அவர் பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடியது. உண்மையில் வல்லபாய் வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் மக்கள் பக்கம் நின்றவரா? இந்திய அரசமைப்புப் பேரவை விவாதத்தில் இந்தியாவில் தொடக்கக் கல்வியை இலவசமாக வழங்க வேண்டுமெனும் தீர்மானத்தை முனைவர் அம்பேத்கர் முன்வைத்த போது, அதனைக் கடுமையாக எதிர்த்து இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்தினார் வல்லபாய். இந்தியர்களுக்கு இலவசக் கல்வியளித்துச் சமூகநீதி விளக்கேற்ற முனைந்த அம்பேத்கருக்குத் திருவிழா எடுக்க மனமில்லாத பாஜக இந்தியக் கல்வியைக் குழிதோண்டிப் புதைத்த வல்லபாயை இந்தியாவின் மாமனிதராகக் காட்டும் வேலையில் இறங்கியுள்ளது.

இன்று பாஜக அத்வானியைத் திண்ணையில் உட்கார வைத்திருக்கலாம். ஆனால் அவர் கமண்டலம் ஏந்தி மண்டலை ஒழிக்க அன்று வரிந்து கட்டி நின்றாரே, அந்தச் சமூகஅநீதிக் கருத்தை அரியணையில் ஏற்றி வைக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்தி, சமற்கிருதத் திணிப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிதீவிரமாக இறங்கியுள்ளது.

இந்திய ஆட்சியர்ப் பணித் தேர்வுகளில் கேட்கப்படும் இருபதே ஆங்கில வினாக்களையும் நீக்கி இந்தியில் மாற்றக் கோரி வடக்கே இந்திக்காரர்கள் முன்வைக்கும் கோரிக்கையை உடனே ஏற்கிற பாஜக அரசு, இதே தேர்வுகளைத் தமிழில் எழுத வேண்டுமெனத் தமிழகத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கையைக் காதில் கூட போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை.

மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாடச் சொல்லி சுற்றறிக்கை விட்டது பாஜக. காரணம் சமற்கிருதம் இந்திய மொழிகளின் தாயாம். இந்தக் கதையை இந்தியாவில் வேறெங்கும் சொல்லலாம். ஆனால் எந்த ஓர் அயல்மொழியின் துணையுமின்றி இயங்கவல்லது தமிழ் எனப் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்களால் மெய்ப்பித்துக் காட்டப்பட்டுள்ள தமிழ் மண்ணில் சமற்கிருதக் கயிறு திரிக்கிறது பாஜக. எந்த சமற்கிருதம் தமிழர்களின் செந்தமிழ் ஊர்ப் பெயர், இறைப் பெயர் திரித்துத் தமிழர்தம் குடிகெடுத்ததோ, எந்த சமற்கிருதம் செந்தமிழ் நடை கெடுத்து மணிப்பிரவாளமாக்கி தமிழர்தம் தாய்மொழியை அசுத்தம் செய்ததோ, அந்த சமற்கிருதத்தைத் தமிழ் மாணவர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டுமாம். உயிர்வாழும் இந்தியையே ஏற்க மறுத்துத் தீக்குத் தங்களைத் தின்னக் கொடுத்த மாணவச் சமுதாயத்திடம் உயிர்போன சமற்கிருதத்தைத் திணிக்கத் துணிகிறது பாஜக.

மத்திய அரசுப் பள்ளிகளில் சமற்கிருத வாரத் திணிப்பு என்றால், இந்தியப் பள்ளிகள் அனைத்திலும் பல பத்தாண்டுகளாய்க் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திலும் கை வைக்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். ஆசிரியர் தினத்தை இனி 'குரு உத்சவ்' எனக் கொண்டாட வேண்டுமாம். இது தமிழர்கள் மீது மட்டுமல்ல, இந்திக்காரர்கள் மீதான திணிப்புந்தான். அவர்கள் இந்நாளை 'சிக்ஷக் திவஸ்' என்னும் பெயரிலேயே ஆசிரியர்களைக் கொண்டாடி வருகிறார்கள். ஆசிரியர் நாள், சிக்ஷக் திவஸ் ஆகிய தனி அடையாளங்கள் நீக்கி, அவற்றை குரு உற்சவம் என்னும் ஒற்றை சமற்கிருத அடையாளத்துக்குள் அடைக்க நினைக்கிறது மோடி அரசு. ஆசிரியப் பண்பாடு என்பது ஆசிரியர்-மாணவர் என்னும் உறவின் அடிப்படையில் இருவருக்கிடையே சனநாயக அடிப்படையில் நடைபெறும் அறிவுப் பரிமாற்றத்தைக் குறிப்பது. ஆனால் குருக் கலாச்சாரம் என்பது குரு--சிஷ்ய உறவைக் குறிப்பது. இது குருவுக்கு அடிமை ஊழியம் செய்து கல்வி பெறும் குருகுல வழிமுறையை வலியுறுத்தும் தத்துவமாகும். அதிலும் குறிப்பாக, சூத்திர வர்ணத்துக்குக் கல்வி உரிமை மறுக்கும் வர்ணாசிர அமைப்பின் அடித்தளமாகும்.

எனவே ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்த வரை, சமற்கிருதத் திணிப்பு என்பது வெறும் மொழித் திணிப்பன்று, அது வர்ணாசிர தர்ம ஆதிக்கத்தின் ஒரு பகுதியே. இந்துத்துவப் பார்வையில், சமற்கிருதம் ஒன்றே தேவ பாஷை, தமிழ் போன்ற பிற மொழிகளெல்லாம் நீச பாஷைகள். சமற்கிருதம் ஒன்றே பகவானுக்குப் புரிந்த பாஷை, அந்த பாஷையில் தங்களுக்கென 100% 'கோட்டா' பெற்ற சந்நிதிகளில் ஓதும் பிராமணப் புரோகிதர்களும் புனிதர்களே! வர்ணப் பிரமிட்டின் உச்சியில் பார்ப்பனர்களை உட்கார வைக்க உதவும் சமற்கிருதத்தை தில்லி உச்சியில் உட்கார வைக்க நினைக்கும் பாஜகவின் இந்த முயற்சி இந்துத்துவச் சதியில் முளைத்ததே!

உடனே இது மிகைக் கற்பனை என்பர் சிலர். எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம் என்பதா என அலுத்துக் கொள்ளும் மோடி ரசிகர் மன்றத்தின் 'சனநாயக முற்போக்குவாதிகள்' சிலரும் இன்று கிளம்பியுள்ளனர். இன்றைய பாஜக அரசின் உணவுப் பதனீட்டு அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தில்லி சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசிய பேச்சு பாஜகவின் வர்ணாசிரமப் போக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தியாவில் பிறந்த இந்துக்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமியர், கிறித்துவர் உள்ளிட்ட அனைவருமே இராமனின் பிள்ளைகளாம். சத்ரிய தர்மத்தை முறைப்படி நிறைவேற்றியவர்தானே இராமன். அயோத்தியில் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பச்சிளங்குழந்தை இறந்து போகிறது. பரிதாபத்துக்குரிய செய்திதான். ஆனால் இது ஏதோ பாவச் செயலின் அறிகுறி என மிரளும் பார்ப்பனர்கள் மன்னன் இராமனிடம் முறையிடுகின்றனர். இதற்குக் காரணமறிய குதிரையில் ஏறிப் புறப்பட்ட இராமன் நடுக் காட்டில் சம்புகன் என்பவர் தவம் புரியக் காண்கிறார். "சூத்திரனாகிய நீ எப்படித் தவம் புரியலாம்?" எனக் கொதித்துப் போகும் இராமன் கூர் வாளால் சம்புகன் தலை கொய்து வர்ண தர்மம் காத்தார். இந்த வர்ண தர்மக் கொடுமையை வால்மீகி இராமாயணத்தின் 7ஆவது இறுதிப் படலமாகிய உத்தர காண்டத்தில் 73 முதல் 76 வரையிலான பாடல்கள் தெளிவாக விளக்குகின்றன. வர்ண தர்மம் காக்கப் பாமர சம்புகனின் தலை கொய்த இராமனின் பிள்ளைகளாம் நாம். அப்படியானால் இதனை ஏற்க மறுப்போர் யார்? அனைவரும் முறையற்றுப் பிறந்த குழந்தைகள் என்கிறார் சாத்வி. இது அப்பட்டமான இந்துத்துவ மிரட்டல் அல்லவா? இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியதும் இந்தத் திருவாய்மலர்தலுக்கு வியாக்கியானம் தருகிறார். இந்திய ஒற்றுமைக்கு எதிராகப் பேசும் பிரிவினைவாதிகளைத்தான் முறையற்றுப் பிறந்தவர்கள் எனக் கூறினாராம். இந்தத் தரங்கெட்டப் பேச்சுக்கு சம்பிரதாய மன்னிப்பு மட்டும் கேட்டு விட்டு சாத்வியை அமைச்சரவையிலேயே வைத்து அழகு பார்க்கிறார் மோடி.

அப்படியானால் இந்தியத் தில்லி ஒடுக்குமுறைக்கு எதிராக விடுதலை கேட்டுப் போராடும் போராளிகள் இந்துத்துவத்தின் பார்வையில் முறையற்றுப் பிறந்தவர்கள். இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கமாகிய தலித் மக்களை அவர்ணர்கள் எனக் கூறி வர்ண வரம்பிலிருந்து ஒதுக்கி வைத்த இந்துத்துவக் கூட்டத்தின் இந்த ஆபாசப் பார்வையில் வியப்பேதுமில்லை. ஆனால் இந்த இந்துவெறி ஆபாச மிரட்டல் விடுதலை கேட்டுப் போராடும் தமிழர்களைக் கிஞ்சிற்றும் அசைத்திடாது. அவர்கள் பிறப்பின் அடிப்படையிலான தர்மம் காத்த இராமனின் பிள்ளைகள் என்றால், தமிழர்களாகிய நாம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பாடிய வள்ளுவனின் பிள்ளைகள் என உரக்கச் சொல்லுவோம். வள்ளுவ ஆசான்தான் அடுத்து வந்த பகவத் கீதைக் குண்டிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.

மோடி தர்பாரின் ஒரு பெண் மந்திரி இராமர் வெடி கொளுத்துகிறார் என்றால், இன்னொரு பெண் மந்திரி கிருஷ்ணர் வெடி கொளுத்துகிறார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் போர்க் களத்தில் பகவான் கிருஷ்ணர் போதித்த பகவத் கீதை என்னும் தத்துவத்தைத் "தேசிய நூல்" என்று அறிவிக்க வேண்டும் என முழங்குகிறார். வர்ண தர்மம் காக்கும் போது பெரியப்பா சித்தப்பா, அண்ணன் தம்பி என்றெல்லாம் பார்க்காது, அனைவரையும் போட்டுத் தள்ளி யுத்த தர்மம் காக்கச் சொல்லி அர்ஜுனனுக்கு போதித்த கிருஷ்ணரும் இந்துத்துவ நாயகன்தானாம். இந்தத் தர்மங்களை கிறித்துவர்களும் இசுலாமியரும் கூட கற்றுத் தேற வேண்டுமாம். இன்னா செய்தாரை அழித்தொழிக்கச் சொல்லும் ஒரு தத்துவத்தைத் தேசிய நூலாக்கத் துடிக்கும் கூட்டத்திடம் போய் இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யச் சொல்லும் திருக்குறளைத் தேசிய நூலாக்கச் சொல்லும் நமது திராவிடக் கட்சித் தலைவர்களின், தமிழறிஞர்களின் கோரிக்கையை என்னென்பது?

இந்தியத் தேசிய இனங்களை ஒடுக்கும் வடவர்களின் ஆயுதமாக பகவத் கீதை இருப்பதில் நமக்கு வியப்பில்லை. ஆனால் பாரத ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் நம் தமிழர்களின் ஆயுதம் குறளாகத்தான் இருக்க முடியும். உள்ளபடியே திருக்குறளை இந்தியத் தேசிய நூலாக்கக் கோருவது அதன் சமூகநீதிச் சாரத்தை நீர்த்துப் போகச் செய்வதாகும். அதன் சனநாயக உயிர்த் துடிப்பையே அடக்கி வைக்கும் முயற்சியாகும்.

திருக்குறளின் சமூகநீதியும், பகவத் கீதையின் சமூகஅநீதியும் விளங்காது போய்தான் இன்று தமிழர்க் கடைகளில்கூட குறள் முழக்கம் ஒடுங்கி, கீதையின் சாரமே ஒலிக்கிறது. எல்லோர் பிறப்பும் சமமானதே எனச் சொல்லி அனைத்து மனிதப் பிறவிகளையும் சமநிலையில் நிறுத்துகிறது குறள். உன் கடமையைச் செய் எனச் சொல்வதன் மூலம், உன் பிறப்பின்படி வணிகம் செய்வது பாவம், மரமேறுவதே உன் கர்ம விதி என போதித்து மனிதப் பிறவிகளிடையே ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கிறது பகவத் கீதை. அது மட்டுமல்ல, இன்னும் பல படிகள் மேலே போய், வணிகம் செய்யும் வைசியர்களும், ஏவல் செய்யும் சூத்திரர்களும், அனைத்துப் பெண்களும் பாவ யோனியில் பிறந்த இழிபிறவிகள் எனத் தூற்றுகிறது கீதை.

ஆக, இந்துத்துவத்தின் பெயரால், சமற்கிருதத்தின் பெயரால், இராமனின் பெயரால் ஹெட்கேவரால் 1925இல் ஊன்றப்பட்ட வர்ண தர்ம வித்தே வாஜ்பாய், அத்வானி வழியில் வளர்ந்து இன்று மோடியின் கீழ் நச்சுக் கொடிகளாய் இந்தியாவைப் படர்ந்து நிற்கிறது.

"உன் இந்தியை நீ உன் நாட்டுக்குள் வைத்துக் கொள், எங்கள் தமிழை நாங்கள் வைத்துக் கொள்கிறோம்" எனத் தெளிவாகச் சொன்ன வைகோ, திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக்கச் சொல்லிக் குழப்புகிறார். "உன் இந்தியை, உன் கீதையை உன் உத்திர பிரதேசத்தில் வைத்துக் கொள், எங்கள் தமிழை, எங்கள் குறளை நாங்கள் எங்கள் தமிழ் மண்ணில் வைத்துக் கொள்கிறோம்" என முழங்கியிருந்தால் இன்னும் தெளிவான கொள்கை முழக்கமாக அமைந்திருக்கும்.

"எங்கள் தமிழ்நாட்டை நாங்கள் வைத்துக் கொள்கிறோம்" எனப் பேசி பிரிவினையைத் தூண்டுகிறாராம் வைகோ. எனவே அவர் ஒரு தேச விரோதி என்கிறார் எச். ராஜா. அவர் தெருவில் நடமாட முடியாது என்கிறார். பிரிவினை பேசுவோரை முறையற்றுப் பிறந்தோரெனத் தூற்றிய இவரது இந்துத்துவ சகா சாந்த்விக்கு ராஜாவின் பேச்சு சற்று நாகரிகமானதே. ஆனால் இந்துத்துவ வெறிக் கூச்சலிடும் இவர்கள் அனைவரும் பிரிவினைக் கோரிக்கைகளின் வரலாற்றுப் பின்னணியை மூடி மறைக்கிறார்கள். பாரதிய வர்ண சாதி சமற்கிருத வெறி தமிழகத்தில் கடை விரித்த போதெல்லாம் அந்த ஆரிய ஆதிக்க மரபைத் தமிழியத்தின் விடுதலைநெறி எதிர்த்தே வந்துள்ளது. "மனிதப் பிறவிகளின் குணத்தின், கர்மத்தின் அடிப்படையில் நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன்" எனக் கூறி பிறப்பு ஏற்றத் தாழ்வை இயற்கை அடிப்படையாக்கியது கீதை. "பறைச்சியாவதேதடா, பனத்தியாவதேதடா, இறைச்சித் தோல் எலும்பினுள் இலக்கமிட்டிருக்குதோ?" என இந்துத்துவ வர்ணாசிரமத்தை அசைத்துப் பார்த்தது சிவ வாக்கியரின் சித்தர் மரபு.

சமற்கிருதமே இறை மொழியென ஆரியம் ஆட்டம் போட்ட அதே காலத்தில்தான் சிவனியம், மாலியம் என இறைவனைத் தமிழால் போற்றின பக்தி இலக்கியங்கள். "ஆரியம் நன்று, தமிழ்த் தீதென உரைப்பது முறையா?" எனக் கேட்கும் நக்கீரர் சிவபெருமானைப் பார்த்து "நானே உன்னை நற்றமிழில் இரக்கப் பாடுகிறேன்" எனத் தமிழால் உருகுகிறார். இதன் எதிரொலிப்பே "தென்னாடுடைய சிவனே போற்றி" என்ற மாணிக்க வாசக முழக்கம்.

வர்ண தர்மம் காக்க யுத்த தர்மம் போதித்தன இராமாயண, மகாபாரத இதிகாசங்கள். "கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்" என அறைகூவல் விடுத்தார் தமிழிய மரபில் வந்த பாரதிதாசன். தமிழ்க் காப்பையும் சாதி ஒழிப்பையும் ஒருசேர முழங்கி தமிழ்த் தேசிய அடிப்படைக்கு இலக்கணம் வகுத்தார் அந்தப் புரட்சிக் கவிஞர்.

வர்ண ஒழிப்பும், சமற்கிருத மறுப்புமே பெரியார் எழுப்பிய "தமிழ்நாடு தமிழருக்கே" முழக்கத்தின் அடிப்படையாக இருந்தது.

இந்திய அரசமைப்புப் பேரவை விவாதத்தில் இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்க முயன்ற வடவர்களைப் பார்த்துத் தமிழகத்தின் டி. டி. கிருஷ்ணமாச்சாரி கூறினார்: "தென்னக மக்கள் சார்பில் நான் எச்சரிக்க விரும்புகிறேன்: தென்னிந்தியாவில் இப்போதே பிரிவினை வேண்டும் என்போர் உள்ளனர். உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த என் மாண்புமிகு நண்பர்கள் 'இந்திப் பேராதிக்கம்' என்ற தங்கள் கருத்தை முடிந்தவரை முடுக்குவது எவ்வகையிலும் எங்களுக்குத் துணை செய்யாது. ஆகவே என் உத்திரப் பிரதேசத்து நண்பர்களே, இரண்டில் ஒன்றை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்: முழு இந்தியா வேண்டுமா? இந்தி--இந்தியா போதுமா?"

ஆரிய வர்ண எதிர்ப்புப் போரை வள்ளுவரே தொடக்கி வைத்து விட்டார். தமிழரின் சமற்கிருத எதிர்ப்பு மரபு நக்கீரர் காலத்திலேயே ஒலிக்கத் தொடங்கி விட்டது. வர்ண-சமற்கிருதக் கலாச்சாரப் படையெடுப்புக்கு எதிரான முழக்கம் சித்தர் பாடல்களில் பெருங்கனலாய்க் கனன்றது. பின்னர் அது அயோத்திதாசர், பாரதியார், பெரியார், மறைமலையடிகள், அண்ணா, பாரதிதாசன் குரல்களில் இடிமுழக்கமாயிற்று. அதன் சிறு அதிர்வைத்தான் வைகோ சென்னை தியாகராய நகர் கூட்டத்தில் வெளிப்படுத்தினார். பாஜகவின் இந்தி ஆதிக்க அரசியல் இனியும் தொடர்ந்தால் தாமும் பெரியாரின் அரசியலைக் கையிலெடுக்க வேண்டியிருக்கும், தோழர்கள் தியாகு, மணியரசனின் தமிழ்த் தேசிய விடுதலைப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் எனச் சீறினார். பாஜக மொழிவெறி அரசியலை நிறுத்திக் கொள்ளா விட்டால், நூறாவது விடுதலை நாளைக் கொண்டாட இந்தியா இருக்காது என அறைகூவல் விடுத்தார்.

இதற்குத்தான் தமிழக ராசாக்கள் கொதித்துப் போகிறார்கள். இந்துத்துவத்தின் கொடுங்கரங்களிலிருந்து விடுபடப் போராடுவோரை முறையற்றுப் பிறந்தவர்களெனத் தறிகெட்டுப் பேசுகிறது பாஜக.

இந்துத்துவப் பயங்கரவாத விதை தூவும் மோடியே! ராஜ்நாத்தே! சுஷ்மாவே! இன்னும் இன்னும் உங்கள் வர்ண தர்மக் கொடுங்கோண்மை அரசியலை வேகமாக முன்னெடுங்கள். உங்களின் சமற்கிருதவெறிக் கூச்சலை ஓங்கி ஒலியுங்கள்! வர்ண சாதிக் கொடியை முழுக் கம்பத்துக்கு ஏற்றுங்கள்! அப்போது . . . பாரதப் புதல்வர்களே! நீங்கள் கனகாபிஷேகம் அல்ல, சதாபிஷேகம் செய்து வைக்கக் கூட பாரத மாதா இருக்க மாட்டாள்! அன்று, உங்கள் பாரதீய தர்மம் மறைந்து, தமிழிய அறம் தழைத்தோங்க, எங்கள் தமிழன்னையின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் கோலாகலமாய் அரங்கேறும்!

- நலங்கிள்ளி

(ஆழம் சனவரி 2015 இதழில் வெளியான கட்டுரை)

Pin It