மோடியின் .‘மேக் இன் இந்தியா‘ முழக்கம் - சொல்வதென்ன?

காங்கிரசு ஆட்சியின் தொடர்ச்சியாக பா.ச.கவின் மோடி, ஏகாதிபத்திய நாடுகளின் பெருமுதலாளிகளை இந்தியா நோக்கி அழைப்பதற்கு முன் வைத்த முழக்கமே ‘மேக் இன் இந்தியா‘. 35 வயதுக்குக் குறைந்த இளைஞர்கள் 80 கோடிப்பேர் இந்தியாவில் உள்ளனர். இளம் உழைப்புச் சக்தியைக் குறைந்த கூலிக்கு விற்பதற்கு கூவிக் கூவி அழைக்கிறார் மோடி. 25 முக்கியத்துறைகளில் பன்னாட்டு மூலதனத்தை அழைக்கிறார். 30 நாட்களுக்குள் அனுமதி ஒப்புதல் அளிக்க உத்தரவாதம் தருகிறார். ஒற்றைச் சாளர முறையில் அனுமதி.

தேவையான நிலம், மின்சாரம், வரிச்சலுகை, தொழிற்சங்க உரிமை மறுப்புக்கு அரசு ஆதரவு என வாரி வாரி வழங்கியும் நோக்கியா ஆலை ஏன் மூடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாக்ஸ்ச் கான் ஆலை, அம்பத்தூர் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள பல நிறுவனங்கள் மூடப்பட்டு இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதிக்கு விரட்டப்பட்டுள்ளனர். எந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை இல்லை.

வரிபாக்கி வைத்துவிட்டு ஓடும் நோக்கியா நிர்வாகம் மீது நடவடிக்கையோ, தண்டனையோ இல்லை. இதையெல்லாம் தாண்டி இந்தியக் குடியரசு விழா நாளில் இந்தியப் பிரதமர் மோடி அணிந்த பத்து இலட்ச ரூபாய் மதிப்பைக் கொண்ட ‘மேக் இன் இந்தியா’ முழக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உடை. பன்னாட்டு முதலாளிகள் நமது நாட்டைக் கொள்ளையடிக்க, இளம் உழைப்பைச் சுரண்டத் துணை நிற்பதே இந்திய ஆட்சியாளர்களின் தேசப் பணியாக உள்ளது. மன்மோகன் மட்டுமல்ல மோடியும் விதி விலக்கல்ல.

அணு உலை, மீத்தேன், நியூட்ரினோ எனத் தொடர்ச்சியாக தமிழகம் குறிவைக்கப்பட்டுள்ளதே?

ஆம். கூடங்குளம் அணுஉலை கட்டி முடித்தபின் எதிர்த்தால் எப்படி? என 1988 முதல் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தை, துப்பாக்கிச் சூட்டை மீறிக் கட்டியதை மறைத்துவிட்டுக் கேள்வி எழுப்பினார்கள். ஆட்சியை விட்டுப் போகும் முன் 3 மற்றும் 4 அணுஉலைகளை அதே கூடங்குளத்தில் அமைப்பதற்காக இரசியாவுடன் ஒப்பந்தம் போட்டார் மன்மோகன். அணுஉலைப் பூங்கா அமைத்து, தென் மாவட்ட மக்களை நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளாக்க இன்றைய மோடி அரசும் முயற்சிக்கிறது. காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுப்பது எனும் திட்டத்துடன் நீண்ட கால நோக்கில் நிலக்கரி எடுக்கும் திட்டத்துடன், பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, ஓ.என்.ஜி.சி இந்திய நிறுவனத் துணையுடன் இறங்கியது.

தமிழகத்தின் 45 சதவீத அரிசித் தேவையை நிறைவேற்றும் காவிரிப் படுகை மாவட்டங்களில் நிலத்தடி நீரை வெளியேற்றி, 2000 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விளைநிலத்தைப் பாலைவனமாக்கும் முயற்சிக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கியுள்ளனர். காவிரிப் படுகை தாண்டி, சிவகங்கை, காரைக்குடி எனத் தமிழகம் தழுவியதாக போராட்டம் பரவிவருகிறது. கூடங்குளம் அணுஉலை அச்சுறுத்தலுடன் வாழும் தென் மாவட்ட மக்களுக்கு மேலும் ஓர் பேரிடியாக தேனி மாவட்டம், தேவாரம் பொட்டிப்புரம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 3 கி.மீ குகை உருவாக்கி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படும் என அறிவித்த காங்கிரஸ் ஆட்சியைத் தொடர்ந்து, மோடியின் பா.ச.க அரசு 1450 கோடி ஒதுக்கியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர்ப் பெருக்கத்தைச் சீரழிக்கும் விதமாக மலையைக் குடையும் இத்திட்டத்திற்கு தமிழக அரசு 66 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

தேவாரம், கம்பம், போடி, உத்தமபாளையம், கடலூர், மீனாட்சிபுரம், செல்லாயிபுரம் என அவ்வட்டார மக்கள் எதிர்த்துப் போராடத் தொடங்கியவுடன் கடுமையான அச்சுறுத்தலை காவல்துறை மூலம் தமிழக அரசு உருவாக்கியது. அறிவிப்பின் தொடக்கத்திலேயே உருவான எதிர்ப்பை அடக்க முனைந்த தமிழக அரசு மக்களின் அச்சத்தை, கேள்விகளை மதிக்கத் தயாரில்லை. இந்திய அரசின் இத்திட்டத்திற்கு துணைபோகும் தமிழக அரசு மதுரைக்கு அருகில் வடபழஞ்சி எனும் ஊரில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்திற்கு இடம் ஒதுக்கி நியூட்ரினோ ஆய்வுமையத்திற்கான மற்றொரு ஆராய்ச்சிமையச் செயல்பாட்டை அனுமதித்துள்ளது.

மக்களின் எதிர்ப்பை மதிக்காமல் தனது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் ஆதரவுப் பிரச்சாரத்தில் இறங்கிய சி.பி.ஐ (எம்) கட்சி, மோடி 1450 கோடியை ஒதுக்கி அறிவித்தது முதல் நேரடியாக ஆதரித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சி.பி.ஐ (எம்) கட்சியின் தலைமையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆதரவு விளக்கக் கூட்டங்கள் நடத்தத் தொடங்கியுள்ளது.

எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களைக் கடுமை யாக அணுகத் தொடங்கியுள்ளது. காங்கிரசு, பா.ச.க வின் இந்திய அரசு அமெரிக்காவின் பெர்மிலேப் உடன் இணைந்து அதன் அங்கமாக தேவாரம் நியூட்ரினோ மையத்தை அமைக்கிறது. அமெரிக்காவின் இதுபோன்ற முயற்சிகள் ஆயுதத் தயாரிப்புக்கானதாக இருக்க வாய்ப்புண்டு என்னும் சந்தேகம் உள்ளது. மதுரை, தேனி, குமுளி மக்களின் எதிர்ப்புச் செயல்பாடுகள் விரைவுபடத் தொடங்கியுள்ளது.

கேன்சர் போன்ற உயிர்க் கொல்லி நோய் களைக் கட்டுப்படுத்த முயலாத இந்தியஅரசு அமெரிக்கா உள்ளிட்ட, வளர்ந்த நாடுகளின் இதுபோன்ற திட்டங்களுக்கு தற்போது 1500 கோடி ஒதுக்கியுள்ளது. விரைவில் 6000 கோடி வரை ஒதுக்க உள்ளது. கூடங்குளம், மீத்தேன், நியூட்ரினோ என தமிழகத்திற்கு பயனளிக்காத பெரும் திட்டங்களால் தமிழகம் குறிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு பயனளிக்காத திட்டங்கள் என்பதோடு மட்டு மில்லை. தமிழக மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய, தமிழகத்தைப் பாலைவனமாக்கும் திட்டங்கள் தமிழக அரசின் துணையோடு கொண்டு வரப்படுகின்றன. விரட்டியடிக்கத் தமிழக மக்கள் தயாராக வேண்டும்.

எழுத்தாளர்கள் மீதான தடை, தாக்குதல், நிர்ப்பந்தம் - கருத்துரிமைப் பறிப்பு மட்டுமா? தமிழகம் எங்கே போகிறது?

‘மாதொரு பாகன்’ நாவலில் திருச்செங்கோட்டில் கடந்த நூற்றாண்டில் நிலவிய பழக்கத்தை தனது புனைவில் எழுதிய எழுத்தாளர் பேரா.பெருமாள் முருகன் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தார். நாவல் எரிக்கப்பட்டது. நாவலின் சில பகுதிகள் பிரதியெடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு சாதிவெறி தூண்டப்பட்டது. பெண்கள் கேவலப்படுத்தப்பட்டதாக செய்தி பரப்பப்பட்டு கலவரம் உருவாக்கப்பட்டது.

திருச்செங்கோட்டில் கடையடைப்பு நடத்தப்பட்டது. எழுத்தாளருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, கோட்டாட்சியர் முன்னிலையில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரு வதாக எழுதி வாங்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு எனும் பெயரில் ஒரு எழுத்தாளரின் கருத்துரிமை நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு பறிக்கப்பட்டது.

இச்செயலின் பின்னணியில் கொங்கு மண்டலத்தில் தனியார் பள்ளி முதலாளிகளும், பெருநிறுவன அதிபர்களும், சாதிய, மதவாத சக்திகளும் கரம் கோர்த்துள்ளனர். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் நேரடியாக இறங்கி சாதிவெறியைத் தூண்டி கரம் கோர்த்து இச்செயல் நடத்தப்பட்டது உலகமறிந்த செய்தி. இச்செயலுக்கு எதிராக ‘கருத்துரிமை பாதுகாப்பு’ எனும் தளத்தில் எழுத்தாளர்கள், கலை, இலக்கிய, பண்பாட்டு அமைப்புகள், தலித் இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகள் எதிர்ப்பியக்கங்களை சென்னை, மதுரை, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னெடுத்தனர்.

இதன் எதிர்ப்பினூடே புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம் பகுதியில் தங்கள் ஊரில் நடந்ததாகச் சொல்லப்படும் செய்திகளைப் புனைவுகளாக்கிய ‘கானாயீனாவின் கணினி’ எனும் புதினத்தை எழுதிய ம.மு.கண்ணனின் வீடு எரிக்கப்பட்டு, ஊருக்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் செய்தி மீண்டும் பரந்த தளத்திற்கு வந்தது. அதே புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் தங்கள் ஊரில் நடந்த சாதி ஒடுக்குமுறையை ஒட்டிய தொடர்ந்த உரையாடல்களை புதினமாக எழுதிய சி.பி.ஐ (எம்) உறுப்பினர், த.மு.எ.க.ச வைச் சேர்ந்த எழுத்தாளர் துரை.குணா கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ‘ஊரார் வரைந்த ஓவியம்‘ எனும் புதினம் எழுதிய துரை.குணா தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு வழக்குப் பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாட வேண்டிய அவலம் ஏற்பட்டது. தான் சார்ந்த சி.பி.ஐ (எம்) அமைப்பு மட்டுமல்ல, அப்பகுதியில் இயங்கும் புரட்சிகர அமைப்புகள் கூட கண்டு கொள்ளவில்லை என எழுத்தாளர் துரை.குணாவின் ஆதங்கம் நியாயமானது. சாதி ஒடுக்குமுறை குறித்த பதிவுகள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவது தற்செயலான நிகழ்வல்ல. ஒவ்வொரு தலித்தும் தனது வாழும் பகுதியில் நிலவும் சாதி ஒடுக்குமுறையை, உறவாடலை, உரையாடலைப் பதியத் தொடங்கினால் ஆயிரக் கணக்கான, இலட்சக்கணக்கான துரை.குணாக்களைப் பார்க்க முடியும். ஊர் மக்கள் ஆதரவு, எதிர்ப்பு எனும் தளத்தில் மட்டுமே இடதுசாரிகளின் பார்வை உள்ளது.

எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை எனும் தளத்திலும் பார்க்கப்பட வேண்டும். ‘ஒருத்திக்கு ஒருவன்’ எனும் கருத்தாக்கம் உருவாகி மிகச் சில நூற்றாண்டுகளே நிலவி வந்துள்ளது. பழைய பழக்க வழக்கங்கள் இன்றைய நிலையில் புனைவுகளாகக் கூட வரக்கூடாது என்பது வேடிக்கையானது. ஆயிரக்கணக்கான பெண்களை அந்தப்புரத்தில் வைத்துக் குடித்துக் கும்மாளமடித்து, பொழுதுபோகாதபோது ஏனைய நாடுகளின் மீது போர் நடத்திய ஆக்கிரமிப்பு அரசர்களின் வாரிசுகளாகத் தங்களை, ஆண்ட பரம்பரை எனக் கொட்டமடிக்கும் சாதிய சக்திகள் அதே காலங்களில் பெண்களுக்கு இருந்த பாலியல் உரிமைகள், வாய்ப்புகளைப் பதிய வந்தால் மட்டும் குமுறுவதும், எதிர்ப்பதும் ஏன்?

பழமையை விரும்பும், பழங்கதைகளில் மக்களை அமிழ்த்தி அரசியல் நடத்தும் காவிப்படை சக்திகள் அதே பழங்கதைகளை புனைவு களாக்கினால் சாதிவெறியைத் தூண்டிக் கலவரமாக்கும் சூழல் உருவாக்கப்படுகிறது. சாதிவெறியும், மதவெறியும் கரம் கோர்த்து சனநாயகச் சூழல் மீது, மதச்சார்பின்மை மீது, பெண்களின் வாழ்வுரிமை, தலித் மக்கள் மீது தாக்குதலை நடத்துகிறது. கருத்துரிமை எனும் தளத்தில் களமாடும் அதேவேளை சாதிய ஒடுக்குமுறை, பெண் ஒடுக்குமுறை, சிறுபான்மை ஒடுக்குமுறை எனும் தளத்திலும் கண்டித்து இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.

ஈழத்தமிழர் பிரச்சனையில் முனைப்புக் காட்டி பொடா சட்டத்தில் சிறையிலிருப்பது, வெளிவந்தவுடன் சிறைக்கனுப்பிய அ.தி.மு.அம்மையாருடன் கரம் கோர்ப்பது, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, ஸ்டெர்லைட் என கடற்கரையோர மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் முனைப்பாக முன்நிற்பது, அணுஉலை ஆதரவு பா.ச.வுடன் கூட்டுச் சேர்வது, மீத்தேன், நியூட்ரினோ என அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுப்பது என முன் நிற்கும் திரு.வை.கோ அவர்களை எப்படி மதிப்பிடுவது?

ஈழத்தமிழர்களைக் கொன் றொழித்த இராசபக்சேக்களின் இலங்கை அரசுக்கு துணைநிற்கும் இந்திய அரசைக் கைப்பற்ற தேர்தல் களம் காணும் காங்கிரஸ், பா.ச.க இரு கட்சிகளும் ஒன்றே.

தமிழ்நாட்டுத் தமிழர்களின், ஈழத்தமிழர்களின், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் உரிமைகளை, உணர்வுகளைப் புறந்தள்ளும் அடாவடிச் செயலைக் காங்கிரசும், பா.ச.கவும் முனைப்புடன் செய்துள்ளனர். இது தெரியாதா? திரு.வை.கோ அவர்களுக்கு. 1988 கூடங்குளம் அணுஉலை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எதிர்த்து வருபவர் திரு.வை.கோ அவர்கள். 2011 உக்கிரமடைந்த இடிந்தகரைப் போராட்டத்திற்கு துணை நின்று, பாளையங்கோட்டை, சென்னை என கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்று கைதான திரு.வை.கோ அவர்கள் அணுஉலையை ஆதரித்த, இடிந்தகரைப் போராளிகளைத் தாக்கிய பா.ச.க வுடன் முதல் நபராகக் கூட்டு சேர்ந்தது எதற்காக? அணுஉலையை மூடவா?

‘‘தந்தை பெரியாரின் பார்ப்பனீய, மதவாத எதிர்ப்புக் கொள்கைகளுக்கு வாரிசு, பதவி முக்கியமில்லை கொள்கையே முக்கியம்’’ எனத் தன்னை அறிவித்துக் கொள்ளும் திரு.வை.கோ அவர்கள், பெரியாரின் கொள்கைகளுக்கு நேரெதிரான, தமிழ், தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு எதிரான பா.ச.க கும்பலுடன் இரண்டாவது முறையாகக் கூட்டணி சேர்ந்தது எப்படி? இது என்ன பகுத்தறிவுக் கொள்கையா? மோடி ஈழத்தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வான் என்பது திரு.வை.கோ அவர்களுக்குத் தெரியாதா? அவ்வளவு அப்பாவியா.

தற்போது மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களை எதிர்ப்பதற்கு வாருங்கள் என அழைக்கும் திரு.வை.கோ அவர்கள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலையெடுப்பார்? அவருக்கே தெரியுமா? மக்கள் போராட்டங்களில் முன் நிற்கும் திரு.வை.கோ அவர்கள் தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போம் எனச் சொல்ல முடியுமா? கூட்டுப் போராட்டங்களில் ‘கட்சிக் கொடியைக் கூட பிடிக்க வேண்டாம்’ எனச் சனநாயக வாதியாகத் திகழும் திரு.வை.கோ அவர்கள் தனது கட்சியில் சிலர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களாவதற்காக தடம் புரளுவது சரியா?

ஈழத்தமிழருக்கு ஆதரவாக, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய காரணத்தால் பொடாச் சிறைக்கு அனுப்பிய அ.தி.மு.க அரசின் அம்மையாருடன் உடனடியாகக் கூட்டணி சேர்ந்தது போல் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம், நடைபயணம் என்றெல்லாம் நடத்திவிட்டு அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுடன் கூட்டுச் சேர மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? நண்பர் எனச் சொல்லி முடிப்பதற்குள் எதிரிகளுடன கரம் கோர்க்கும் செயலைச் செய்யும் திரு.வை.கோ அவர்களை என்னவென்று சொல்வது?

இனியாவது, தமிழக நலன் என்ற அடிப்படையில் காங்கிரசு -பா.ச.க எதிர்ப்பு, தி.மு.க -அ.தி.மு.க எதிர்ப்பில் உறுதியாக நின்றால் சரி. பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It