தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை ஆளுநர் நஜீப் ஜங்க்குக்கும் நடைபெற்றுவரும் மோதல் பற்றி?

தில்லி தேர்தலில் தோல்வி அடைந்த பா.ச.க., துணை ஆளுநர் நஜீப் வழியாக மறைமுகமாக ஆட்சி நடத்த முயற்சிக்கிறதென்று கெஜ்ரிவால் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் நேரத்தில் அளித்த பல வாக்குறுதிகள் போல ”மாநில முதல்வராக இருந்து பிரதமராகும் நான் உண்மையானக் கூட்டாட்சி உணர்வைப் பிரதிபலிப்பேன்” என்று பேசிய மோடி, தில்லி அரசை ஒரு நகராட்சியாகக்கூட மதிக்கத் தயாராக இல்லை. அதிகாரிகள் நியமனத்தை ஆயுதமாகக் கொண்டு தில்லி அரசு நிர்வாகச் செயல்பாட்டை முடக்கப் பார்க்கிறது பா.ச.க. அரசு.

மாநில அந்தஸ்துகூட அளிக்கப்படாத தில்லி நிர்வாகத்திற்கான அவையாகத்தான் தில்லி சட்ட மன்றம் இருந்துவருகிறது. இந்திய அரசமைப்பின் ஒற்றை யாட்சி முறையில் உள்ள ஒடுக்குமுறையைப் பற்றி கேள்வி எழுப்பாமல், கெஜ்ரிவாலோ ‘நல்ல அதிகாரிகள், ஊழல் அதிகாரிகள்’ என நிர்வாகச் சிக்கலாகத்தான் இதை அணுகுகிறார்.

அதைவிட வேடிக்கை, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் பற்றிப் பேசிய தி.மு.க. உள்ளிட்டக் கட்சிகள் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதாகும். ஊடகங்களோ கெஜ்ரிவாலின் அதிரடி செயல்பாடுகளை மட்டும் விமர்சித்துவிட்டு மாநிலங்களுக்கான சனநாயக உரிமைப் பற்றிப் பேசாமல் மோடிக்கு ஒத்து ஊதுகின்றன.

அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூவரின் படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மாநில உரிமை களுக்கு எதிரானதா?

உச்சநீதிமன்றமும் அதனுடையத் தீர்ப்புகளும் நிலவுகின்ற பொருளாதார வளர்ச்சி மாதிரிக்கும் அரசமைப்பு வடிவத்திற்கும் ஏற்ப தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதனூடாக ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கின்றது என்பதை அண்மையப் பல தீர்ப்புகளில் நாம் பார்த்து வருகிறோம்.

இப்படிப்பட்ட ஒரு தீர்ப்புதான் இந்த அரசு விளம்பரம் பற்றியத் தீர்ப்புமாகும். இந்தியாவை வழிநடத்தும் உலகமயப் பொருளியல் கொள்கைக்கு தேவையான மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவதும் அதனுடைய அடையாளப் பிம்பங்களாக மையத்தில் உள்ள அரசத் தலைவர்களை மட்டும் அதிகாரத்தின் உருவங்களாக மக்களுக்கு காட்டுவதும் மாநிலங்கள் அதனுடைய அரசு வடிவங்கள், தலைவர்களைப் பொருளற்றவையாக மாற்றி இவற்றைக் காணாமல் போகச் செய்வதற்கான நடவடிக்கை யையே இத்தீர்ப்பு நேரடியாகச் செய்கிறது.

பா.ம.க. அன்புமணி தி.மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்?

பா.ம.க. வின் ’தியாகக் கொழுந்து’ அன்புமணி, எரிந்த ஊரில் பிடுங்கி எம்.பி. ஆனது போதாதென்று ஜெயலலிதா சிறைக்கு போயிருந்த நேரத்தில் இருந்து முதல்வர் கனவில் தூக்கம் கலைந்துபோய் அர்த்த ராத்திரியில் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறார். ’தியாகத் திருமகன் மிசா’ ஸ்டாலினோ கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையே என்ற ரேஞ்சில் சொரிந்து கொண்டிருந்தார்.

2016 தேர்தல் லாவணியை ஸ்டாலின் நமது டம்மி முதல்வர் ஒ.பி.எஸ்ஸுக்கு கடிதம் எழுதி தனது தந்தை திறமை தனக்கு வருமா? என்று உரசிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அல்லையில் குத்தும் கைப்புள்ளப் போல அட்டாக் கொடுத்துக் கொண்டிருந்தார் அன்புமணி. ஆனால், விஷயம் என்னவென்றால் அன்புமணி பட்டியலிட்ட டாஸ்மாக், ஊழல், இயற்கை வளக் கொள்ளை, பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைப்பது என்ற தி.மு.க.வின் கேடுகளையும் ஐம்பதாண்டு கால கழக ஆட்சிகளின் கேடுகளையும் நாமும் விமர்சிக்கிறோம்.

நான்கு தீமைகளைப் பட்டியலிட்ட அன்புமணி, கடந்த சனவரியில் இருந்து மக்கள் விடுதலை கட்சி முன்னெடுத்துள்ள ”தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஐந்து தீமைகளுக்கு எதிரான இயக்கத்தில்” ஒன்றை மட்டும் விட்டுவிட்டார். ஆகப் பெரிய கேடான சாதி மத வெறி காவிப் பாசிச அரசியலை மட்டும் விட்டுவிட்டார்.

அவர் அதை அறியாதவரல்ல. நடப்பு கால அரசியலுக்கு இந்தக் கடைசி கேடுதான் அவருக்கு மூலதனம். இந்தக் கடைசி கேடு மட்டுமல்ல அவர் பட்டியலிட்ட கேடுகளோடு கடந்த பதினைந்து ஆண்டுகளில் மத்திய கூட்டணி ஆட்சியதிகாரத்தை இவரும் சேர்ந்தே அனுபவித்துவிட்டு நமக்கெல்லாம் டாக்டர் மயக்க ஊசி போட பார்க்கிறார்.

Pin It