ஒட்டு மொத்த மனித இனத்தையும் உடைமையுடையோர், உடைமையற்றோர் என வர்க்க அடிப்படையில் இரண்டாகப் பிரிப்பதுபோல், மத நம்பிக்கையுடையோர், மத நம்பிக்கையற்றோர் என மத அடிப்படையிலும் இரண்டாகப் பிரித்து விடலாம்.

730 கோடி கொண்ட உலக மக்கள் தொகையில், 130 கோடிக்கும் மேலானவர்கள் தங்களை “மதமற்றோர்” என அறிவித்திருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. அப்படியானால் மத நம்பிக்கையாளர் பெருவாரியானவர்களாகவும், மத நம்பிக்கையற்றோர் சிறுபான்மையினராகவும் இருக்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலும் கூட இதுதான் நிலை.

5 இலட்சம் ஆண்டு கால வரலாறு கொண்ட மனித இனத்தில், எண்ணற்ற கடவுள்களை மனிதக் கூட்டம் உருவாக்கியிருக்கிறது. இயற்கை மீது அவர்கள் கொண்ட ஓர் அச்சம்தான் இதற்குக் காரணம். இதன் அடிப்படை அவர்களின் அறியாமை. தாங்கள் கொண்டிருந்த புரிதல்களை தாங்கள் உருவாக்கிய கடவுள்களின் மீது சுமத்தி, அதற்கு அந்த கடவுள்களிடமே தீர்வைக் கேட்கும் உளவியல் அடிப்படையிலே கடவுள் வணக்கத்தைக் கடைப்பிடித்தனர். கால ஓட்டத்தில் இந்தக் கடவுள்களிலே கூட மாற்றத்தைக் கண்டபடியே வந்திருக்கின்றனர். பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு இது.

மனித இனத்திற்கு மதம் என்ற அமைப்பு எப்போது தேவைப்பட்டிருக்கும்? மதங்களுக்கும் மனித இனத்திற்குமான தொடர்பு என்ன? மதம் இல்லாமல் மனித சமூகத்தால் இயங்க முடியாதா? போன்ற கேள்விகள் இங்கே நாம் கவனத்துடன் விவாதிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

மதம் என்ற நிறுவனத்திற்கும் கடவுள் வழிபாட்டிற்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. கடவுள், வணங்குதல், வழிபடுதல் போன்றவைகள் எல்லாம் மனித குலம் தோன்றியதிலிருந்தே ஏற்பட்ட ஒரு உணர்ச்சி தான். இயற்கையின் சீற்றங்களை அச்சத்துடன் பார்த்ததன் வெளிப்பாடுதான் அது. ஆனால் சமூக வளர்ச்சியின் போக்கில், ஆதிக்க சக்திகளால் உருவாக்கிக் கொண்டது தான் மதம் என்கிற அமைப்பு.

கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வழி, அன்பின் அடையாளம், நன்னெறிகளைப் போதிக்கும் ஆசான் என்று, மதம் என்ற அமைப்புக்கு பல்வேறு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டாலும், உண்மை அதுவல்ல. மதம் என்பது நம்பிக்கைகள் மீது கட்டப்பட்ட கோட்டை, எல்லையற்று சுதந்திரமாக சிறகடித்துப் பறக்க வேண்டிய மனித சிந்தனைகளை முடக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் மதம்.

காட்டுமிராண்டி சமூகம், பண்டைய பொதுவுடைமை சமூகம், அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம், சோசலிச சமூகம் என்று மனித குலம் கடந்து வந்த கால கட்டங்களை வரையறுத்துள்ளனர்.

பரந்து கிடந்த நிலபரப்பில் எல்லார்க்கும் எல்லாமும் என்று சமத்துவமாக வாழ்ந்த காலகட்டத்தைக் கடந்து, “உடைமைச் சிந்தனை” துளிர்த்தபோது மனிதர்கள் குழு மோதல்களில் ஈடுபட்டு வெற்றியடைந்தவர் தோல்வியுற்றோரை அடிமைகளாக்கிக் கொண்டனர்.

அன்றைய காலக்கட்டத்தில் நிலங்கள் மட்டுமே உற்பத்தி சாதனங்களாக இருந்தன. இதைக் கைப்பற்ழுக் கொள்வதற்கும், உடைமையாக்கிக் கொள்வதற்கும் ஏற்பட்ட பகை முரண்களில் உண்டானதுதான் அரசு என்ற அமைப்பு. உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட உள் முரண்களால் உண்டானது மதம் என்ற அமைப்பு.

பல்வேறுபட்ட மொழி, தேசிய இனங்கள், தேசங்கள், அரசுகள் உருவான காலகட்டத்தினூடே மத நிறுவனங்களும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. ஆங்காங்கே தோன்றிய அரசுகளால் மதக்கோட்பாடுகளும் புதிது புதிதாக உருவாகின. ஆதலினால் கடவுள் கதைகளையும் தனிமனித சிந்தனைகளையும் மெருகூட்டி, பற்பல புதிய மதங்களை உருவாக்கிக் கொண்டனர்.

அரசு அதிகாரத்தில் பெரும்பாலான நாடுகளில் மதங்கள் முக்கிய பாங்காற்றுகின்றன. இதில் கிறித்துவம், இசுலாம், பவுத்தம் போன்ற மதங்கள் குறிப்பிடத் தக்கவைகள்.

அமெரிக்காவிலுள்ள பேவ் (யசிநி) பேரவை என்ற நிறுவனம் உலக அளவில் மதரீதியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தியது. அதில், உலக மக்கள் தொகையில் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் 32 சதவீதம் பேர்; 157 நாடுகளில் பெரும்பான்மையுடன் வாழ்கிறார்கள் என்றும், உலக மக்கள் தொகையில் கிறித்துவர்கள் முதலிடத்தில் உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு அடுத்த இடத்தில் இசுலாமியர்கள் 23 சதவீதம் பேர் என்றும், இவர்கள் உலகளவில், 160 கோடி பேர் என்றும், உலகின் 100 நாடுகளில் இவர்கள் வாழ்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் இந்து மதத்தினர் 15 சதவீதம் பேர் என்றும், உலகளவில் இவர்கள் 100 கோடி என்றும், இதற்கு அடுத்த இடத்தில் புத்த மதத்தினர் 7 சதவீதம் பேர் வாழ்கின்றனர் என்றும், இவர்கள் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் அவ்வறிக்கை சொல்கின்றது.

அதேபோல, 2015-ல் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் “டெலிகிராஃப்” பத்திரிக்கை, உலகில் அதிக மத நம்பிக்கை கொண்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. எத்தியோப்பியா - 99% , இலங்கை - 99%, யேமன் - 99%, சோமாலியா - 98%, ஆப்கானிஸ்தான் - 97%, எகிப்து - 97%, மியான்மர் - 97%, கம்போடியா - 96%, ஜோர்டான் - 96%, அமெரிக்கா - 56%, பிரிட்டன் - 30%, பஹாய்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், தாவோயிஸ்டுகள் - 0.8%, யூதர்கள் - 0.2%,

மத நம்பிக்கை இல்லாமல் வாழும் நாடுகளாவன :

சீனா - 7%, ஜப்பான் - 13%, சுவீடன் - 19%, நார்வே - 21%, செக் குடியரசு - 23%, ஹஜுங்காங் - 26%, நெதர்லாந்து - 26%, இசுரேல் - 30%, நியூசிலாந்து - 33%, ஆஸ்ட்ரேலியா - 34%, அஜர் பைஜான் - 34%, கியூபா - 34%, வியட்நாம் - 34%, ஸ்பெயின் - 37%, சுவிட்சர்லாந்து - 38%, ஆஸ்திரியா, ஹங்கேரி, லாக்சம்பர்க், அல்பேனியா - 39%.

மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்களை ஆய்வுக்குட்படுத்தினால் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். அதாவது சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் வளர்ந்துள்ள நாடுகளில் வாழும் மக்களிடையே உள்ள மத நம்பிக்கையும் அதே வேளையில் சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் வளர்ச்சியற்ற மக்களிடையே இருக்கும் மத நம்பிக்கையும் இந்த அளவுக்கு வேறுபட்டிருப்பதற்குக் காரணம் என்ன?

மத நம்பிக்கைக்கும், அரசியல், சமூக, அறிவியல், பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு இருப்பது இங்கே புலப்படுகிறது. மத நம்பிக்கையற்ற தன்மையுள்ளவர்களையும் இதே அளவுகோல் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளலாம்.

மத நம்பிக்கை கொண்டோரில் எத்தியோப்பியாவில் 99% இருக்கும் அதே வேளையில், மத நம்பிக்கையற்றோரில் அல்பேனியாவில் - 39% மக்கள் இருக்கிறார்கள். இதிலிருந்து நாம் முடிவுக்கு வந்தடைய வேண்டிய இடம் எது?

வரலாற்று ரீதியாக, எத்தியோப்பியாவில் அரசியல், ஆட்சியில் எண்ணற்ற பிரச்சனைகள். இந்நாட்டு மக்கள் இன்று வரையில் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்களாகவும் சுகாதார வாழ்விற்காகவும், கல்விக்காகவும் போராடி வருகின்றனர். மேலும், இனக்குழுக்களிடையே தொடர்ந்து நடைபெறும் பிரச்சனைகள், அரசியல் அழுத்தங்கள் ஒருபுறம்; போதிய கல்வியறிவு, விழிப்புணர்வு போதாமை, ஒருபுறம் இயற்கை வளங்கள் நிறைய இருந்தாலும், எத்தியோப்பிய மக்கள் கல்லாமையிலும் இல்லாமையிலும் இன்றளவும் வாழ்கின்றனர்.

இதே வேளையில், அல்பேனியா குடியரசு நாட்டில் 70% இசுலாமியர். மொத்தம் உள்நாட்டு உற்பத்தி - 12.3 பில்லியன் டாலர். மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண் - 75, பெண் - 80, கல்வியறிவு வீதம் - 95.9%, இரண்டாம் உலகப் போருக்கு முன்னால், அல்பேனியர்களில் 70% முஸ்லீம்கள், 12% கத்தோலிக்கர்கள், 11% கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆகியோர் அனைத்து மசூதிகள் மற்றும் தேவாலயங்களை மூடிவிட்டு மதமற்ற அரசை அறிவித்தது.

முடிவாக, மதம் என்ற அமைப்பைப் பற்றி மனிதகுல மேம்பாட்டிற்காக உழைத்த, சிந்தித்த தலைவர்கள் கூறியிருக்கும் கருத்துக்களை இங்கே கவனிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

“எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால் வகுப்பு வாதத்தையும், மதவெறியையும், வெறுப்புணர்வையும், பகையையும் வளர்க்கக் கூடிய எல்லா எழுத்துக்களையும், தீண்டத்தகாதவையாக நான் அறிவிப்பேன்“ என்று காந்தி அவர்களும்,

“அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது” என்று அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் அவர்களும்,

“மதத்திலிருந்துதான் ஏதேச்சதிகாரம் பிறக்கிறது, மக்கள் அடிமைகளாக்கப் படுகின்றனர்” என்று நேரு அவர்களும்,

“உலகிலுள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கிற பூமி மீதே கட்டப்பட்டுள்ளன. மனிதனை முட்டாளாக்கும், பிரித்து வைக்கும் அமைப்பு மதம் ஆகும். மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதனின் பிறப்பு பேதங்கள் புதைக்கப்படுகின்றன” என்று பெரியாரும்,

“மதம் என்பது பொதுவாக மானுடத்தின் அறிவியல், மகிழ்ச்சி, விடுதலை பேசுகின்ற கொள்கைகளை கொண்டிருக்கும்” என்று மேதை அம்பேத்கர் அவர்களும் கூறியிருக்கின்றனர்.

ஆனால் மதம் என்ற நிறுவனம் இச்சமூத்தில் சற்றும் செல்வாக்கு குறையாமல் தழைத்தோங்கி விளங்குவதற்கும், தமது இருப்பைத் தக்க வைத்திருப்பதற்கான காரணத்தை மார்க்சிய, லெனினியப் பார்வையோடு அணுகும்போது நமக்குப் புதிய புரிதல் ஏற்படுகின்றது.

அதாவது, சோசலி சமூகம் அமைகிறபோது மதத்தை தடை செய்ய வேண்டும் என்று டூரிங் கருத்து தெரிவித்தபோது, அதனை எங்கல்ஸ் கடுமையாக எதிர்த்தார்.

“மதம் என்பது தனிநபரின் நம்பிக்கை. அதில் தலையிடக் கூடாது என்ற கருத்தைப் பற்றியும் சரியான புரிதல் வேண்டும்.

ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதினாலும் மக்கள் மனங்களிலிருந்து மதம் அகன்று விடாது. ஏனென்றால் அந்த மக்கள் முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்கள். அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டுப் போராடும் மக்கள்தான் மதத்தின் அடிப்படைக்கு எதிராகவும் போராடக் கற்றுக் கொள்வார்கள்” என்றார், மேதை லெனின்.

“மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆழமாகவும் உள்ளது. மதம் மக்களுக்கு அபினி, மதம் இதயமற்ற உலகின் இதயம்; (துன்பப்படும்) மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான போதை” என்றார் மார்க்ஸ்.

உலகெங்கும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கெல்லாம் அந்தந்த நாட்டு அரசுகள்தான் முக்கிய காரணம், அதை மக்கள் நேரடியாக உணர்ந்து விடமால் பார்த்துக் கொள்ளும் வேலையை மதம் செய்கிறது. வெகுமக்கள் இதனை உணருகின்ற ஒரு கட்டம் வரும் போது, அரசுகளும், மதங்களும் தூள் தூளாகும்.

Pin It