கல்வி மக்களால் தீர்மானிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டதாக வரலாறில்லை. நாட்டின் சமுக, பொருளாதார கட்டமைப்புகளுக்கு ஏற்ப உற்பத்திமுறை சார்ந்துதான் கல்விக் கொள்கை அமலாக்கத்தை ஆளுபவர்கள் காலங்காலமாக செய்து வருகின்றார்கள். இந்தியாவில் நிலவுடைமை சமுதாயம், காலனி ஆதிக்கம், 1947க்குப் பின், LPG (தாராளமயம், தனியார்மயம், உலகமயம்) காலம் உலக வர்த்தகக் கழக சேவைத்துறையில் வணிகம் தொடர்பான ஒப்பந்த கால நடைமுறைக்குப் வந்த காலம் ((GATS) என்று பல்வேறு காலகட்டங்களில் ஆளுபவரின் அரசியல், பொருளாதார, உற்பத்திமுறை கொள்கை சார்ந்து கல்விமுறை தீர்மானிக்கப்பட்டுள்ளது, கல்விக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இந்தியாவைப் பொருத்தவரை மேலும் கூடுதலாக நில உடைமை உற்பத்திமுறை சார்ந்த சாதியக் கட்டுமானம் சிறிதளவும் மாறாமல் இருக்கும் வகையிலும், பார்ப்பனிய ஆதிக்கம் சிதையாமல் இருக்கும் வகையிலும் கல்விக்கான திட்டங்களும், அமலாக்கங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. காங்கிரசு ஆட்சிக்கட்டிலில் இருந்தபொழுது பார்ப்பனிய ஆதிக்கமும், இந்த்துத்துவாவும் வெளிப்படையாக கல்விக் கொள்கை அமலாக்கத்தில் தலைதூக்கவில்லை இன்றைய மோடி அரசாங்கம் அடுத்த கல்வி ஆண்டில் அதனுடைய மதவாத, பொருளாதாரவாத அடிப்படையில் கல்விக் கொள்கையைத் தீர்மானிக்கவிருக்கும் காலகட்டமிது.

ஒரு விசயத்தில் காங்கிரசுக்கும், பா.ச.கா.வுக்கும் எள்ளளவும் வேறுபாடில்லை. வெளிநாட்டு மூலதனத்தை பல துறைகளில் வரவேற்பது, GATS ஒப்பந்தத்திற்குப் பின்னால் கல்வி உள்ளிட்ட சேவைத் துறைகளை வணிகமாக்கி கல்வி வணிகக் கொள்கையை வளர்ப்பது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் எத்தனை ஒற்றுமை! பல்வேறு அடிப்படை விசயங்களைக் கல்விசார்ந்து விவாதிக்க வேண்டிய காலகட்டத்தில் கல்வி வியாபாரச் சந்தையில் எந்த அளவிற்கு வணிகத்திற்கான வாய்ப்புள்ளது என்பது குறித்து மட்டும் சில விவரங்களைக் காண்போம்.

LPG காலகட்டம் கல்வி வணிகத் தொடக்கம்.

WTO வரவுக்குப் பின் கல்வி வணிகம் - வணிகக் கொள்ளையாகிவிட்டது. 1977 ல் புதுமுகவகுப்பு எடுக்கப்பட்டு, +2 பள்ளிகளில் வந்தநேரம் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சிக்கான வித்து தமிழ்நாட்டில் ஊன்றப்பட்டது. கல்வி அமைச்சராக அப்போது அ.தி.மு.க அமைச்சரவையில் இருந்தவர் செ.அரங்கநாயகம், இவர் அமைச்சராக நீடித்த காலகட்டத்தில் தான் 1986 புதிய கல்விக் கொள்கை, LPG ன் தாக்கல் இவை இரண்டின் பலனாக பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் தோன்றின.

தனியார்மயமான, தாராளமயமான காலந் தொடங்கி GATS வரவுக்குப் பின்னால் கல்வி வணிகச்சந்தையில் புரளுகின்ற கறுப்புப் பணச்சந்தை விவரம் கல்வி வணிகத்தில் உள்ள வாய்ப்பை நமக்குப் புலப்படுத்தும்.

மழலையர் பள்ளியிலிருந்து தொடங்கலாம்

கல்வி என்பது அரசின் கருத்தாக்கத்தின் அடக்குமுறைக் கருவி என்பதோடு மட்டுமன்று, வியாபாரச் சந்தையின் முக்கிய கண்ணியாக எப்படி விளங்குகிறது எனக் காணலாம். தனியார் மெட்ரிகுலேசன் / CBSE பள்ளி மற்றும் சுயநிதிக் கல்வி விலையைக் காண்போம்

கட்டண விவரம் (ரூபாயில்)    

*(இந்த நன்கொடைக்கு எல்லாம் பற்றுச் சீட்டு கிடையாது. இவைதவிர ஆண்டுதோறும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணம் வேறு)

இன்றைய கல்வி வியாபாரச் சந்தையில் இந்தியா முழுமையும் புரளும் கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணச்சந்தை விபரம் இதோ:

வகுப்பு ரூபா
KG 15,000 கோடிகள்
IIவது 10,000 கோடிகள்
MBBS 9,000 கோடிகள்
B.E / B.Tech 7,000 கோடிகள்
BMS / BBA 600 கோடிகள்
PG - Medical 2,800 கோடிகள்
PG - Management 2000 கோடிகள்
மொத்தம் 48,400 கோடிகள்

(நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா)

இந்த கறுப்புப் பணக்கொள்ளை இந்தியாவின் நிஞிறி இல் 0.8 சதமாகும்.

2013-14ஆம் ஆண்டில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கல்விக்காக ஒதுக்கிய தொகையில் 73.5 சதவிதத் தொகைக்கு சமமாக இந்த 48,400 கோடி ரூபாய் கறுப்புப் பணம் புரளும் இந்திய கல்வி வணிகக் கொள்ளையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அ.தி.மு.க முன்னாள் இந்நாள் பிரபலங்களும், தி.மு.க முன்னாள் அமைச்சர்களும், காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களும், தே.மு.தி.க, பா.ச.க ஆதரவு IJK, சமுக நீதிக் கட்சித் தலைவர்களும் பங்காற்றுகின்றனர். சுயநிதிப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் சமூகப் பொறுப்பற்ற மாணவர்களை உற்பத்தி செய்கின்றன.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 3 கோடி ரூபா பணம் கொடுத்துப் படித்து வரும் மாணவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனை அதிபராகி மருத்துவ விற்பனை மூலம் நமது மக்களுக்குச் சேவையா செய்வார்கள்?

UPA அரசாங்கம் நியமித்த ‘பொது பொருளாதாரம் மற்றும் கொள்கைத்திட்ட தேசிய நிறுவனம்’ ( National Institute of Public Finance and Policy) இந்தியாவில் புரளும் கறுப்புப் பணச் சந்தையைக் கணிக்கவும், வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணக்குவியலை வெளிக்கொணரவும் நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை திசம்பர் 2013 இல் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் தரப்பட்டது. நாடாளுமன்ற விவாதத்திற்கு அந்த அறிக்கையை ப.சிதம்பரம் வைக்கவில்லை. மோடி அரசின் அருண் ஜேட்லியும் அவ்வழியையே பின்பற்றுகின்றார்.

அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படும் செய்திப்படி கல்வி வணிகச்சந்தை, தொழில் துறை மட்டுமின்றி ரியல் எஸ்டேட் சந்தை இவை இரண்டுமே கறுப்புப் பணச் சந்தையின் ஊற்றுக் கண்ணாக இருப்பதாகத் தெரிகிறது நன்றி : The Hindu.

இந்த கறுப்புப் பணச் சந்தையின்களமாக கல்வித்துறையை மாற்றிய பெருமை காங்கிரசு மற்றும் பா.ச.கவுக்கும் இங்குள்ள திராவிடக் கட்சிகளுக்கும் சாரும்.

கல்வியில் மதவாதம் வேரூன்றுவதை எதிர்க்கவும், கல்வி வியாபாரக் கொள்கையைத் தடுக்கவும் பல்வேறு இடதுசாரி, முற்போக்கு மாணவ இயக்கங்களின் பரந்துபட்ட கூட்டமைப்பை கட்டவேண்டியக் கட்டத்தில் நிற்கிறோம்.

Pin It