சீனா மே 4 இயக்கம்

ஆசிய வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனை சீனப் புரட்சி. 1949 அக்டோபர் 1ல் சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள தினாமென் சதுக்கத்தில் தோழர் மாவோ சீன புரட்சியின் வெற்றியையும் சீன மக்கள் குடியரசின் உதயத்தையும் அறிவித்தபோது அங்கு கூடியிருந்த சீன மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக மக்களனைவரும் ஆவலோடும் பெரு மகிழ்ச்சியோடும் அதனை வரவேற்றனர்.

இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் அந்த புரட்சியின் பிரம்மாண்டமான பரிமாணம். ஆசியாவில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக பெரும் நில பரப்பைக் கொண்டுள்ள நாடு என்பது மட்டுமல்ல, அந்த சமயத்தில் சீனத்தின் மக்கள் தொகை 60 கோடி. சீன புரட்சிக்கு முன்பும் சரி அதற்குப் பிறகும் சரி இவ்வளவு எண்ணிக்கைக் கொண்ட மக்கள் மத்தியகால கொடுமைகளை வீழ்த்தி வெற்றி பெற்றது மனிதகுல வரலாற்றிலேயே இன்றுவரை இல்லை. பல நூற்றாண்டுகள் வல்லரசுகளாலும் உள்நாட்டு நிலபிரபுக்களாலும் அடிமைப்பட்டு கிடந்த சீனத்தை விடுதலை செய்தது. சீன மக்களின் அளப்பரிய தியாகமும், அவர்களை வெற்றிகரமாக வழிநடத்திய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும்தான்.

இந்த மகத்தான சாதனையை நிறைவேற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றைப் பின்னோக்கி பார்த்தால் அது 1919 ல் அதன் துவக்கப் புள்ளியை எட்டும்.

முதல் உலகப் போர் முடிந்த நேரம். வெற்றிபெற்ற வல்லரசு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக சீனாவின் பெரும்பகுதியை ஜப்பான் கைபற்றிக்கொண்டது. இதனை அன்றிருந்த சீன ஆளும் வர்க்கமும் எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டது. அதிர்ச்சியடைந்த மக்கள் எவ்வித ஆதரவற்று நின்ற நேரம் அது.

இந்த நேரத்தில்தான், 1919 மே 4ஆம் நாள் சீனாவிலுள்ள எல்லா பல்கலைக் கழகங்களிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் ஒன்று திரண்ட மாணவர்கள் இந்த அரச துரோக ஒப்பந்தத்தைக் கண்டித்து மாபெரும் பேரணியை பீஜிங்கில் நடத்தினர். இந்த பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் அன்றைய சீன அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவி அடக்க முயற்சித்த போதும் மாணவர்களின் இந்த போராட்டம் சீன மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதில் கலந்தகொண்ட பல தலைவர்கள்தான் பின்னால் சீன கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினர். இந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் சென் டிக்சு (1879-1942)வும்

லீ- டிஜோ (1888-1927) வும் ஏனைய மாணவர் தலைவர்களும்தான் 1921ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினர். சென்-டிக்சு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக 1921லிருந்து 27 வரை கட்சியை வழிநடத்தினர்.

இந்த புகழ்பெற்ற மாணவர் இயக்கம் நடைபெற்று 20 ஆண்டுகளுக்குப்பிறகு மாணவர்களின் இந்த போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து மாவோ பின்வருமாறு பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

“ஏகாதிபத்தியத்திற்கும் நிலபிரபுத்துவத்திற்கும் எதிரான சீன முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் ஒரு புதிய கட்டத்தை மாணவர்களின் இந்த மே 4 இயக்கம் சுட்டிக் காட்டியது. சீன ஜனநாயக புரட்சியின் அறிவிஜீவிகள்தான் முதலில் விழித்தெழுந்தனர் என்று குறிப்பிட்டார்.“சீன மாணவர்களின் இந்த எழுச்சியை உற்சாகத்துடன் பாராட்டி பேசி அதே கட்டுரையைப் பின்வருமாறு முடித்தார்.

ஆனால் அறிவிஜீவிகள் தொழிலாளர்களோடும், விவசாயிகளோடும் ஒன்றிணைய தவறினால் அவர்களால் எதையும் சாதிக்க முடியாது’ ‘ஒரு உண்மையான புரட்சிக்காரர் என்பவர் எப்போதும் தொழிலாளர்களோடும், விவசாயிகளோடும் அய்க்கியப்பட தயாராக இருப்பது மட்டுமின்றி அதன்படி அய்க்கியப்படவும் வேண்டும்’ என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த அறிவுரை இன்றும் நமக்கு மிகவும் பொருந்தும்.

இந்தோனேசியா சர்வாதிகாரியை வீழ்த்திய மாணவர்கள்!

இந்தோனேசியாவின் அதிபர் சுகர்னோவை 1967ல் பதவியிறக்கம் செய்துவிட்டு 1968ல் ராணுவ தளபதி சுகர்டோ பொறுப்பேற்றுக் கொண்டான். இதற்கு முன்பாக சுமார் 5,00,000 கம்யூனிஸ்டுகளையும் ஜனநாயகத்துக்காக குரலெழுப்பியவர்களையும் கொன்றொழித்த கொடுங்கோலன் இவன்.

இவன் ஆட்சி செய்த 1968 லிருந்து 98 வரையிலான 30 ஆண்டுகால இந்தோனேசிய மக்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாயினர். எண்ணற்ற அரசியல் படுகொலைகள் அன்றாட நடவடிக்கையாயின. ஊழல் என்பது அதன் உச்சத்தை எட்டியது. இதன் எதிர்வினையை 1996லிருந்து இவர்களின் நாணயமான ரூபாயின் மதிப்பு கூட சட்டென்று சரியத் தொடங்கியது. சில மாதங்களிலேயே பொருளாதாரம் 15சதவீதம் சுருங்கியது. வேலை வாய்ப்பின்மை தலைவிரித்தாடியது. ஆனால் சுகர்டோவும் அவனது கூட்டாளிகள் மட்டும் சுகபோக வாழ்க்கையில் திளைத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில்தான் 1998ல் இந்தோனேசியா முழுமையிலும் இருந்த மாணவர்கள் சுகர்டோவுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராட துவங்கினர். முதலில் மாணவர்கள் மீத அரசு கடுமையான அடக்குமுறையை ஏவியது. ஆனால் மாணவர்களுக்கு ஆதரவாக மக்கள் திரளுவதைக் கண்ட சுகர்டோ முதல்முறையாக ஒரு பெரும் சவாலைச் சந்தித்தனர். இதன் விளைவாக யாரும் அசைக்க முடியாது என்று மார்த்தட்டிக்கொண்டிருந்த சுகர்ட்டோ 1998ல் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான். இவனைத் தொடர்ந்து பதவியேற்ற ஹப்பி என்பவனும் சுகர்டோவின் பாதையிலேயே பயணம் செய்ய முற்பட்டபோது மறுபடியும் மாணவர்களின் போராட்டத்தால் அவனது அடக்குமுறை கட்டுப்படுத்தப்பட்டது.

முதன் முறையாக சுதந்திரக் காற்றை சுவாசித்த இந்தோனேசிய மக்களும் அடுத்தடுத்த மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கின்றனர்.அவர்களின் ஜனநாயக குரலும் மெதுவாக ஆனால் உறுதியாக பலப்பட்டு வருகிறது. 2004ல் முதன் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தோனேசியாவின் இந்த ஜனநாயக காற்றுக்கு வழிதிறந்தவர்கள் மாணவர்கள்தான் என்பது மறுக்கமுடியாத உண்மை.

அமெரிக்கா 1968ல் அதிரவைத்த மாணவர் போராட்டம்!

டாலர் சாம்ராஜ்ஜியம் அமெரிக்கா சரிந்து கொண்டிருப்பதற்கான முதல் அடி 2007ல் தொடங்கி 2009 வரை நீடித்த ‘சப்பிரைம்‘ நெருக்கடி என்று அழைக்கப்பட்ட வீட்டுக் கடன்களை ஒட்டி பல வங்கிகள் மூட வேண்டிய அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட் டதையும் அந்த தனியார் வங்கிகளை காக்க அமெரிக்க அரசு மக்களின் வரிப் பணத்தை வாரி கொட்டிய திலிருந்தும் தான் தொடங்கியது என்று இன்னமும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

 ஆனால் சரிந்துவரும் இந்த சாம்ராஜ்யத்திற்கு முதல் மரண அடி 1975ல் வியட்நாமின் சைக்கோனில் (தற்போது ஹோசிமின் நகரம்) தான் தொடங்கியது என்று பல வரலாற்றாசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இங்கிருந்துதான் 1975ல் ஏப்ரல் 30ல் வியட்நாமிலிருந்து கடைசி அமெரிக்க படையும் தலைதெறிக்க நாடு திரும்பியது. இதன் தொடர்ச்சியாகத்தான் 1976ல் ஜூலை 30ல் கம்யூனிஸ்டுகள் சைக்கோனையும் கைப்பற்றி, ஹனாயில் வியட்நாம் சோசலிச குடியரசை நிறுவினர்.

இந்த வெற்றியின் அக, புற காரணிகளை ஆய்வு செய்யும் ஒவ்வொருவரும் அகக் காரணிகளால் முக்கியமாக வியட்நாம் மக்களின் அளப்பரிய திடசித்தம், அவர்களை வழிநடத்திய வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அளப்பரிய தியாகம் ஆகியவற்றை எல்லாம் குறிப்பிடுகிற அதே நேரத்தில் புறக்காரணிகள் என்று குறிப்பிடும்போது 1968ல் அமெரிக்காவில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை மறக்காமல் குறிப்பிடுகின்றனர்.

வியட்நாம் வெல்லற்கரிய தேசம். பிரெஞ்ச் ஏகாதிபத்திய வாதிகளாலும், அமெரிக்க வல்லரசாலும் ஒவ்வொரு அங்குலமும் சிதைக்கப் பட்ட தேசம். ஒரே ஒரு கம்யூனிஸ்ட் போராளி ஒரு கிராமத்தில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டாலே அந்த கிராமம் முழுவதையும் அமெரிக்கா குண்டு மழை பொழிந்து அழித்தது. விஷ ரசாயன கலவையை டன் கணக்கில் அவர்களின் வயல்களில் கொட்டி அவர்களின் பயிர்கள் அனைத்தையும் நாசமாக்கியது.

ஆனால் வியட்நாம் கம்யூனிஸ்டுகளும், அவர்களுக்கு துணையாக தென் வியட்நாமில் போராடிக் கொண்டிருந்த வியட்காங் என்று அழைக்கப்பட்ட தேசிய விடுதலை முன்னணித் தோழர்களும் போராட்டத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்திக்கொண்டே இருந்தனர்.

நெஞ்சை உலுக்கும் பல படுகொலைகளும், வியட்நாம் மக்கள் மீது அமெரிக்கா தொடுத்து வந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து உலகெங்கும் பரவலான கண்டனக் குரல்கள் எழுந்தபோதும் அமெரிக்கா அலட்டிக்கொள்ளவே யில்லை. ஆனால் இந்த அநீதியான யுத்தம் அமெரிக்க அறிவுஜீவிகள் மத்தியில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது அமெரிக்காவிலிருந்த பல மாணவர்கள் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், வியட்நாம் யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்டு அதன் கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி அந்த யுத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்திய் முன்னாள் படைத்தளபதிகள், வீரர்கள் என பல தரப்பினரும் ஒன்றிணைந்து, ‘யுத்த எதிர்ப்பு இயக்கத்தை‘ நடத்தி வந்தனர்.

இந்த சமயத்தில்தான் 1968 ஆம் ஆண்டில் ‘டெட் தாக்குதல்‘ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற எழுச்சி வியட்நாமில் நடைபெற்றது. வெல்லற்கரிய அமெரிக்கா அதன் படை பலத்தையும் இராணுவ செயல் தந்திரத்தையும் யாரும் வெல்ல முடியாது என்று கனவு கண்டிருந்த நேரத்தில் 80,000க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் போராளிகள் வட வியட்நாமிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் மண்ணிற்குள் தோண்டிய சுரங்க பாதைகளின் வழியாக தென் வியட்நாமிற்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரே சமயத்தில் அமெரிக்க படைகளைத் தாக்கினர்.

பல ஆயிரம் அமெரிக்க வீரர்களும் நூற்றுக்கணக்கான இராணுவ விமானங்களும், டாங்கிகளும் அழிதொழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் அமெரிக்காவை நிலைகுலையச் செய்தது. இதே சமயத்தில், வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா ஈடுபடுவதைக் கண்டித்து அமெரிக்க மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இதன் உச்சகட்டமாக கொலம்பிய பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தினர். இதனை அமெரிக்கா நியூயார்க் காவல் படையினர் வன்மையாக அடக்கியபோதும் இதன் தாக்கம் அமெரிக்காவெங்கும் ஒரு அதிர்வலையை எழுப்பியது. உள்நாட்டு மக்களின் ஜனநாயக குரலையே இந்த அளவிற்கு அடக்கும் அமெரிக்கா வியட்நாமில் என்னென்ன அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் கையாளும் என்பதை அமெரிக்க மக்கள் உணரத் தொடங்கினர். இதன் விளைவாக அமெரிக்க பெரு நகரங்கள் அனைத்திலும் மக்கள் ‘யுத்த எதிர்ப்பு‘ பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி தங்களின் எதிர்ப்பை அதிகரிக்கத் துவங்கினர்.

இதுவரை வெளிநாடுகளின் எதிர்ப்பை மட்டுமே சந்தித்து வந்த அமெரிக்கா முதன்முறையாக உள்நாட்டிலும் எதிர்ப்பை உணர தொடங்கியது. இதனால் வேறு வழியின்றி பாரீஸ் நகரில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் படிப்படியாக தனது படைகளை வியட்நாமிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்துதான் வியட்நாமிலிருந்து தங்களது படைகளை 1973 மார்ச் 23ல் வாபஸ் பெறுவதாக அது அறிவித்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்கா தோல்வியுற்றுப் பின்வாங்கிய முதல் யுத்தம் இதுதான்.

இதனால்தான் அமெரிக்க சாம்ராஜ்யத்தின் முதல் சரிவு இங்குதான் துவங்கியது என்று பல வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இதன் தொடர் விளைவாகத்தான் 1975ல் வியட்நாம் மக்கள் பெரும் வெற்றி பெற்றனர். நோம் சாம்ஸ்கி போன்ற அறிஞர்களெல்லோரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான்.

வியட்நாம் மக்கள் இன்றும் தங்கள் தேச விடுதலைக்கு அமெரிக்க மாணவர்களின் போராட்டம் ஒரு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என்பதை நன்றியறிதலோடு நினைவு கூறுகின்றனர்.

Pin It