kajarwal 400‘பாப்புலிசம்’; எனப்படும் பொதுசனவாதம் வரலாற்றில் நேர்மறை அர்த்தம் கொண்டதாகத் தோற்றம் பெற்றிருக்கின்றது. பணக்கார மேல்தட்டுச் சீமான்களுக்கெதிராக சாமானிய மக்களின் உரிமைக்குரலை எழுப்புவதே பொதுசனவாதம் என்று பெயர்பெற்றது.

அமெரிக்காவில் விவசாயிகளை ஆதரித்த கட்சி ”பாப்புலிஸ்ட் கட்சி” என்று அடையாளப்பட்டது. இந்தப் பின்னணியில் மக்களாதரவு அரசியல் கோட்பாடு என்று பொதுசனவாதம் பெயர் பெற்றது.

பொதுசனவாத அரசியல்:

பொதுசனவாத அரசியல் மூன்று வகையில் வெளிப்படுத்திக் கொள்கிறது. ஒன்று நிலக்கழாரிய தர்மகர்த்தா கொடைவள்ளல் பாணியிலானது. இரண்டு முதலாளித்துவ தாராளவாத வகைப்பட்டது. மூன்றாவது பாசிசத்தன்மை கொண்டது.

நிலக்கிழாரியப் பொதுசனவாதம்

அம்மாவே.. வள்ளலே... உன்னால் பிழைத்தோம்.. வாழவைத்த தெய்வமே.. கருணையே.. தயாளமே... நிழல தரு தருவே.. முடிசூடா மன்னரே.. வித்தகரே.. ஐ.நா.சபையே... என்று முடிவில்லாமல் நீளும் வசனப்பிச்சைக்குரல் இடைவிடாமல் ஒலிக்கக் கேட்டுக் கேட்டு இன்புறுகிற தலைவர்களும் ஓதி ஓதி ஓயாதவாயர்களும் நிரம்பிய இந்த அரசியல் பெருஞ்ஜோதிக்குப் பெயர் நிலக்கிழாரியப் பொதுசனவாதம். அல்லது ஆண்டான் - அல்லக்கை பொதுசனவாதம்.

இதில் வேண்டியது அடிமைத்தனம.. விசுவாசம்.. சுயமாரியாதையற்றப் பணிவு.. கேள்வியற்றுப் பின்தொடர்தல்.. என்று தொண்டருக்கும் இழிவாகப் பேசுதல்.. கட்டளைப் போடுதல்.. பதவிப்பறித்தல்.. பழிவாங்குதல்.. போலிப் பகட்டுடன் வலம்வருதல்..

பிறந்தநாளுக்கு வருகைப் பதிவேட்டைக் கண்காணித்தல்.. மகுடம் சூட்டி -வாளுடன் போஸ் கொடுத்தல் என்று தலைவருக்கும் என மிக தமாசான ஒரு அரசியல் சூழலே நிலக்கிழாரியப் பொதுசனவாதம் என்கிறோம்.

தாராளவாதப் பொதுசனவாதம்

அரசின் செயல்பாடுகள் கருணை அடிப்படை யிலானதாக இருக்க வேண்டும் என்று கோரக் கூடியவர்கள் தாராளவாத பொதுசன வாதத்தை முன்னிறுத்துகின்றனர். மக்கள் நல அரசு... நல்லரசு.. சிறந்த சனநாயக அரசு.. என்று பல்வேறு பெயர்களில் அரசு மக்களுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற பிரிவினர் கேஜ்ரிவால்.. மேதாபட்கா.. மற்றும் பல சமூக சேவகர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று வலியுறுத்துபவர்களாக உள்ளனா. இவர்கள் அரசின் வர்க்கத்தன்மையை மறுத்து இத்தகைய ஆளுமை பிம்பங்களால் நாடு வழிநடத்தப்பட வேண்டும் என்கின்றனர். காந்தி.. போன்ற மனிதர்கள் இல்லாததன் விளைவே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்கின்றனர். இந்தத் தாராளவாதப் பொதுசனவாதம் ஒரு முதலாளித்துவ தாராளவாத அரசியல்போக்கை முன்வைப்பதாக உள்ளது..

வலதுசாரிப் பாசிசப் பொதுசனவாதம்..

நிலக்கிழாரியப் பொதுசனவாதம் வரலாற்றில் தேங்கிப் போன பொருளாதார மற்றும் பண்பாட்டு அரசியலுடன் தன்னை நிறுத்திக் கொள்ளும்.. தாராளவாத பொதுசனவாதம் நிலவும் சமூக அமைப்பில் நல்ல கூறுகளை எல்லாம் தேடித் தேடி நாடும்.. வலதுசாரிப் பொதுசனவாதமோ ஆளும் வர்க்கத்தின் தீவிர ஒடுக்குமுறையாளர்களை ஆதரிக்கும் வகையில் பொதுசனத்தைத் தூண்டும். ஊழல் - வறுமை - பஞ்சம் என ஏதாவதொரு மக்கள் பிரச்சனையை முகமூடியாகக் கொண்டு சாதி-மத-இன வெறியைக் கட்டமைத்து பெரும்ரத்தக்களரியை உண்டாக்கி உண்மைப் பிரச்சனையைத் திசைதிருப்பும்..

நாம் இந்துக்கள்.. இந்தியா இந்துநாடு.. இந்தியே நமது தாய்மொழி.. இதை ஏற்காதவர்கள் தேச துரோகிகள் என்கிற வகையில் நமது மோடி வகையறாக்கள் கிளப்புகிற பொதுசனவாதம் மிகப் பிற்போக்கானது.. மிக இழிவானது. மக்களிடம் இருக்கும் பின்தங்கிய நிலைமைகளை மிக மூர்க்கத்தனமாகப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் பிழைப்புவாத நோக்கம் கொண்டது. எனவே இந்தப் பாப்புலிசம் அபாயகரமானது.

jayalalitha 300பொதுசனவாதம் சரியும் தவறும்

சனநாயக நாட்டில் பொதுசனக்கருத்தின் அடிப்படையில்தான் ஆட்சியே நடக்கிறது. எனவே பொதுசனவாதத்தை எவ்வாறு தவறெனக் கொள்ள முடியும் என்ற கேள்வி மிக இயல்பானது. மனித சிந்தனை வர்க்கப் போராட்டத்தினூடாகவே வளர்ச்சிப் பெற்று வருகிறது. இப்போராட்டங்களில் அரசியல் அதிகாரம் கொண்ட ஆளும்வர்க்கங்கள் மக்களின் சிந்தனையைத் தமக்கான வகையில் அரசின் அனைத்துக் கட்டமைப்புகளையும் பயன்படுத்தி வடிவமைக்கின்றன.

எனவே பொதுசனக் கருத்தும் உளவியலும் ஆளும்வா;க்கம் விரும்பும் வகையிலானதாகவே உருவெடுக்கிறது. இதனால் பொதுசனவாதம் மக்கள்விரோதக் கருத்துக் கொண்டதாக நிலைப்பெற்றிருக்கிறது.

தமிழகம் தந்தைப் பெரியார் பிறந்த மண்ணாக இருந்தாலும் இங்கு இப்போதுகூட இடஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? சாதி மறுப்புத் திருமணங்களைத் தடைசெய்யலாமா? இந்தியைத் தேசிய மொழியாக்கலாமா? பெண்ணுக்கு சொத்துரிமை வேண்டுமா? என்பது போன்ற பல தீர்மானங்களை முன்வைத்து பொதுவாக்கெடுப்பு நடத்தினால் அனைத்திலும் முற்போக்குக்கு தோல்விதான் மிஞ்சும்.. எனவே பொதுசனக்கருத்தியலை முறியடிக்காமல் புரட்சியின் முன்னேற்றம் சாத்தியமில்லை.

கருத்துக்களை அலைகளாய் பரப்புவோம்... பொதுசனத்தின் சிந்தனையில் புரட்சிப் பொறி யேற்றுவோம்.

Pin It