தமிழன்பர்களே! தமிழாசிரியர்களே! தமிழ்ப் பேராசிரியர்களே!

அனைவருக்கும் வணக்கம்.

உலக முதன்மொழியாம் உயர்தனிச் செம்மொழி தமிழ் இன்று அழிந்து வரும் மொழிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அவலத்திற்குள்ளாகியுள்ளது.

சமற்கிருதத்தில் தாக்குண்ட நம் மொழி இன்று ஆங்கிலத் தாக்குதலில் அல்லற்பட்டுக்கொண்டுள்ளது. வடமொழி வல்லாண்மையினின்றும் மீளமுடியாது தவித்துக்கொண்டிருக்கும் தமிழை ஆங்கிலம் சாகடிக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒடுக்குகிறது.

நமக்கு நீண்ட வரலாறிருந்து என்ன பயன்? ஆறாயிரம் ஆண்டு முன்பாகவே நாவலந்தீவு முழுமையும் ஒருமொழி வைத்தாண்ட நம் செந்தமிழ் இன்று ஆங்கிலம் என்னும் வணிகக் கொள்ளை மொழியால் செத்துக்கொண்டிருக்கிறது.

உலகெங்கும் ஆங்கிலமும் அதன் ஆண்டைகளும் ஈவிரக்கமில்லாமல் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற போர்வையில் வன்முறையைக் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சிபுரியத் துடிக்கிறார்கள்.

வடமொழி வல்லாண்மையில் நாட்டைச் சுரண்டிக் கொழுத்த கூட்டம் ஆங்கில வல்லாண்மைக்கு அடிபணிந்து நாவலந்தீவில் நாம் கட்டிக் காத்துவந்த உயர்மாந்த மரபுகள் அனைத்தையும் அடகுவைத்துவிட்டு அடிமை வாழ்வு வாழத் துடிக்கிறது.

தமிழ்த் தேசிய இனத்தை எடுத்துக்கொள்வோம்.

தமிழ் இன்று எட்டுக்கோடி தமிழர்களால் பேசப்படுகின்ற மொழி. இருந்தும் தமிழ் ஆட்சிமொழியாகவோ - கல்வி மொழியாகவோ - வழிபாட்டு மொழியாகவோ - வழக்குமொழியாகவோ - இசை மொழியாகவோ இல்லை.

தமிழுக்கே இந்த நிலையென்றால் இந்தியாவிலுள்ள ஏனைய தென்தமிழிய மொழிகள், நடுத்தமிழிய மொழிகள், வட தமிழிய மொழிகள் நிலை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்தியா முழுமையும் வாழும் பழங்குடி மக்களின் மொழிகள் தமிழிய மொழிகளே.

பல்கலைக்கழக மட்டத்திலிருந்த ஆங்கிலம் கல்லூரிக்கு வந்து, கல்லூரியிலிருந்து பள்ளிக்கு வந்து, பள்ளிகளிலிருந்து மழலைப் பள்ளிவரை இறங்கிவந்து விட்டது. திராவிட ஆட்சியாளர்களின் மொழிக் கொள்கைதான் இவ்வளவு அழிவுக்கும் கரணியம். நிலைமை கட்டுமீறிப் போய்விட்டது. இப்போதேனும் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வளவு ஆட்டம் போட்டு ஆங்கிலம் ஆடிக்கொண்டிருக்கும் சூழலிலும் தமிழர்களில் எண்பத்தைந்து விழுக்காட்டினர் தமிழ்வழியில்தான் தங்கள் பள்ளிக்கல்வியைக் கற்கிறார்கள். கல்லூரிக் கல்வியில் நிலைமை தலைகீழாக மாறிப் போகிறது. பல்கலைக்கழகக் கல்வியில் சொல்லவே வேண்டாம். இந்தச் சூழலில்தான் அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முடித்த கையோடு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கச் சட்டம் இயற்றப்படும் என்று கூறியது. 15 நாட்களில் வரைவு வந்துவிடும் என்றது. ஒரு மாதமாகியும் மூச்சுபேச்சில்லை.

உலகத் தமிழ்க் கழகம் தமிழின் தொன்மையைப் பற்றி எந்த அளவுக்குக் கவலைப்பட்டுப் பணியாற்றுகிறதோ அதே அளவிற்கு இன்றைய நிலையை எண்ணியும் செயல்படுகிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லை, முழு உரிமையும் தரவேண்டும்.

தமிழ் படித்தவர்களுக்கும் தமிழக அரசு வேலை தரவேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கும் அரசு வேலை தரவில்லையென்றால் இவர்கள் அயல் மாநிலங்களுக்கோ அயல்நாடுகளுக்கோ சென்றா வேலை பெறுவார்கள்?

தமிழ்நாட்டில் தமிழ்மீது ஆர்வங்கொண்டவர்களும் தமிழ்வழியில் படிக்கிறவர்களும் தமிழ் படிக்கிறவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டாலொழிய இப்போதிருக்கும் நெருக்கடியைக் கடக்க முடியாது.

தமிழாசிரியர்களே! தமிழ்ப் பேராசிரியர்களே! தமிழ் நாட்டிலுள்ள ஆசிரியப் பெருமக்களே! உங்களிடம் படிக்கிறவர்களின் எதிர்கால நிலைமையை நீங்கள் எண்ணிப்பாருங்கள். கைநிறையச் சம்பளம் வாங்குகிறோம், எங்கள் பிள்ளைகளை நினைத்தபடி படிக்கவைக்கிறோம், வேலைக்கனுப்புகிறோம் என்று நீங்கள் எண்ணலாம். உங்களிடம் படிப்பவர்களும் உங்கள் பிள்ளைகள்தானே. அவர்கள் வேலை பெற வேண்டாமா? அவர்களும் வாழ வேண்டும்தானே?

நன்கு எண்ணிப்பாருங்கள். நாட்டில் அமைதி யில்லாமல் உங்கள் வீட்டில் மட்டும் அமைதி தவழாது.

தமிழ்நாட்டில் அரசு, தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை கேட்டுக் குரல் கொடுப்போம்.

தமிழ் படித்தவர்களுக்குத் துறைதோறும் துறைதோறும் தமிழ்ப் பணிகளை உருவாக்கிப் பணியிலமர்த்தக் குரல்கொடுப்போம்.

தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கும் வேலையில்லை, ஆங்கிலம் படித்தவர்களுக்கும் ஆங்கில வழியில் படித்தவர்களுக்குந்தான் வேலையென்றால் இது தமிழ் நாடில்லை; ஆங்கில நாடு. தமிழ்நாடு என்பது மங்கல வழக்காகிவிடக் கூடாது.

உலகத் தமிழ்க் கழகம் தமிழ் படித்தவர்களுக்கும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் வேலை கேட்டுத் தோழமை அமைப்புகளோடு இணைந்து தமிழக அரசை வலியுறுத்த அணியமாயுள்ளது. தொடர்புடையவர்களின் ஒத்துழைப்பை உ.த.க. வேண்டுகிறது. விழித்துக் கொண்டால் பிழைத்துக்கொள்ளலாம்.

Pin It