நாங்கள் கேட்பது சமத்துவம் அல்ல - எங்களுக்கு தேவையானது நேர்மையான பங்கு .. சமூகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் நேர்மையான பங்கு கிடைக்க வேண்டுமெனில், மக்களைச் சமமாக நடத்த முடியாது. ஏனெனில், பலம் பொருந்தியவரையும், பலமற்றவரையும், பணம் படைத்தவரையும் ஏழையையும், அறிவாளியையும், அறியாமையில் வைக்கப்பட்டிருப்பவரையும் ஒரு போதும் சமமாக நடத்த இயலாது. - அம்பேத்கர்
இட ஒதுக்கீடு பிச்சையோ சலுகையோ அல்ல.. நேர்மையான உரிய பங்கு .. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை அதிகாரப்படுத்துதலுக்கான முதல் கட்டமாகும். இந்த மண்ணுக்கு உரியவர்கள், இந்நாடு வளம் பெற உழைப்பவர்கள் அவர்களது உழைப்பால் விளைந்த வளத்தில் தங்களுக்குரிய பங்கைக் கேட்பது அவர்களின் உரிமை. பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்தவர்கள் இன்று இம்மக்களுக்கான அடிப்படை உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
இந்த நாட்டின் எந்த வளமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கும் மட்டும் உரியது அல்ல. இந்த நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதில் பங்கு உண்டு. வளம் எனும் போது, இயற்கை வளங்கள் மட்டுமல்ல.. கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்தையுமே குறிக்கும். இன்று நாட்டில் இருக்கும் அனைத்து கல்வி நிலையங்களும் நாட்டின் பொதுப் பணத்தில் நிருவகிக்கப்படுபவையே. தனியார் நிறுவனங்களிலும் முதலீடு மட்டுமே தனியாருக்கு உரியது. ஆனால் அவையும் அரசில் அத்தனை சலுகைகளையும் பெற்றே நடத்தப்படுகின்றன. அந்த சலுகைகள் பொதுப்பணத்திலிருந்தே அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இவ்வாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையுள்ள ஒன்றில் 3 சதவிகிதம் மட்டுமே இருக்கும் பார்ப்பனர்கள் தனித்துவ உரிமைக் கொண்டாடி பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்திருப்பது எவ்வகையில் நியாயமானதாக இருக்க முடியும்? யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை முடிவு செய்ய இவர்கள் யார்?
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வைக்கப்படும் முக்கிய வாதம் தகுதியும், திறமையும், தரமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் என்பது. எந்த ஒரு பிரிவில் படிப்பதற்கும் குறைந்த பட்ச தகுதி ஒன்று வரையறுக்கப்படுகிறது. அந்த குறைந்தபட்ச தகுதியைப் பெறாதவர்கள் எந்த வகுப்பினைச் சேர்ந்தவராயினும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆக இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தவர்களும் குறைந்த பட்ச தகுதியை நிறைவு செய்தவர்களே.தொழில் நுட்பத் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவினருக்குமான குறைந்தபட்சத் தகுதி ஒப்பீட்டு வரிசைப்படுத்துதல் முறையில் வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஒருவர் எவ்வளவு சிறப்பாகத் தேர்வு பெற்றார் என்பதை விடவும் பிறரை விட எவ்வளவு அதிகம் மதிப்பெண் பெற்றார் என்பதே அடிப்படையாகும்.
இந்த கல்வி முறையை நன்கு அறிந்து, பல தலைமுறைகளாக முறைப்படியான அல்லது முறைசாராத கல்வியறிவுப் பெற்று, சிறந்த வழிகாட்டுதல்களோடு தேர்வை சந்திப்பவர்களுக்கும், எதிர்காலத்தைக் குறித்து வழிகாட்ட எவ்விதத் துணையுமின்றி முதல் தலைமுறையினராக கல்வியறிவு பெறும், பின்னணியில், தானே தனியாகத் தேர்வை சந்திக்கும் மாணவர்களையும் எவ்வாறு ஒரே விதமாக மதிப்பிட முடியும்? ஒப்பிட முடியும்? என்ற போதும், இவ்வித சமூக பொருளாதார சிக்கல்களுக்கு நடுவேயும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உழைப்பும் திறமையும் ஆண்டு தோறும் உறுதி செய்யப்பட்டே வந்திருக்கின்றன.
ஒரு காலத்தில் முற்பட்ட வகுப்பினர் மட்டுமே பத்தாவது மற்றும் பனிரெண்டாவது வகுப்புத் தேர்வுகளில் மாநில முதலிடங்களை பெற்ற நிலை மாறி இன்று பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களே முதலிடங்களை பெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆடு மேய்க்கும் சிறுவன் முதலிடம்! ரிக்ஷா தொழிலாளியின் மகள் முதலிடம்! விவசாயி மகள் முதலிடம்! என ஆண்டு தோறும் வரும் செய்திகளே இதற்குச் சான்று. 20 ஆண்டுகளுக்கு முன்பு 70 அல்லது 80 சதவிகிதமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான குறைந்த பட்ச மதிப்பெண்.. இன்று 94 அல்லது 95 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரிக்கிறது. இதனால் திறந்த போட்டியில் இடம் பெற முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு மேல் மதிப்பெண் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக கல்வித் தளத்தில் இயங்கி வரும் பார்ப்பனர்கள் மற்றும் சாதி இந்துக்களின் சமூகக்கல்வி பின்னணியில் அவர்களது வளர்ச்சியின் வேகம் ஒரு அடி மட்டுமே. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மட்டுமே கல்வியறிவு பெறும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் சமூக கல்வி பின்னணியில் அவர்கள் வளர்ச்சியின் வேகம் பல அடிகள். இதில் யாருக்குத் திறமை அதிகம்.? வாய்ப்புகள் மறுக்கப்படுவதால் தகுதியும் திறமையும் இல்லை என்றாகி விடுமா? இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களில் பலர் இன்று பல உயர்ந்த பதவிகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் சக்கைப் போடு போடுகின்றனரே? எவ்வகையில் அங்கு தரம் குறைந்தது?
இந்தியாவில் 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற அவல நிலையே இன்றும் நிலவுகிறது. ஆனால் அவ்வாறு மக்கள் பணத்தில் படித்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் தொழிலாக மட்டுமே அதை செய்கின்றனர். பலர் வெளிநாடுகளை, வளர்ச்சி அடைந்த நாடுகளை நாடி ஓடி விடுகின்றனர். இன்றுவரை கிராமப்புற மருத்துவ மனைகளில் பணிபுரிபவர்கள் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மருத்துவர்களே. எங்காவது ஒரு கிராமத்திலாவது ஒரு பார்ப்பன மருத்துவர் பணிபுரிவதாக நாம் கேள்விப்பட்டதுண்டா? சென்ற ஆண்டு அகில இந்திய மருத்துவ மேல்படிப்பிற்கான தேர்வில் முறைகேடு நடந்து மருத்துவர்கள் கைதான போது எங்கே போயிற்று இவர்கள் தகுதியும் திறமையும்?
இத்தனை ஆண்டு காலமாக மருத்துவத் தொழிலை செய்து வந்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களே. அன்று அவர்களை தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்த பார்ப்பனர்கள் தான் இன்று அத்தொழிலில் கிடைக்கும் பணம், பெயர், புகழுக்காக, அதைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, இத்தனை காலம் அதை செய்தவர்களை தகுதி இல்லையென கூறி ஏமாற்றுகின்றனர். மற்றொரு கேள்வி எத்தனை காலத்திற்கு இட ஒதுக்கீடு முறை நீடிக்க வேண்டும் என்பது.
இன்னாருக்கு இன்ன தொழில், இந்த வாழ்விடம் என்று உணவு, உடை, வாழ்விடம் என அனைத்திலும் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக நம் மீது திணிக்கப்பட்ட நியாயமற்ற இட ஒதுக்கீட்டிற்கான மாற்றே இந்த 60 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டப்பூர்வமான இட ஒதுக்கீடு. 2000 ஆண்டு கால அநீதியை 60 ஆண்டுகளில் ஒழித்துவிட முடியாது. சாதிய பாகுபாடுகள் நிலவும் வரையில் இட ஒதுக்கீடும் இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. சாதியை நிலைப்பெற செய்வதே இட ஒதுக்கீடு என்ற அபாண்டமான குற்றச்சாட்டு திட்டமிட்டு கிளப்பப்படுகிறது.
சாதி நம் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனிடமும் ஆழமாக வேரூன்றி விட்ட ஒன்றாக இருப்பது உண்மை. அதை எளிதில் ஒழித்துவிட முடியாது என்பதும் உண்மை. ஆனால் சாதியை மறந்தோ, குறைந்தபட்சம் சகித்துக்கொண்டோ பல சாதியினரும் கலந்து வாழும் சூழலை கல்வி அளிக்கிறது. அப்படி கலந்து வாழும் மக்களிடையே விருப்பத் திருமணங்கள், சாதியை மறுத்த திருமணங்களாக இல்லாவிட்டாலும் சாதியை ஒதுக்கிய திருமணங்களாக பல நிகழ்கின்றன. பிறப்பால் நிர்ணயிக்கப்படும் சாதி நிலைபெறுவது அக மணத்தால் மட்டுமே என்கிறார் அம்பேத்கர். அந்த அடிப்படையையே கல்வியால் ஏற்பட்ட இந்த வாழ்வியல் சூழல் மாற்றுகிறது. அந்தக் கல்வியை அளித்தது இட ஒதுக்கீடே. இரண்டாவதாக, ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரப்படுத்துதலே சாதி ஒழிப்பிற்கான வழி என்றால், இட ஒதுக்கீடு அத்தகைய அதிகாரப்படுத்துதலுக்கான முதல் படி.
நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையிலான அரசியல் சாசன மறு ஆய்வுக் குழு பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினரைத் திருமணம் செய்து கொண்ட பிற சாதியினருக்கு அரை சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது அவ்வாறு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரை சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த அரை சதவிகிதம் படிப்படியாக உயர்த்தப்பட வேண்டும். இது சாதி ஒழிப்பிற்கு பெருமளவு உதவும். இப்படி பல வகைகளில் இட ஒதுக்கீடு சாதி ஒழிப்பிற்கான ஒரு கருவியாகவே இருக்கிறது. அடுத்து வைக்கப்படும் வாதம் இட ஒதுக்கீட்டின் பலனை அப்பிரிவினரில் முன்னேறியவர்களே அனுபவிக்கிறார்கள். உண்மையில் தேவைப் படுபவர்களுக்கு அது போய் சேருவதில்லை. இதைவிட அயோக்கியத்தனமான வாதம் வேறு இருக்க முடியாது. இட ஒதுக்கீடே கூடாது என்பவர்கள் அது உரியவர்களுக்கு சேரவில்லையே என்று கவலைப்படுகிறார்களாம். உண்மை என்னவெனில், இவர்கள் குறிப்பிடும் கிரீமீ லேயர் என அழைக்கப்படும், பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை மாணவர்களில் பெரும்பாலோர் பள்ளி மற்றும் இளநிலை கல்வியில் தங்கள் திறமையால் திறந்த போட்டியிலேயே பெருமளவு இடம் பெற்றுவிடுகின்றனர். முதல் தலைமுறையினராக வரும் மாணவர்களே பெரும்பாலும் இட ஒதுக்கீட்டில் இடம் பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திறந்த போட்டியில் இடம் பெற்ற ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கூடி வருவதே இதற்குச் சான்று.
இன்று உயர் கல்வியிலும் திறந்த போட்டியில் அவர்கள் நுழையத் துவங்கி விட்டனர். இதனால் இடம் கிடைக்காத பெரும்பாலான உயர்சாதியினர் பணத்தை மட்டுமே தகுதியாகக் கொண்ட தனியார் கல்வி நிலையங்களை நாடிச் செல்கின்றனர். இந்தச் சூழலால் முற்பட்ட வகுப்பினருக்கு போட்டி அதிகமாகிறது. அந்த ஆத்திரத்திலேயே அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிளவை உருவாக்க முனைவதோடு ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டையே ஒழிக்கப்பார்க்கிறார்கள்.
ஒரு சமூகம் கல்வியறிவு பெற்ற ஒரு சமூகமாக வளர்ச்சி பெறுவதற்கு அடிப்படையாக தேவைப்படுவது, கல்வியின் தேவை குறித்த விழிப்புணர்வு, பொருளாதாரச் சூழல், எட்டும் தொலைவில் தரமான கல்வி நிலையங்கள். பொருளாதாரச் சூழல் என்பது கல்வி கற்க செலுத்த வேண்டிய தொகை மட்டுமல்ல. தங்கள் குழந்தையை வேலைக்கு அனுப்பாமல் கல்வி கற்க அனுப்புவதால் ஏற்படும் பொருளாதார இழப்பையும் உள்ளடக்கியது. எழுத்தறிவு அல்ல எண்கள் கூட அறியாத மக்கள் இன்னமும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அத்தகைய மக்கள் கல்வியின் தேவை குறித்த குறைந்தபட்ச விழிப்புணர்வைப் பெறும்போது தங்கள் பொருளாதாரச் சூழலுக்கு உகந்த, தங்களுக்கு எட்டக்கூடிய அளவிலான கல்வி தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்க முற்படுகிறார்கள்.
முதன் முறையாக கல்வி கற்க முற்படும் ஒருவருக்கு இத்தகு சூழல் அழுத்தங்களால் பள்ளி படிப்பை முடிப்பதே பெரும் சவாலாகிறது. அப்படி கற்ற ஒருவர் தனது குழந்தைகளுக்கு தன்னை விட அதிகம் கல்வி பெறும் சூழலை ஏற்படுத்த முனைகிறார். இப்படி படிப்படியாக அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று உயர் கல்வி, அதிலும் உயர் தொழில் நுட்ப கல்வி பெறும் சூழலை அடைவதற்கு பல தலைமுறைகள் ஆகிறது. தாங்கள் பெற்ற கல்வியால் தனது முந்தின தலைமுறையை விட உயர் நிலையை அடைந்த ஒருவர் அதற்கு அடுத்த நிலைக்கு தனது குழந்தைகளை இட்டுச் செல்ல முயலுவது எவ்வகையில் குற்றமாகும்? அவ்வாறு உயர்நிலையை அடைந்த வெகு சிலரும் உயர் தொழில்நுட்ப கல்விகளில் தாங்கள் விருப்பப்பட்டதைக் கற்க முடியாமல் இருக்கும் நிலைதானே இன்றும் நிலவுகிறது? அதற்கு காரணம் உயர் தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் இன்று வரை முழுமையான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.
நடைமுறையில் இருக்கும் ஒடுக்கப் பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும் சரிவர நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. காரணம் இக்கல்வி நிலையங்களில் வேலை வாய்ப்பிலும் முழுமையான இட ஒதுக்கீடு கிடையாது. பெரும்பாலான பதவிகளில் ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களை கல்வியிலும் சரி வேலைவாய்ப்பிலும் நுழைய விடுவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி அவர்கள் தகுதி கேள்விக்குள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்படுகின்றனர். இந்நிலையை மாற்றவே மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது மண்டல் குழு அமைக்கப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது இக்குழு தனது அறிக்கையை அளித்தது.
இட ஒதுக்கீட்டு முறைக்கே ஒரு பெரும் புத்தெழுச்சியை அளிக்கும் விதத்தில் இக்குழுவின் அறிக்கை அமைந்தது. குறிப்பாக அரசியல் சட்டப்படி உறுதி செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டோடு அனைத்து துறைகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இக்குழு பரிந்துரைத்தது. இந்திரா காந்தியும் சரி, அவருக்கு பின் வந்த இராசீவ் காந்தியும் சரி இக்குழுவின் அறிக்கையை கிடப்பில் போட்டனர். வி. பி. சிங் பிரதமராக வந்த போது, மண்டல் குழுவின் பரிந்துரைகளின் படி மய்ய அரசு கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் மட்டும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்தார்.
இன்றைய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கல்வியின்றி வேலை வாய்ப்பு ஏது என்ற அடிப்படை சிக்கலை கருத்தில் கொண்டு கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதையொட்டி ஒரு போலியான பரபரப்பு கிளப்பப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ஏதோ இந்தியா முழுவதிலும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு வலுவாக இருப்பது போன்ற பிம்பம் பார்ப்பன உயர் சாதி ஊடகங்களால் கட்டமைக்கப்படுகிறது. அந்த பிம்பத்திற்கு பலியாகி மய்ய அரசு பிரணாப் முகர்ஜி தலைமையில் தற்போதைய நிலையை பரிசீலிக்க மய்ய அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது.
அரசியல் சட்டப்படியான ஒரு உரிமையை நடைமுறைப்படுத்த எதற்கு விவாதம், உயர்மட்ட ஆலோசனைக் குழு? இதுதான் எங்களுக்கு அய்யத்தை ஏற்படுத்துகிறது என்ற மருத்துவர் இரவீந்திரநாத்தின் கேள்வி நியாயமானதே. அவரது அய்யத்தை உறுதிப்படுத்துவது போல அமைச்சர்கள் குழு எவருக்கும் பாதிப்பின்றி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இடங்களை அதிகரிக்க வேண்டும் என அறிக்கை அளித்துள்ளது. “இது சுத்த மோசடி... இட ஒதுக்கீடு சதவிகித அடிப்படையில் தானே ஒழிய எண்ணிக்கையில் அல்ல எனும் போது அதிகரிக்கப்பட்ட இடங்களிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். அதோடு இடங்கள் அதிகரிப்பது என்பது அந்தந்த நிறுவனத்தின் தரத்தையும், வசதிகளையும் பொருத்த ஒன்று. அதை இப்படி தன்னிச்சையாக உயர்த்த முடியாது என்கிறார் சிந்தனையாளர் ஆனந்த் தெல்துண்டே. இன்று உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அனைவரும் முன் வைக்கும் வாதங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து மட்டும் அல்ல. இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையையே எதிர்த்துதான் என்பதே உண்மை.
தரம், திறமை, பாதியில் வெளியேறுதல் என இவர்கள் முன் வைக்கும் அனைத்துமே ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகளை முடக்குவதற்காகவே. இந்நிலை நீடிக்குமானால், ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டிற்கே ஆபத்து வரும் நிலை ஏற்படும். “சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரும், பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியினரும், அவர்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே கல்வியிலும் பிற சமூக கலப்பு நடவடிக்கைகளிலும் ஒதுக்கப்பட்டனர். இட ஒதுக்கீடு அவர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கான வழி. அவர்களும் சமூகத்தில் சம நிலையில் வாழ உதவும் ஒரு கருவி. இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி, அதனை ஒழிக்க முற்படுபவர்களை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் இணைந்து போராடுவதே நம் உரிமையை காப்பதற்கான ஒரே வழி’ என்று கூறுகிறார் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் அமைப்பாளர் தொல். திருமாவளவன்.
இட ஒதுக்கீடு குறித்த அதிகாரம் மய்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வரை இந்த குழப்பங்கள் நீடிக்கவே செய்யும் என்கிறார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன். “ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிகளின் எண்ணிக்கையும், வாழ் நிலையும் வெவ்வேறு விதமாக உள்ளது. சான்றாக தமிழ்நாட்டியல் பழங்குடியினர் 1 சதவிகிதம் மட்டுமே இருக்கின்றனர். அதனால் இங்கு அவர்களுக்கு 1 சதவிகித இட ஒதுக்கீடு நியாயமானதே. ஆனால் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்திற்கு மேல் பழங்குடியினர் வாழும் வட கிழக்கு மாநிலங்களில் அவர்களுக்கு 1 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது எப்படி சரி? அதனால் ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்.
மய்ய அரசிலும், அதன் சார்பு நிறுவனங்களிலும், ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப அனைத்து மாநிலங்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தங்கள் மாநிலத்தின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு ஏற்பப் பகிர்ந்து வேண்டும். இதுதான் நாடு தழுவிய அளவில் உண்மையான சமூக நீதிக்கு வழிவகுக்கும் என்கிறார் நெடுமாறன்.ஆனால் நடைமுறையோ இதற்கு நேர்மாறாக உள்ளது. மாநில அரசு தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற பெயரில் 50 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. பின் தங்கிய மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெறவே இத்திட்ட எனக் கூறப்பட்டாலும் அந்த 50 சதவிகிதத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. அதனால் பிற மாநிலங்களைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பினரே இதனால் பயன் பெறுகின்றனர். தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு இருப்பதாக நாம் பெருமைப் பட்டு கொள்கிறோம். ஆனால் மய்ய அரசு ஒதுக்கீடு போக எஞ்சிய 50 சதவிகிதத்தில் மட்டுமே மாநில அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படுகிறது. ஆக மொத்த இடங்களில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவது வெறும் 34.5 சதவிகிதத்தில் மட்டுமே.
இப்படி எல்லா வகையிலும் மய்ய அரசுகளின் இட ஒதுக்கீட்டு கொள்கை ஏமாற்றுவதாகவே இருந்திருக்கிறது. 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்கள், எந்த வகையிலும் இம்மண்ணின் வளத்திற்கு சொந்தமில்லாத பார்ப்பனர்கள், தங்கள் சுயநலத்திற்காக இப்படி ஒரு போராட்டத்தை நடத்த முடியும் என்றால், இம்மண்ணின் வளத்திற்கு முழு முதல் உரிமையான ஒடுக்கப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், 70 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் ஒடுக்கப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும், தங்கள் உரிமையை நிலைநாட்ட, தங்கள் சுயநலத்திற்காக அல்ல, மாறாக ஒட்டுமொத்த சமூக நீதிக்காக இதைவிட பல மடங்கு பெரிய போராட்டத்தை நடத்த இயலும். அதற்கு தேவையானது ஒற்றுமை மட்டுமே. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கும் இட ஒதுக்கீட்டிற்கு முழுமையாக ஆதரவாக இருக்கும் சூழலைப் பயன்படுத்தி ஒடுக்கப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நேர்மை யான பங்கை பெற அனைத்து முற் போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இடஒதுக்கீடு பிச்சையோ சலுகையோ அல்ல
- விவரங்கள்
- பூங்குழலி
- பிரிவு: கட்டுரைகள்