இளைய சமுதாயத்திற்கு கல்வி அளிப்பதன் மூலம் தற்போது இருக்கின்ற மனிதவள ஆற்றலை பயன்படுத்திக் கொள்வது தமிழ்நாட்டின் இன்றைய முதன்மையான சவால்களில் ஒன்று. 2011ம் ஆண்டின் மக்கள் தொகை புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் 18 முதல் 23 வயதுள்ளோர் 77.7 லட்சம் பேர் உள்ளனர் என்ற சாதகமான நிலையும், இந்த வயதுப் பிரிவினால் அகில இந்திய அளவில், தமிழகத்தில் 5.5 சதவிகிதம் பேர் உள்ளனர் என்ற நிலையும் உள்ளது. எனினும், மாநிலத்தின் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளின் பங்கு வெறும் 8 சதவிகிதமே உள்ளது.

மொத்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையில், 59 பல்கலைக் கழகங்களுடன் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையிலும், 14 பல்கலைக் கழகங்களுடன் தமிழ்நாடு முதலிடம் வகிக்கின்றது. 2001-2011 என்ற பத்தாண்டு கால இடைவெளியில், மாநிலத்தின் மொத்த பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது.

2001--2011 பத்தாண்டுகளில், தொழில்நுட்பக் கல்வியைப் பொறுத்தமட்டில், கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கைகளை நாம் நோக்கும் போது, அதில் மாபெரும் விரிவாக்கத்தை காணமுடிகின்றது. 2011ல் மாநிலத்தின் மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்தது, அவற்றில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் சுயநிதி பொறியியற் கல்லூரிகள் ஆகும். 2011ம் ஆண்டு இந்த சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டியது. இதற்கு சற்றும் குறையாத அளவுக்கு பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளது, அதிலும் சுயநிதிப் பாலிடெக்னிக்குகளின் ஆதிக்கத்தின் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஓர் உலகளாவியப் போக்கை பிரதிபலிக்கும் விதமாக, தனியார் பொறி யியல் கல்வியின் வளர்ச்சி ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுடன் மகாராஷ்டிரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் அபரிமிதமாக ஆக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள், இனி நாட்டில் தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்த முடியாது என கண்டுணர்ந்த ஆறாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், சில மாநில அரசுகள், குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநில அரசுகள், பதிவு செய்யப்பட்ட தனியார் சொசைட்டிகள் சுயநிதி அடிப்படையில், தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களைத் தொடங்க அனுமதி வழங்குவது என முடிவு செய்தன.

அப்படி தொடங்கப்பட்ட இந்த எல்லா கல்வி நிறுவனங்களும், அந்தந்த மாநில அரசின் அனுமதியுடனும், அவை சார்ந்த பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக இணைப்புடனும், மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அனுமதியுடனும் தொடங்கப்பட்டன. இதனால், மொத்த பொறியியல் கல்லூரிகளில், 95 சதவிகிதத்தை தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆக்கிரமித்த காரணத்தால், தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியில் தனியாரின் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது.

தொழிற்கல்வி துறையில் தனியாரின் இயல்பு மீறிய பருவவளர்ச்சி, இரு மாதிரியான வெளிப் பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது, குறுகிய கால அடிப்படையில், அவர்களால் மனிதவள இருப்பை அதிகரிக்க முடிந்தபோதும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் கல்விக்கான கட்டணங்களை மிக அதிக அளவு உயர்த்தியதன் விளைவாக, அவர்கள் மக்கள் திரளின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தொழிற்கல்வியை எட்டாக்கனி ஆக்கினர். இரண்டாவதாக, இந்த திரளான கல்வி நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் தொழிற்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான எந்தவிதமான, பகுதி பகுதியான திட்டமிடல்களை மேற்கொள்ளவேயில்லை.

இதனால், அக்கல்வி நிறுவனங்கள் ஏறக்குறைய வேலைக்கு தகுதியற்ற பட்டதாரிகளையே உருவாக்கும் நிலை ஏற்பட்டது. இது இன்று தமிழ்நாட்டில் மாபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது, அதாவது, மிகப் பெருந்தொகையை கல்விக்கடன்கள் மூலம் செலுத்தி, அதன்மூலம் படித்து முடித்த மாணவர்கள், அக்கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காகக் கூட தேவைப்படும் வேலை வாய்ப்புகளை அடையமுடியாத நிலையில் உள்ளனர். ஆக, இந்த விரிவாக்கத்தின் தன்மையைக் காணும்பொழுது, அது நமக்கு உணர்த்துவது - சமுதாயத்தில் தேவை உடைய வகுப்பினரால், தனியார்மயக் கொள்கையின் மீது மிகக்குறைந்த அளவுக்கே தாக்கம் ஏற்படுத்த முடிந்திருக்கின்றது என்பதுதான்.

இன்று மிக வேகமாக அதிகரிக்கத்துள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகள், உழைக்கும் வர்க்கத்தினரின் தேவையிலிருந்து ஏற்படுத்தப்படவில்லை, மாறாக இலாபவெறி கொண்ட வர்க்கத்தினரின் தொழில் முனைப்பு நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணம். இந்த கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மையானவை, அவ்வப்போது ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகளின் ஆசி பெற்றவையாகவோ (அ) அவர்களால் நேரடியாக நடத்தப்படுபவையாகவோ உள்ளன.

உண்மையில், இந்த தனியார்மயமாக்கப் போக்கு, அரசுத்துறை கல்வி நிறுவனங்களின் மீதுள்ள சுமையைத் தனியார் கல்வி நிறுவனங்கள் குறைக்க உதவிய அதே வேளையில், தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியானது, வளர்ந்து வரும் தேவையைச் சமாளிக்கக்கூடிய அறிவு ரீதியிலான எதிர்வினையாக அமையவில்லை, மாறாக அது இலாபவெறி கொண்ட உழைக்காமல் சம்பாதிக்கும் பிரிவினருக்கு மூலதனத்தைப் பெருக்கும் ஒரு வாய்ப்பாகவே அமைந்து போனது. இந்த அதிவேக வளர்ச்சியின் சில சிறப்பு கூறுகளை இது விளக்குகின்றது.

ஒரு தனியார் கல்வி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கொண்டது என அறிவிக்கப்படவில்லை எனில், உண்மையில் இன்றைய சூழலில் அக்கல்லூரி தரும் பட்டமானது, இப்போது இயங்கி வரும் ஏதேனும் ஒரு மாநில பல்கலைக்கழகத்தால்தான் தரப்படுகின்றது. இதன் பயனாக, தனியார் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்படும் கல்வியில், அப்பல்கலைக்கழக பாடத்திட்டத்தை, போதனை முறையை, தேர்வு முறையைத் தாண்டி, புதிய போதனைமுறைகளைப் புகுத்தவோ, வேறு வகையான தரம் உயர்த்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ தகுந்த சூழல் ஏற்பட வாய்ப்பே இல்லை. அரிதாகவே, இந்த கல்வி நிறுவனங்கள் மெத்த திறன் வாய்ந்த தொழில்முனைவோரை உருவாக்கும் சிந்தனையுடன் இயங்குகின்றன.

வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் கல்விக்கான கோரிக்கையே இவற்றுக்குக் காரணம் என்ற எதிர்பார்ப்புகள் உண்மையில்லை.

ஒட்டுமொத்தமாக கல்வித்துறையின் கட்டுப் பாட்டு விதிகள் தளர்த்தப்பட்டதற்கு அழுத்தம் கொடுத்த பிரிவினராக இவர்கள் இல்லை. கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தியதன் விளைவாக, இன்று உயர்கல்வித் துறையானது, முழுவதும் வணிகமயமாகிவிட்டது. இங்கு ஒருபுறம் தனியார் கல்வித்துறை கட்டுப்பாட்டு ஒழுங்கற்று இயங்குகின்றது, மறுபுறம், அரசு உயர்கல்வித்துறை தனது வருமானப் பற்றாக்குறையின் காரணமாக திணறி வருகின்றது. இத்துடன் தனியார் கல்வி நிறுவனங்கள் அளித்து வரும் கடும் சவால்களின் காரணமாக, பொதுக்கல்வித்துறையால் பெரும் நிதியைத் திரட்ட முடிவதில்லை.

உழைத்து வாழும் வகுப்பினரால் தங்களுடைய நலன்களின் நோக்கில், கல்வியை இது போன்ற முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட நிலையிலிருந்து உடைத்து வெளியே கொண்டுவர இன்னும் உயிர்ப்புடன் செயல்பட ஏன் முடியவில்லை என்பது, (கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்த்து) புரியாத புதிராகவே உள்ளது.

இன்றைய சூழலில், தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கையை ஒரு பதற்றம் பற்றிக் கொண்டுள்ளது. ஒரு பக்கம், கல்வியானது சமூகப் பெயர்ச்சி மற்றும் அனைவருக்குமான சமவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்குவதை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆனால், மாநிலக் கல்வி அமைப்பு, இந்த நோக்கங்களைச் சிறப்பாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்க வேண்டி, நிதி மற்றும் மற்ற ஏனைய மூலவள ஆதாரங்களை மிகப்பெரிய அளவுக்கு பொறுப்புடன் திரட்டுவது தேவையாய் இருக்கின்றது.

இந்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்ற அரசால் முடியாததால், ‘அனைவருக்குமான சமவாய்ப்பு’ என்பதை ஏதோ ஒரு சம்பிரதாயமான வாய்ப்பாடாகப் பார்க்கின்றது. இதனால்தான் இந்த நோக்கம் சம்பந்தமாக முன்னிலும் சிறப்பான (அ) மாற்று முன்வைப்புக்கள் வரும்போது, அவை இந்த நோக்கங்களுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகின்றன. இதன் வழியே, மாநில அரசானது, “இங்கு கட்டணங்களில் எந்த கட்டுப்பாடும் கிடையாது” என்றோ, இன்னும் சொல்லப்போனால், “தொழிற்நுட்ப கல்வி நிலையங்களின் பாடத்திட்டங்களில் அளப்பரிய வேறுபாடுகள் இருக்க வேண்டும்” என்றோ வலியுறுத்துவதன் மூலம், தனது இந்த பொறுப்புகளை, தனது கல்வி பொறியமைப்பு மூலம் செய்து விட்டதாகச் சொல்கின்றது. உண்மையில், இன்று பொறியியற் கல்லூரிகளை பிடித்து ஆட்டுகின்ற கல்வித்தரத்தின் நெருக்கடியானது, ஒரு பகுதியளவில், ‘கல்வியானது சுதந்திரமாக்கப்பட வேண்டும், கல்வியானது எல்லோருக்கும் வழங்கப்படவேண்டும்’ என்ற மாயை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள கருத்தியல் ரீதியிலான பொறுப்புணர்வினால் நீட்டிக்கச் செய்யப்படுகின்றது. மற்ற எவற்றைக் காட்டிலும், உயர்கல்வி என்பது, கல்வியில் சிறப்பான, தரம் உயர்த்தப்பட்ட நிலையை அடைவது தொடர்பானது என்பதால், இது போன்ற அணுகுமுறையானது, கொள்கை ரீதியிலேயே தவறானது ஆகும்.

இந்தியாவின் உயர்கல்வித் துறையைத் தொல்லைப் படுத்தக்கூடிய, மிகவும் மோசமான தளர்வு யாதெனில் அதன் ஆட்சி முறையிலுள்ள நெருக்கடி ஆகும். அதன் மிகவும் வெளிப்படையான, தெளிவாகத் தெரியக்கூடிய நெருக்கடி, ஆசிரியர்களின் நெருக்கடி ஆகும். பொதுத்துறை பொதுச் சொத்தின் மீது பரந்த அளவுக்கு பொறுப்புணர்வு கொண்ட ஓர் ஆசிரிய தலைமுறை மிக விரைவில் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளது (அ) ஏற்கனவே பணிஓய்வு பெற்றுவிட்டது. இதனால், ஆழம் தெரியாத ஆட்சி அதிகாரத்திலும், கல்வி நிறுவனங்களிலும் போதுமான அளவுக்கு முன்னர் இருந்த, குறை நிரப்பும் (அ) தவறுகளை மீள நிரப்பும் பண்பும், சாதாரண திறமைகளைக்கூட ஆழத் தோண்டி வலிமையாக்கும் பண்பும் இனி இருப்பதற்கும் மிகக் குறைந்த அளவுக்கே சாத்தியக்கூறுகள் உள்ளன.

ஆக, இதன் பயனாக, நல்லவைகளைத் தீயவைகள் வெளியேற்றுகின்றன. இன்றைக்கு உயர் குழாம் கல்வி நிறுவனங்களில் இருக்கக்கூடிய சூழல், மேலும் மேலும் ஜனநாயக விரோதமாகவும், மாணவர் சேர்க்கை, கல்வி நிறுவனக் கொள்கைகள், கல்வி நிறுவன நிர்வாகம், படிப்புகளின் ஃ பட்ட (அ) பட்டயங்கள் பெறுவதற்கான அமைப்பியல் கட்டமைப்பு மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றில் அதிகரித்திருக்கக் கூடிய அரசியல் ஆதிக்கமும், கட்டுப்பாடும் மிக அதிகமானதாகவும் மாறியிருக்கின்றது.

ஆக கல்வியின் தரம் குறைந்து கொண்டே செல்லும் போதும், பெரும்பான்மையான ஏழை மாணவர்களை புறந்தள்ளி விட்டு அதிகமான வருமானம் தரக்கூடிய வாழ்க்கை தொழில் பாடப்பிரிவுகளில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும்போதும், மாணவர்கள் அதிக கட்டணம் கட்டி படிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இது மீண்டும் மீண்டும் அரசாட்சிமுறையின் கடுமையான தளர்வுகளை அதிகப்படுத்துவதுடன், மாநிலத்தின் உயர்கல்வி சார்ந்த வெளிப்படாத, உள்ளார்ந்த பெரும் தேவையை நிறைவேற்றுகின்ற திராணி, இந்த அரசுக்கு உள்ளதா? என்ற சந்தேகங்களையும் அதிகரித்திருக்கின்றது. 

தமிழில் : சுரேஷ்

Pin It