விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர், கடந்த 9 மாதங்களாக தமிழகம் முழுவதும் தீண்டாமைக் கொடுமைக்கான ஆதாரங்களில் ஒன்றாக அனைவராலும் பேசப்பட்ட கிராமம். அவ்வூர் ஆதிதிராவிட மக்கள் ஆலயத்திற்குள் நுழையத்தடை விதிக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இத்தடையை அகற்றிட தமிழக அரசையும், விழுப்புரம் மாவட்ட அரசு நிர்வாகத்தையும் வலியுறுத்தியது. பலனில்லை. 2009 செப்டம்பர் 30ம்நாள் ஆலயப்பிரவேசத்திற்கு ஆதிதிராவிட மக்களுடன் அனைத்து சமூகத்தினரை யும் அழைத்துச்சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரையும் ஊருக்கு முன்னாலேயே தடுத்து நிறுத்தி தடியடித்தாக்குதல் நடத்தி, 103 பேரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தது.

மாவட்ட காவல்துறை எஸ். பி. அமல்ராஜூம், கோட்டாட்சியர் ராஜேந்திரனும், டிஎஸ்பி முத்து நல்லியப்பன் ஆகியோரால் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா அடிவயிறு சிதைக்கப்பட்டு, சுமார் 3 மாதத்திற்கு மேல் சிகிச்சையளிக்கப்பட்டு உயிர்மீண்டார் என்றால் இவர்களின் கொடூரத்தை புரிந்து கொள்ள முடியாதா?”தீண்டாமை சட்டப்படி குற்றம் என்பது உண்மையானால், சாதியைச் சொல்லி தலித்துகள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்ற ஆதிக்கச் சாதியினரும், சட்டம்ஒழுங்கைச் சொல்லி ஆதிதிராவிடர்களை கோயிலுக்கு செல்ல விடாமல் மிருகவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் சட்டப்படி குற்றவாளிகள்தானே? “தலித்துகளை கோயிலுக்குள் நுழையக்கூடாதெனத் தடுத்திட்ட ஆதிக்கச் சாதியினர் மீதும் நடவடிக்கை இல்லை.

ஆதிதிராவிட மக்களையும் மற்ற அனைவரையும் கோயிலுக்குள் செல்லக்கூடா தென அடித்து, அதிகாரத்தை பயன்படுத்தி பொய்வழக்கு போட்டு சிறையிலடைத்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை இல்லை. “மாறாக தமிழக அரசு, எஸ். பி. அமல் ராஜூக்கு டிஐஜி பதவி உயர்வு கொடுத்து பாராட்டியது. டிஎஸ்பி முத்துநல்லியப் பனை ஏடிஎஸ்பி ஆக பதவி உயர்வளித்து கவுரவித்தது. “சட்டவிரோதமாக தடியடி நடத்தி, சட்டமன்ற உறுப்பினர் லதாவையும் கொடூர மாகத் தாக்கிய காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வல்லவா கொடுத்துள்ளீர்கள்; என சட்டமன்றத்திலேயே எழுப்பப்பட்ட கேள்விக்கு, துணை முதல்வர் மு. க. ஸ்டாலின், போலீஸ் வாகனங்கள் உடைக்கப்பட்டதாகவும், சட்டம் அமைதியைப் பாதுகாக்கவே சிறு பலப்பிரயோகம் செய்ததாகவும், போலீஸ் கொடுத்த பொய்யறிக்கையையே தமது பதிலுரையாக பகன்றாரே; இது உண்மையை மூடிமறைத்திடும் பதிலல்லவா? இமயமலையையே இட்லிக்குள் மறைத்திடும் புதிய யுக்தியல்லவா? “தம்மை தாக்கி, தமது சக தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்திய, பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்து தமது அதிகாரத்தை தவறாக தமது சொந்த உணர்ச்சிகளுக்கு சாதகமாய் பயன்படுத்திய எஸ். பி அமல்ராஜ் மற்றுமுள்ளவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா 18. 3. 2010ல் புகார் கொடுத்த பின்னணியில் இப்புகாரின் அடிப்படையில் உண்மையை கண்டறிந்து அறிக்கையளிக்க விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவு போடப்பட்டது.

“இவ்வுத்தரவின்படி ஏப்ரல் 8, ஜூன் 4, 18 ஆகிய தேதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று இதுவரை 23 பேர் சாட்சியமளித்துள்ளனர். “18. 6. 2010 காலையில் ஜி. லதா எம்எல்ஏவும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் ஜி. ஆனந்தனும், மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் தமது சாட்சியங்களை எழுத்துப்பூர்வமாக அளித்தனர். அதன் பின்னர் மாலை 4. 30 மணிக்கு காங்கியனூர் சென்றனர். காங்கியனூர் மேட்டுச் சேரியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் நாங்கள் திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு உள்ளே சென்று வழிபட வேண்டுமென ஆர்வத்தை வெளியிட்டனர். அதன் பின்னர் காங்கியனூர் திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு ஜி. லதா எம்எல்ஏவும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. ஆனந்தன், வாலிபர் சங்க மாநிலத்தலைவர் எஸ். ஜி. ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ். முத்துக்குமரன், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ். வேல்மாறன் உள்ளிட்டவர்கள் அந்த மக்களுடன் ஆலயத்திற்குள் சென்றனர். “

“ஆதிதிராவிட மக்களின் சுயமரியா தைக்காகப் போராடியவர்கள் மீது போடப் பட்ட பொய்வழக்குகள் வாபஸ் பெறப்படுமா?

– ஜி.ஆனந்தன்

Pin It