நம்மில் பெரும்பாலோர் ஒப்பேற்றுதலில் கில்லாடிகள்தான். இந்த ஒப்பேற்றுதல் வாழ்வின் பல்வேறு தருணங்களில் நம்மைக் காப்பாற்றியிருக்கிறது. எதோ ஒரு பிரச்சனையின்பால் கோபமாக இருக்கும் ஒரு காதலியை ஒரு காபி சந்திப்பு சமாதானப்படுத்திவிடுவது போல. தனிப்பட்ட விவகாரங்களில் ஒப்பேற்றுவது என்பது சமுகத்தைப் பாதிக்கப் போவதில்லை. சமூகத்தோடு தொடர்புடைய எந்தவொரு நிறுவனமும் ஒப்பேற்றுவதால் அதன் செயல்திறன் குறைகிறது. அல்லது அந்த செயலின் வீரியம் குறைந்து போகிறது. ஒரு வேலையில் நல்லவிளைவு ஏற்பட வேண்டுமெனில் அதில் ஒப்பேற்றல் ஒழிக்கப்பட வேண்டும்.

கண்துடைப்பு, செத்தவன் கையில வெத்தலபாக்கு கொடுத்தமாதிரி, தாக்காட்டுதல், பாவ்லா, சாம்பிராணி போடுவது என்பது போன்ற வார்த்தைகளெல்லாம் ஒப்பேற்றும்; ஆட்களைக் குறி வைத்து வந்ததுதான். தனிநபர் வாழ்விலும் சமுகத்திலும் அரசியலிலும் இது போன்ற போக்குகள் வெளிப்படுவதை நாம் ஒப்பேற்றல் என்கிறோம். அரசியலில் வெளிப்படும் ஒப்பேற்றல் சமூக முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடியது என்பதால் அதுகுறித்த விழிப்புணர்வு அவசியப்படுகிறது. அது உடனடியாக தடுக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

இன்றிருக்கும் முதலாளித்துவ சந்தர்ப்பவாத அரசியல் போக்கில் மக்கள் அனைத்திலும் ஒப்பேற்றலைப் பார்க்கிறார்கள். பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியை ஏற்கனவே நின்ற வேட் பாளாரின் துணைவியைக் கொண்டு நிறுத்துவது. பின் நிர்வாகத்தை அந்த ஆண் வேட்பாளரே கையி லெடுத்துக் கொள்வது. ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் வாழ்வுரிமைக்காகப் போராடினால் அவர்களின் சாதித் தலைவர்களுக்கு சிலைவைப்பது. இந்தப் போராட்டத்தில் உங்களின் பங்கு இல்லையே என்று கேட்டால் நான் கல்லக்குடிக்காக களம் கண்ட காலத்தில் என்று வரலாறு பேசி சரடுவிடுவது என்றெல்லாம் ஒப்பேற்றல் என்பது மிகச் சாதாரணமாக அரங்கேறிவருகிற கேலிக்கூத்துகளாகவும் உள்ளன.

இந்த போக்கு எதிரிவர்க்க அரசியலில் தான் வெளிப்பட வேண்டும் என்பதில்லை. முற்போக்கு மற்றும் இடதுசாரி அரசியல் போக்கிலும் வேறுவகையில் வெளிப்படுகிறது. ஒருவர் ஒரு மாதத்தில் 10 வகை பிரச்சனைகளுக்காக வேலைசெய்தார். அதற்காக அவர் சுவரொட்டி ஒட்டினார். இதற்காக துண்டறிக்கை போட்டார். மற்றொன்றுக்காக சாலை மறியல் செய்தார் என்ற பதிவுச் செயல்பாடுகளை நாம் பல செயல்வீரர்களிடம் பார்க்கிறோம். அவரின் அல்லது அந்த இயக்கத்தின் செயல்பாடு கடந்த 6 மாதமாக எந்தப் பிரச்சனையில் தொடர்ந்து இயங்கியது. எந்தப் பிரச்சனையில் விடாப்பிடியாக பணியாற்றி வெற்றிபெற்றது அல்லது தோல்வியடைந்தது என்ற மீளாய்வுக்குள் சென்றால் பல பிரச்சனைகள் புலப்படத் தொடங்கிவிடுகிறது. ஏனெனில் எந்த பிரச்சனைக்காகவும் தொடர்ந்து இயக்கம் காணும் சிந்தனைமுறை நமக்கு தன்னிச்சையாக வருவதில்லை. ஏனெனில் எல்லாவற்றுக்கும் வேலைசெய்து விடவேண்டும் என்ற நல்லெண்ணமே தீயசக்தியாகிக் கெடுக்கிறது. நமக்குள் இருக்கும் நல்லவர்வேறு, நம்மை அனைத்துக்கும் ஓடு ஓடு என்கிறார். மொத்தத்தில் எல்லாவற்றுக்கும் செய்த வேலை என்னவென்றால் காத்திரமாக எதுவுமில்லை என்றாகிவிடும். இது மக்கள் பிரச்சனைக்கு முகம் கொடுக்கும் நமது ஆற்றலைக் குறைத்து இயக்க அறிவையும் மங்கச் செய்யும். காலம் முழுக்க மாயமான் வேட்டையாடி களைத்துப் போவதுதான் நடக்கும்.இந்த செயல்பாட்டு முறை மிகத் தன்னிச்சையான சிந்தனை முறையின் (Spontaneity) விளைவு ஆகும். இது நம்மைத் திட்டமிட்ட செயல்பாட்டிலிருந்து திசை திருப்பி பிரச்சனைகளுக்குப் பின்னால் துவளத் துவள ஓடவைக்கிறது.

இது நமது செயல்பாடு குறித்த சிந்தனைப் பிரச்சனை என்றாலும் இதற்கு வலிமையான காரணியாக புறத்திலுள்ள சமுதாய அரசியல் போக்குகளும் இருக்கின்றன. ஆளும் வர்க்கங்கள் பிரச்சனைகளின் பேரிரைச்சல்களுக்குள் நம்மை நிறுத்தி வைத்திருக்கின்றன. மாற்றி மாற்றி ஒலி எழுப்பி அங்கும் இங்கும் ஓடச்செய்கின்றன. முதலாளித்துவச் சுரண்டல் ஒவ்வொரு நாளும் வரலாறுகாணாத தீவிரத்தை எட்டுகிறது. தமிழகத்தை ஒருபுறம் வெட்டுகிறார்கள்; ஒருபுறம் தோண்டுகிறார்கள்;ஒருபுறம் உறிஞ்சுகிறார்கள்; ஒருபக்கம் அணுகுண்டு புதைக்கிறார்கள். இப்படி ஒட்டு மொத்தத் தமிழக மக்களையும் ஒரு போர்ச்சூழலில் தள்ளியிருக்கிறார்கள். சாதியச்சிக்கல்கள் இந்திய அரசின் ஒடுக்குமுறைகள் என பற்பலச்சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆளும்வர்க்கம் அன்றாடம் நமக்கொரு பிரச்சனையைத் தூக்கிப் போடுகிறது. அவற்றின் பின்னால் நம்மை ஓடவைத்து அலைக்கழிக்கிறது. இந்த நிலையில், நாம் நமது சக்திக்குட்பட்ட வகையில் முதன்மையான பிரச்சனையைத் தேர்ந்தெடுத்துத் தொடர்பணியாற்றும் போதுதான் அந்தப்பிரச்சனை குறித்த ஆழமான நடைமுறைப் புரிதலை நாம் வந்தடைகிறோம். தொடர் செயல்பாடு மக்களின் நம்பிக்கையை அதிகரித்து அதிகமான மக்களை நம்மை நோக்கி ஈர்க்கும். இது நமக்கு பலதளங்களில் பணியாற்றுவதற்கான ஊழியர் பலத்தைஅதிகரிக்கும். அந்த வளர்ச்சியை எட்டும் நிலையில் நம்மால் அனைத்துச் சிக்கல்களுக்கும் முகம் கொடுப்பதை நோக்கி முன்னேற முடியும்.

நாம் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டும் என்ற உணர்வை குறைத்து மதிப்பிடுபவர்கள் இல்லை. ஆனால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுப்பதை நோக்கிய சரியான வழிமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையே விவாதிக்கிறோம். நிறைவுறாத பணிகள் எதுவும் விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஒப்பேற்றல் போக்கின் அரைகுறைத்தன்மையே நமது செயல்பாட்டின் எதிரி; நமது வெற்றியின் எதிரி; மக்கள்திரளை அணிதிரட்டுவதற்கு எதிரி; இயக்க அறிவியலுக்கு எதிரி.

நமது பாட்டர்மார்(பாட்டன் பாட்டி); சொன்னது போல

‘அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்’.

Pin It