கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம், தனது இறுதி வாழ்நாளை எட்டிவிட்டது. ஆனால் நோக்கியா முதலாளியின் இலாபத்தை, நோக்கியாவின் வளர்ச்சியை தம் உழைப்பால் உயர்த்திய தொழிலாளி வர்க்கமோ மீண்டும் மீண்டும் வாழ்வுக்கான, வேலை உரிமைக்கான முழக்கத்தை எழுப்பிவருகிறது. நோக்கியாவில் 10,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். கட்டாய வேலை நீக்கத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 8000 பேர் வெளியேற்றப்பட்டு மீதமிருந்த 800 பேர் மட்டும் பணிபுரிந்த நிலையில், நவம்பர் 1 ஆம் நாளில் ஆலை மூடப்படும் என அறிவித்து, தொழிலாளர்களை வெளியேற்ற இருக்கிறது. இப்போது தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். உற்பத்திசெய்த உழைப்பாளியின் ஒவ்வொரு வியர்வைத் துளியிலும் பட்டுத் தேய்ந்த இயந்திரங்களுடன் கோடிகளைச் சுருட்டிய முதலாளி, புதிய வடிவில் சந்தையில் நுழையத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அதற்கு உதவிக்கரமாக மோடியின் புது வகை திட்டங்கள் காத்திருக்கின்றன.

Nokia-Lumia-730மோடி ஆட்சிக்கு வந்தபின் ’வளர்ச்சி’ என்கிற சூட்சுமம் சூடுபிடித்திருப்பதும், ”இந்தியாவில் தயாரி”(Make in India), அன்னிய முதலீடு 6 லட்சம் கோடி அனுமதி என்கிற கவர்ச்சிக் கொள்கை, பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு நமது வளங்களை, உழைப்பைச் சூறை யாட மீண்டும் மீண்டும் அனுமதித்து கோடிக் கணக்கான மக்களைப் படுகுழியில் தள்ளக் காத்திருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் சூழ்ச்சியாக மட்டுமல்ல, அவை உலக பொருளாதாரத்தோடும், உலக சந்தையின் நலனோடும் பிண்ணப் பட்டிருக்கிறது. 1990களுக்குப் பின்னான உலகமய, தாராளமயமாக்கல் விளைவு உலக பொருளாதாரத்திற்கு ஏற்ப தொழிலாளர் சந்தையை உருவாக்கியிருக்கிறது. இவை உலகம் முழுவதற்குமான உற்பத்தியிலும் தொழிலாளர்கள் உறவிலும் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நிதி மூலதன வலைப்பின்னல் என்பது பயிற்சித் திறனுள்ள தொழிலாளர்களையும், பயிற்சியற்றத் தொழிலாளர்களையும் உருவாக்கி யிருக்கிறது. பெரும் எண்ணிக்கையிலான அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களை, அமைப்பு சாராத் துறைகளில் ஈடுபடுத்தியிருக்கிறது. தெற்காசியா முழுவதுமே தொழிலாளர்கள் பெரும் கூட்டமாக மாற்று வேலைத் தேடி, புலம்பெயர்ந்து வாழ்கின்ற நிரந்தரமற்ற வேலை, வாழ்க்கை முறையை உண்டாக்கி யிருக்கிறது. உழைப்பிலும், உற்பத்தியிலும் உதிரியான வேலைப்பிரிவினையை ஏற்படுத்தியிருக்கிறது அதற்கேற்றாற் போல் மனிதர்கள் வாழப் பழகும் சிந்தனை முறையையும் கட்டமைத்திருக்கிறது.

ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் உழைப்பின் பங்கேற்பே உள்நாட்டு உற்பத்தியாக மதிப்பிடப் படுகிறது. அத்தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிவதில் தான் இந்தியாவின் வளர்ச்சியும் வல்லரசு கனவும் அடங்கியிருக்கிறது என்பதால் வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு. நோக்கியாவின் இத்தகைய நிலை பற்றி வர்த்தக துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கும்போது, ‘நோக்கியா போன்று இனிமேல் நடக்காது’ என ஒரே வார்த்தையில் முதலாளியின் நலனைப் பிரதிபலித்து விட்டார். வெளிநாட்டிற்கு பயணம் செய்துவிட்டு திரும்பும் சுஷ்மா சுவராஜ், ”இந்தியாவிற்கு முதலீடு செய்ய வாருங்கள்” என கம்பளம் விரித்துவிட்டு வருகிறார். ஆனால் எதார்த்த நிலைமையோ தலைகீழாக மாறியிருக்கிறது. முதலாளியத்தின் அகலப் பாய்ச்சல் இன்று முட்டி நிற்கிறது. அதன் எதிர்விளைவே இத்தகைய சிக்கல்களுக்கு இட்டு செல்கிறது. மாறிவரும் உலகமய சூழலில் பொருள் சார்ந்த உற்பத்தி என்பது குறைந்து முழுக்க சேவைத் துறைகள், தொழில்நுட்பம் சார்ந்த நவீன தொழில்துறைகள் பெருகிவருகிறது. அதிக வளர்ச்சி, லாபம் என்பது சேவைத் துறைகளின் அடிப்படையில் அமைந்ததாக மாறிவிட்டது. கார்ப்ரேட் மூலதனத்தின் முதுகெலும்பாக திகழும் இதுபோன்ற துறைகள்தான் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.

நோக்கியாவும், அதன் துணை நிறுவனமான பிஒய்டி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமுமே தக்கச் சான்று. மிக முக்கியமானது இவை சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்கள் என்பதுதான். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கிராமம், நகரமென அமைக்கப்படுவது எத்தகையப் பயனை மக்களுக்கு விளைவிக்கிறது? இயற்கை வளங்களும், மக்களின் உழைப்பும் முதலாளிகள் சுரண்டவே என்பதை உலகுக்கு உணர்த்தியிருப்பதே இன்றைய வீழ்ச்சியின் அடையாளமாக திகழும் நோக்கியா நிறுவன மூடல். நோக்கியா நிறுவனம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்குவதற்குப் பொது பயன்பாட்டுச் சேவையின் கீழ் உரிமையை வழங்கியிருந்தது தமிழக அரசு. ஒவ்வொரு பெரும் முதலாளிய நிறுவனமும் இதுபோன்ற சட்ட திட்ட சாதக விதிமுறைகளோடுதான் இயங்கிவருகின்றன. அவற்றில் முக்கியமானது ஒப்பந்த முறைகளை, முறைசாராத் துறைகளைத் தீவிரமாக்கி தொழிலாளர் களைப் பலியாக்கியிருப்பதே. இதற்கு சான்றாக இப்போது மோடியும், இராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரராசும் கொண்டுவரும் தொழிலாளர் சட்ட திருத்தத்தைப் பார்த்தால் முதலாளிகள் வாழவா? அல்லது தொழிலாளிகள் வாழவா? எனப் புரிந்துகொள்ளலாம்.

தொழிலாளர் சட்ட திருத்தமும் ஒப்பந்த முறையும்

கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்களோடு இணைந்த தொழிலாளர் விரோத சட்டங்களை ஆளும்வர்க்க ஆட்சியாளர்கள் அமுலாக்குகிறார்கள். பன்னாட்டு கொள்ளையர் களுக்கான முகவர்களை, ஏவலாட்களை நாற்காலியில் அமர்த்துவது கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தை இரட்டிப்பாக்குவதற்கும், சந்தையில் எந்தவிதத் தடையுமின்றி நுழைவதற்கும் வசதியாக இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஆளும் வர்க்கம் மோடியைத் தேர்ந்தெடுத்ததும், அவர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நடவடிக்கையாக தொழிலாளர்களுக்கு விரோதமான திருத்தங்களைக் கொண்டு வந்ததுமாகும். அவை ஏகாதிபத்திய மூலதனத்திற்கு பாதுகாப்பை உறுதிசெய்ய இருக்கிறது; கட்டுப்பாட்டைத் தளர்த்த இருக்கிறது.

அந்த வகையில் இராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரராசே தொழிலாளர் தாவா சட்டம் 1947, பயிற்சி யாளர் சட்டம் 1961, தொழிற்சாலைகள் சட்டம் 1948 ஆகிய சட்டங்களில் கார்ப்பரேட்டுகளின் நலனுக்கேற்ற வகையில் திருத்தியமைப்பதற்கான மசோதாவை தயாரித்துவருகிறார். முதலில், இப்போதுள்ள விதி முறையில் 100 தொழிலாளர்களுக்கு மேல் வேலை நீக்கம் செய்ய வேண்டுமானால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இப்போதைய திருத்தம் 300 தொழி லாளர்கள்வரை வேலை நீக்கம் செய்வதற்கு அரசின் அனுமதி பெற வேண்டியதில்லை என கூறுகிறது. இரண் டாவது, ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், 20 பேருக்கு மேல் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்குப் பொருந்தும். ஆனால் 50 தொழிலாளர்கள்வரை வேலைசெய்யும் நிறுவனங்களுக்கு ஒப்பந்த, பயிற்சித் தொழிலாளர் சட்டம் பொருந்தாது என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது, 20 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்கு தொழிற்சாலை சட்டம் பொருந்தாது என்று வரையறுத்திருக்கிறது.

அடுத்து, மோடி கொண்டுவரும் சட்ட திருத்தம், தொழில் பழகுநர்களை (அப்ரண்டீஸ்) எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கு மோடி அரசின் அறிவிப்புகள் வழிவகை செய்கின்றன. இவ்வகையான தொழில் பழகுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடத் தரவேண்டியதில்லை. பராமரிப்பு நிதி மட்டுமே தரலாம். இந்த நிதியில் 50% அளவினை மத்திய அரசு பொறுப்பேற்கும் என்கிற அறிவிப்பானது அபாயகரமானதாகும். இதன் காரணமாக, காண்டிராக்ட் தொழிலாளர்கள் கூட ஒழிந்து போய்விடுவார்கள். மிகக் குறைந்த பராமரிப்புத் தொகை கொடுத்து இளம் தொழிலாளர்களை உறிஞ்சிக் கொள்வதற்கு இப்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காலாண்டிற்கு 50 மணி நேரம் மட்டுமே ஓவர்டைம் செய்ய வேண்டும் என்று தொழிற்சாலைகள் சட்டத்தில் வரம்பு இருந்தது. இந்த வரம்பினை 100 மணிநேரமாக உயர்த்தி, சட்டத்திருத்தம் செய்யப்போகிறது, மோடி அரசு. இந்த சட்டத்திருத்தம் செய்யப்படுமானால், 8 மணிநேர வேலை என்பதையே 10, 12 மணி நேரமாக மாற்றி விடுவார்கள். அதற்கு மேல் 2, 3 மணிநேரம் ஓவர்டைம் செய்யவைத்து விடுவார்கள் முதலாளிகள். மொத்தத்தில், நாளொன்றுக்கு 12 - 15 மணிநேரம் வேலை செய்வது கட்டாயமாகிவிடும். கட்டாய உழைப்பினால் முதலாளியின் உற்பத்தியும், இலாபமும் பன்மடங்கு பெருகிவிடும். தொழிலாளிக்கு என்ன ஆகும்? தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி உருவாவதுதான் வளர்ச்சி, இலாபம்.

ஆக முதலாளிகளுக்கும் முதலாளிய மூலதனத்திற்கும் எப்பொழுதெல்லாம் நெருக்கடிகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தொழிலாளர் நலச்சட்ட உரிமைகளை, பாதுகாப்பைப் பறித்து நெருக்கடியைத் தொழிலாளர்கள் மீது சுமத்துவதே தாம் மீள்வதற்கான, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான உத்தியாக கையாண்டுவருகிறது. குறைந்த கூலி, கூடுதல் வேலை நேரம், அதிக லாபம் என்பதே இதன் உள்ளம்சம்.. இந்தியா, தமிழகம் முழுவதும் உழைக்கும் மக்களில் பெரும் பான்மையாக இருந்த நிரந்தர தொழிலாளர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, ஒப்பந்த முறையை ஆலைகள் அமுலாக்கு கின்றன. இத்தகைய விதிகளின் கீழ்தான் அனைத்து நிறுவனங்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கியிருக்கின்றன. நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக்கொண்டால் உற்பத்தியைப் பெருக்கி, அதிக இலாபத்தை ஈட்டத் தடையாக இருக்கும். ஆதலால் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கலாம், தேவைப்படும்போது வேலைக்கு சேர்த்துக் கொள்ளலாம் என்கிற விதிதான் ஒப்பந்த முறை வேலை என்கிற நவீன சுரண்டலின் ஊற்றுக்கண். ஒப்பந்த, முறைசாரா துறைகளில் பணிபுரிவோர்களில் பெரும் பாலானவர்கள் பெண்கள் தான். நோக்கியா போன்ற பன்னாட்டுப் பெரு நிறுவனங்களில் அதிகளவு இளம்பெண்களே வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

உற்பத்தியில் பெண்களின் பங்கேற்பும், வேலை இழப்பும்.

எந்திரங்களும், உற்பத்தியும் பெருகாத நிலபிரபுத்துவ சமூக அமைப்பின் தொடக்கத்தில் நவீனங்கள் எட்டிப் பார்க்காத, மனித, சமூக உறவுகள் விரிவடையாத காலம். ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுவதே பெரும் போராட்டமாக இருந்த சூழலில் பெண்ணின் உழைப்பு, மதிப்பில்லாத, கணக்கில் கொள்ளப்படாத ஒன்றாக இருந்துவந்தது. குடும்ப உழைப்புக்கும் சமூக உழைப்புக்கும் ஊதியம் இன்றி உழைத்துத் தேய்ந்தவளாகப் பெண் இருந்தாள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவம் வளரத்தொடங்கியது. நவீன எந்திரங் களின் உற்பத்தி அதிகரித்தது. உற்பத்தியையும், இலாபத் தையும் பன்மடங்கு அதிகரிக்க மலிவான உழைப்பு சக்திகளை அது பெருக்கத் தொடங்கியது. அத்தகைய கால நிலையில்தான் நிலவுடமை கட்டுக்குள்ளும், வீட்டுக்குள்ளும் முடங்கியிருந்தப் பெண்களை சமூக உற்பத்திக்கு இழுத்து வந்தது முதலாளித்துவம். வேலைக்கு என்று பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தனர். முதலாளித்துவ வளர்ச்சி இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்தது பெண்கள் வாழ்வில், சிந்தனையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பெண்கள் ஓரளவு தங்களுக்கானப் பொருளாதார சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் மீட்டெடுத்தனர். இன்று பெண்கள் இல்லாத துறை இல்லை, பெண்ணின் உழைப்பு இல்லாமல் முன்னேற்றம் இல்லை என்கிற அளவிற்கு பெண்ணின் திறமையும் ஆளுமையும் உழைப்பும் சமூக மாற்றத்தில் முக்கிய அசைவை ஏற்படுத்தி வருகிறது.

நகரம், கிராமம் என மக்களை இணைக்கும் பாலம் என்று அறிமுகமான நோக்கியா கடைக் கோடி கிராம, படித்த இளம் தொழிலாளர்களை வேகமான உற்பத்திப் பெருக்கத்திற்கு ஈடுபடுத்தியது. அதாவது 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி இன்று உருவெடுத்திருக்கும் ஆயத்த பின்னலாடை ஆலை, ஐ.டி, கால்சென்டர் போன்ற பெரும் பன்னாட்டு சேவை, தொழில் துறைகளில் பெண்களின் பங்கேற்பு கூடுதலாகியிருக்கிறது. அதற்கு மாறாக பெருமளவு பெண்கள் அமைப்புச்சாரா துறைகளில் குறைந்த கூலிக்கு ஈடுபடுத்தப்படுவதும், ஆலை உற்பத்தியிலிருந்து வீதிக்கு துரத்தப்படுவதுமாகிய முரணை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே வந்து சமூக தளத்தில் கலப்பதுதான் அவளுக்கான சுயமரியாதையை, தன்னம்பிக்கையை, சுய சார்பை வளர்த்தெடுக்கும் என்கிற நிலைமை வளர்ந்துள்ள இன்று, மீண்டும் பின்னோக்கி செல்வதுபோல வேலையிலிருந்து நீக்கப்பட்டு ஏதோ ஒரு காரணத்தால் குடும்பத்தோடு முடங்கிப்போவது, அடுத்துத் திருமணத்தை நோக்கி நகர்வது என்கிற கட்டாய வாழ்க்கை நிலைமைக்கு இட்டுச்சென்றிருக்கிறது. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைப் பிரதிபிலிக்கும் விதமாக வேலை இழந்து வீட்டில் இருக்கும் பெண்கள் நித்யா, கோகிலா என்பவர்கள் கூறிய விடயமே அதற்கு சாட்சியமாக இருக்கிறது.

“செங்கல்பட்டில் உள்ள அம்மடமாக்கம் எனது கிராமம், வயது 26. வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத குடும்ப முறை. நான் படிக்கச் சென்றாலும் என்னுடனே என் அண்ணன் வருவான், இப்படித்தான் 12 ஆம் வகுப்பு வரை கூடவே வருவதும் கூட்டிச்செல்வதுமாக இருந்தது. யாரையும் ஏறெடுத்துப் பார்க்க கூடாது. அப்படிப் பார்த்தால் உடனே அன்று வீட்டில் திட்டும், சந்தேக வசவுகளும் என்மேல் பாயும். சுடிதார் போடக்கூடாது, தாவணிதான் கட்டனும், கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற போது, ”அண்ணன் எந்த கல்லூரியில் படிக்கிறாரோ அந்த கல்லூரியில்தான் படிக்கனும்” என்று அப்பா, அம்மா கட்டுப்பாடு போட்டார்கள். அவனுக்கும் எனக்கும் ஒத்துவராது. ஆதலால் அவன் படிக்கும் கல்லூரியில் படிக்க மாட்டேன் என்று கல்லூரி படிப்பைப் புறக்கணித்துவிட்டேன். இன்னொன்று எனக்கு சிறு வயதிலிருந்தே கடவுள் மேல் நம்பிக்கைக் கிடையாது. எல்லோரும் எதை செய்கிறார்களோ அதற்கு மாறாக செய்வதுதான் என் பழக்கமாக இருக்கிறது.

 அந்த நேரத்தில்தான் 2005ல் நோக்கியா ஆலையில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். வேலைக்குப் போகிறேன் என்று கேட்ட போது, ‘போகக்கூடாது’ என்று வீட்டில் மறுத்துவிட்டனர். ஆனால் நான் ஆவலாக இருந்தபோதுதான், வேலைக்கு சென்று தனியாக குடும்பத்தைப் பராமரித்துவரும் என் அத்தை எனக்காக வீட்டில் பேசி என்னை வெளியே அழைத்து வந்தார். வேலைக்கு சென்ற முதல் நாளே தனியாக ஆண்களோடு ஆலை பேருந்தில் பயணம் செய்கிறோம் என்கிற பயத்தோடே சென்றேன். அன்றே என் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. ஆனால் நான் அதனால் துவண்டு போகவில்லை. நான் நிற்காமல் வேலைக்கு சென்று வந்தேன். என் அண்ணன் தேம்பி அழுதுகொண்டிருக்கும்போது நான் அழாமல் தைரியம் சொன்னேன். அந்த வலிமை என்னுள் சிறிது சிறிதாக நம்பிக்கையை வளர்த்திருந்தது. நான் சுதந்திரமானவளாக மாறினேன். ஆனால் அப்பொழுதும் நான் சம்பாதிக்கும் சம்பளத்தின் ஏடிஎம் கார்டு எனக்கு திருமணமாகும்வரை என் அண்ணன் கையில்தான் இருந்தது.

நோக்கியா ஆலையில் மூன்று சிப்டு வேலைமுறை இருந்துவந்தது. நான் 15 மாதம் பயிற்சிநிலையிலும் பின் நிரந்தரமாகவும் என 7 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். மாறி மாறி சிப்டு முறை இருந்தாலும் ஓய்வின்றி உழைத்தாலும் அதன் கடுமையை நாங்கள் உணர முடியாத அளவிற்கு உள்ளே ஒரு உலகம்போல் வாழ்ந்து, கூட்டாக உற் பத்தியைப் பெருக்கினோம். இப்படி ஒரு நிறுவனம், வேலை என எதிர்காலக் கனவு களோடு பயணித்தோம். உள்ளே நிறைய நோக்கியா குடும் பங்கள் உருவாகி யிருந்தன. ஆனால் இன்றோ திடீரென ஆலை மூடப்படும் என்று கூறியவுடனே எங்களுக் கெல்லாம் அதிர்ச்சி. எங்கள் கனவுகள் சிதறிப்போனது. போராட்டங்கள் பல செய்தோம். பலனின்றி இருக்கிறது” என நித்யா பதிவு செய்தார். அதேபோல் தஞ்சையைச் சேர்ந்த கோகிலாவும் இதே நிலைமையைத்தான் பகிர்ந்து கொண்டார். இன்று இருவரும் குழந்தைகளோடு வீட்டில் இருக்கிறார்கள். ‘விஆர்எஸ் வேண்டாம்’ என்று உறுதியாகப் போராடினோம். இதுவரை மத்திய மாநில அரசுகளோ இதற்கான மாற்றைப் பற்றி யோசிக்க தயாராக இல்லை. ஆனால் மீதமிருக்கும் சக தொழி லாளிகளுக்காவது வேலை இருக்கிறதே என்று ஆறுதலாக இருந்தோம். இப்போது அதுவும் கேள்விக்குள்ளான நிலை. நோக்கியாவை இப்போது மூடப் போகிறார்கள் என்பது எல்லோரையும் வீதிக்கு கொண்டு வரப் போகிறது.

நோக்கியா நிறுவனம்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் பேசினார்கள். ஆனால் இன்று அத்தனையும் உடைந்து விட்டது. முதலாளி இன்னொரு இடத்தில் தொழில் தொடங்கிக் கொள்வார். அவர்களுக்கு அரசாங்கம் ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்குகிறது. எங்களைப் போன்ற தொழிலாளிகளுக்கு அரசு சொல்லும் பதில் என்ன? வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க வருவதை வரவேற்கிறார்கள். அனைத்தையும் இலவசமாக கொடுக்கிறார்கள் ஆட்சியாளர்கள். எங்களைப் போன்றவர்களின் உழைப்பு பிழியப்பட்டு பின் தூக்கி வீசப்படுகிறோம். இதுதான் இன்னைக்கு நிலைமை இதுல எங்க இருக்கு வளமை, வாழ்வு? நாட்டின் வளர்ச்சி? மண்ணாங்கட்டி“ என்கிறார்.

இதுபோன்றுதான் 60% பெண் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இதுபோல் பல நிறுவனங்களிலும் இக்கொடூரம் நடந்து கொண் டிருக்கிறது. நிலபிரபுத்துவ உற்பத்திமுறையை மாற்றி யமைத்த முதலாளித்துவம் சமூக, அரசியல் பண்பாட்டுத் தளங்களில் பொருளாதாரத்தில் நிலவிய ஆண், பெண் என்கிற பாகுபாட்டை இழி மதிப்பை, பெண்ணின் இருத்தலை அப்படியே பாதுகாக்கும் வகையில் இன்று நவீன வடிவில் சட்டமாக்கிவருகிறது.

இத்தகைய வளர்ச்சி சம ஊதியத்தை உத்தரவாத மாக்கவில்லை. வளர்ந்து வரும் நாடாகப் பேசப்படும் இந்தியாவில்தான் 33 விழுக்காடு இடஒதுக்கீடு நிறைவேற்றப்படாமல் இருப்பதையும் பார்க்கிறோம். பாலியல் தொழிலைச் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கப் பயன்படுத்தும் பல உதாரணங்களைப் பார்க்கலாம். வளர்ச்சித் திட்டங்கள் என்கிற பெயரில் ஆணாதிக்கக் கருத்தியலை, பண்பாட்டை பல வடிவங்களில் இணைத்தே வியாபாரமாக்கிவரும் நிலவுடமை - பெரும் முதலாளிய கூட்டத்தின் அபாயத்தை உணர்ந்து அணிதிரள அமைப்பாகுவோம். விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு பெருமளவு தொழில்மயம் அடைந்துள்ள வளர்ச்சியின் முன்னோடி மாநிலமாக பேசப்படும் தமிழ்நாட்டில்தான் ஆலை மூடல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் தான் மோடி ‘இந்தியாவில் தயாரி’ திட்டம் உழைப்பாளிகளின் ரத்தம் உறிஞ்சக் காத்திருக்கிறது. அன்னிய முதலீடு, ‘வளர்ச்சி’ என அனுமதிக்கப்பட்ட நோக்கியாவில்தான், 20000க்கும் மேற்பட்ட தொழி லாளிகள் வீதிக்கு துரத்தப்பட்டுள்ளார்கள். பல்வேறு உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க போகிறோமா? அல்லது அதை எதிர்த்து நம் உரிமையை காத்துக்கொள்ள போகிறோமா? ஆக மத்திய மாநில அரசுகளின் கூட்டோடு நாட்டை, நமது வாழ்வை பெருமுதலாளியக் கூட்டம் சூறையாடுவதற்கு எதிராக துணியுங்கள். தொழிலாளர்களே! ஆளும் வர்க்கத்தின் நரித்தனத்தை அம்பலப்படுத்த துணியுங்கள். நமது சந்ததியினரின் வாழ்வு, வளத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு பாட்டாளி வர்க்கமாகிய உங்கள் தோளில் சுமத்தப்பட்டிருப்பதை உணர்ந்து விழித்தெழுவதே இன்றையக் காலத்தின் கட்டாயம்! 

Pin It