திராவிட இயக்க நூறாம் ஆண்டு விழாக்கள் தமிழகம் எங்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், திராவிட இயக்க எதிர்ப்புப் பரப்புரைகளும் இன்னொரு புறத்தில் எதிர்முகம் காட்டுகின்றன. ஒரு விதத்தில் எதிர்ப்பு நல்லது. திராவிட இயக்கத்திற்குப் பழக்கமானதும் கூட! எதிர்ப்பிலே பிறந்து, எதிர்ப்பிலே வளர்ந்து, எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதிர்ப்புகளைப் புறம் கண்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.

திராவிட மாயையை ஒழிக்க வேண்டும் என்றும், திராவிடக் கட்சிகளையே அழிக்க வேண்டும் என்றும், இப்போது புதிதாய்ச் சிலர் புறப்பட்டுள்ளனர். புறப்பட்டுள்ள மனிதர்கள்தாம் புதியவர்களே தவிர, அவர்கள் முன்வைக்கும் முழக்கங்கள் மிகப் பழையவை. சொல்லிச் சொல்லி அலுத்துப்போனவை. தொடங்கித் தொடங்கித் தோற்றுப் போனவை.

‘இப்போது ஏன் பழைய வரலாற்றைப் பேசுகின்றீர்கள்?' என்று கேட்கின்றனர்.  வரலாறு இருப்பதால் பேசுகின்றோம். வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போக வேண்டும் என்பதால் பேசுகின்றோம்.  வரலாறு அறிந்தவனே, வரலாறு படைப்பான் என்பதால், மீண்டும் மீண்டும் வரலாற்றைப் பேசுகின்றோம்.  சரி. நம்மைத் தவிர வேறு எவரும் வரலாறு பேசுவதில்லையா?

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை, சோவியத் மண்ணில் நடந்த வர்க்கப் புரட்சியை யாரும் பேசவே இல்லையா? பாபர் மசூதி கட்டியதும், கஜினி முகமது படையெடுத்து வந்து, சோமநாதபுரக் கோவில் செல்வங்களை அள்ளிச் சென்றதும், நேற்றுத்தான் நடந்தனவா? அவைகளெல்லாம் பேசப்படும்போது, திராவிட இயக்க வரலாறு பேசுவதற்கு மட்டும் என்ன தடை?

பார்ப்பனீய ஆதிக்கம் என்பதெல்லாம் பழைய கதை என்று நாக்கூசாமல் கூறுகின்றனர். ஆரிய  திராவிடப் போராட்டமெல்லாம் எப்போதோ முடிந்து விட்டதாய் ஆறுதல் சொல்கின்றனர்.

ஆரிய  திராவிடப் போராட்டம் எப்போதோ முடிந்துவிட்ட ஒன்றெனில், சித்திரைதான் புத்தாண்டு என்னும் அறிவிப்பு இப்போது வருமா? இல்லாத ராமர் பாலத்தைத் தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்னும் அடாவடித்தனம், ஆரியத்தின் வீரியமாகத்தானே இன்றும் உள்ளது? அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவதாய்ச் சொல்லி, இழுத்து மூட நினைப்பது, ஆரிய  திராவிடப் போராட்டம் அசல் மாறாமல் இருப்பதைத்தானே அடித்துச் சொல்கிறது?

எனினும் ஆரிய  திராவிடப் போராட்டத்தில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. முன்பெல்லாம் திராவிடத் தலைமைக்குப் பின்னே திராவிடர்களும், ஆரியத் தலைமைக்குப் பின்னே ஆரியர்களும் அணிவகுத்தனர். இப்போது ஆரியர் தலைமைக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பவர்களும் திராவிடர்களாகவே உள்ளனர். சித்திரைதான் புத்தாண்டு என்று ஆரியத் தலைமை சட்டமன்றத்திலே அறிவித்தபோது, மேசைகளைத் தட்டி ஆரவாரித்த அத்தனை பேரும் திராவிடர்கள்தானே! கடைசி வரிசையில் அமர்ந்திருந்த கருப்பையா, சுப்பையா வரை கைதட்டி மகிழும் அத்தனை பேரும், தன்னை இழந்தும், தன்மானம் மறந்தும் வாழும் நம் சொந்தச் சகோதரர்தானே! பார்ப்பனரல்லாத திராவிடர்தானே!

சித்திரைதான் புத்தாண்டு என்று ஜெயலலிதா அறிவிப்பது, மறைமலையடிகளாரை மறுக்கும் செயல்தானே?  தமிழறிஞர்கள் பலர் கண்ட முடிவைத் தரையில் போட்டு மிதிப்பதுதானே!

"நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரையல்ல உனக்குப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த
ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத
அறுபதாண்டுக் கணக்கு
தரணியாண்ட தமிழருக்குத்
தைம்முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு''

என்று பாடிய புரட்சிக் கவிஞரை ஏளனம் செய்யும் அறிவிப்புதானே, சித்திரைப் புத்தாண்டு!

சித்திரையில் உழவர் பெருவிழா என்கிறார், இந்த மண்ணின் இயல்பறியாத இன்றைய முதலமைச்சர்! இப்போது வயல்களில் அறுவடையா நடந்து கொண்டுள்ளது. இயற்கை நடப்புகளைக் கூட மாற்றிவிட வேண்டும் என்று துடிக்கும் ஆரியமாலாக்களைப் பார்த்துக் கேட்கிறோம். சித்திரையில் புத்தாண்டு என்றால், மார்கழியில்தான் இனி ஆடிப்பெருக்கா? வசந்தம் உங்கள் ஆட்சியில் வரவே வரதா?

என்ன கூத்து இது?

இதுதான் ஆரியக் கூத்து!

இந்தக் கூத்தின் இன்னொரு காட்சிதான், ராமர் பால நினைவுச் சின்னம்! தில்லியில் ஒரு சு. சாமி வழக்குப் போட, சென்னையில் ஒரு சோ. சாமி அதனைத் தூக்கிக் கொண்டாட, தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா அதற்கு வக்காலத்து வாங்குகிறார். அ.தி.மு.க., தன் 2001ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில், சுஆடம் பாலத்தை அகற்றி, சேதுக்கால்வாய்த் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம்' என்று கூறியது.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், ‘’நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டு மொத்தத் தொழில் மேம்பாட்டிலும், முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க, மைய ஆட்சிப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருக்கும் தி.மு.க., ம.தி.ம.க., பா.ம.க., கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கு அறியும். இத்திட்டத்திற்குப்  போதிய நிதியை உடனே ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று அமைய விருக்கும் மைய அரசைக் கழகம் வலியுறுத்தும்'' என்றுதான் அ.தி.மு.க. குறிப்பிட்டிருந்தது.

இப்போது அப்படியே தலைகீழாய்ப் புரட்டி, இராமர் பாலத்தைத் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று, இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். சுபேசும்நா இரண்டுடையாய்' என்று ஆரிய மாயையில் அன்று அண்ணா சொன்ன செய்தி இன்றும் இப்படி உறுதிப்படுகிறது. ஒரு மணல் திட்டைப் பாலம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தால், அது உண்மையாகிவிடும் என்று பார்ப்பன சக்திகள் நம்புகின்றன.

2002 ஆம் ஆண்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புனைகதைதான் இது. அமெரிக்காவிலுள்ள ‘நாசா' என்னும் விண்வெளி மையம், 17 லட்சத்து 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் (?), தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே ஒரு பாலம் மனிதர்களால் கட்டப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்து அறிவித்துள்ளதாகக் கதை கட்டி விட்டனர்.

‘நாசா' இணையத்தளத்தில், விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் மட்டும்தான் வெளியிடப்பட்டிருந்தனவே அல்லாமல், அது பற்றிய எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. பிறகு, உச்சநீதி மன்றம் உரை இந்தப் ‘புளுகு' கொண்டு செல்லப்பட்டதால், நாசாவின் சார்பில், அப்படி எந்தக் குறிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என்று, மார்க்ஷெஷ் என்னும் விஞ்ஞானி தெரிவித்தார். அதன் பிறகுதான் நாசாவின் பெயரில் இந்தப் பொய்ச் செய்தியைப் பரப்பியவர்கள் யார் என்னும் உண்மை வெளி வந்தது. அமெரிக்காவிலிருந்து இயங்கும், சுவைஷ்ணவா நியுஸ் நெட்வொர்க்' என்னும் இணையத்தளமே இத்’திருப்பணி'யைச் செய்துள்ளது.

வைஷ்ணவா நியுஸ் நெட்வொர்க் என்னும் இணையத்தளம், இங்கிருந்து அங்கு சென்ற பார்ப்பனர்களால் இயக்கப்படுகிறது. ஓலைச்சுவடிகளில் தொடங்கி இணையத்தளம் வரையில், உண்மைக்கு மாறானவைகளை உலகுக்குச் சொல்வதில் அவாள் உறுதியாய் இருக்கிறார்கள்.

தனுஷ்கோடிக் கரைக்குப் போனால், ஓரிடத்தைக் காட்டி, 'ராமர் பாதம்' என்கின்றனர். ஒற்றைப் பாதம்தான் அங்கு உள்ளது. அதுவும் உப்பலாக உள்ளது. சரி, ராமரின் இன்னொரு பாதம் எங்கே என்று கேட்டால், அதை இராமர் இலங்கையிலே வைத்து விட்டார் எனக் கதை விடுகின்றனர். சரி, இரண்டாவது பாதத்தை இலங்கையில் வைத்த பிறகு, எதற்காகப் பாலம் கட்ட வேண்டும் என்று கேட்டால், எந்த விடையும் இல்லை.

ஆரிய  திராவிடப் போர் வெறும் பழங்கதை என்பவர்கள், இந்தப் புதுக்கதைகளுக்கெல்லாம் என்ன விடை சொல்லப்போகிறார்கள்?

Pin It