மதச்சார்பின்மை என்ற கொள்கைதான் மோடி வகையறாக்களால் மிக குறிவைத்து தாக்கப்படுகிறது. ஏன்? அதுவே இந்து இராச்சியமாக இந்தியாவை மாற்றத் தடையாகக் கருதுகின்றனர். தச்சார்பின்மை = காங்கிரசு கட்சி என்று சமப்படுத்தி சாணியடிப்பதில் அவர்கள் வெற்றி அடைந்துள்ளனர். உலகில் எல்லா மதவாதிகளும் மதச்சார்பின்மையை ஒழிக்கத் துடிக்கின்றனர்.

பிரெஞ்ச் நாட்டில் நடந்த ஜனநாயகப் புரட்சி உலகிற்கு பல ஜனநாயகக் கொள்கைகளை வீரஞ் செறிந்த போரட்டக் களத்தில் பெற்றெடுத்தது. அதில் மதச்சார்பின்மைக் கொள்கையை கிறுத்துவ மன்னர்களுக்கு எதிராகப் போராடி வென்றது. மதவாதிகள் அரசில் மதத்தைப் புகுத்துகிறார்கள். மெய்யான மக்களாட்சி அரசிலிருந்து மதத்தை வெளியேற்றுகிறுது.

மதச்சார்பின்மை என்கிற அரசியல் கொள்கை மதத்தையும் அரசையும் பிரித்து வைப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சோசலிஸ்ட்டுகள் வரவேற்கும் ஒரே தனியார் மயக் கொள்கை இதுதான். இந்தியா சுதந்திரத்தின்போதே தன்னை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டது. ஆனால், ஆட்சியாளர்கள் அதை நடைமுறைப்படுத்துவது அபூர்வமாக இருக்கிறது. மதமும் அரசின் நடைமுறைகளும் தனித்தனியாக்கப்பட்டு மத நடவடிக்கைகள் தனியார் பொறுப்பாகவும் தனிநபர் செயல்பாடாகவும் ஆக்கப்பட வேண்டும் என்ற விழிப்பு மக்களிடமும் இல்லை. அவர்கள் தமது மதம்சார் ஆட்சி வேண்டும் என்ற விருப்பம்கொண்ட மதவாத அரசியல் கூட்டமாக இருக்கின்றனர்.

அதைப்போல் மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும் என்ற அரசியல் பெருமரபும் நிலவி வந்தது. 70களுக்குப் பின் அது தொடர்ந்து வீழ்ச்சியுற்று வருகிறது. இன்று அரசியலற்ற தலைமுறையின் பெருக்கமானது மதச்சார்பின்மை உள்ளிட்ட ஜனநாயகக் கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாகிவிட்டது.

மதசார்பின்மை என்பது அரசு எந்த மதத்தையும் சாராதது என்று நேரடி பொருள்படுகிறது. அப்படியானால் அரசு நாத்திகரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது காலந்தோறும் விவாதிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டின் முதல் தலைமை அமைச்சாரான நேரு இதற்கு பதிலளித்தார். அதாவது, ”மதச்சார்பின்மை என்றால் பலர் மதங்களுக்கு விரோதமானது என்று எண்ணிக் கொள்கின்றனர். அப்படியில்லை. அரசு எல்லா மதங்களோடும் பொதுவாக உறவாடுவதே” என்றார். நேரு சொன்ன இந்த மதச்சார்பின்மையைப் 19 ஆம் நூற்றாண்டில் சீக்கிய மன்னனாக இருந்த மகாராஜா ரஞ்சித் சிங் தனது ஆட்சியில் செயல்படுத்தினார். அவர் தனது தர்பாரில் முஸ்லிம் - இந்து - சீக்கியத் மதத்தலைவர்களைப் பங்கேற்கச் செய்துள்ளார். இது நல்லதுபோல் தோன்றினாலும் பிற்போக்குதனமானதே. நமது ”புரட்சித் தலைவி” அரசு செலவில் கோவில் யானைகளையும் தர்கா யானைகளையும் ஒன்றாக புத்துணர்வு முகாமுக்கு அனுப்புவது, குடமுழுக்கு நடத்துவது, ஹஜ் யாத்திரைக்கு காசு கொடுப்பது போன்ற நடவடிக்கையெல்லாம் அரசு எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்ற பிற்போக்குக் கருத்தை நிலைநிறுத்தம் நடவடிக்கைகளே!

நேருவைவிட காந்தியின் நிலைப்பாடு தெளிவானப் பொருள் தரக்கூடியது. காந்தி சொன்னார், “நான் சர்வாதிகாரியாக இருந்தால் அரசும் மதமும் தனித்தனியாகவே இருக்கும். என் மதத்தை நான் நம்புகிறேன்; அதற்காக நான் சாகவும் தயார். ஆனால் இது என் தனிப்பட்ட விசயம். இதில் அரசுக்கு எந்த சம்பந்தமுமில்லை. அரசு உங்களின் நல்வாழ்வு, உடல்நலம், தகவல் தொடர்பு, நிதி, வெளியுறவு போன்ற மதச்சார்பற்ற விசயங்களைக் கவனிக்கும். உங்களது மதத்தையோ என்னுடைய மதத்தையோ கவனிக்காது. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விசயம் மட்டுமே!.”. ஒரு மதப்பற்றாளராக நின்ற நிலையிலும் காந்தி மதச்சார்பின்மையைப் போதிய அழுத்தத்துடன் தெளிவுபடக் கூறியுள்ளார்.

நீண்ட நெடுங்காலமாக மன்னராட்சிக் காலங்களில் மதங்களின் ஆட்சியே நடைபெற்றுவந்தது. மன்னன் எம்மதமோ மக்களும் அம்மதத்திற்கு மாறியாக வேண்டும் என்பது ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் நடந்துவந்த இரத்தக் களரியான வரலாறு. எனவே தான், மேற்கண்ட மன்னர் ரஞ்சித்தின் தர்பார், அக்பரின் ’தீன் இலாஹி’ என்ற மதத்திற்குப் பொதுவான முயற்சிகள் வரலாற்றில் பெரிதாகப் பேசப்படுகின்றன.

ஐரோப்பாவில் கிறுத்துவ மதம் மற்றும் அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்த அரசர்களே ஆதிக்கம் வகித்தனர். இந்தியாவில் கோவில்கள் அதிகார மையங்களாக விளங்கியதைப் போல அங்கே கிறுத்துவ சபைகள் அதிகார மையங்களாக இருந்து அரசைக் கட்டுப்படுத்தி வந்தன. பிரெஞ்சுப் புரட்சி உலகின் சனநாயக நெறிகளை வகுத்தளித்தது. மதச்சார்பின்மை கொள்கையும் பிரெஞ்சுப் புரட்சியின் பரிசு. அங்குதான் மதமும் அரசும் பிரிக்கப்பட்டன.

அரசும் மதமும் ஏன் பிரிக்கப்பட வேண்டும்? காரல் மார்க்சின் வார்த்தைகளில் எடுத்துச் சொன்னால், மதத்தின் புனிதமான, மாறாத, முரண்பாடற்ற, மத நூல்களின் புனிதத்திற்கும், மாறக்கூடிய, புனிதமற்ற, முரண்பாடு கொண்ட அன்றாட மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடிய புனிதமற்ற அரசுக்கும் ஒத்துவராது. எனவே, மதத்தின் புனிதத்தையும் தேக்கத்தையும் பிற்போக்குத் தனத்தையும் காப்பாற்ற முடியாத அரசைப் ’புனிதக்’ கோட்பாடுகளைக் கொண்டு நடத்தக் கூடாது.

மதத்தின் கெட்டித்தட்டிப் போன தன்மைக்கும் வரலாறு நெடுகிலும் மறுமலர்ச்சி பெற்று வந்த - பெற வேண்டிய அரசின் செயல்போக்கிற்கும் உள்ள முரண்பாடே மதச்சார்பின்மையின் தேவையை உண்டாக்குகிறது. மதம் ஒரு மாறாப் பொருள். அரசியலில் மறுமலர்ச்சியே உயிர். எனவே, மதச்சார்பின்மையே அரசின் கொள்கையாக இருத்தல் வேண்டும்.

ஒரு மதத்தின் ஆட்சி குடியரசுக் கொள்கைக்கு எதிரானது. மதமும் அரசும் பிரிக்கப்பட வேண்டும் என்பது மதச் சிறுபான்மைக் கோரிக்கையல்ல. ஒரு தேசம் தன்னைத் தேசமாக உருவாக்கிக் கொள்வதா? அல்லது மதக்குழுவின் நிலத்துண்டாக எஞ்சிவிடுவதா? என்ற கேள்வியாகும். அது குடியரசா? அல்லது ஒரு குழுவின் அரசா? என்ற கேள்வியை எழுப்புவதாகும்.

எல்லா மத அடிப்படைவாதிகளும் தமது புனைவுகளையும் தமது குழுவின் நம்பிக்கைகளையும் அனைத்து மக்களின் மீதும் சுமத்த முயல்கின்றனர். அரசின் உண்மையான பணியோ அனைத்து மக்களின் உண்மை வாழ்வின் தேவைகளை அணுகித் தீர்க்க வேண்டும் என்ற அறிவியல் பூர்வமான செயலைக் கடமையாகக் கொண்டிருக்கிறது. அரசு அனைவராலும் வரவேற்கப்படும் அறிவியில் பூர்வ சட்டவிதிகளால் வழி நடத்தப்பட வேண்டுமே அல்லாமல், அனைவராலும் ஏற்கப்படாத ஒரு பிரிவினரின் நம்பிக்கைகளால் ஆளப்படக் கூடாது. எனவே, மதமும் அரசும் பிரிக்கப்பட வேண்டும். நாத்திகக் கொள்கையைச் செயல்படுத்துவதாகவும் கூட அது இருக்க முடியாது.    ஆனால் மதவாதிகளின் அச்சம் என்னவென்றால் அவர்களின் மதத்தைத் தூர வைத்து சுயேட்சையாக நடைபெறும் அரசின் நடவடிக்கையை நாத்திகம் என்றே கண்டனம் செய்கின்றனர். உண்மையில் அனைத்துத் தொழில்களும் மனித உறவுகளும் திட்டவட்டமான நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட சுயேட்சைத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இதில் எந்த ஒரு தனிநபரும் அரசும் விதிவிலக்கல்ல.

மதங்கள் தமது கருத்தியலை ஏற்காத மக்களைத் தீய சக்திகள், பிசாசுகள் என்று தூற்றுவதுபோல அரசையும் தூற்றுகிறார்கள். மதச்சார்பின்மை விடுதலை மரபின் வீரஞ்செறிந்த பிரளயத்தில் பிறந்த கொள்கை. ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டிய கொள்கை. கம்யூனிஸ்ட்களின் அரசக் கொள்கை.

இந்தியாவில் எழுந்துவரும் மதப் பயங்கரவாதங்களைக் கண்டிப்போம். மோடி இந்திய அரசை இந்து மதவெறி அரசாக மாற்ற முயல்வதைத் தடை செய்யக் களமிறங்குவோம். கல்வியில், நிர்வாகத்தில் மதத்தைப் புகுத்துவதை எதிர்த்து மதச்சார்பின்மைக் கருத்தியலைப் பரப்புவோம்.

Pin It