வீழ்ந்த தமிழகம் இனி எழுமா? ஆட்சியில் இருப்பவர்களும் இறங்கியவர்களும் கோர்ட், கேசு என மாறி மாறி படியேறிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா தரிசனத்திற்காக உருள தண்டம் போடும் அமைச்சர் புலிகேசிகளோ, பொங்கல் தின சாராயக் கடை வருவாயை 350 கோடிக்கு உயர்த்தி, கஜானாவைப் பெருக்கி, தமிழகத்தின் ’வளர்ச்சியை’ விரைவுபடுத்தியிருக்கிறார்கள். தாய்மார்களின், குழந்தை குட்டிகளின் வயிறெரிய குடிமகன்களுக்கு ஊற்றிக் கொடுத்துவிட்டு வேட்டி அவிழ்ந்தவர்களிடம் உருவிய பணத்தில் ஆடு, கோழியும், இலவச கிரைண்டர் மிக்சியும் கொடுத்து தாயுள்ளம் கொண்ட ‘அம்மா’ தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார். ‘இலவச திட்டம்’ என கருணாநிதி சொன்ன ஏமாற்று வித்தையை ’விலையில்லா பொருட்கள்’ என பெயர் மாற்றம் செய்து, மூணு சீட்டு ஆட்டத்தில் 37 எம்.பி. சீட்டையும் வென்றுவிட்டார் ஊழல் ராணி ஜெ.ஜெ. தாங்குமா தமிழகம்?

டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்

தன்மான அரசியலை மீட்டெடுப்போம்!

ஊழல்

நாட்டின் பொதுச்சொத்தைக் கொள்ளையிடு வோரின் புகலிடமா தமிழகம்? நாட்டையே பட்டா போட்டு விற்கும் கிரிமினல்கள்தான் இங்கு நடமாடும் பலத் தலைவர்கள்! ஒருத்தன் அமுக்கியதை இன்னொருத்தன் ‘ஊழல், கருப்புப் பணம்’ என கதையளந்து விடுகிறான். கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு மூன்று இலட்சம் வாய் சவடால் விட்டப் பிரதமரோ இப்போது, ”கருப்பு பணப் பட்டியலில் உள்ள வங்கி கணக்கில் பணமே இல்லை” என்கிறான்.

வார்டு கவுன்சிலர் தொடங்கி, கேபினட் அமைச்சர் வரை, ஊழலின் பங்கு தொகையை நிறுவனமயமாக்கியிருக்கிறார்கள். நீர், நிலம், மணல், நிலக்கரி, கிரானைட், தாதுவளம், அலைக்கற்றை என அனைத்து ஆதாரங்களையும் கட்டுப்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களோடு பங்கு போடும் சட்டவிரோத, சமூக விரோத கிரிமினல் கூட்டாளிகளாக, அரசியல் கட்சி தலைவர்கள், பொதுத்துறை அரசு அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், கிராமப்புற சாதி ஆதிக்கக் சக்திகள் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இது, மக்களின், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை மோசமான நிலையில் வைத்திருப்பதற்குக் காரணமாக இருப்பதோடு, விரல்விட்டு எண்ணக்கூடிய கொள்ளைக்காரர்களைப் பெரும் முதலாளிகளாக, நாட்டை கட்டுப்படுத்தக்கூடிய சக்திகளாக மாற்றியுள்ளது. இவர்கள், சில்லறைக் காசுகளாக ஓட்டுக்குப் பிச்சை போடுவது போன்று போட்டு, மக்களைக் கேள்வி கேட்கக் கூடாதவர்களாக, நாணயமற்றவர்களாக உணரச் செய்துவிட்டார்கள். ஊழல் பெருச்சாளிகளையே, மக்கள் நாயகர்களாக ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளனர். இந்த கயமைத்தனத்தைச் செய்வதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார்கள்.

அரசியல் கொள்ளையடிக்கும் தொழிலில்லை

கொள்கைவழிபட்ட மக்கள் தொண்டு! ஊழல் பெருச்சாளிகளை அரசியலைவிட்டு விரட்டியடிப்போம்!

கொள்ளைபோகும் இயற்கை வளமும் சூறையாடப்படும் பொருளாதாரமும்

‘வளர்ச்சி, வளர்ச்சி’ என்று வாய் நிறையப் பேசிவிட்டு வயிற்றில் மண் அள்ளிப் போடும் மோடி, லேடி, கேடி கூட்டங்கள். விவசாயத்தையும் விவசாயிகளையும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பிவிட்டார்கள். ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்று அன்னிய முதலீட்டைக் கூவி கூவி அழைத்து, அன்னை பூமியை அறுத்துப் போட்டுவிட்டார்கள். இதில்தான் ஒவ்வொருவருக்கும் போட்டி நடக்கிறது. உள்நாட்டுக் கொள்ளையர்கள் தாது மணலையும், கிரானைட் மலைகளையும் தின்று ஏப்பம்விட்டார்கள். வெளிநாட்டுக்காரனுக்கு காவிரிப் படுகையில் இருக்கும் மீத்தேன் வாயு வேண்டுமாம். அதற்குபின் நிலக்கரியை எடுப்பானாம். இதற்கு ஒப்பந்தம் போட்ட ஓநாய்தான் இப்போது மீத்தேனை எதிர்ப்பதாக ஊளையிடுகிறது. போதாக்குறைக்கு மேற்கே கெயில் குழாய் பதிப்பார்களாம். தேனியில் நியூட்ரினோ திட்டமாம்.

இன்றிலிருந்து 50 ஆவது ஆண்டில் தமிழகம் பூமிப் பந்தில் இருக்குமா? என்ற அச்சமே எழுகிறது. வளர்ச்சி என்றப் பெயரில் வீட்டுக் கதவைத் திறந்து வைக்க கொள்ளைக் கூட்டம் படையெடுத்து வந்தது. படையெடுத்து வந்தவர்களுக்கு இலவசமோ, இலவசமோ! தண்ணீர், மின்சாரம், நிலம், வரி சலுகை இன்னும் எத்தனையோ ஆயிரங்கால சேமிப்பாம் ஆற்று மணலை அள்ளித் தீர்த்தாயிற்று! கடலோரங்களையும் விட்டுவைக்கவில்லை. அணு மின் நிலையம், அனல் மின் நிலையம் என்று நாடெங்கும் நட்டு வைத்து நாசம் செய்துவிட்டு, உள்நாட்டுத் தொழிலுக்கும் மின்வெட்டைப் பரிசளித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நாள் முழுக்க மின்சாரத்தில் மூழ்கடித்தார்கள். பெருநகரங்களைச் சுற்றியிருக்கும் கிராமப்புற மாவட்டங்கள் பலியிடப்பட்டன.

”இளைஞர்களுக்கு வேலை வேண்டாமா?” என்று இவற்றைத் தட்டிக் கேட்ட எல்லோருடைய வாயையும் அடைத்தார்கள். கொள்ளைக் கூட்டம் கட்டி வைத்த கற்பனைக் கோட்டை சரிந்துகொண்டிருக்கிறது. நோக்கியா ஆலை மூடல், பாஸ்கான் ஆலை மூடல், க்ரீவ்ஸ் காட்டன் ஆலை மூடல், ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்று ஆலை மூடலும் ஆட்குறைப்பும் அன்றாடச் செய்தியாகிவிட்டது. ஒருவன் பாதை போட்டான், இன்னொருவன் வரவேற்றான், மற்றொருவன் மாலை போட்டான். எல்லோரும் சேர்ந்து ’இது தான் வளர்ச்சி, நாங்கள் தான் கொண்டு வந்தோம்’ என்று உரிமை கொண்டாடினார்கள். இன்றோ, வேலை இழந்து வீதியில் நிற்கும் இளைஞர்களுக்கு பதில் சொல்ல அவர்களில் எவரும் முன்வரவில்லை.

பெரு முதலாளிகளுக்குத் தீனிபோடும்

உலகமய வளர்ச்சிக் கொள்கையை முறியடிப்போம்

ஏழை எளிய நடுத்தர மக்களை வாழவைக்கும் தற்சார்புள்ள இயற்கை சார்ந்த நீடித்த வளர்ச்சியை உருவாக்குவோம்

சாதி மதவெறி காவிப் பாசிசம்

சாதி வெறி அரசியலைக் கையிலெடுத்துக் கோட்டைக்குப் போகத் துடிக்கும் பலர். காவி பயங்கரத்தையே அரசியலாய்க் கொண்ட பா.ஜ.க., மத்தியில் ஆட்சியே அமைத்துவிட்டது. சாதி வெறியை ஊட்டி, ஒரு சாதி மக்களை அணிதிரட்டிக் கொண்டு, ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் அவர்களை அடகு வைக்கும் சாதிக் கட்சிகள். கைப் பணத்தைக் களவாடிப் போகிறவர்களைத் தட்டிக் கேட்காமல் சாதி மோதலிலும் சாதிப் பெருமையிலும் மக்கள் மூழ்கடிக்கப்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

சாதி வெறிக் கூட்டத்தோடு கைகோர்த்தப்படி மத வெறிக் கட்சியும் தமிழகத்தில் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. கோட்சேவுக்கு சிலை வைப்பார்களாம், சிறுபான்மை மதத்தினரைக் கட்டாயப்படுத்தி இந்து மதத்திற்கு கொண்டு வருவார்களாம், வரலாற்றைத் திரித்துப் பேசுவார்களாம், பகவத் கீதையைத் தேசிய நூலாக்குவார்களாம்! பாசிசத்தை நோக்கிய படிக்கட்டுகளில் நடைபோடத் தொடங்கிவிட்டது மதவெறி அரசியல்.

இந்து, இந்தி, இந்தியா என்ற முழக்கத்தோடு இந்நாட்டை இந்துராஷ்டிரமாக ஆக்கிவிட வேண்டும் என்று பாசிசக் கட்சி வேலை செய்து வருகிறது. இந்தப் போக்கு நீடித்தால் தமிழகம் என்ன ஆகுமோ? அமைதி பூங்கா, சுயமரியாதை மண் என்பதெல்லாம் பழைய கதை ஆகிடுமோ?

சாதி மதவெறி காவிப் பாசிச அரசியலுக்கு முடிவு கட்டுவோம்! சனநாயக அரசியல் கட்டமைப்பை வளர்த்தெடுப்போம்.

மாநில உரிமை பறிப்பும் மத்தியில் அதிகாரக் குவிப்பும்!

ஒற்றை ஆட்சி, ஒரு கட்சி, ஒரு தேசியம்..அது கலாச்சார தேசியமாம். உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும் உலகமய வளர்ச்சிக் கொள்ளையை ஆழமாகவும் அகலமாகவும் விரிவாக்க, அதிகாரம் குவிக்கப்பட்ட மத்திய அரசு வேண்டுமாம் மாநில அளவிலான கட்சிகளை மயானத்திற்கு அனுப்பிவிட்டு நாடெங்கும் பா.ஜ.க. வின் வளையத்திற்குள் வர வேண்டுமாம். பா.ஜ.க. வுக்கு பல்லக்கு தூக்க உள்ளூர் சாதிக் கட்சிகளை அரவணைத்துக் கொண்டு ”ஒரு கட்சி” ஆட்சியைக் கொண்டு வர வேண்டுமாம். வட்டார, பழங்குடி, தேசிய இன அடையாளங்களை அழித்து, இந்து தேசியத்தை ஒற்றைத் தேசியமாகவும் இராமனை ஒற்றைக் கடவுளாகவும் சமஸ்கிருதத்தை இணைப்பு மொழியாகவும் ஆக்கிவிட்டு இராமனின் வழிவந்தவர்கள் ஆள்வார்களாம். பாசிச ஆட்சிக்கு மக்களை இழுத்துவர சிறுபான்மை மதத்தவரை எதிரியென்றும் அன்னியரென்றும் சொல்லி வெறுப்பின் மீதொரு மைய அரசு கட்டியெழுப்பப் படுகின்றது.

மாநில அரசும் சட்ட சபையும் கார்பரேசன் தொகுதிகளாக காட்சியளிக்க ஒற்றையாட்சிப் பிரதேசமாக இந்திய ஒன்றியம் ஆகப் போகிறது. பிறகென்ன தமிழக அரசு ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அரசாகிவிடும். மாநில உரிமைகள் புதைக்கப்பட்ட இடத்தில் பாசிசம் கொடி கட்டிப் பறக்க நாலு அரை ட்ரவுசர்கள் ஆட்சி ஆள, நாற்பது பன்னாட்டு கம்பெனிகள் நாட்டைப் பட்டா போட்டிருப்பார்கள். இந்த இழி நிலையில் தவித்தப்படி இலவசங்களுக்கு ஏங்கிக் கொண்டு ஓட்டுக்காக பணம் கொடுப்பாரைக் கும்பிட்டு வணங்கி, போதையில் மயங்கி கிடக்கலாமா பொங்கு தமிழ்நாடு?

 நாட்டை நாசமாக்கும் ஐந்து பெரும் தீமைகளை அடையாளங் காண்போம்! அவற்றுக்கு எதிராய் அரசியல் போர் தொடுக்க ஆயத்தம் ஆவோம்!

தலைமுறை மாற்றத்திற்குத் தயாராவோம்...

அரசியல் அதிகார மாற்றத்தை செய்து காட்டுவோம்!

Pin It