செப்டம்பர் மாத உயிர்மை இதழில் யமுனா ராஜேந்திரன் அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினை என்கிற பெயரில் கோபால் ராஜாராம் என்பவர் எழுதியது நேர்மையாக இல்லை. மாறாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்த அவதூறுறாக அமைந்துள்ளது. தன்னிடமுள்ள அவதூறுறுச்சரக்கை உயிர்மைக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், அதே நேரத்தில் தமக்குப் பிடிக்காதவர்களுக்கு முத்திரை குத்தும் முயற்சியில் யமுனா ராஜேந்திரன் இறங்கியிருப்பதாகக் கதைக்கிறார்.

பர்மாவை ஏகாதிபத்தியம் என்கிறார். சீனாவைக் குறிப்பிடும்போது திபெத் ஆக்கிரமிப்பாளன் என்றும் மனித உரிமை மறுப்பாளன் என்றும் வன்மொழிகளைப் பயன்படுத்துகின்றார். ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த சோவியத் யூனியன் என்கிறார். இன்றைய ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதையோ, ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதைப்பற்றியோ ஒரு வரியிலும் குறிப்பிடவில்லை. மாறாக, அமெரிக்காவைப் பற்றி கண்ணியமான மற்றும் கனிவான சொற்களால் விசைப்பலகையில் தட்டிச் செல்கிறார். அமெரிக்காவின் தவறான செய்கைகள் என்று எந்தவித ஆவேச உணர்ச்சியுமின்றி சொற்களைக் கையாளுகிறார். ஜெய ஜெய சங்கர என்னும் நாவலானது இந்துத்துவா சாயல் கொண்டது என்று கூறக்கூடாது என்கிறார்.(சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கர மடத் தலைவர் கைதானபோது ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய ஹர ஹர சங்கர நாவலைப் படித்து, இந்துத்துவாவாதிகள் செய்யத் துணியாததை இந்த நாவல் செய்கிறது என்கிற உண்மையை யாரேனும் கூறினால், அது முத்திரை குத்துவது என்று எதிர்வினையாளர் மிரட்டுவார்) .

தன் பக்கமே கோல் அடிப்பது :

ஹைட் சட்டமானது 123 ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று விளக்கமாகக் கூறினால் மறுத்துப் பேச முயன்றவர், தன்னை அறியாமல், ஒரு கட்டத்தில் அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். அணு ஆயுத நாடான சீனாவைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் வேறு, இந்தியாவைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் வேறு. அதனால்தான் இந்தியாவிற்காக ஹைட் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு தன்பக்கமே( சேம் சைட் கோல்) கோல் அடிக்கிறார். ஹைட் சட்டம் கட்டுப்படுத்தும் 123 ஒப்பந்தம் குறித்து மீண்டும் விளக்கமாக எழுதத் தேவையில்லை. போதிய அளவிற்கு யமுனா ராஜேந்திரன் அறிவியலாளர் ஏ.கே.ஐயங்கார் மற்றும் பிரகாஷ் காரத் போன்றோர் விரிவாக எழுதியும் விட்டனர்.

உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் :

அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று மார்க்சிஸ்டுகள் சொல்வதில் சர்வதேசியமும் அடங்கியிருக்கிறது. அணுஆயுத எதிர்ப்பும் அடங்கியிருக்கிறது. இதைச் சீனா செய்யவில்லையே என்று குறிப்பிட்டு விட்டு மார்க்சிஸ்டுகள் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்கிறார். இது பொருத்தமற்றதும் விஷமத்தனமானதுமான கேள்வியாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அது என்னவெனில் அக்கட்சி தன் சொந்த நிலைபாட்டை உலகில் உள்ள எந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அடகு வைத்ததல்ல. மேலும் எல்லா நாடுகளிலும் உள்ள கம்யுனிஸ்ட் கட்சிகளின் நடைமுறையும் அணுகுமுறையும் எல்லா விக்ஷயங்களிலும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. நாடுகளிடையே உள்ள குறிப்பான அரசியல்சூழல் மாறுபாடுகளும், அந்நாடுகளின் சமுக வளர்ச்சி நிலையும், ஆளும் வர்க்கங்களின் தன்மை மற்றும் புரட்சியின் கட்டம் குறித்த அணுகுமுறைகள் ஆகிய இவை போன்றவை தான் அந்தந்த மண்ணுக்கே உரிய மார்க்சியக் கட்சிகளின் செயல்பாடாக பொதுவாக அமைகின்றன. இதனைப் புரிந்து கொண்டால்தான், பின் ஏன் உலகம் முழுவதும் ஒரே தலைமையின் கீழ் இல்லாமல் ஒரே கட்சி அமைப்பு என்றில்லாமல் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு கட்சிகள் இயங்குவதைப் புரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்த தவறான புரிதல் :
US Imperialism
அமெரிக்கா அப்படிச் செய்யும், இப்படிச் செய்யக் கூடும் என்று அனுமானங்களை முன்வைத்து யமுனா ராஜெந்திரன் பேசுவதாக கோபால் ராஜாராம் எழுதுகிறார். அமெரிக்கா ஒருஏகாதிபத்திய நாடு என்பதையே இவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ஆனால் பர்மா போன்ற பின்தங்கிய நாட்டிற்கு ஏகாதிபத்தியம் என்கிற அடைமொழியைக் கொடுக்கிறார். அமெரிக்க நலனுக்காக எந்த நாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கத் தயங்க மாட்டோம் என்று கொக்கரிக்கிற ஏகாதிபத்தியத் திமிரைப் பற்றிக் கூறினால், தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதாக வருத்தப்படுகிறார். அணு ஆயுதப்போட்டியை உருவாக்கியது மட்டுமன்றி ஹரோஷிமா-நாகசாகி தொட்டு இன்று ஈராக்,ஆப்கன் வரை அமெரிக்க குண்டுகளால் அழிந்தவர்கள் படைவீரர்களை விட சிவிலியன்கள் தான் என்றும் அது பல லட்சக்கணக்கானோர் என்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளதை தனது புறங்கையால் ஒதுக்கிவிடுகிறார். இதைப்போன்ற எழுத்துக்களுக்காக ‘மீடியா இன்ஸ்டிடியுட்’ போன்ற அமெரிக்க பொய்ப்பிரச்சார ஊடகங்கள் தங்களது வாசல்களை அகலத் திறந்து வைத்திருக்கின்றன.

ஆசியாவின் நிலைப்புத் தன்மை :

இந்தியா ஒரு திறமை வாய்ந்த சீன எதிர்ப்பு சக்தியாக இருக்கும் என்று தனது ஆய்வுக்கருத்தாக அமெரிக்க போர்க்கல்லூரி அறிக்கை சமர்ப்பித்தது. கோபால் ராஜாராம் அவர்களின் எழுத்துக்களும், இந்த நோக்கத்திலிருந்து வேறுபட்ட போக்கை கொண்டிருக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதுதான். வளர்ந்து வரும் சீனாவைச் சமாளித்து ஆசியாவில் நாடுகளிடையே நிலைப்புத் தன்மையை ஏற்படுத்திட இந்தியாவுடனான உறவு முக்கியமானது என்று தெற்காசியாவிற்கான அமெரிக்கப் பொறுப்பாளர் ஆஷ்லி டெல்லிஸ் கூறுகிறார். ஹைட் சட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகவே இக்கூற்று அமைகிறது.

தனது ஒரு துருவ உலக நோக்கத்திற்காக ஆசியப் பகுதியை தனது கைக்கு அடக்கமாகக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவானது இந்தியாவை முன்னிறுத்தி சீனாவுடன் பகைமை முட்டுவது எந்த வகையில் இந்திய நலனுக்கு உகந்தது? மேலும் ஆசியாவின் நிலைப்புத்தன்மை என்பது சீனாவைச் சமாளிப்பதன் முலம் நிறைவேறும் என்பது எவ்வகையில் உண்மையாகும்? ஈரானை எந்த நேரத்திலும் தாக்கத் தயார் என்று உறுமுகிற இஸ்ரேலைக் கொம்பு சீவுவது அமெரிக்கா அல்லவா. இன்று ஆப்கனை ஆக்கிரமித்துக் கொண்டு பொம்மை அரசை உருவாக்கி வைத்திருப்பது அùரிக்கா அல்லவா. பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று பொய்யான குற்றஞ்சாட்டி, ஐ.நா அமைப்பை ஓரங்கட்டி ஈராக் மீது ஆக்கிரமிப்பைச் செய்திருப்பது அமெரிக்கா அல்லவா.

பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகள் தன் ஆதிக்கத்தில் உள்ளது போல் உரிமையை எடுத்துக்கொண்டு குண்டுகளைப் பொழிந்து வருவது அமெரிக்கா அல்லவா. இப்படி ஆசிய நாடுகளில் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்த விரும்பும் அமெரிக்காதான் ஆசிய நிலைப்புத்தன்மை குறித்து பேசுகிறது. தன்னுடைய ஆதிக்க விரிவைத்தான் நிலைப்புத்தன்மை என்று குறிப்பிடுகிறது. எனவேதான் இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட கேந்திர பாதுகாப்பு ஒப்பந்தம் என்பது அமெரிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே தவிர நமது மின்சாரத் தேவையை நிறைவேற்ற அல்ல என்பது வெள்ளிடை மலை. அணுசக்தி தொழில் நுட்பம் கூட தரப்படமாட்டாது என்று அறிவித்த பின்னரும் அணுசக்தி ஒப்பந்த ஆதரவாளர்கள் கூச்சலிடுவது உண்மைகளை முடக்கி விடவே தவிர வேறல்ல. அமெரிக்காவின் மறைநோக்கிற்கு (ஹட்டன் அஜெண்டா) இத்தகைய கூப்பாடு உதவிகரமாக இருக்கிறது.

ஏகாதிபத்தியத் தலையீடுகள் :

நம் முன்னால் உள்ள அனுபவம் காட்டுவதென்ன? நமது முதல் அணுகுண்டு சோதனையை ஒட்டி அமெரிக்கா தாராப்பலிர் அணுமின் நிலையத்திற்கான அத்தனை உதவிகளையும் நிறுத்தியது. கனடா போன்ற ஏனைய நாடுகளும் நிறுத்தின. (ஆனால் நமது அவசரத் தேவைக்காக சீனாவிடம் யுரெனிய எரிபொருளை ரகசியமாகப் பெற்றதை எந்த வகையில் வரையறுக்கலாம்? அமெரிக்கத் தடைகளை எதிர்த்த உதவி எனலாமா? அல்லது இந்தியா வளர வேண்டும் என்ற சகோதர நோக்கம் எனலாமா?) சமீப காலத்தில் ஏவுர்தி தொழில் நுட்பத்திற்குத் தேவையான கிரையோஜெனிக் என்ஜனை நமக்கு வழங்கக் கூடாது என்று ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்தது. இதனை எந்த வகைத் தடை எனக் கூறலாம்.? சீனா முட்டுக்கட்டை போடுகிறது என்று திரித்துப் பேசுபவர் மேற்கண்ட விஷயத்தில் என்ன கூறப்போகிறார்? மேலும், அமெரிக்கா தடை விதிப்பதை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நமக்கு போதிக்கிறார் எதிர்வினையாளர். ஈரானுடன் எரிவாயு சப்ளை குறித்து புரிந்துணர்வு ஏற்பாட்டைச் செய்த பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர அய்யர் யாருடைய கண்ணசைவால் மாற்றப்பட்டார்?

யாருடைய கைச்சாடையால் அயலுறவு அமைச்சராக இருந்த நட்வர்சிங் வெளியேற்றப்பட்டார்? ஏன் இவர் மீது மட்டும் ஊழல் புகார் எழுப்பப்பட்டது? நமது அமைச்சரவையை சுத்தப்படுத்த அமெரிக்கா எடுத்த நடவடிக்கையா இது? சர்வதேச அணுசக்தி முகமையில் இந்தியா ஈரானுக்கு ஆதரவாக நடந்து கொள்ள நட்வர்சிங் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் பின் விளைவுதானே அவரது நீக்கத்திற்கான பிரதான காரணம்! தனது நாட்டு சிவில் பயன்பாட்டிற்கு அணுசக்தியைப் பயன்படுத்த ஈரானுக்கு உரிமையுண்டு என்று கூறி வந்த இந்தியா தனது நிலைபாட்டை எதனால் மாற்றிக்கொண்டது. ஈரான் பிரச்சனையில் அமெரிக்காவை இந்தியா ஆதரிக்கவேண்டும். இல்லையேல் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கிடையாது என்று புஷ் நிர்வாகம் எச்சரிக்கை விட்டதனால் அல்லவா நிலைமாற்றம் உருவானது. இத்தகைய நிர்ப்பந்தமான அமெரிக்க சார்பு நிலைமாற்றத்தைத்தானே ஹைட் சட்டம் வலியுறுத்துகிறது. இவை போன்ற அனுபவங்களை வெறுமனே அனுமானங்கள் என்று ஒற்றைச் சொல்லால் ஒதுக்கிவிட முயலுகிறார் எதிர்வினையாளர்.

அஸ்ஸாம் முதலமைச்சருக்கு நேரடியாகக் கடிதம் எழுதி குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் துப்பு துலக்க அனுமதி கொடு என்று கேட்ட அமெரிக்கத் தூதரை என்ன செய்ய முடிந்தது அரசால்? அந்நிய முதலீட்டை சிறுவர்த்தகத்தில் அனுமதிக்க முடியாது என்று சொன்ன மேற்குவங்க முதலமைச்சருக்கு எச்சரிக்கைத் தொனி கொண்ட அறிவுறுத்தலைச் செய்த அமெரிக்கத் தூதரை என்ன செய்ய முடிந்தது நடுவண் அரசால்? நமக்கே உரிய தொழில் நுட்பத்தோடு செயல்புரியும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை அமெரிக்க உளவு ஹெலிகாப்டர்கள் வேவு பார்த்து சுற்றிச் சுற்றி வந்ததை என்ன செய்ய முடிந்தது நடுவண் அரசால்? நந்திகிராமில் அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு என்ன வேலை இருக்கிறது? அங்குள்ள சிறுபான்மை அமைப்புத் தலைவரை, கலவரக்காலத் துவக்கத்தில் ஏன் சந்திக்க வேண்டும்? (எல்லா உதவிகளையும் செய்கிறோம் என்று தைரியம் ஊட்டி நம் உள்நாட்டுப் பிரச்சனையைக் கிளறி விடவா) இதை எதிர்த்து அங்கிருந்த சமாஜவாடிக் கட்சியினர் கூட ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால் இந்திய நடுவண் அரசு ஏன் மௌனமாக இருந்தது? கண்டிக்க ஏன் தயங்கியது?

இவ்வளவு கேள்விகளும்,அனுபவங்களும் எதைக் காட்டுகின்றன என்றால் நம் வெளிநாட்டுக் கொள்கையில் அமெரிக்கா தலையிட வாசலைத் திறந்து விட்டதும், அது உள்நாட்டு விவகாரங்களிலும் பிரதிபலிக்கிறது என்பதைத் தானே. (பொருளாதாரத் துறையில் கூறப்புகுந்தால் பக்கங்கள் நீளும்) இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருந்தும் எதிர்வினையாளர் நம் வெளிநாட்டுக் கொள்கையை காபந்து செய்வது நம் கையில்தான் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்கிறார். நிச்சயமாக அது அமெரிக்காவிடம் நமது குடுமியைக் கொடுக்கிற ஏற்பாட்டைச் செய்கிற அணுசக்தி ஒப்பந்தம் போடுகிற ஆட்சியாளர்கள் கையில் இல்லை என்பது முழு உண்மையாக இருக்கிறது.

தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் எதிர்ப்பை எதிர்வினையாளர் மிகப் பெருமிதமாகக் கூறுகிறார். முரசொலி மாறன் அவர்களின் பேச்சினை இடதுசாரிகள் அப்போதே வரவேற்றார்கள் என்பதையும் இத்தகைய நிலைபாட்டை ஆப்பிரிக்க நாடுகளுடனும், பிரேசில் போன்ற நாடுகளுடனும் இணைந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று வற்புறுத்தியதையும் நினைவு கூர்வது நல்லது. ஆனால் பிறகு என்ன நடந்தது ? பிராயச் சித்த நடவடிக்கையாக துணைப்பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி அமெரிக்கா சென்றபோது நாங்கள் உங்கள் இளைய பங்காளியாக இருக்க விரும்புகிறோம் என்று கூறி தாசானுதாசர்களாக தங்களைக் காட்டிக் கொண்டதை எதிர்வினையாளர் வசதியாக மறைத்துவிட்டார்.

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ பெர்ணான்டஸ் அவர்களை நிக்கரோடு நிற்கச் செய்து சோதித்த அமெரிக்கத் திமிரை 105 கோடி இந்திய மக்களின் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமர்கள் எவரேனும் கேள்வி கேட்டதுண்டா இதுவரை? அதற்கு மாறாக அணுசக்தியால் இயங்கும் நிமிட்ஸ் கப்பலை சென்னைத் துறைமுகத்தில் ஓய்வெடுக்க அணுமதித்தார்கள். எப்படிப்பட்ட நிமிட்ஸ் கப்பல்? பல்லாயிரம் ஈராக் மக்களின் ரத்தக்கறை பதிந்த அமெரிக்க ஆக்கிரமிப்புக் கப்பல் அல்லவா அது. அணுக்கதிர் வீச்சு அபாயம் இக்கப்பலால் உண்டா என்று நமது பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று ஆணவத்தோடு கப்பலின் தலைவனால் பேசமுடிந்தது. இக்கப்பலின் நான்காம் நிலை ஊழியன் கூட சர்வ சுதந்திரமாய் சென்னைத் தெருக்களில் நடமாட முடிந்தது. எப்படி இப்படியெல்லாம் அனுமதிக்க முடிகிறது.

இடதுசாரிகள் மீதான அவதூறு :
சர்வதேச அணுசக்தி முகமையில் பேசிய விவரங்களை பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்கிறோம் என்கிற ஒப்புதலைஅளித்தவர்கள் (எதிர்வினையாளர் பார்வையில் இவர்கள் ஜனநாயகப் பண்பினை உச்சத்தில் கொண்ட கனவான்கள்) ஏன் பாராளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்கவில்லை? ருபாய் நோட்டுகள் பாராளுமன்றச் சுவரெங்கும் கிசுகிசுத்து சிரிப்பாய் சிரித்ததே எதற்காக? இதையெல்லாம் மறைத்து இடதுசாரிகளை வாக்குச்சாவடி கைப்பற்றுபவர்களாக, கள்ளவாக்கு போடுபவர்களாக அதிகார போதை கொண்டவர்களாக அவதூறு செய்கிறார் எதிர்வினையாளர். தேர்தல் நிதியென 18 இலட்சம் ருபாயினை காசோலையாக அனுப்பிய டாட்டா நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி பெருமுதலாளிகளிடம் நாங்கள் கட்சி நிதி பெறுவதில்லை என்று கூறிய மார்க்சிஸ்ட் கட்சியை அவதூறு செய்கிறார் எதிர்வினையாளர்.

மதத்தின் பெயரால் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக தனது குடிமகன்களை மோதவிட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட ஏதுவாக செயல்பட்ட குஜராத் ஆட்சியாளர்கள் ஜனநாயகப் பண்பை தலைஉச்சியில் வைத்து கொண்டாடுபவர்களா? அங்கு ஒரே நாளில் தேர்தலை நடத்திய தேர்தல் கமிஷன், சென்ற முறை மேற்கு வங்கத்தில் 5 கட்டத் தேர்தலை நடத்தினார்கள். வெளி மாநில அதிகாரிகளைக் கொண்டு வந்து கெடுபிடி நிலையை உருவாக்கினார்கள். இதன்முலம் மார்க்சிஸ்ட் கட்சி மீது எதிர்மறை பிம்பத்தை உருவாக்க முயன்றனர். அத்தனை முதலாளித்துவக் கட்சிகளின் பொய்ப்பிரச்சாரங்கள் அம்பலப்பட்டும் அசிங்கப்பட்டும் போகும் வண்ணம் மேற்கு வங்க உழைப்பாளிகள் மார்க்சிஸ்டுகளை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனாலும் பிற கட்சிகள் மீது இடதுசாரிகள் அவதூறு செய்கிறார்கள் என்று கூச்சமின்றி எழுதுகிறார் எதிர்வினையாளர்.

3500 நந்தி கிராம மக்களை வெளியேற்றி, நந்திகிராம் பகுதியைத் தங்களது விடுதலைப் பிரதேசமாக அறிவித்த நக்சலைட்டுகள் மேற்கு வங்கத்தில் மட்டும் ஜனநாயகவாதிகளாக இவர்களது கண்களுக்குத் தெரிகிறார்கள். பிற மாநிலங்களில் மட்டும் அவர்கள் போலிஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்படும் பயங்கரவாதிகளாகத் தெரிகிறார்கள். இதே மேற்குவங்கத்தில் 1970களின் முற்பகுதியில் 1500க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்டுகளை காணாப் பிணமாக்கிய சித்தார்த்த சங்கர் ரே ஆட்சியை மறந்துவிட்டு மார்க்சிஸ்டுகள் மீது பழி தூற்றுகிறார். (அணு சக்தி ஒப்பந்தத்தை இப்படி அம்பலப்படுத்தி விட்டார்களே என்கிற மகா எரிச்சல்தான் காரணம்) இந்திரா காந்தி படுகொலையை ஒட்டி நூற்றுக்கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த வன்முறை அரசியலை மறக்க முடியுமா? அவசரநிலைக்காலம் என்று ஜனநாயகத்தை சற்றே நிறுத்தி வைத்து சர்வாதிகார சாட்டையை வீசிய அரசியலை வசதியாக மறைத்துவிட்டார்.

வாட்டர் திரைப்படம், ஃபயர் திரைப்படங்கள் மீதும், ஹூசைன் ஓவியங்கள் மீதும் வன்முறை ஏவும் கலாச்சார வன்முறைத் தணிக்கையாளர்களைக் கண்டிக்காத எதிர்வினையாளர் எப்படிப்பட்ட சார்பினைக் கொண்டவர் என்பது தெரிய வருகிறது. மண்டல் கமிஷனை மறைக்க பாபர் மசூதிப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி ரதயாத்திரை என்கிற பெயரால் படுகொலைகள் நடத்திச் சென்ற மதவெறி அரசியலை மறக்க முடியுமா? இன்றும் இது ஒரிஸ்ஸாவில், குஜராத்தில், கர்நாடகாவில் தொடர்வதை மறுக்க முடியுமா? இத்தகைய அணுகுமுறைகளையும்,அப்பாவிகளைக் குண்டுகளால் பலியாக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளையயும் கையாளுகிற இந்துத்துவா அரசியலை கண்டுகொள்ளாமல் நகர்கிறார் எதிர்வினையாளர்.

மனுகொடுக்கப் போனதற்காக 19 உயிர்களைப் பலியிட்ட தாமிரபரணி நிகழ்வும், கூலி கேட்டதற்காக ரெட்டணை தாக்குதலும், குடிமனைப் பட்டா கேட்டதற்காக முடிகொண்டா துப்பாக்கிச் சூடும், குஜஜர்கள் இட ஒதுக்கீடு கேட்டதற்காக 83 உயிர்களை குருவியைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றதும் சமீபத்திய இந்திய ஜனநாயக (!) ஆட்சியாளர்களின் மாதிரி நடவடிக்கைகள். ஆனால் எதிர்வினையாளர் அவர்களோ சீனத் தியானென்மென் சதுக்க நிகழ்வுகளை நொடிக்கொரு தரம் நினைவு கூர்வது போல் இவற்றை எல்லாம் சுட்டிக் காட்ட மறந்து போகிறார். (காஷ்மீர் உள்ளிட்டு சட்டீஸ்கார் தொட்டு குமரி வரை பரவிய இது போன்ற அரசின் அராஜகவாத நடவடிக்கைகளை நம்மால் பட்டியலிட முடியும். பக்கம் நீண்டு விடும்.)

எதிர்வினையாளர், வாசகர்களை படுமட்டமாக நினைத்து எழுதுகிற துணிச்சல் கொண்டவராக விளங்குகிறார். ஜீவானந்தம், ஈ.எம்.எஸ் ஆகியோர் நல்லவர்களாம்.(இறந்துபோனவர்கள் அல்லவா. தான் இடதுசாரி எதிர்ப்பாளன் அல்ல என்பதாகக் காட்டிக்கொள்ள இத்தகைய அற்பத்தனமாக உத்தியைக் கையாளுகிறார். இதைக் கூடவா ஒரு வாசிப்பாளன் புரிந்துகொள்ள முடியாது?) தற்போது உள்ளவர்கள் அதிகார போதை, லஞ்ச லாவண்யங்களில் திளைப்பவர்களாம். ஈ.எம்.எஸ் போன்றோர் இன்றும் இருந்திருந்தால் அவரையும் சேர்த்துத்தான் அவதூறு செய்திருப்பார் இந்த எதிர்வினையாளர். அதிகார போதை, இலஞ்ச லாவண்யங்களில் திளைப்பவர்கள் யார் என்பதைத்தான் சென்ற பாராளுமன்றக் கூட்டமே வெளிச்சம் போட்டு உலகத்திற்கே காட்டிவிட்டதே. கேள்வி கேட்பதற்கும் பணம் வாங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தெந்தக் கட்சிகளில் இருந்தார்கள் என்பதும், வெளிநாட்டிற்கு அழைத்துக்கொண்டு போவதற்கு பிறன் மனைவியைத் தன் மனைவி என்று கூறிய பாராளுமன்றக் கட்சிகளைப் பற்றி எதிர்வினையாளர் ஒரு சொல் கூட பயன்படுத்தவில்லை. மாறாக இடதுசாரிகளை போகிற போக்கில் எச்சம் இட்டுச் செல்கிறார். (ஜெயின் டைரி, டெகல்கா அம்பலப்படுத்திய பங்காருலட்சுமண் போன்றவர்களைப் பற்றி எழுதினால் பக்கங்கள் நீண்டு போய்விடும்)

அணுசக்தி ஒப்பந்தத்தில் இழுத்துவரப்படும் சீனப் பூச்சாண்டி :

அரசியல் அறியாமை என்கிற இடைவெளியானது அவதூறுகள் புகுந்து விளையாட வாய்ப்பைத் தருகிறது என்பதனை இந்த எதிர்வினையாளர் அறிந்திருக்கிறார். சீனாவை மார்க்சிஸ்ட் கட்சி தனது தீர்த்த ஸ்தலமாகக் கொண்டுள்ளது என்கிறார். (இந்துத்துவா பாணியில் முத்திரை குத்துதலைக் கவனிக்க முடிகிறது) 1967ற்குப் பிறகு மாவோ தலைமையிலான சீன கம்யுனிஸ்ட் கட்சியோடு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எத்தகைய உறவும் இருந்ததில்லை என்கிற வரலாறு இவருக்குத் தெரியாதா? (1964 ல்தான் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி திருத்தல்வாதத்தினை எதிர்த்து உருவானது). ஆனாலும் முதலாளித்துவப் பத்திரிக்கைகளில் வரும் கூலிப்படை எழுத்துக்களின் உடைந்து போன ஆயுதத்தைக் கையில் எடுத்து வீசி வீசிக் காட்டி அச்சுறுத்த முயல்கிறார் எதிர்வினையாளர். சீனக் கம்யுனிஸ்ட் கட்சி தனது கிளையை இந்தியாவில் நிறுவிய இயக்கம் போல் மார்க்சிஸ்ட் கட்சியைச் சித்தரிக்க படாதபாடுபடுகிறார். சீன ஆதரவு நிலைபாட்டினால் அப்பட்டமாய் இந்திய ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்று காரத் தெரிவித்ததாக கோயல்பல்ஸ் தோற்கும் விதமாகப் புளுகு முட்டையை அவிழ்க்கிறார்.

இப்படி கதைகட்டுபவர்தான் யமுனா ராஜேந்திரன் அவர்களைப் பார்த்து அவதூறு செய்கிறார் என்கிறார். தனிநபர் மீதான மோதலாக விஷயங்களைச் சுருக்கிப் பார்க்கிற குறுகிய அரசியல் இல்லாதவரும் கண்ணியமானப் பேச்சுக்கு சொந்தக்காரராகவும் இருக்கிற பிரகாஷ் காரத் அவர்கள் எங்குமே பேசாத ஒன்றைப் பேசியதாக எழுதுகிற மோசடித்தனத்தை எதிர்வினையாளர் கைக்கொள்கிறார். அவர் முன் வைக்கிற வலுவான ஆதாரங்களை எதிர்கொள்ள முடியாததன் இயலாமைதான் இவரைப் போன்றவர்களை அவதூறுகளில் இறங்க வைத்துள்ளது போலும்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட சீனா விருப்பப்படுகிறது. ஏனெனில் இந்தியாவும் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்கிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி கூடாது என்கிறது. அத்தனை அணு ஆயுத நாடுகளும் தங்கள் வசமுள்ள ஆயுதங்களை அழிக்கவேண்டும் என்கிற கோரிக்கை இதில் அடங்கியுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பிற்கு இந்தியா இணங்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. மார்க்சிஸ்ட் கட்சியோ கூடாது என்கிறது. ஈரானின் இன்றைய கதியை சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய வேறுபாடுகளைத் தெரிந்திருந்தும், சீனாவையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் முடிச்சுப் போட்டு அவதூறுகளை உற்பத்தி செய்வது சரியல்ல. சீனா தன்னுடைய நிலைமையோடு சமநிலையில் வைத்து இந்தியாவைப் பார்க்கிற பார்வை இத்தகைய அம்சங்களில் இருக்கிறது என்பது தெரிகிறது. இத்தகைய பார்வையை இந்திய மார்க்சிஸ்டுகள் கொண்டிருக்கவில்லை என்பது, அக்கட்சி முன்வைக்கும் வலுவான காரணங்களைப் படிக்கும் யாவரும் அறிந்துகொள்ளமுடியும். இதைவிடுத்து, மார்பைப் பிளந்து காட்டு என்கிற மாதிரியான வாதத்தை இந்த எதிர்வினையாளர் முன்வைப்பது முறையற்றது ஆகும். (பின்னர் இவரைப் போன்ற அவதூற்றாளர்களைத் திருப்திப்படுத்தவதே மார்க்சிஸ்டுகளின் வேலை என்றாகிவிடும்.)

அணுசக்தி ஒப்பந்தமும் இஸ்லாமிய அரசியலும் :

அணு ஒப்பந்தத்தை இஸ்லாமிய அரசியல் ஆக்க வேண்டாம் என்று காரத்திற்குக் கடுமையான மறுப்புகளை பல இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்தன என்று எழுதுகிறார். மத அரசியல் பிழைப்பு நடத்துகிற பிற்போக்கு அரசியலாக மார்க்சிஸ்ட் கட்சியை இவர் குறுக்கிப் பார்ப்பது தன்னைப் போல்தான் அவர்களும் என்று குற்றஞ்சாட்டி பிழைப்பு நடத்துகிற அரசியல் உத்தியாகத் தெரிகிறது. அரைகுறைத் தகவல்கள் அவதூறுறுகளை விட அருவருப்பானவை. முழுத் தகவல் இதுதான்: தொழிற்சங்கத் தலைவரான எம்.கே.பாந்தே அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் சமாஜவாடிக் கட்சியை எச்சரிக்கிறோம் என்கிற நோக்கத்தில் தவறுதலாக ஒரு வார்த்தையை விட்டுள்ளார். =அணுஒப்பந்தத்திற்கு ஆதரவு கொடுத்தால் இஸ்லாமியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது…= என்று அவர் பேசியதை உடனடியாக மார்க்சிஸ்ட் கட்சி புறக்கணித்து இது சரியான பேச்சு அல்ல என்றும் கூறியது. இது பத்திரிக்கைச் செய்தியாகவும் வந்தது. இதை ஏன் பிரகாஷ் காரத் கூறியதாக தகவலைத் திரித்து பழிக்கிறார்.

இஸ்லாமியர்கள் எல்லோரும் ஒற்றைப் பரிமாண குணம் கொண்டவர்கள் என்பது போலவும் ,ஏகாதிபத்திய எதிர்ப்பே அத்தகைய குணமாகும் என்பது போலவும் மார்க்சிஸ்ட் கட்சி என்றும் எப்போதும் நிர்ணயிப்பிற்கு வரமுடியாது. அதுபோலவே பெரும்பான்மையினராக உள்ள இந்துக்கள் பாசிஸ்ட் சக்தியான ஆர்.எஸ்.எஸ்-ஐப் போன்று ஏகாதிபத்திய தாசர்கள் என்பதைப் போல (யதார்த்தமற்றதும் முட்டாள்களின் உலகத்தில் வசிப்பதைப் போன்றதுமான)நிர்ணயிப்பிற்கு வரமுடியாது. அப்படிப் பார்ப்பது என்பது மனுவாதக் கண்ணோட்டமாகும். சாதிக்கொரு குணமுண்டு, இனத்திற்கு ஒரு குணமுண்டு என்று கூறுவதைப் போன்ற பிற்போக்குத் தனமாகும். அது மட்டுமன்றி வலதுசாரிகளை உலகமெங்கும் திரட்டுகிற ஏகாதிபத்தியமும், எல்லா வலதுசாரிகளும் ஏகாதிபத்திய தாசர்களாக இருப்பதும் கண்கூடு. இது எல்லா மதநம்பிக்கையாளர்களிலும் உள்ள வலதுசாரி சக்திகளிடத்திலும் இத்தகைய போக்கைக் காணமுடியும். உழைப்பாளி வர்க்கப் பார்வை கொண்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு இவை யாவும் துலக்கமானவை. இது குறித்து யாரொருவரிடத்தும் பாடம் கேட்கவேண்டிய நிலையில் பிரகாஷ் காரத் இல்லை. இதற்கு மாறாக இந்த எதிர்வினையாளர் மார்க்சிஸ்ட் கட்சியானது இஸ்லாமிய அரசியலை தன்னுடைய சந்தர்ப்பவாதத்திற்காகப் பயன்படுத்துகிறது என்பது போன்ற தொனியை உருவாக்குவது எத்தகைய சக்திக்கு ஆதரவாக?

நாட்டுப்பற்றும் மார்க்சிஸ்டுகள் செயல்பாடும் :

சீனா போன்று இந்தியாவும் அணுசக்தியில் முன்னேறிவிடக் கூடாது என்பதற்காக முட்டுக் கட்டை போடுகிறார்கள் என்று எழுதுகிறார். அவது=றின் உச்சக் கட்டம் இதுதான். சமநிலையில் நின்று, நமது அணு உலைகளை அனைத்தையும் சர்வதேசக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தாமலும் மற்றும் நமது ஆராய்ச்சிகளைத் தடுக்காததுமான ஒப்பந்தத்தையே ஏற்கவேண்டும் என்று குரல்கொடுத்தற்காகவே, இத்தகைய அவதூறுறுகளைச்செய்கிறார்கள்.

அமெரிக்கா தனது போர்க்குற்றங்களில் நம்மைத் தள்ளிவிடும். நமது அணு உலைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதன் பெயரால் உள்நாட்டில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியல் தலையீட்டைச்செய்யும். அமெரிக்கா தனது அணுசப்ளையை நிறுத்தி நம்மை நடுத்தெருவில் நிறுத்தும் என்பன போன்ற நாடு சார்ந்த நலன்களை முன்வைப்பது =சீன வளர்ச்சிக்காக இடதுசாரிகள் இடும் முட்டுக்கட்டையாக= அவதூறுறு செய்கிறார்கள்.இதன் முலம், இடதுசாரிகள் எச்சரிக்கிற மோசமான நிலையை உருவாக்குவதற்காக இவர்கள் அமெரிக்காவோடு இணைந்து நம் நாட்டைப் படுகுழியில் தள்ளப் பார்க்கிறார்கள் என்கிற முடிவிற்குத்தான் வர முடிகிறது.

பிரான்சின் அணுஉலையோ அல்லது ரஷ்யாவின் அணுஉலையோ எதுவானாலும் இதுபோன்ற சமநிலையில் அமர்ந்து செய்துகொள்ளப்படும் எந்த ஒப்பந்தத்தையும் எந்த நாட்டுடனும் ஏற்கின்ற இடதுசாரிகள் மீது குற்றஞ்சுமத்துவது வீண்பழி வேலையாகும். இதற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. (ஆனால் இதை எதிர்த்து கூப்பாடு போட்ட தொண்டு நிறுவனங்கள் இப்போது எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுள்ளன. எல்லாம் ஏகாதிபத்திய சித்து விளையாட்டு போலும்!) அணுமின்சாரத்திற்கான செலவு குறித்தும்,இதற்கான பாதுகாப்பு குறித்தும்,கட்டுப்படியானதும், நம்மால் எளிதில் உருவாக்கக்கூடியதுமான பிறவகை மின்நிலையங்கள் குறித்தும் இந்த எதிர்வினையாளர் வாயைத் திறக்கவேயில்லை. ஆனால் சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியில் இந்தியாவை வளைத்துப் போட விரும்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிக்கு இறையாகும் வகையில் =சீன எதிர்ப்பை= முன்நிறுத்துகிறார்.

உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக இயங்குவதும்,நிலச்சீர்திருத்தத்தை முன் எடுத்துச் செல்வதும், தீண்டாமைக்கு எதிராக மக்கள் அணியை உருவாக்குவதும், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பிற்காக கொடி பிடிப்பதும், பொதுத்துறையைப் பாதுகாக்கப் போராடுவதும், இந்திய நாட்டின் இறையாண்மைக்காக்க குரல் கொடுப்பதும்- மொத்தத்தில் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக மக்களை அணிதிரட்டுவதும்- சீன மக்களின் நலன்களுக்காகத்தான் மார்க்சிஸ்டுகள் செய்கிறார்கள் என்று இந்த எதிர்வினையாளர் தாராளமாக எழுதட்டும். இதன் முலம் கோயபல்சுகளையும், மெக்கார்த்திகளையும் இன்றைய தலைமுறை கூட அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ளலாம்: காந்திஜ=கள் தங்கள் பக்திக்கான சான்றிதழ் கேட்டு கோட்சேக்கள் முன் ஒருபோதும் நிற்க மாட்டார்கள்.
------------------------
(சுந்தா)
55ஏ புதிய எண் 92, லிங்கப்பன் தெரு,
காஞ்சிபுரம்-631 502


- சுந்தா

Pin It