கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நடுவண் அரசின் 2018-2019ஆம் ஆண்டிற் கான நிதிநிலை அறிக்கையை 1-2-2018 அன்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தார். 2019 ஏப்பிரல்-மே மாதங்களில் நாடாளு மன்றத்துக்குப் பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், நரேந்திர மோடி ஆட்சியின் முழுமையான இறுதி நிதிநிலை அறிக்கை இதுவேயாகும்.

2019ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற வுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் வாக்கு களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த நிதிநிலை அறிக் கையில் இரண்டு முதன்மையான திட்டங்களை மோடி அரசு அறிவித்துள்ளது, முதலாவது உழவர்களின் வரு வாயை இரண்டு மடங்காக உயர்த்துவது; இரண்டாவது பத்துக்கோடி குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு உருவா 5 இலட்சம் மருத்துவக் காப்பீடு வழங்குவது ஆகும்.

potato farmers

பாரதிய சனதாக் கட்சி 2014இல் வெளியிட்ட நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கையில், மொத்த உற்பத்திச் செலவில் உழவர்களுக்கு 50 விழுக்காடு இலாபம் கிடைக்கச் செய்தல், குறைந்த விலையில் இடுபொருள் களை வழங்குதல், எளிதில் கடன் கிடைக்கச் செய்தல், புதிய வேளாண் தொழில் நுட்பங்கள், உயர் விளைச்சல் விதைகள் வழங்குதல், ஊரக வேலை வாய்ப்பு உறுதி யளிப்புத் திட்டத்தை வேளாண்மைப் பணியுடன் இணைத் தல் முதலான வாக்குறுதிகளை பா.ச.க. அளித்திருந்தது. தேர்தல் மேடைகளில் மோடி இந்த வாக்குறுதிகளை முழங்கினார்.

கடந்த நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் உழவர் களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறை வேற்றிட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததுடன், 2017 திசம்பர் வரையில் உழவர்களின் விளை பொருள் களுக்கு உற்பத்திச் செலவைப் போல் 1.5 மடங்கு விலை நிர்ணயிப்பது சந்தையைச் சீர்குலைக்கும் என்று மோடி ஆட்சி கூறிவந்தது.

2014 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி யின்படி விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யுமாறு நடுவண் அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. இதுகுறித்து நடுவண் அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கோரியது. 2015 பிப்பிரவரி 20 அன்று உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு அளித்த அறிக்கை யில், “மொத்த உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு இலாபம் கிடைக்கும் வகையில் தானியங்களுக்கோ, மற்ற விளைபொருள்களுக்கோ குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price - MSP) நிர்ண யிக்க முடியாது; ஏனெனில் அது வேளாண் சந்தை யைச் சீர்குலைக்கும்” என்று கூறித் தேர்தல் வாக்கு றுதியைக் காற்றில் பறக்கவிட்டது. 2017 திசம்பர் 12 அன்று நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரில் நடுவண் அரசின் வேளாண் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்து வடிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, “உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு இலாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்வது சந்தையைச் சீர்குலைக்கும்” என்று பதில் சொன்னார்.

அதன்பின் அய்ம்பது நாள்களுக்குள் நடுவண் அரசு தன் நிலைப்பாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொண்டது. 1.2.2018 அன்று அருண்ஜெட்லி நாடாளு மன்றத்தில் முன்மொழிந்த நிதிநிலை அறிக்கையில், “2022ஆம் ஆண்டு இந்தியா சுதந்தரம் பெற்ற 75ஆவது ஆண்டைக் கொண்டாடவுள்ளது. அதற்குள் உழவர்களின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற இலக்கைப் பிரதமர் அறிவித்துள் ளார். எனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, 2018ஆம் ஆண்டின் ராபி பருவத்தின் பெரும்பாலான பயிர்களுக்குச் சாகுபடிச் செலவில் 50 விழுக்காடு இலாபம் கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்த அரசு நிர்ணயித்துள்ளது; அடுத்து வரும் காரீப் பருவப் பயிர்களுக்கும் இதேபோல் விலை நிர்ணயம் செய்யப்படும்” என்று கூறியுள்ளார். 2014 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியைக் கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டிருந்ததுடன், அந்த வாக்குறுதிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த மோடி அரசு, 2019இல் நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டே இந்த அறிவிப்பைச் செய்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கை என்று கூறி அருண்ஜெட்லி தன் முதுகைத் தானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறார்.

எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் நடுவண் அரசால் அமைக்கப்பட்ட தேசிய உழவர் ஆணையம் 2006ஆம் ஆண்டு அதன் அறிக்கையை அளித்தது. உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு அளவுக்கு உழவர் களுக்கு இலாபம் கிடைக்குமாறு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தி யது. அதன்படி 2018ஆம் ஆண்டிற்கான ராபி பயிர் களுக்கு அரசின் கொள்முதல் விலையை அறிவித் திருப்பதாக அருண்ஜெட்லி கூறியிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்பதைப் பார்ப்போம்.

நெல், கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி, சணல் முதலான பயிர்களுக்கு நடுவண் அரசின்கீழ் இயங்கும் வேளாண் பயிர்களின் உற்பத்திச் செலவு மற்றும் விலை நிர்ணயக் குழு (CACP) ஆண்டுதோறும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அறிவிக்கிறது. ஒரு ஏக்கரில் ஒரு குறிப்பிட்ட பயிருக்கான சாகுபடிச் செலவு என்பது விதை, உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், ஆட்களுக்கான கூலி, மாடுகள், இயந்திரங்களுக்கான வாடகை, நீர்ப்பாசனம், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்காகச் செலவிட்ட பணத்தின் கூட்டுத் தொகையாகும். இது A2 என்று குறிக்கப்படுகிறது. இத்துடன் குடும்ப உறுப்பினர்களின் உழைப்புக்கான கூலி (Family Labour - FL) சேர்க் கப்படும். இது A2 + FL என்று குறிக்கப்படுகிறது. இத் தொகையுடன் நிலம் மற்றும் மூலதனச் சொத்துக்களுக் கான வட்டி, பயிர்க்காப்பீட்டுப் பிரீமியம், போக்குவரத் துச் செலவு, சந்தைப்படுத்தல் செலவு ஆகியவை சேர்க்கப்படும் போது இதன் கூட்டுத் தொகை C2 என்று குறிக்கப்படுகிறது. இந்த விவரங்களை மனதிற்கொண்டு கீழே உள்ள அட்டவணையைப் படியுங்கள்.

agri rate 640

எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த C2 + 50% என்கிற அளவுகோலின் அடிப்படையில் ராபி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நடுவண் அரசு அறிவிக்கவில்லை என்பதை மேலே உள்ள புள்ளிவிவரம் அம்பலப்படுத்துகிறது. அதனால் மொத்த உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு இலாபம் உழவர்களுக்குக் கிடைக்கும் என்று அருண்ஜெட்லி நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது உழவர்களை வஞ்சிப்பதாகும். இந்த ஏமாற்று முறையிலேயே காரிப் பருவப் பயிர்களுக்கும் விலை நிர்ணயிக்கப் போவ தாகப் பெருமிதத்துடன் கூறுகிறார், நிதி அமைச்சர்.

அரசு அறிவிக்கின்ற விலையில் உழவர்களிடம் நெல், கோதுமை போன்றவற்றை அரசு சில பகுதி களில் மட்டுமே கொள்முதல் செய்கிறது. 1966 முதல் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India - FCI) பற்றாக்குறைக் காலங்களின் தேவைக்காகவும், நியாய விலைக்கடைகள் மூலம் வழங்குவதற்காகவும் நெல், கோதுமை ஆகியவற்றை உழவர்களிடம் அரசு அறிவிக்கும் விலையில் கொள்முதல் செய்து வருகிறது. கோதுமையில் 90 விழுக்காடு பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் கொள் முதல் செய்கிறது. நெல்லில் 75 விழுக்காடு பஞ்சாப், அரியானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொள்முதல் செய்கிறது. இந்திய உணவுக்கழகம் இப்பகுதிகளில் அமைக்கும் நேரடிக் கொள்முதல் நிலை யங்கள் மூலம் அரசு அறிவிக்கும் விலையில் உழவர் களிடம் கொள்முதல் செய்கிறது.

இதேபோன்று தமிழ்நாட்டு அரசு காவிரிப் பாசனப் பகுதியிலும், ஆந்திர அரசு கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுப் பாசனப் பகுதிகளிலும் நேரடிக் கொள்முதல் நிலையங் கள் மூலம் மாநில அரசு அறிவிக்கும் விலையில் நெல்லைக் கொள்முதல் செய்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக இப்பகுதிகளில் தனியார் வணிகர்களும் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுவதால், தனியாரிடம் கடன் வாங்கிய உழவர்கள் குறைந்த விலையில் தங்கள் நெல்லை அவர்களிடம் விற்கும் நிலைக்கு ஆளா கின்றனர்.

இதுதவிர அரசின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உழவர்கள் தங்கள் விளைபொருளை விற்கின்றனர். ஆனால் இவற்றில் கொள்முதல் செய்யும் வணிகர்கள்தான் விலையைத் தீர்மானிக்கிறார்கள். அதனால் அரசு அறிவிக்கும் விலையில் விளை பொருளை உழவர்களால் விற்க முடிவதில்லை. தனி யார் மயம் பெருகிய பிறகு செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் எண்ணிக்கைச் சுருங்கி விட்டது. எனவே தமிழகத்தில் பெரும்பாலான பகுதி களில் தனியாரிடமே குறைந்தவிலையில் தங்கள் விளை பொருள்களை உழவர்கள் விற்கும் நிலை இருக்கிறது.

இந்திய அளவில் அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) விற்பனை செய்யும் உழவர் களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. 2012-13ஆம் ஆண்டில் இந்திய அரசின் புள்ளியல் துறை நடத்திய ஆய்வில் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பதை 25 விழுக்காடு உழவர்கள் மட்டுமே அறிந்துள்ளனர். மகாராட்டிரத்தில் 8 விழுக்காட்டினர், குசராத்தில் 11 விழுக்காட்டினர், பஞ்சாபில் 50 விழுக் காட்டினர் இதைப்பற்றி அறிந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உழவர்களில் பாதிப்பேர் இதைப்பற்றித் தெரிந்து வைத்திருப்பதற்குக் காரணம் முன்பு குறிப்பிட்டது போல் இந்தியாவிலேயே அதிக அளவில் நெல், கோதுமை நேரடி கொள்முதல் இங்குதான் செய்யப்படுகிறது. 19 விழுக்காட்டினர் மட்டுமே இந்திய உணவுக் கழகம் (FCI) பற்றி அறிந்துள்ளனர். எனவே 75 விழுக்காடு உழவர்கள் தனியாரிடமே தம் விளைபொருள்களை விற்கின்றனர். இந்நிலையில் அரசு, கொள்முதல் விலையை இன்னும் உயர்த்தி அறிவித்தாலும் பெரும் பான்மையான உழவர்களுக்கு அதனால் ஒரு பயனும் கிட்டாது.

இந்த நிலைமையை நிதி அமைச்சரும் அறிவார். அதனால்தான் நிதிநிலை அறிக்கையில், “அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட (MSP) பொதுச் சந்தையில் விலை குறைவாக இருந்தால் அரசு தலையிட்டு அரசு அறிவித்த விலையில் நேரடியாகக் கொள்முதல் செய்யும்; அல்லது இதற்கான மாற்று ஏற்பாட்டை உருவாக்கும். நிதி ஆயோக் அமைப்பு நடுவண் அரசிடமும் மாநில அரசுகளுடனும் கலந்து பேசி உழவர்களின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார், அருண்ஜெட்லி. உழவர்களின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைத்திட வழி செய்வோம் என்று காலங்காலமாக எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லி வருவதையேதான் “வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு” என்று கூறி, உழவர்களை ஏய்க்கப் பார்க்கிறார்.

உழவர்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக இந்திய அளவில் 585 வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை டிஜிட்டல் (e-NAM) மயமாக்கப் போவதாகக் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. 470 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன. மீதி யுள்ளவை 2018 மார்ச்சு மாதத்திற்குள் இணைய சேவை மூலம் இணைக்கப்படும். இந்த இணைய சேவை மூலம் இந்தியாவில் எந்த இடத்தில் அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்று அதிக வருவாய் ஈட்டலாம் என்று நிதி அமைச்சர் சொல்கிறார்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அவற்றில் பதிவு செய்துகொண்டுள்ள வணிர்கள் தான் விளை பொருள்களின் விலையைத் தீர்மானிக்கிறார்கள். அவர்கள்தான் கொள்முதல் செய்கிறார்கள். இணைய சேவை மூலம் கொள்முதல் செய்வதானால் எங்கு விலை குறைவாக இருக்கிறதோ, அங்குதான் வணிகர் கள் கொள்முதல் செய்வார்கள். சேவைப் பிரிவுகளில் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை நடப்பது போல் வேளாண்மையையும் நினைக்கும் மோடி அரசின் இந்த பைத்தியக்காரத் திட்டத்தை உழவர்கள் எள்ளி நகையாடுகின்றனர்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கொள் கையின்படி கடந்த இருபது ஆண்டுகளாக நடுவண் அரசில் ஆட்சி செய்த காங்கிரசும், பா.ச.க.வும் அரசு நேரடியாகக் கொள்முதல் செய்வது, கிடங்குகளில் சேமித்து வைப்பது என்பதைப் படிப்படியாகக் குறைத்து வரு கின்றன. இந்திய உணவுக் கழகத்தையே (FCI) கலைத்து விட்டு, வேளாண் சந்தை முழுவதையும், தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றன. நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள் களையும் அவற்றின் அளவையும் குறைத்துவருகின்றன. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற் கொள்ளும் இந்திய அரசு உழவர்களின் வருவாயை இரண்டு மடங்கு உயர்த்தப் போவதாக இரட்டை வேடம் போடுகிறது.

அரசு கொள்முதல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை அழித்துவிட்டு, அரசு அறிவிக்கும் விலையில் உழவர்களிடம் எப்படிக் கொள்முதல் செய்ய முடியும்? இதற்கு நிதி அமைச்சர் ஒரு ஏமாற்று வழியைக் காட்டுகிறார். மொத்த உழவர்களில் 86 விழுக்காட்டின ராக இருக்கும் சிறு, குறு உழவர்களால் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலோ, தனியார் மொத்த கொள்முதல் மண்டிகளிலோ விற்க முடியாது. எனவே இந்தியாவில் உள்ள கிராமச் சந்தைகளில் 22,000 சந்தைகளைத் தேர்வு செய்து, அவற்றை மேம்படுத்தி, அவற்றின் மூலம் உழவர்கள் நுகர்வோ ருக்கும், மொத்தமாக வாங்குவோர்க்கும் விற்பனை செய்வதன் மூலம் சிறு, குறு உழவர்களுக்கும் நல்ல இலாபம் கிடைக்கும் என்று நிதி அமைச்சர் கூறுகிறார். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், கிராமச் சந்தை களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு வெறும் கண் துடைப்பே ஆகும்.

கிராமச் சந்தைகளை மேம்படுத்த ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி பிரதம ரான பின், காங்கிரசு ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் புறக் கணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பல மாதங்கள் கழித்தே கூலி தரப்படுகிறது. இதில் நடுவண் அரசு திட்டமிட்டே பொய் சொல்கிறது.

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை எளிதில் அழும் தன்மை கொண்டவை. அதனால் அறுவடைக் காலங்களில் உழவர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகிறது. இத்தகைய இழப்பைத் தடுப்பதற்காக “கிரீன்ஸ் ஆபரேஷன்” (Greens operation) திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அருண்ஜெட்லி நிதிநிலை அறிக்கையில் கூறி யுள்ளார். காய்கறிகள் பயிரிடும் உழவர்களுக்காகவும் இந்த அரசு திட்டம் தீட்டுகிறது என்று காட்டிக்கொள்வது என்பதற்கு மேல் இதனால் ஒரு பயனும் ஏற்படாது.

சந்தையில் விளைபொருளின் விலையை நிலைப் படுத்துவதற்காக என்று முதன்முதலாக 2016-2017 இல் ரூ.6,900 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இப் போது ராபி பருவப் பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்தியிருப்பதாகக் கூறும் நேரத்தில், இத்தொகை ரூ.1,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே மோடி அரசின் அறிவிப்புகளில் நேர்மை இல்லை என்பது புலனாகிறது.

வேளாண் கடன் 2014-2015இல் 8.5 இலட்சம் கோடியாக இருந்தது; இப்போது 11 இலட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்கிறார், அருண்ஜெட்லி. மொத்த கடன் தொகையில் 86 விழுக்காட்டினராக உள்ள சிறு, குறு உழவர்கள் 41 விழுக்காடு மட்டுமே பெறுகின்றனர். இவர்களுக்கு ரூ.2 இலட்சம் வரையில்தான் கடன் தரப்படுகிறது. மீதி கடன் தொகையைப் பெருநிலவுடைமையாளர்களும், வேளாண் கருவிகளை உற்பத்தி செய்யும் பெருமுதலாளிகளும் பெறுகின்றனர். வேளாண் கடன் தொகை அதிகரிப்பால் உழவர்கள் தற்கொலை தடுக்கப்படவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டனர்.

20-2-2018 அன்று புதுதில்லியில் “வேளாண் வருமானத்தை 2022ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக உயர்த்துவது” என்கிற கருத்தரங்கை பிரதமர் மோடி தொடக்கி வைத்து உரையாற்றினார். 2018-2019ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் உழவர் களின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்காக என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள ஏமாற்றுத் திட்டங்களை உழவர்களிடம்-மக்களிடம் கூவி விற்கத் தொடங்கி விட்டார் நரேந்திர மோடி. 2014 தேர்தல் அறிக்கையில் சொன்னதையே 2019 தேர்தலிலும் கூறி தேர்தல் சந்தையில் வாக்கு வணிகம் செய்ய மோடி அரசு அணியமாகிறது. இந்த மோசடியை உழவர்களுக்கும் மக்களுக்கும் புரிய வைப்பது நமது கடமையாகும்.