modi 350மோடியின் நூறு நாள் ஆட்சி, ஆறு மாத கால ஆட்சியின் சாதனை பட்டியல் குறித்தும், அவர் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்தும் முதலாளித்துவ, பொருளாதார ஆலோசகர்கள் பல கட்டுரைகளை தினசரி வரைந்து கொண்டிருக்கிறார்கள். மோடி ஆட்சிக்குக் கிடைத்திருக்கின்ற பெரும்பான்மை பலம் அசுரத்தனமானது. 

அதை அவர் இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை,அவர் செய்கின்ற பொருளாதார சீர்திருத்தத்தின் வேகம் போதவில்லை என்றும், வளர்ச்சி சதவீதத்தை முடுக்க மக்களின் மீது சாட்டையை சுழற்ற வேண்டும் என்றும் உச்சஸ்தாதியில் குரல் எழுப்புகின்றனர்.

நரசிம்மராவின் மைனாரிட்டி அரசு 90களில் எடுத்தது போன்ற துணிச்சலான முடிவுகளைக் கூட மோடியின் மெஜாரிட்டி அரசு இன்னும் செய்யத் துணியவில்லை. ரூபாய் மதிப்பு குறைப்பு, லைசென்சு முறை ரத்து, பொதுத்துறையிடமிருந்த கேந்திரமான பல துறைகள் தனியாரிடம் ஒப்படைப்பு போன்ற துணிச்சலான உறுதியான முடிவுகளை, நரசிம்மராவ் எடுத்தது போன்று, நாட்டை அடுத்தக் கட்ட சீர்திருத்தத்திற்கு அழைத்து செல்வதற்கு மோடி துணிவான முடிவுகள் எடுக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றனர்.

மோடி முன்வைத்த தேர்தல் முழக்கங்களில் சுணக்கம் காட்டி விடக்கூடாது, நடைமுறை அரசியலுக்காக தாமதப்படுத்தி விடக்கூடாது என்பதில் பெருமுதலாளிகளும், அன்னிய ஏகபோக சக்திகளும், பொருளாதார நிபுணர்களும் மோடி ஆட்சியைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மூர்க்கத்-தனமான, இரக்கமற்ற பொருளாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு, வளர்ச்சிப் பாதை என்றும், சீர்திருத்தம் என்றும் நவீன பெயர்-சூட்டி ஒரு பொருளாதார பயங்கரத்தை கட்டவிழ்த்து-விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தேவையற்ற, வீணான, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்ற ஏழை, நடுத்தரவர்க்க மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து மானியங்-களையும் ரத்து செய்ய வேண்டும், சந்தை சார்ந்த பொருளாதாரத்திற்குள் நாட்டின் அனைத்து துறைகளும், அனைத்து மக்கள் பிரிவினரும் கொண்டு வரப்பட வேண்டும் என்பது போன்ற மோடியின் தீவிர நடவடிக்கைகள், நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைக்கு சுருக்குக் கயிறாய் மாறிக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் 60 ஆண்டுகால பாராளுமன்ற அமைப்பு முறையை, அரசியலமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்த உரிமைகளை, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, நாடு தழுவிய விவாதமோ அல்லது கலந்தா-லோசனையோ இன்றி, பாராளுமன்றத்திற்கு அப்பாற்-பட்டு, பெரும் பொருளாதார சீர்திருத்தங்கள் தீவிரப்-படுத்தப்பட்டிருக்கின்றன. ‘வரவு - செலவு பற்றாக்குறையை(Fiscal Deficite)) ஒழுங்குபடுத்த வேண்டும்’ என்ற ஒற்றைப் பொருளாதார சொல்லாடலுக்குள் அனைத்தும் மூழ்கடிக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து மானியங்களும் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையானவை, வீணானவை என்ற கருத்துருவாக்கம் தீவிரமாகக் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், வெகுஜன கவர்ச்சிவாத ஓட்டரசியல் (Populist Vote Politics) என மலினப்படுத்தப்படுகின்றன. முந்தைய அரசுகளின் கவர்ச்சிவாதக் கொள்கைகள் கைவிடப்பட வேண்டும், தீர்க்கமான பொருளாதார முடிவுகளை ஏற்று, உறுதியாக நடைமுறைப்படுத்தும் மோடி அரசின் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட சட்டவிரோத நடைமுறையை, எதேச்சதிகார ஆட்சி முறையை, பொருளாதார வளர்ச்சிக்கான நடைமுறையாக நியாயப்படுத்தி, வளர்ச்சி சார்ந்த மாயையையும், வன்முறையையும் கட்டமைக்க, கார்ப்பரேட் மய்ய, பாசிச அரசியல் கட்டமைக்கப் படுகின்றது. இதில் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கங்களும், சாதிகளும்,சிறு வணிகப் பிரிவினரும் பெரும் மாயையால் சூழப்பட்டிருக்கின்றனர் என்பது தான், இந்த பாசிச பொருளாதாரத்தின் சமூக அடித் தளமாக இருக்கின்றது.

மோடியின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சமூக துறைகள் சார் அரசின் பொது செலவீனங்களில் (Social Spector Spendings) 15 சதவீதத்தை வெட்டிக் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் வரவு - செலவு பற்றாக் குறையை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும், அடுத்த பட்ஜெட் 2015-16 வரவு செலவு அறிக்கையில் பெரும் சீர்திருத்தங்கள் இடம்பெறும் என்றும், அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதில் பெரும் மானியவெட்டு (Cut Pags) பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் கட்டுப்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்களை செயல்படுத்தப் போவதாக கூறியுள்ளார். உலக வர்த்தக கழகத்தில் (WTO) சமீபத்தில் கையெழுத்திட்டுள்ள மய்ய அரசின் நடவடிக்கையை ஒபாமா நிர்வாகமும், உலக ஏகபோக வர்த்தக நிறுவனங்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளின் மானியக் கொள்கைகளை ஒருதலைபட்சமாக எதிர்த்து வந்த ஏகாதிபத்திய சக்திகள், மோடி அரசை மாற்றத்திற்கான அரசாக ஆரத்தழுவுவதோடு மட்டுமல்லாமல், கிடப்பில் கிடந்த ஒப்பந்தங்களில் மிக வேகமாக கையெழுத்திடப்படுவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

மானிய வெட்டு - யாருக்கானது?

சற்றொப்ப 5 லட்சம் கோடி ரூபாயை வரிச் சழுகையாக, மானியமாக பெரும் ஏகபோக நிறுவனங்களுக்கு வழங்கும் மய்ய அரசு, சில ஆயிரம் கோடி ரூபாயை ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் மீது மானியமாக வழங்குவதை ஏன் வளர்ச்சிக்கு எதிரானதாக, வீணானதாகக் கருதுகின்றது? இதற்கு எதிரான ஒரு போரை நடத்துவது அவசியம் என்பது போன்ற கருத்துருவாக்கத்தை ஏன் தயார் செய்கின்றது? முந்தைய காங்கிரஸ் அரசின் இறுதி காலங்களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் போது கூட, சங்பரிவாரங்களின் பொருளாதார நிபுணர், கருத்தியலாளர் குருமூர்த்தி, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தையும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தையும் தேவையற்ற செலவீனங்கள் என்று குறை கூறினார்.

சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையையும், சமூக நலத்திட்டங்களுக்கான செலவீனங்களையும் தான் பெரும் தீமைகளாக வர்ணித்தார். அமெரிக்காவுடனான உறவு, மானிய வெட்டு ஆகியவற்றைத் தான் மாற்றுத்தீர்வாக முன்வைத்தார். காங்கிரஸின் ஊழலுக்கு எதிராக போரிடுவதாக தோற்றத்தில் காட்டிக்கொண்டு, உண்மையில் மக்களுக்கு வழங்கப் படும் மானியத்துக்கு எதிராகத்தான் போரைத் தொடுத்தார்கள், தொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக, பெருங்குழுமங்கள் உருவாக்கி வழங்கிய பரிசுதான் மோடி பிம்பமும், பிஜேபியின் பெரும் பான்மை ஆட்சியும்.

சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, பெரும் மூலதனம் புழங்குகின்ற துறைகளைக் குறிவைத்து, மானிய வெட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். சிறந்த நிர்வாகம் என்ற பெயரில், மானியங்களை பணமாக மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்துவது, திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைப்பது, பொதுத்துறையில் அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பது, அனைத்து அத்யாவசிய பொருட்களின் விலை நிர்ணய உரிமையை சந்தையின் கைகளில் ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 லட்சம் டன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்த மய்ய அரசு, பொது விநியோகத் திட்டத்தை (PDS) வெட்டிக் குறைப்பதற்கான பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார (Minimum Support Price) விலையை நிர்ணயிப்பதையும், விளைபொருட்களைப் பெற்று மானிய விலையில் ரேசன் கடைகளில் விற்பதையும் கைவிடுவதற்கு, முனைப்பான பல காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றது. ஆப்பிரிக்க சகாரா மக்களின் வாழ்நிலையை விட, மோசமான வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடி இந்திய மக்களின் வறுமைக்கோட்டை நிர்ணயிப்பதில் தில்லுமுல்லு செய்த மய்ய அரசும், பொருளாதார வல்லுனர்களும், இந்த எளிய மக்கள் சாப்பிடும் உணவைத் தான் நாட்டின் வளர்ச்சிக்கு தடையானதாக சித்தரிக்கிறார்கள்.

மின்மயமாக்கப்படாத வீடுகளுக்கு மட்டுமே ரேஷன் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் எனச் சொல்லி, மாநிலங்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்திருக்கின்றது. மண்ணெண்ணெய், எரிவாயு, டீசல் போன்றவை களுக்கான மானியத்தை முழுமையாக நீக்கு வதற்கு படிப்படியான நடவடிக்கைகளை மேற் கொள்கிறார்கள்.

ஏறக்குறைய 1.5 லட்சம் கோடி அளவிலான மானியத்தை மக்களின் பயன்பாட்டிலுள்ள எரிபொருட்களிலிருந்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேதியியல் உரங்களிலிருந்தும் நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MNRGEA) கீழ் ஒதுக்கப்படும் ஊரக வேலை வாய்ப்புக்கான நிதி, பாதிக்குப் பாதியாக வெட்டிக்குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அதிக வேலை நாட்களைப் பயன்படுத்திய திரிபுரா மாநிலத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்ட 1406 கோடி ரூபாயிலிருந்து தற்போது வெறும் 652 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி நாடு முழுவதும் வேலை செய்த நாட்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையான 9,000 கோடி ரூபாய் பல மாதங்களாகவே வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முற்றிலும் கைவிடுவதற்கான தொடக்கமாக, தற்போது 200 மாவட்டங்களுக்கு மட்டும் என மோடி அரசால் சுருக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதியில் பொது சொத்தை உருவாக்கிய, கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவிலான வருவாயைக் கொடுத்த இத்திட்டத்தை நிர்மூலமாக்குவதோடல்லாமல், வீணான செலவீனம் என்று மோசடிப் பிரச்சாரத்தை மோடி அரசு செய்து வருகின்றது. இதுபோன்றே உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தீவிரமாக பேசிவருகின்றனர்.

அருண்ஜேட்லி அறிவித்துள்ள மானிய வெட்டு நடவடிக்கையில், சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டில் 7000 கோடி ரூபாய் வெட்டப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதே போன்று, ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியில் 25 சதவிகிதத்தை வெட்டிக்குறைப்பதற்கான முன்னறிவிப்புகளைச் செய்துள்ளார்.

இவ்வாறு ஏழை, நடுத்தர மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களுக்கான மானியத்தை வெட்டிக்குறைப்பதும், அதானி போன்ற முதலாளிகளுக்கு அரசு வங்கிகளிலிருந்து 6000 கோடி கடன் அளிப்பதும், என்ன வகையான பொருளாதார நடவடிக்கை? இது யாருடைய நலனுக்கானது? பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருமுதலாளித்துவ குழுமங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் மானியமும், வரிச்சலுகையும் அறிவிக்கப்படும் போது எழாத கூச்சல், ஏழை மக்களுக்கு எதிராக ஏன் எழுகின்றது? பல ஆயிரம் கோடி ரூபாய் வரிஏய்ப்பும்,வரிச்சலுகையும் பெற்று விட்டு, இறுதியில் ஆலை மூடல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கின்ற சூறையாடும் கும்பலுக்கு எதிராக குரல் எழுப்பப்படாதது ஏன்?

ration 350முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவது, வரவு - செலவு பற்றாக்குறையை ஒழுங்குபடுத்துவது, வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது போன்ற உலகமய ஒழுங்குக்கு ஏற்ப, நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த முயற்சிக்கிறார்கள்.

இரண்டாம் தலை முறை சீர்திருத்தம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மாதிரியின் திசைவழியைத் தீர்மானிக்கிறது. 2011 வரை மன்மோகனிய பொருளாதாரத்தை வளர்ச்சி யாகப் புகழ்ந்த அதே கும்பல் தான், அதனால் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க, தற்போது மோடி மய சூறையாடலை வளர்ச்சி கொள்கையாக முன் வைக்கின்றது.

அடிப்படையில் வேறுபாடற்ற கடந்த 20 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சியிலுள்ள குறைபாடுகளைப் பற்றி பேசாமல், வளர்ச்சி மாதிரியின் சிக்கல்களை ஆராயாமல், மக்கள் மீதான தங்குதடையற்ற பொருளாதாரத் தாக்குதலையே தீர்வாக முன்வைக்கிறார்கள். நாம் எழுப்ப வேண்டிய கேள்வி யாருக்கான வளர்ச்சி என்பது தான்.

அனைத்து மக்களை உள்ளடக்கிய ஒரு பொருளாதார வளர்ச்சியா? சமூக வளத்தையும், மனிதவளத்தையும் உயர்த்துகின்ற வளர்ச்சியா? பொது சொத்தை சூறையாடும் ஊதிப்பெருத்த 500 பெருங்குழுமங்களின் வளர்ச்சியா? என்பது தான். ஏகபோக தனியார் ஆட்சியின் கீழ் நாட்டை ஒப்படைப்பது, அதற்குத் தேவையான ஏக பெருந்தேசியத்தையும், ஒற்றையாட்சி, கட்சி அரசியல் சூழலையும் உருவாக்குவதும்தான் மோடிமய மாற்று.

இது அனைத்தையும் வெட்டும், சுருக்கும். இறுதியில் மக்களையும் நாட்டையும் தான். இதற்கு எதிராக ஒரு நீடித்த போராட்டத்திற்குத் தயாராவோம். மக்களைப் பேணிப் பாதுகாக்கின்ற அனைத்தும் தழுவிய வளர்ச்சிக்கான மாற்று அரசியலைக் கட்டி எழுப்புவோம்.

Pin It