வரலாற்றில் இடம் பிடித்த மிக முக்கிய நிகழ்வு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.

1964 காலகட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கிய இரண்டாம் ஆண்டு மாணவராக படித்துவந்தேன். அன்றைய சூழலில் திராவிட இயக்கத்தின் தாக்கம் என்பது மாணவர்கள் மத்தியில் பரவலாக இருந்தது. பெரும் பகுதி மாணவர்கள் தி.மு.க உறுப்பினர்களாகவும் இருந்தார்கள். ஆனால் நான் பெரியாரின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தேன்.

தி.மு.கவில் நான் உறுப்பினர் கிடையாது. தி.மு.க மட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய ஆர்வம் கொண்ட மாணவர்கள், பிற அமைப்பு மாணவர்கள் பெருமளவு இருந்தனர். அப்பொழுதுதான் என்னுடைய நண்பர் சீனிவாசன் மூலமாக பெருஞ்சித்திரனார், தேன்மொழியின் தொடர்பு எங்களுக்கு கிடைத்து. அவருடன் ஏற்பட்ட தொடர்பானது எங்கள் போராட்டத்திற்கு உத்வேகம் ஊட்டுவதாய் அமைந்தது. மெய்கொண்டான், முன்னாள் துணைவேந்தர் அரவாணன், பேராசிரியர் திருநாவுக்கரசு, மதுரை இராமலிங்கம் ஆகியோர் ஓர் அணியாய் இருந்தோம்.

அந்த சமயத்தில், 1964 நவ-டிசம்பர் காலகட்டத்தில் மைய காங்கிரசு அரசு 1965 ஜனவரி முதல் இந்தி மொழி அலுவல் மொழியாக் கப்படும் என அறிவித்தது. இதன் ஆபத்தை உணர்ந்த மாணவர்கள் அதற்கெதிரான தமிழகம் தழுவிய அளவில் எழுச்சிமிகு போராட்டத்தைக் கட்டமைக்க முடிவு செய்தனர். அதன் தொடக்க மாக ஒரு துண்டுபிரசுரம் அடித்து தமிழகத்திலுள்ள அனைத்து மாணவர் தலைவர்களுக்கும் அனுப்பி, மாணவர் கூட்டமைப்பு உருவாக்க களமிறங்கினோம்.

இந்திய, தமிழக அரசை உலுக்கிய எழுச்சிமிக்க மாணவர் போராட்டம் பற்றி

ஜனவரி 25 அன்று சென்னையில் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களும், பொது மக்களும் உணர்ச்சிமிக்கப் பேரணியை நடத்தினார்கள். அதேபோல் மதுரையிலும், நான் படித்த அண்ணாமலைப் பல்கலை கழகத்தைச் சேர்ந்த பெருந்திரளான மாணவர்கள் சிதம்பரம் நகரத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்று தங்களின் போர்க்குரலை ஒலிக்கச் செய்தனர். அப்பொழுது இடையில் ரயில்வே கேட்டைக் கடந்து நகரத்திற்கு உள்ளே செல்ல முற்படும்போது வெளி மாநிலத்திலிருந்து போராட்டத்தை ஒடுக்க பக்தவத்சல அரசால் அழைத்துவரப்பட்ட காவல்துறை அதனை தடுத்தது. அப்பொழுது மாணவர்கள் அனைவரும் “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு“, “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க“ என்று ஆக்கிரோசமான முழக்கங்களோடு முந்திசென்றனர்.

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மாணவர்கள் மீது பாய்ந்தது. கண்ணீர் புகைகுண்டு, தடியடியைப் பிரயோகித்தது. மாணவர்களும் திருப்பி தாக்கத் தொடங்கினர். நீண்ட நேரமாக தொடர்ந்த காவல்துறையின் வன்முறைத் தாக்குதலில் பல மாணவர்கள் இரத்தக் காயங்களோடு விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது பல்கலைக் கழகத்தை நோக்கி மாணவர்கள் ஓடினார்கள். காவல்துறையின் வெறியாட்டம் ஓய்ந்தபாடில்லை.

பல்கலைகழகத்திற்குள்ளும் தொடர்கிறது. அதிகார வெறியோடு துரத்திய காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இராஜேந்திரன் என்கிற மாணவர் சுட்டுக் கொல்லப்படுகிறார், புலவர் மகன் நெடுமாறனும் தோளில் குண்டுபாய்ந்து மயக்கமுற்றார். இக்கொடூர வன்முறையானது மாணவர்களைக் கொதித்தெழச்செய்தது. கொந்தளிப்படைந்த பெரும் மாணவர் கூட்டம் துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி கொடுத்த பதிவாளர் மீது திரும்புகிறது.

பதிவாளரின் வீட்டை முற்றுகையிட்டு மாணவர்கள் சூறையாடினார்கள். இந்நிலையில் போராட்டத்தை மட்டுப்படுத்த தமிழக அரசு கல்லூரி, விடுதிகளைக் காலவரையின்றி மூட உத்தரவிட்டது. ஆனாலும் மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்று ஆங்காங்கே இருந்துகொண்டே போராட்டத்தை மேலும் தீவிரமாக முன்னெடுத்தனர். ‘‘அரசு விடுமுறை அறிவித்தால் மாணவர்கள் ஓய்ந்துவிடுவார்கள். போராட்டம் ஓய்ந்துபோகும்” என்கிற சூழ்ச்சியை முறியடித்து 50 நாட்களுக்கு மேலாக மாணவர்களின் போராட்டம் போர்க்குணத்தோடு தொடர்ந்தது.

தனியாத மக்கள் எழுச்சியும் மைய ராணுவத்தின் அடக்குமுறையும் ஓய்வின்றி நீடித்த மாணவர்களின், மக்களின் போராட்டம் மைய, மாநில அரசுகளுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்தது. இருந்தும் அவை தங்கள் நிலைபாட்டை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. மாறாக பக்தவத்சல அரசு, இச்சூழலை மிகவும் அலட்சியமாக, கேலிக்கூத்தாக பார்த்தது. இதன்விளைவாக போராட்டம் படிப்படியாக உக்கிரமான நிலைக்கு போனது. பல பேருந்துகள் எரிக்கப்பட்டன. இரயில் பெட்டிகள் கொளுத்தப்பட்டன.

உச்சமாக திருப்பூர் நகரத்தில் காவல் அதிகாரி ஒருவரை டையரில் கட்டிவைத்து மக்கள் எரித்தனர். கட்டுக்கடங்காத மாணவர் போராட்டத்தை ஒடுக்க திட்டமிட்ட மைய காங்கிரசு அரசு, சி.ஆர்.பி.எப் இராணுவத்தை அனுப்பி அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. அதன் விளைவாக தமிழகம் முழுவதும் பல ஆயிரம் மக்கள், மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான மக்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். குறிப்பாக பொள்ளாச்சியில் நடந்த இராணுவ வன்முறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

இராணுவத்தின் கொலை வெறியாட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்துபோனது. இந்நிலையில்தான் தமிழகத்தின் நடுவண் அமைச்சர்களாக இருந்த எல். சுப்ரமணியன், ஓ.வி. அழகேசன் போன்ற அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்து கடிதத்தை பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரியிடம் கொடுக்கிறார்கள். அதனை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கிறார். சூழலை உணர்ந்த ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டால் நாளை தமிழ்நாடு தனிநாடாகும் என்கிற அச்சத்தால் நிராகரிக்கிறார். இராஜினாமா செய்வதாக அறிவித்த அமைச்சர்கள் ஒருவார காலகட்டத்தில் பதவியில் தொடர்கிறார்கள். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு தி.மு.க வெற்றிபெறுகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்பும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது.

இருமொழிக்கொள்கையும் தி.மு.க.வும்

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது தமிழ்க் காப்பு போராட்டமாக இல்லாமல் ஆங்கிலம் காப்பு போராட்டமாகத்தான் இருந்தது. திமுக இந்தியை எதிர்க்கத் தமிழை முதன்மைபடுத்தாமல் ஆங்கிலத்தை அறிவியல் மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் சொன்னது. இந்தி உள்ளே வராமல் இருக்க ஆங்கிலத்தை முன்நிறுத்துவதாக அமைந்தது. அன்றைய சூழலில் மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்திடும் தலைமையில்லாத நிலையில், மாணவர்களும் ஆங்கிலத்தை முன்னிறுத்தினர்.

தமிழ் உணர்வாளர்கள் இப்போராட்டத்தை அடுத்தக் கட்டம் தமிழ் காப்பு போராட்டமாக மாற்ற வேண்டும் என்று கா.பா. அரவாணன் போன்றோர் மாணவர் கூட்டமைப்பில் கூறியபொழுது கடும் எதிர்ப்பே நிலவியது. காரணம் அன்று போராட்டத்தை வழிநடத்திய தி.மு.க விற்கு இந்திக்கு முறியடிக்க ஆங்கிலம் என்கிற கண்ணோட்டமே மேலோங்கியிருந்தது. அவை மாணவர்கள் மத்தியிலும் ஆழமாக பிரதிபலித்தது. திமு.க ஆட்சிக்கு வந்ததுமே இருமொழிக் கொள்கையை அறிவித்தது. ஒன்று ஆங்கிலத்தைக் கட்டாயப் பாடமாகவும், இரண்டு, தமிழ் (அ) வேற்றுமொழி என பாடத்திட்டத்தை அறிவித்தது.

அது ஆங்கிலத்தை வளர்க்கவே வழிவகுத்தது. போராட்டத்தை மழுங்கடித்ததற்கும், தமிழகத்தில் தமிழ் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்டு வருவதற்கும் தடையாக இருந்தது அன்றைய, இன்றைய தி.மு.க தான்.

நேர்காணல் இன்குலாப்

சமஸ்கிருதத்தை முன்னிறுத்திய சமஸ்கிருத வானர்கள், இந்துத்துவவாதிகள் வரலாற்று அடிப்படையில் தமிழ்மொழி தனக்கான தனித்துவத்தைப் பாதுகாத்து வந்திருக்கிறது. குறிப்பாக சமஸ்கிருத பண்பாடு, அதை எதிர்கொள்ளக்கூடிய பண்டைய மொழியாக தமிழ் அமைந்திருக்கிறது. இலக்கியம், பண்பாட்டைப் போற்றி பாதுகாக்கும் வகையில் மொழி இயங்கி வருகிறது. மொழி ஒவ்வொரு மனிதனின் சிந்தனைகயையும் வாழ்க்கையையும் பதிவுகளாக பதிவு செய்திருக்கிறது. தமிழ் போன்ற பழமையான மொழியாக தமிழ் மொழி நீங்காத வண்ணம் உள்ளது.

தமிழ் சொற்கள் நீக்கப்பட்டு வடமொழி சொற்கள் முன் வந்ததா?

தமிழ் புதுமையை நோக்கிச் சென்ற பொழுது சமஸ்கிருதவானர்கள் அதனை எதிர்க்க ஆரம்பித்தார்கள். அச்சு ஊடகங்கள் வந்தபின் தமிழ் எதிர்ப்புணர்வு தீவிரமாக முன்வர ஆரம்பித்தது. அய்ந்து எழுத்துக்கள் மட்டுமே மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழ்மொழி செம்மை மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. தமிழ் ஒரு மொழியே கிடையாது என்கிற அளவிற்கு சமஸ்கிருத திணிப்பு தாக்கம் செலுத்தியது.

இலக்கண வரம்பில்லா மொழியாக சமஸ்கிருதத்தைப் போற்றினர். அதற்கு எதிரான போராட்டம் என்பது தமிழ்நாட்டில்தான் முதன் முதலில் வெடித்தது. இதன் விளைவாக 1930களில் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாகக் கொண்டுவர முடியாது என்பதால் இந்தியைக் கொண்டுவருவது என மைய அரசு முடிவு செய்தது. அதற்கு ஆதரவாக பார்ப்பனிய திலகர் இந்தியைக் கொண்டு வரனும், கூடுதலாக சமஸ்கிருதமயத்தை வலுப்படுத்தனும் என்றார். பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி இந்தி என்று சொல்லி பெரும்பான்மைவாதம் என்கிற இட்டுக்கட்டப்பட்ட கருத்தாக்கம் முன் வந்திருந்தது.

1938ல் ராஜாஜி முதலமைச்சரானார். தமிழ் உணர்வுப் பெருக்கெடுத்த சூழலில் அதற்கு அடித்தளமிடும் வகையில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த இளஞ்செழியன் எழுதிய “தமிழன் தொடுத்த போர்“ என்கிற நூல் மாணவர்களின் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றியது.

1964ல் கிரிதாரி பிரசாத் மாப்வாரி போன்ற இந்துத்துவவாதிகள் சமஸ்கிருதத்தைப் பாராட்டி பேசி வந்தனர். சென்னையில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர், ‘‘தமிழ்மொழி பிராந்திய மொழிதான். அது ஒருபோதும் செம்மொழியாகாது. ஆதலால் இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொன்னார். தமிழ்நாட்டில் வந்து தமிழ் மாணவர்கள் மத்தியில் இவ்வாறு பேசியது மாணவர்களுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது. இளங்கோ மன்றம் என்கிற மன்றத்தில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தோம், அம்மன்றத்தின் தலைவர் இதனைக் கண்டித்தார். அப்பொழுதிலிருந்தே மாணவர்களின் கோபம் தீயாய்க் கனன்று கொண்டிருந்தது.

போராட்டத் தீ மூட்டிய மாணவர்கள்

1938ல் தாளமுத்து, நடராசன் இரு மாணவர்கள் தீக்குளித்தனர். 1964ல் சின்னசாமி என்கிற தமிழ் உணர்வாளர் தீக்குளித்து இறந்துபோகிறார். அதைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் தீக்குளித்தனர். இவை போராட்டத்தைப் பற்றி எரியச் செய்தது.

தொடக்கமாக 1965ல் சனவரி 25ல் காளிமுத்து, காமராசு இருவரும் இந்தி அலுவல் மொழி சட்ட நகலை நடுரோட்டில் எரித்து கைதாகினர். போராட்டம் தீவிரப்பட்டது. எங்களில் 8 மாணவர்கள் மட்டுமே அழகர் மலைக்கோயில் அருகில் கூடினோம். நாம் ரகசியமாக செயல்படுவது என்றும் தி.மு.கவின் பின் செல்லக்கூடாது என்றும் தீர்மானித்து நான், முருகையன், சேடப்பட்டி முத்தையா, பாண்டியன், செயராமன் ஆகியோர் தங்களின் கையை கிழித்து ரத்தத்தால் பாறையில் தமிழ் என்று எழுதி உறுதிமொழி எடுத்துகொண்டுப் புறப்பட்டோம்.

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆசிரியர்கள் மறைமுக ஆதரவை அளித்து வந்தனர். அப்போராட்டத்திற்கு நேரடியாக உதவிசெய்தவர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள். அக்காரணத்திற்காக காவல்துறையால் மிரட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவரின் வேலை பறிக்கப்பட்டது. ஆங்காங்கே பல்வேறு முழக்கங்கள், உணர்ச்சிபொங்கும் பொன்மொழிகள் மாணவர்களின் மனதைக் கவர்வதாய், போராட்டத்தை அடுத்தடுத்து நகர்த்திச் செல்வதாய் அமைந்தன. அந்த சமயத்தில் வெளிவந்த ’தமிழ்சோலைக்குள் காட்டெருமை நுழைகிறது’ என்கிற துண்டு பிரசுரம் பரப்பப்பட்டது.

சிதம்பரம் செட்டியார் என்னை அழைத்து ‘நீ தான் எழுதினாயா‘ என்று கேட்டார். ‘இல்லை தமிழ்ப்பற்று உள்ள ஒரு மாணவன் எழுதியிருப்பார்‘ என்று கூறியதைக் கண்டு கடும் கோபத்தில் என்னுடைய நன்மதிப்பு சீட்டில் ’திருப்தி’ என்று எழுதியிருந்தார்.

அன்றைய சூழலில் நடந்த போராட்டத்திற்கு தி.க முன் வரவில்லை. இன்னும் சொல்லப் போனால் சி.பி.ஐ இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்தது. சிபி எம் ஆதரித்தது. ஆக எங்களைப் போன்றவர்கள் எல்லாம் கம்யூனிசத்தின் மீதான ஈடுபாட்டைக் கொண்டிருந்தோம். ஆனால் எங்களை வழிநடத்த சரியான தலைமை இல்லை.

ஆக இன்று ஆட்சிக்கு வந்திருக்கும் பாஜக அரசு தனது இந்துத்துவ முகத்தை திறந்திருக்கிறது. எதிலும் சமஸ்கிருதம் என்கிற நோக்கில் காவி பாசிசத்தைக் கல்வியில் திணிக்க முயற்சித்திருக்கிறது. இவை யாவும் அபாயகரமான சூழலையே நமக்கு காட்டுகிறது. ஆக மாணவர்கள் தங்களின் இலக்கில் தோற்றுப்போகாமல் வெற்றியைநோக்கி பயணிக்கவேண்டுமானால் அன்று போராடியபோது அரசியல் கட்சிகளின் பின்னால் அணிதிரண்டுவதுபோல் அல்லாமல் தங்களுக்கான சரியான பாதை எது என்று தீர்மானிப்பதும், அமைப்பாய் அணிதிரள்வதும் அவசியம் ஆகியிருக்கிறது.

ஆங்கில காப்பு போராட்டமல்ல நமது நோக்கம். தாய்மொழி, தமிழ்மொழி உரிமை என்பதை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. அது மாணவர்களின் கையில்தான் இருக்கிறது.

மூத்த கம்யூனிஸ்ட் தோழர்

கோவை ஈஸ்வரன் நேர்காணல்

அரசியல் போக்கும், இயக்கங்களின் பங்கும்

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின்போது எனக்கு வயது 26. அப்பொழுது நான் தீக்கதிர் இதழ் ஆசிரியர் குழுவிலும், பின்னால் அதனை முழுமையாக எடுத்து நடத்தும் பொறுப்பும் எனக்கிருந்தது.

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1938--48களில் நடந்த போராட்டம், இந்தியைக் கட்டாயமாக்குவதற்கு எதிரான போராட்டம். ஆனால் 1965களில் நடந்த போராட்டம் இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாகக் கொண்டு வருவதை எதிர்த்தப் போராட்டம் ஆகும். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் காங்கிரசு கட்சி செல்வாக்கை இழந்துகொண்டிருந்தது. காரணம், 1962ல் இந்திய -சீன யுத்தத்திற்குப் பின்னான நிலைமையில் ஏற்பட்ட கடுமையானப் பொருளாதார நெருக்கடி. விலைவாசி, பஞ்சம், பட்டினி காரணமாக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள்.

அந்த நேரத்தில், சி.பி.ஐ, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளாக இருந்த சூழலில், அன்று உலகளவில் நடைபெற்ற ”மாபெரும் விவாதம்” இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தாக்கத்தின் விளைவாக சி.பி.ஐ இரண்டாகப் பிளவுற்றது.

சீன ஆதரவு போன்ற தோற்றத்தை சி.பி.எம் கட்சி அளித்தது. கம்யூனிஸ்டுகளின் வேலையை முடக்கும் விதமாக அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரி லால் நந்தா- நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை வைத்து, சி.பி.எம் பற்றி “மக்களைத் தூண்டிவிட்டுப் புரட்சி, கலகத்தை செய்யும் சதியில் ஈடுபடுகிறார்கள். ஆங்காங்கே போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

ஆதலால் அக்கட்சியை தடைசெய்ய வேண்டும்” என்று பேசுகிறார். அதன் விளைவாக சி.பி.எம் கட்சியை சேர்ந்த அனைத்து தோழர்கள், பத்திரிகையாளர்கள், அச்சு ஊடகத்தில் வேலை செய்தோர் என அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அன்றைய சி.பி.எம் தலைமை முழுவதுமே சிறையில் அடைக்கப்பட்டது.

சிறைவாசம்

 சி.பி.எம் - இன் தொழிற்சங்க இயக்கம் அன்று இருந்தது. அக்கட்சியின் வரம்புகளையும் தாண்டி தீவிர போராட்டத்தை முன்னெடுத்தனர். மாணவர்களும் களத்தில் தீர்மானகரமான சக்தியாக மாறினர். தி.மு.க. தான் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆங்காங்கே மாணவர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பல கூட்டங்களில் நானும் கலந்துகொண்டு உரையாற்றினேன். ஒருமுறை பாரிமுனை அருகில் நடந்த கூட்டத்தில் நான் ஆற்றிய உரையில் முதல்வர் பக்தவச்சலத்தை விமர்சித்து கடுமையாக பேசினேன்.

3000க்கும் மேற்பட்டோர் கூடிய அக்கூட்டத்தில் என் பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்றது அடுத்தநாள் காலை நான் கைதுசெய்யப்பட்டேன். என்னுடன் சங்கரய்யா, என். ராமகிருஷ்ணன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டார்கள். எங்கு பார்த்தாலும் மாணவர் போராட்டங்கள் நடந்தன. காவலர்கள் கொல்லப்பட்டதும் நடந்தது. மைய ராணுவம் இறக்கப்பட்டது. பல நூறு பேர் கொல்லப்பட்டார்கள். நாங்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அன்றைய சூழலில் யாரெல்லாம் கால்சட்டை அணிந்து சாலையில் சென்றார்களோ அவர்களையெல்லாம் காவல்துறையினர் கைதுசெய்தனர். ஏனென்றால் அவர்கள் எல்லாம் மாணவர்கள். இவ்வாறாக, மாணவர்கள், பொது மக்கள் என்று பலர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் நாங்கள் 4 நாளில் விடுதலை செய்யப்பட்டோம். விடுதலை ஆன அன்றே மீண்டும் கைது செய்யப்பட்டோம். எங்களைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று தனிச்சிறையில் அடைத்தார்கள்.

ஜனவரி 1 அன்று தமிழகமெங்கும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தைத் திமுக அறிவித்தது. அப்போராட்டத்தில் பங்குபெற்ற தி.மு.க. தலைவர்கள் பலர் சிறைக்கு வந்தார்கள். காஞ்சிபுரம் பேராசிரியர் இலக்குவனார் கைதுசெய்யப்பட்டார். காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆழ்வார், கொள்ளிமலை சர்க்கரவர்த்தி துரைசாமி, தோழர் ராமமூர்த்தி போன்றோர் கைதானார்கள். நாங்கள் அனைவருமே ஒன்றாக சிறையில் இருந்தோம்.

நேருவின் உத்தரவு - இந்தி திணிப்பு வாபஸ்

போராட்டம் தீவிரமடைந்தையடுத்து, நேரு உத்தரவினை அடுத்து லால்பகதூர் சாஸ்திரி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். “இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இந்தியைத் திணிக்கமாட்டோம்“ எனக் கூறுகிறார். பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மொழிக்கொள்கையற்ற தி.மு.க. வின் துரோகம்

அன்றைய தி.மு.கவின் முழக்கம் என்பது “English ever Hindi never“ என்றும், காங்கிரசு “hindhi ever Eng­lish never“ என்றும் முன்வைத்தன. இக்கட்சிகளுக்கு மாநில மொழிகளைப் பற்றி எந்த அக்கறையும் கிடையாது. சி.பி.எம் கட்சிக்கு மொழிக்கொள்கை பற்றிய பார்வை இருக்கவில்லை. சி.பி,ஐ இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்தனர். பின்னால் வந்த நெருக்கடி நிலையையும் ஆதரித்த ஒரே கட்சி இந்தியாவில் சி.பி.ஐ. தான். அந்தளவிற்கு காங்கிரசு சார்பு அரசியல் நிலைபாட்டை கொண்டிருந்தது சி.பி.ஐ.

இதற்கிடையில் சிறையில் இருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்ட பின்பும், கம்யூனிஸ்டுகள் என்கிற காரணம் காட்டி விடுதலை செய்யாமல் தண்டனையை நீட்டிக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு பின் சிறையிலிருந்து வெளியே வந்தோம்.

காங்கிரசைத் தோற்கடித்த தொழிலாளர்கள்

அதன்பின்பு 1967ல் காங்கிரசைத் தூக்கியெறிவதை நோக்கி தமிழகம் பயணித்தது. குறிப்பாக இந்தி எதிர்பபு போராட்டத்தில் ஆவடி, பட்டாபிராம் தொழிற்சாலை தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் உச்சகட்டமாக பெங்களுர்- சென்னை தொடர்வண்டியை நிறுத்தி மக்களை இறக்கி விட்டுவிட்டு வண்டியை கொளுத்திய சம்பவம் முக்கியமானது. மேலும் ஒரு இன்ஸ்பெக்டரை கட்டிவைத்து கொல்ல முயற்சிக்கும் போது காப்பாற்றப்பட்டார்.

67 தேர்தலில் பக்தவச்சலத்தைத் தோற்கடித்ததில் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது. பின் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தபின்பும் போராட்டம் தொடர்கிறது. அண்ணா போன்ற தலைவர்கள் அழைப்பு விடுத்தும் போராட்டத்தை நிறுத்தவில்லை மாணவர்கள். அண்ணாவின் இருமொழிக்கொள்கை என்பதுகூட தமிழ் பாதுகாப்பு என்கிற நிலையில் இல்லாமல், தமிழ் அல்லது பிற மொழி என்கிற அடிப்படையில்தான் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அவை மறைமுகமாக ஆங்கிலத்தை ஆதரித்ததாகவே அமைந்திருந்தது. மேலும் காங்கிரசு - மும்மொழிக்கொள்கை, எம்.எல் இயக்கம் - ஒரு மொழிக் கொள்கை போன்ற கோரிக்கைகள் விவாதத்தில் இருந்தன.

பெரியாரின் நிலைபாடு

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கடுமையாக எதிர்த்ததில் பெரியார் முதன்மையானவர். காமராசர் ஆட்சியை கவிழ்க்க ராஜாஜி போன்ற பார்ப்பனர்கள் தூண்டிய போராட்டம்தான் மாணவர் கலகம் என்று சாடுகிறார். இவற்றை முதலிலேயே முடக்கியிருந்தால் இந்தளவிற்கு போராட்டம் வெடித்திருக்காது என்றும் கூறினார். அவரின் நிலைபாடு ஆங்கிலம் தான் ஆட்சி மொழி, தமிழ்நாட்டில் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்கிற கண்ணோட்டமில்லை.

67க்கு பிறகும் தற்போது வரை இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வாடையே இல்லாமல் தி.மு.க இருப்பதை நாம் காண்கிறோம். 67க்கு பிறகும் தற்போது வரை இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வாடையே இல்லாமல் தி.மு.க இருப்பதை நாம் காண்கிறோம். எப்பொழுது நெருக்கடிகள் முற்றுகிறதோ அப்பொழுது மட்டுமே இந்தி திணிப்பு எதிர்ப்பைப் பற்றி பேசுவது என்கிற நிலையில்தான் தி.மு.க இருந்தது.

தற்போது மோடி ஆட்சிக்கு வந்தபின் மீண்டும் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். சமஸ்கிருத வாரம், இந்தியில் உறுதிமொழி, சரஸ்வதி பாடல் என இந்துத்துவத்தின் அபாயம் முன்வந்துள்ளது.

காரணம், தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்கு 10 சதவீதமாக அவை உயர்ந்திருக்கிறது. மய்ய, மாநில அரசுகள் தம் விளம்பரங்களையும் இந்தி மொழியில்தான் அறிவிக்கின்றன. அன்று இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டம், இன்று ஏன் நடக்கவில்லை என்று ஆராய்வது அவசியம். அன்று திராவிடர் இயக்கத்தின் செல்வாக்கானது மாணவர்களிடையே பரவலாக இருந்தது. மற்ற இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்கு பலமாக இல்லை. தொடர்ச்சியாக வழிகாட்டக்கூடிய சரியான தலைமை மாணவர்களிடையே இல்லை.

இரண்டாவது

உலகமய, தாராளமய பொருளாதாரம் மாணவர்கள் மத்தியில் அரசியல் அற்ற மனப்பான்மையைத் தோற்றுவித்துள்ளது. ஆளும் வர்க்கக் கட்சிகளும், ஊடகங்களும் அதனை வலுப்படுத்துகின்றன. மாணவர்கள் போராடுவதற்கான புறநிலையாக இதனைப் பார்க்கலாம். மேலும் ஒற்றை இந்தியாவை உருவாக்குவதற்கும் பல தேசிய இனங்களின் மொழியை ஒடுக்குவதற்கான கருவியாக இந்தி உள்ளது என்பதையும் இந்தியா எப்படி அடிமை நாடாக இருக்கிறது என்பதையும் இன்றைய மாணவர்கள் உணரவேண்டிய அவசியம் உள்ளன.

கல்வியில் இந்துத்துவத்தின் பாசிசமானது, மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் நச்சாக பரவிவருகிறது. அதை உணர்ந்து ஒன்றுதிரள்வதும், தமிழ்க் காப்பு போராட்டத்திற்கான மொழிப்போரை தொடர்வதும் இன்று முதன்மையாக மாறியிருக்கிறது. மாணவர்கள் எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுப்பதில்தான் சமூக மாற்றத்திற்கான புதிய எழுச்சியை உருவாக்க முடியும். 

நேர்காணல்கள் : ரமணி, ராஜா

Pin It