மலாலா என்ற பெயர் நமக்கு அதிகம் பரிச்சயமான ஒன்று, நமது தமிழ் செய்தி தொலைக் காட்சிகளிலிருந்து, இந்திய, உலக செய்தி தொலைகாட்சிகள் வரை அடிக்கடி உச்சரிக்கும் பெயர் மலாலா. மலாலாவிற்கு தற்பொழுது அமைதிக்கான நோபல் பரிசு கூட அறிவிக்கப்பட்டுள்ளது. மலாலா தாலிபான்களின் தாக்குதலுக்குள்ளான பதின் வயது சிறுமி, இவரைப் போல நிறைய சிறுமிகள் தாலிபான்களைத் தாக்குகின்றோம், பயங்கரவாதிகளை தாக்குகின்றோம் என்று அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டு வீச்சுகளில் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். இந்த சிறுமிகளில் ஒருவரைக்கூட நமக்கு தெரியாது, காரணம், அவர்களைப் பற்றி இந்த செய்தி ஊடகங்கள் எதையும் கூறுவதில்லை. ஏனெனில் உண்மையில் பெரும்பாலான ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாகவே செயல்படுகின்றன. ஊடகங்கள் மறைத்த அமெரிக்காவின் குண்டுவீச்சினால் தனது பாட்டியை இழந்த நபிலா என்ற ஒரு சிறுமியைப் பற்றி தான் இம்மொழிபெயர்ப்பு பேசுகின்றது. நபிலா போன்ற எண்ணற்ற சிறுமிகளும், பாதிக்கப்பட்ட குடும்பங்களும் பாகிசுதானில் இருக்கின்றன. “பயங்கரவாதத்திற்கெதிரான போரை” நடத்துகிறோம் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் கொல்வது அமெரிக்காவிற்கு வாடிக்கையான ஒன்று என்பது வியட்நாம் போரில் ஆடைகளெல்லாம் எரிந்த நிலையில் நிர்வாணமாக ஓடிவந்த அந்த குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்த நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே நிலை தான் இங்கும். பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் என்றால் அதனை உருவாக்கும் அமெரிக்கா, இசுரேல் போன்ற அரசுகளைத் தான் முதலில் நாம் எதிர்க்க வேண்டும்.

malala yousafzaiமலாலா யூசாஃப்சாய் போல நபிலா ரெஹ் மானுக்கு வாஷிங்டனில் வரவேற்பும், வாழ்த்தும் கிடைக்க வில்லை. அக்டோபர் 24, 2012 ஆம் ஆண்டு, வடக்கு வஸ்ரிஸ்தானில் தங்கள் கிராம வீட்டினருகில் வேலை செய்து கொண்டிருந்த நபிலா, நபிலாவின் பாட்டி மற்றும் உடன்பிறந்தவர்கள் இருந்த இடம் மீது பறந்தது ஒரு ஆளில்லா போர் விமானம். வரவிருந்த ஈத் விடுமுறைக்காக தயாராகிக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்திலிருந்த குழந்தைகளுக்கு பாட்டி மொமினா பீபி வெண்டைக்காய் பொறுக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அன்று அந்தக் குடும்பத்தின் தலை எழுத்தையே மாற்றக் கூடிய அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பாகிஸ்தானின் கிராமப்புற மக்களை 24 மணிநேரமும் பின் தொடரும் அந்த ஆளில்லா போர் விமானங்களின் தெள்ளிய ஓசை வானத்தில் கேட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு முறை பேரிரைச்சல் கேட்டது. ஆள் இல்லாத அந்த போர் விமானம் தனது குண்டுகளைப் பொழிய அந்த நொடியிலேயே அக்குழந்தைகளின் வாழ்க்கை வலியும், குழப்பமும், அச்சமும் நிறைந்த ஒரு துர்கனவாக மாறியது. ஏழு குழந்தைகள் இறந்தனர். நபிலாவின் பாட்டி அவரது கண்களின் முன்னேயே இறந்து போனார். இந்த நிகழ்வுக்கான விளக்கமோ, மன்னிப்போ, நியாயமோ இன்னும் கிட்டவில்லை. கடந்த வாரத்தில் நபிலாவும், பள்ளி ஆசிரியராகிய அவருடைய தந்தையும், நபிலாவின் 12 வயது சகோதரனும் வாஷிங்டன் டிசி-க்கு தங்களுடைய கதையைப் பகிர்ந்து கொள்ளவும், அன்றைய நாளின் நிகழ்வுகளுக்கான பதில்களை தேடவும் பயணப்பட்டார்கள். மிகப்பெரிய தடைகளை எல்லாம் தாண்டித் தங்களுடைய கிராமத்திலிருந்து அமெரிக்காவிற்கு பயணப்பட்ட போதும் நபிலாவும் அவரது குடும்பமும் முற்றிலுமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டனர். அவர்கள் வாக்குமூலம் அளித்த மக்கள் பிரதிநிதிகளின் கூடுகையில் வாக்குமூலத்தைக் கேட்க வரவேண்டிய 430 பிரதிநிதிகளில் வெறும் ஐவர் மட்டுமே வந்திருந்தனர். கலந்துகொண்ட சிலரிடம் நபிலாவின் தந்தை கூறியது; “என் மகள் ஒரு தீவிரவாதி கிடையாது. என் அம்மாவும் தான். இது ஏன் நடந்தது என எனக்கு விளங்கவில்லை. ஒரு ஆசிரியராக நான் அமெரிக்கர்களுக்கு இதை தெரியப்படுத்த விரும்பினேன். என் பிள்ளைகள் காயப் பட்டிருப்பதையும்.”

 நபிலா தன் தந்தையுடன் அமெரிக்காவில் நடந்த சந்திப்பில் இவர்களுக்கான மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்ப்பினூடே உடைந்து அழுது விட்டார். அரசாங்கமோ இந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைத்து இவர்களுக்கு நிகழ்ந்த பேரிழப்பைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடிவு செய்தது. மெல்லிய உருவமும், நீல கண்களையும் கொண்ட நபிலா தனது வாக்குமூலத்தில் ஒரேயொரு கேள்வி தான் கேட்டார் “என் பாட்டி என்ன தவறு செய்தார்?” இந்தக் கேள்வியை உள்வாங்க அங்கு வெகு சிலரே இருந்தனர். பதில் சொல்லவோ யாருமேயில்லை. தாங்கள் மீட்க நினைக்கும் மக்களை எவ்வளவு மோசமாக அமெரிக்கா நடத்துகிறது என்பதற்கு உதாரணமாக நபிலாவின் குடும்பம் தங்கள் வாக்குமூலத்தை வழங்கிக் கொண்டிருந்த அதே நேரம், ஒபாமா ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் தலைவரைச் சந்தித்துக் கொண்டிருந்தார்.

தேர்ந்தெடுத்தவற்றை மட்டும் நினைவிலிருத்துதல்:

பாகிசுதானிய தாலிபானின் தாக்குதலுக்கு ஆளாக்கப் பட்டு உயிர்தப்பிய மலாலாவை அமெரிக்க ஏற்றுக் கொள்வதையும் நபிலா ரெஹ்மானை ஒதுக்குவதையும் வேறுபடுத்தி பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். மேற்கு உலகின் ஊடக ஆளுமைகளாலும், அரசியல் வாதிகளாலும், மக்கள் தலைவர்களாலும் மலாலாவின் வீரம் கொண்டாடப்பட நபிலாவோ அமெரிக்காவின் தலைமையில் கடந்து பத்தாண்டுகாலமாக நடந்துவரும் போர்களில் வாழ்வை இழந்த, பெயரற்ற, மறக்கப்பட்ட பல மில்லியன் பேர்களுள் ஒருத்தியாக மட்டும். இந்த அப்பட்டமான ஓரவஞ்சனைக்கான காரணம் வெளிப்படையானது தான். மலாலா தாலிபானால் தாக்கப்பட்டவர் என்பதாலேயே போருக்கு ஆதரவாக வாதாடுபவர்கள் தங்கள் அரசியல் பிரச்சாரத்துக்கான நல்லதொரு கருவியாக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களின் முயற்சிகளுக்கான மனித முகமாக மலாலாவை பயன்படுத்த முடிகிறது. இவர்களின் நோக்கத்துக்கு நியாயம் கற்பிக்கும் அடையாளம் தான் மலாலா. இந்த சிறு பெண்ணை முன்னிட்டுத் தான் இத்தகைய ரத்தக்களரியை தாங்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது என அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சொல்லிக் கொள்ள முடியும். இஸ்லாமிய உலகத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த மலாலாவை பயன்படுத்திய பலரும் இந்த பரப்புரைகளைப் பற்றி மலாலா என்ன நினைக்கிறார் எனக் கேட்டார்களா என்று கூடத் தெரியவில்லை.

வாசிங்டன் போஸ்டின் மேக்ஸ் ஃபிஷர் விவரிப்பது போல:

nabilaமலாலா மீதான மேற்குலகத்தின் கவனக் குவிதல், மலாலாவின் பெண் முன்னேற்றத்திற்கான கொள்கை களைப் பற்றியதோ, அல்லது பாகிசுதானில் அல்லலுறும் பெண்களைப் பற்றியதோ அல்ல. தட்டையாக்கப்பட்ட அரசியல் கோரிக்கையை ஒரு பிரபலத்தின் பிம்பத்தைக் கொண்டு முன்னெடுத்து அதில் குளிர்காய வேண்டிய நமது தேவையைப் பற்றியது தான் அது. நம்மை பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ளும் முயற்சி இது. நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்குமான போராட்டம் இது என்ற எளிமையான பாகுபாடுக்குள் இந்த அரசியலை அடக்கிக் கொண்டு அதிலும் நாம் நல்லவர்களின் பக்கம் இருக்கிறோம் என்று நம்மை நாமே ஆற்றுப்படுத்திக் கொள்ளும் முயற்சி. பாகிசுதான் ஆப்கானிசுதான் எல்லையில் அமெரிக்க போர் விமானங்களின் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும் பகுதியில அவர்களின் குண்டுகளுக்கு பலியாகுபவர்களை அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக கலைஞர்கள் வடிவமைத்தது.

இந்த விவகாரத்தில் நபிலாவின் நிலை என்ன? பாகிசுதான், ஆப்கானிசுதான், இன்ன பிற நாட்டு மக்களின் விடுதலையின் தவிர்க்க முடியாத அங்கங்கள் தான் விமானத் தாக்குதல்களும், சட்ட வரம்பிற்குள் வராத கொலைகளும், துன்புறுத்தல்களும் என்றால் நபிலா போன்று அதில் பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணற்றப் பெண் குழந்தைகளின் கஷ்டங்களுக்கான பரிதாபமோ, அங்கீ காரமோ ஏன் இல்லை? இதற்கான விடை தெளிவானது: எதிரியினால் பாதிக்கப்பட்டவர்களின் பாடுகளுக்கே இங்கு அங்கீகாரம் வழங்கப்படும். அமெரிக்காவின் போர் முயற்சிகளுக்கான முகமாய் மலாலாவும், அவரது போராட்டங்களும் அமையும் வேளையில், நபிலாவும் அவரைப் போன்ற எண்ணிலடங்காச் சிறுமிகள் பலரும் முடிவற்ற இந்த போரில் அச்சுறுத்தப்பட்டும், கொல்லப் பட்டும் கொண்டே இருப்பார்கள். நபிலாவுக்கென விருது வழங்கும் விழாக்களோ, பிரபலங்களுக்கு கிடைக்கும் வரவேற்போ இருக்காது. அவரது வாக்குமூலத்தைக் கேட்கவே ஆளில்லையே. நபிலாவின் வாக்குமூலத்தை கேட்டிருந்தால், கடந்த பத்தாண்டுகளாக வாழ்விழந்திருக்கும் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கேட்கும் கேள்வியை இந்த 9 வயது பெண் குழந்தையும் கேட்பதைப் பார்த்திருக்கலாம். “அமெரிக்காவுக்கு எதிராக தவறுகளைச் செய்வோரை தேடுகிறோம் என்று சொல்லப்படுகிறது. நான் அமெரிக்காவுக்கு எதிராக என்ன செய்தேன்? என் பாட்டி என்ன செய்தார்? நான் எந்த தவறும் செய்யவில்லை.”

(டொரண்டோவில் வாழும் முர்தாசா ஹூசைன், மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் தொடர்பான விஷயங்களை ஆராயும், எழுதும் எழுத்தாளர்.)

மொழியாக்கம் – ஜெனி

மூலப்பதிவு – http://www.aljazeera.com/indepth/opinion/2013/11/malala-nabila-worlds-apart-201311193857549913.html

நன்றி: விசை, வலைதளம்

Pin It