‘ஏகலைவன்’ என்ற ஆதிவாசிக்கு ‘துரோணாச்சாரி’ என்ற பார்ப்பன குரு வில்வித்தை கற்றுத் தர மறுத்தான். ஏகலைவனோ, துரோணாச்சாரி உருவத்தை செய்து, அதையே குருவாகக் கருதி வித்தையைக் கற்றுத் தேறினான். உண்மை அறிந்த துரோணாச்சாரி, ‘கீழ் ஜாதிப்பயலே; வில்வித்தை கற்கும் உரிமை உன் குலத்துக்குக் கிடையாதுடா! குருதட்சணையாக உன் கட்டை விரலை வெட்டித் தா’ என்று கேட்டான். ஏன் தெரியுமா? கட்டை விரலை வெட்டி விட்டால் வில்லிலிருந்து அம்புகளை விடவே முடியாது அல்லவா? இது வரலாறு அல்ல; ஆனால் புராணக் கதைகளின் வழியாக பார்ப்பனர்கள் சமூகத்துக்கு உணர்த்திய பாடம்!

‘ஏகலைவன்’கள் கதை முடிந்துவிட்டதா? இல்லை. இல்லவே இல்லை. பார்ப்பன துரோணாச்சாரிகளின் வாரிசுகள் இன்று அய்.அய்.டி., அய்.எம்.எ°., அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம், அய்தராபாத் பல்கலைக் கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை இன்றும் ஆட்டிப் படைக்கிறார்கள்.

இந்த கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதே பெரும்பாடு. எத்தனையோ சமூகத் தடைகளைத் தாண்டி, படிக்க வரும் தலித் மற்றும் விளிம்பு நிலை சமூக மாணவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்; அலைக்கழிக்கப் படுகிறார்கள்; மரணத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள்.

• 2007-லிருந்து 2013 வரை அய்தராபாத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர்கள் 11 பேர்.

• டெல்லி மற்றும் வட மாநிலங்களில் 2007லிருந்து 2011 வரை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர்கள் 14 பேர்.

• இப்போது அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் தனது கல்வி திறமையால் போட்டியிட்டு நுழைந்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர், தனது உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார்! அவர் செய்த ‘குற்றம்’.........?

அம்பேத்கர் மாணவர் கழகத்தில் இணைந்து, மாணவர்களிடம் மதவெறிக்கு எதிராக மனித உரிமை மனித சமத்துவத்துக்கு ஆதரவான கருத்துகளைப் பரப்பினார். ஆனால், மதவெறியை வளாகத் துக்குள் பரப்பி வந்த ஆர்.எஸ். எஸ்.சைச் சார்ந்த பார்ப்பன உயர் ஜாதி மாணவர்கள் (வித்யார்த்தி பரிஷத்) இதை அனுமதிக்க மறுத்தனர்.

மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் இரண்டு பேர் தலையிட்டு, துணைவேந்தர் வழியாக 5 தலித் மாணவர்களின் படிப்பு உதவித் தொகையை நிறுத்தினர். 6 மாத காலமாக இந்த மாணவர்கள் விடுதியை விட்டு வீதிக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் நன்றாக படிக்கவில்லை என்பதற்காக இந்த தண்டனை இல்லை. மாறாக சமூகத்தைப் பற்றி சிந்தித்தார்கள் என்பதற்காகவே தண்டனை!

“நான் பிறந்த ஜாதி தான் எனக்கு விபத்து” என்று மரண சாசனமாக ஒரு கடிதத்தை எழுதி வைத்து விடைபெற்றுக் கொண்டார் ரோகித்.

உயர்கல்வியில் மட்டுமா, இந்த நிலை? சமூகத்தில், பொது விடங்களில், தொடக்கப் பள்ளிகளில் என்று ஒவ்வொரு நிலையிலும் தான்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகிலுள்ள வழுவூரில் இறந்துபோன தலித் முதியவரின் சடலத்தை சுடுகாட்டுக்கு தங்கள் வீதியின் வழியாக தூக்கிச் செல்லக் கூடாது என்று ஜாதிவெறியர்கள் தடுக்கிறார்கள். உயர்நீதிமன்றம் ஆணையிட்டாலும் அதை ஏற்க முடியாது என்று சவால் விடுகிறார்கள். தமிழக காவல்துறை, இந்த தீண்டாமை குற்றத்துக்கு வெளிப்படையாக துணை போகிறது.

கோயிலில் வழிபாடு நடத்த தடை; தேனீர்க் கடை; முடிவெட்டும் நிலையம்; பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என்று தமிழக கிராமங்களில் ‘தீண்டாமை’யும் ஜாதி வெறியும் திணிக்கப்படுகிறது. சத்துணவு மய்யங்களில் தலித் பெண் சமைத்தால் அந்த உணவை சாப்பிடக் கூடாது என்று ஜாதி வெறி பெற்றோர்கள் குழந்தைகளை தடுக்கிறார்கள்.

பிஞ்சு உள்ளங்களிலே தீண்டாமை நஞ்சு ஏற்றப்படுகிறது. ஆதி திராவிடர்களுக்கான அரசு பள்ளிகளில் மட்டும்தான் தலித் மாணவர்கள் படிக்க வேண்டும்  என்ற சமூகத் தடை பல கிராமங்களில் இன்றும் அமுலாகி வருகிறது. ஊரும் சேரியும் பிரிந்து கிடக்கிறது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் “கவுரவ”க் கொலை!

இது சுதந்திர நாடு தானா?

அன்று புராண பார்ப்பன ‘துரோணாச்சாரி’, ஏகலைவன் விரலை சிதைத்தான்.

இன்று நவீன பார்ப்பனியம் திணிக்கும் ஜாதி வெறி, தலித் மாணவர்கள், தலித் மக்களின் வாழ்வுரிமையை சுயமரியாதையை சிதைக்கிறது.

மத்திய, மாநில அரசுகளே!

உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க வரும் தலித் மாணவர்கள் மீதான தீண்டாமை பாகுபாடுகளை வளாகப் புறக்கணிப்புகளை தடுத்து நிறுத்து; கல்வி வளாகங்களில் சமத்துவ சூழலை உருவாக்கு; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமுல்படுத்து!

அரசியல் கட்சிகளே!

வாக்கு வங்கி அரசியலுக்காக தீண்டாமையைத் திணிக்கும் ஜாதி வெறி சக்திகளுக்க நேரடியாகவோ மறைமுகமாகவோ - ஆதரவுக் கரம் நீட்டாதீர்!

தமிழர் இயக்கங்களே!

தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை சீரழிப்பதில் முதலிடத்தில் நிற்கும் பார்ப்பனிய ஜாதி-தீண்டாமைக்கு எதிராக போராட முன் வாருங்கள்! இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டம்.

ஜாதி-தீண்டாமை எதிர்ப்பாளர்களையும் இயக்கங் களையும் பங்கேற்று, ரோகித் வெமுலா மரணத்துக்கு நீதி கேட்க உரிமையோடு அழைக்கிறோம்.

(ஆர்ப்பாட்டத்துக்காக கழகம் வெளியிட்ட துண்டறிக்கை)

Pin It