சமீப காலமாக அம்பேத்கருக்கு எதிராகவும், பெரியாருக்கு எதிராகவும் தங்களை மார்க்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் பின்னணியை நாம் கவனித்தோம் என்றால் ஒன்று அவர்கள் பார்பனராக இருக்கின்றனர் இல்லை என்றால் பார்ப்பனன் தலைமையில் இயங்கும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சாதி இந்துக்களாக இருக்கின்றனர். இவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது, அது பெரியாரின் கொள்கைகளும், அம்பேத்கரின் கொள்கைகளும் சாதி ஒழிப்புக்கு ஏற்றதல்ல, மார்க்சியம் ஒன்றே சாதியை அழிக்க பயன்படும் ஒரே தத்துவம். எனவே நாம் அதனை ஏற்றுக்கொண்டு மற்றவற்றை கைகழுவ வேண்டும் என்பதுதான்.
சரி அம்பேத்கரையும், பெரியாரையும் விட்டுவிட்டு மார்க்சிய கொள்கைகளை மட்டும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு இவர்களிடம் நாம் சரணடைந்தால் இவர்கள் நமக்குச் சாதியை அழிக்கும் வழியைக் காட்டுவார்களா என்று பார்த்தால் ஒரு வெங்காயமும் கிடையாது. “உங்ககிட்டயே சாதியை ஒழிப்பதற்கு எந்த வழியும் இல்லை, அப்புறம் என்னா மயித்துக்குடா அம்பேத்கரையும், பெரியாரையும் பற்றி தப்பு தப்பா பேசுறீங்க, எழுதுறீங்க” என்று நாம் கேட்க வேண்டி இருக்கின்றது.
அம்பேத்கரிடமும், பெரியாரிடமும் சாதியை ஒழிப்பதற்கான எந்த வழியும் இல்லையாம், இவர்கள் சொல்கின்றார்கள். இப்படி சொல்பவன் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் புத்தகங்களை படிக்காதவனாக இருப்பான், இல்லை மார்க்சியப் போர்வையில் ஒழிந்திருக்கும் ஆர். எஸ்.எஸ் காரனாக இருப்பான். ஆம் தோழர்களே, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸில் மட்டும் இல்லை, அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருக்கின்றார்கள். இந்த உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதுபோன்றவர்கள் தான் தங்களுடைய பத்திரிக்கைகளிலும், மற்ற பிற ஊடகங்களிலும் அம்பேத்கருக்கு எதிராகவும், பெரியாருக்கு எதிராகவும் நஞ்சு கலந்த அவதூறு செய்திகளைப் பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இதுபோன்ற கயவர்களை நீங்கள் இனம் கண்டுபிடிப்பதுதான் கடினம். ஏனென்றால் அவர்கள் எல்லா நேரங்களிலும் அம்பேத்கருக்கு எதிராகவும், பெரியாருக்கு எதிராகவும் செயல்படுவது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கரின் கொள்கைகளையும், பெரியாரின் கொள்கைகளையும் தாங்கள்தான் உண்மையில் கடைபிடிப்பதாக சொல்லிக் கொள்வார்கள், முடிந்தால் சில புத்தகங்களைக் கூட வெளியிடுவார்கள். ஏன் அவர்களுக்காக சில போராட்டங்களைக் கூட செய்வார்கள். இதை எல்லாம் பார்த்துப் பல பெரியாரிய இயக்கத் தோழர்களும், அம்பேத்கரிய இயக்கத் தோழர்களும் இதுபோன்ற கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். கட்சிக்குள் வந்த பின்னால் தங்களது சித்து வேலையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிப்பார்கள். “அம்பேத்கரும் பெரியாரும் எல்லாம் சொல்லி இருக்காங்க தோழர், ஆனா, அவங்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினை பற்றி எந்தக் கண்ணோட்டமும் இல்லை. சாதி மட்டும்தான் இந்தியாவில் பிரச்சனையா, பொருளாதாரப் பிரச்சினைதான் மத்த எல்லா பிரச்சினையையும் விட பெரியது. முதல்ல அதை தீர்த்துட்டா மற்ற பிரச்சினைகளை மிக எளிதாக தீர்த்துவிடலாம். அதனால நாம முதல்ல பொருளாதாரப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து போராடலாம். மற்ற சாதி, மதம் , மூட நம்பிக்கை போன்ற பிரச்சினை எல்லாம் காலப்போக்கில் நாம் தீர்த்துடலாம் என்று சொல்லி சாதிப் பிரச்சினையை மூன்றாம், நான்காம் இடத்துக்குத் தள்ளுவார்கள். காலப்போக்கில் எந்தப் பெரியாரின் எழுத்துக்களையும், அம்பேத்காரின் எழுத்துக்களையும் படித்து தங்களை முற்போக்குவாதிகளாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொண்டார்களோ அதே நபர்களின் வாயாலேயே அம்பேத்கருக்கு எதிராகவும், பெரியாருக்கு எதிராகவும் பேசவைப்பார்கள். இதுதான் பார்ப்பன,பார்ப்பனிய கம்யூனிஸ்டுகளின் வெற்றியாகும்.
அம்பேத்கருக்கும் ,பெரியாருக்கும் எதிராக தீவிரமாக சமீக காலமாக அவதூறுப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அமைப்புகளின் யோக்கியதையை நீங்கள் சமூக மாற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டும். மோடியின் ஆட்சியில் தொடர்ச்சியாக தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் மற்றொரு பக்கம் அந்தத் தலித் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஓரணியில் ஒன்று திரண்டு கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை ஒன்றிணைப்பது அம்பேத்கரின் தத்துவமே ஆகும். இது ஆளும் பாசிச பி.ஜே.பிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதனை எப்படியாவது முறியடிக்க அவை திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் அவை அம்பேத்கர் இந்துமதத்திற்கு ஆதரவானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவரை உள்வாங்க முயன்று கொண்டு இருக்கின்றது. அம்பேத்கரின் பார்ப்பனிய எதிர்ப்பை ஒழிப்பதில் இது பகுதி என்றால், அடுத்த நம்ம பார்ப்பன, பார்ப்பனிய கம்யூனிஸ்ட்கள் அதனை முழுமையைடைய வைக்கின்றார்கள். இன்னும் சொல்லபோனால் அவர்களைவிட வீரியமாக அவர்கள் அம்பேத்கரின் சிந்தனைகளை கொச்சைப்படுத்துகின்றார்கள். எப்படி ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பல் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எதிரானதோ அதைவிட பலமடங்கு அபாயகரமானவர்கள் கம்யூனிஸ போர்வையில் ஒழிந்துகொண்டிருக்கும் இந்த அயோக்கியர்கள்.
அம்பேத்கர் சாதியை ஒழிப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை என்று இந்த பார்ப்பனிய கம்யூனிஸ்ட்கள் சொல்வதை முதலில் நாம் பார்ப்போம் “இன்னுமொரு சாதி ஒழிப்புச் செயல்திட்டம் சமபந்தி போஜனங்களுடன் தொடங்குவது. இதுவும் என் கருத்தில் ஒரு போதாமையான தீர்வுதான். அன்னம், நீர் புழங்குதலை அனுமதிக்கும் பல சாதிகள் இருக்கின்றன. ஆனால் அன்னம் நீர் புழங்குதலும் சமபந்தி போஜனங்களும் தரும் அனுபவங்கள் சாதிகள், சாதியுணர்வின் மனநிலையை அழிப்பதில் வெற்றியடையவில்லை. உண்மையான தீர்வென்பது சாதிகடந்த திருமணங்கள்தான் என நான் நம்புகிறேன். ரத்தக்கலப்பு மட்டுமே உற்றார் உறவினர் என்ற உணர்வை ஏற்படுத்த முடியும். இந்த உற்றார் என்ற உணர்வு , தன்னினம் என்ற உணர்வு தலையாயதாக ஆகாவிட்டால் சாதியினால் தோற்றுவிக்கப்பட்ட பிரிவினை உணர்வு- அந்நியத் தன்மை என்பது மறையாது. அது இந்துவல்லாதவர்களின் வாழ்வில் இருப்பதைக் காட்டிலும் இந்துக்களிடையே சாதிகடந்த திருமணம் என்பது அவர்களின் சமூக வாழ்வில் மகத்தான விசையாக இருக்க வேண்டியது அத்தியாவசியமானது. வேறு இழைகளால் நன்கு பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் திருமணம் ஒரு எளிய வாழ்க்கை நிகழ்ச்சி. ஆனால் துண்டாக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் இணைக்கும் சக்தியாக திருமணம் ஆகிவிடுவதால் அது அவசரத் தேவையாகிறது. சாதியை உடைப்பதற்கான உண்மையான தீர்வு சாதிகடந்த திருமணம்தான். வேறெதுவும் சாதியைக் கரைக்கும் வேலையைச் செய்யமுடியாது”. (சாதியை அழித்தொழித்தல் கலச்சுவடு வெளியீடு ப.எண்:265)( இந்தியாவில் சாதிகள், எதிர் வெளியீடு ப.எண்:118-119)( சாதிகளை அழித்தொழிக்கும் வழி தலித்முரசு வெளியீடு ப.எண் 88)
சாதிகளை அழிப்பதற்கான முக்கிய வழியாக அப்பேத்கர் புறமணமுறையை பரிந்துரைக்கின்றார். அதன் மீது பெரும் நம்பிக்கையையும் வைக்கின்றார். அதே போல வேறொரு இடத்தில் இப்படி சொல்கின்றார். “ சாதி தவறானதாக இருக்கலாம். மனிதன் சக மனிதனின் மீது செலுத்தும் மனிதத்தன்மையற்ற செயல்பாடு என அழைக்கும் அளவிற்கான மோசமான அச்சுறுத்தலாக நடத்தைக்கு வழிகோலுவதாக இருக்கலாம். இதெல்லாம் இருந்தாலும் , இந்துக்கள் சாதியை அவர்கள் மனிதத் தன்மையற்றவராக இருப்பதாலேயோ தீயமனம் கொண்டதாலோயோ கடைபிடிக்கவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். அவர்கள் ஆழமான மத உணர்வினாலேயே சாதியைக் கடைபிடிக்கிறார்கள். மக்கள் சாதியைக் கடைபிடிப்பதால் தவறானவர்கள் அல்ல. என் பார்வையில் எது தவறாக இருக்கின்றதென்றால் சாதி என்ற கருத்தியலை ஊட்டும் அவர்களுடைய மதம்தான் தவறு . இது சரியென்றால் நாம் போராடவேண்டிய எதிரி சாதியைக் கடைபிடிக்கும் மக்கள் அல்ல, ஆனால் சாதியின் இந்த மதத்தை அவர்களுக்குப் புகட்டும் சாஸ்திரங்கள்தான். அன்னம் நீர் புழங்காத , கலந்து மணம் புரியாத மக்களை விமர்சிப்பதும் எப்போதாவது ஒரு சமபந்தி போஜனத்தை நடத்துவதும் சாதிகடந்த திருமணங்களைக் கொண்டாடுவதும் நான் விரும்பும் முடிவை எட்டுவதற்கு வீணாண வழிகளே. உண்மைத் தீர்வு என்பது சாஸ்திரங்களின் புனிதத்தின் மீதான நம்பிக்கைகளைத் தகர்ப்பதுதான்”. (மேற்குறிப்பிட்ட நூல்கள் வரிசைப்படி ப.எண்:288-270, 120, 89-90)
இரண்டு விஷயங்களை சாதி ஒழிப்புக்கான முன் நிபந்தனையாக அம்பேத்கர் குறிப்பிடுகின்றார். ஒன்று புறமணமுறை மற்றொன்று சாஸ்திரங்களின் புனித தன்மையை அழித்தொழிப்பது. இந்த இரண்டும் சாதி ஒழிப்பில் மையமாக முன்னெடுக்க வேண்டிய பிரச்சினைகள் ஆகும். இதைச் செய்வதற்கு இந்திய சமூகத்தில் புரட்சி வர வேண்டுமா? நீங்களே சொல்லுங்கள் தோழர்களே. ஆடத்தெரியாதவன் மேடையை கோணல் என்று சொன்னதுபோல இங்கிருக்கும் பார்ப்பன, பார்ப்பனிய கம்யூனிஸ்ட்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். எப்படி சாதிவெறியர்கள் சாதி வெறியைத் தூண்டிவிட்டு அரசியல் செய்கின்றார்களோ அதே போல இந்தப் பார்ப்பன, பார்ப்பனிய கம்யூனிஸ்ட்கள் அதற்கு எதிராக எழும் சமூக கோபத்தை ஒன்றும் இல்லாமல் செய்வதற்குக் கம்யூனிஸத்தை ஒரு சேப்டி வால்வாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
இவர்களுக்கு உண்மையில் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை கிஞ்சித்தும் கிடையாது என்பதுதான் உண்மை. ஆனால் அம்பேத்கர் சொன்ன இரண்டு மையமான பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக இன்றுவரை களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருப்பது இங்கிருக்கும் திரவிட இயக்கங்களே ஆகும்.( தேர்தல் பாதையில் செல்லாத திராவிட இயக்கங்கள்). புறமண திருமணத்தை நடத்தி வைக்கும் சுயமரியாதை திருமண நிலையங்கள் ஆகட்டும் புராண புரட்டுகளைச் சாமானிய மக்களிடம் அம்பலப்படுத்துவதாகட்டும், இல்லை சாஸ்திரங்களைக் கொளுத்துவது ஆகட்டும், மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் ஆகட்டும் இதில் அனைத்திலும் இன்றும் முன்னணியில் இருப்பவர்கள் அவர்கள் தான். இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால் திராவிடர் விடுதலைக் கழகம் போன்றவை இந்தப் பணியில் இன்று முழு அர்ப்பணிப்போடு செயல்படுகின்றன.
பெரியார் சொல்கின்றார் "…….இதனாலேயே பார்ப்பனர்கள் சமுதாய சமதர்மக்காரரைக் கண்டால் காய்ந்துவிழுவதும் சமுதாய சமதர்ம இயக்கங்களை ஒழிக்க சூழ்ச்சி செய்வதுமாய் இருப்பதோடு பொருளாதார சமதர்மக்காரர்கள் என்பவர்களை வரவேற்பது போலவும் பொருளாதார சமதர்ம ஸ்தாபனங்களை ஆதரிப்பவர்கள் போலவும் காட்டிக் கொள்ளுகின்றார்கள். ஏனெனில் வெறும் பொருளாதார சமதர்மம் பார்ப்பனனை ஒன்றும் செய்து விடாது; மேலும் பார்ப்பானுக்குப் பொருளாதார சமதர்மம் அனுகூலமானதேயாகும். எப்படியெனில் இப்போது அவனால் பிச்சை வாங்கப்படும் நபர்கள் ஒரு பங்காய் இருந்தால் பொருளாதார சமதர்மத்தில் பார்ப்பானுக்கு பிச்சை கொடுக்கும் நபர்கள் 10 பங்காய் ஆகிவிடுவார்கள். அப்போது அவனுக்கு (பார்ப்பானுக்கு) சமதர்மத்தில் பிரித்துக்கொடுக்கும் சொத்துக்கள் தவிர மற்றும் சாதி மத சடங்குகள் காரணமாக அதிகப் பிச்சையும் சேர்ந்து ஒவ்வொரு பார்ப்பனனும் ஒவ்வொரு சங்கராச்சாரி, மடாதிபதி ஆக சுலபத்தில் மார்க்கம் ஏற்பட்டுவிடும். இந்த நிலை மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலை அதாவது இன்றைய நிலையை உண்டாக்கிவிடும்.( பெரியார் களஞ்சியம் எட்டாம் தொகுதி:ப. எண் 29)
இப்போது தெரிகின்றதா தோழர்களே, ஏன் பார்ப்பனக் கூட்டம் கம்யூனிச இயக்கங்களை நோக்கி படையெடுக்கின்றது என்று. மேலும் சொல்கின்றார் "... இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு நன்மை வேண்டுமென்று கருதுகிறவன் இந்தியன் என்கின்ற நிலையில் இந்திய நிலை என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடக்க வேண்டுமே ஒழிய மேல்நாட்டைப்பற்றி படித்துவிட்டு புஸ்தகப் பூச்சியாய் இருப்பது வீண் பிரயாசையேயாகும். மேல் நாட்டு சமுதாய நிலைபோல் நம் நாட்டு சமுதாயநிலை ஆகும் போது மேல்நாட்டு முறைகளை கையாளுவது பொருத்தமுடையதாகும் அப்படிக்கில்லாமல் 'குருடன் ராஜ விழி விழிக்கப்பார்ப்பது' என்பது போல நம்- இந்திய பறையன், சக்கிலி, பிராமணன், சூத்திரன் என்கின்றவர்கள் உள்ள ஊரில் பொருளாதார, சமதர்மம், மார்க்கிசம், லெனினிசம் என்று பேசுவது வெறும் வேஷமும் நேரக்கேடுமே யாகும் என்று கூறுவோம். ஆதலால் இன்று சமதர்ம வாலிபர்கள் தயவு செய்து கொஞ்சம் நாளைக்காவது பணக்காரனாவதை மறந்துவிட்டு ஜாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டு சமுதாய சமதர்மத்தை உண்டாக்கவும், சமுதாயப் புரட்சிகளை உண்டாக்கவும் பாடுபடுவார்களாக எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை அனுகூலமாய் இருக்கும் சமயம் பொருளாதாரத்தைப் பற்றியும் யோசிப்போமாக" ( மேற்குறிப்பிட்ட நூல் பக்கம் 32)
இப்போதுதெரிகின்றா ஏன் பார்ப்பன,பார்ப்பனிய கம்யூனிஸ்ட்கள் திட்டமிட்டு பெரியாரின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார்கள் என்று. பெரியார் எந்த இடத்திலும் கம்யூனிஸம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அனுகூலமாய் இருக்கும் சமயம் அதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்றே குறிப்பிடுகின்றார். இந்தக் கட்டுரை வெளியாகி ஏறக்குறைய 80 ஆண்டுகள் ஆகின்றன. இன்று பொருளாதாரப் பிரச்சினைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் 100 சதவீதம் உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் அதை சாதிப்பிரச்சினையுடன் சேர்ந்தே அதை அழிப்பதற்கான வழிமுறைகளை முழு மூச்சில் நடத்திக் கொண்டே நாம் புரட்சி என்ற மைய இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.
எனவே இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற அறிவியலை கையில் வைத்துக்கொண்டு அதை சாதிவெறியர்களை நக்கிப் பிழைப்பதற்காக சப்பைக்கட்டு கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தும் மானங்கெட்ட பார்ப்பன, பார்ப்பனிய கம்யூனிஸ்ட்கள் அம்பேத்கரையும், பெரியாரையும் அவதூறு செய்வதை ஒழுங்காக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இவர்களைப் போன்றவர்களின் யோக்கியதையை நாம் மூச்சந்தியில் ஏற்ற வேண்டியதிருக்கும்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக புரட்சியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஒரு லெட்டர்பேட் கட்சியைச் சேர்ந்த ஒரு தோழரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சாதிவெறி பிடித்தவர்களை எல்லாம் உங்க கட்சி கூட்டத்தில் பேச வெக்கறீங்களே இது தப்பில்லையா என்று கேட்டேன். அதெல்லாம் ஒன்னும் இல்லை தோழர், அவருக்குச் சாதியை பற்றி மாறுபட்ட கருத்து இருந்தால் என்ன அவருக்கு தனியார் மயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குதில்ல அது நமக்குப் போதாதா என்றார். மேலும் தன்னுடைய கேடுகெட்ட கழிசடைத்தனத்துக்கு இயக்கவியல் பார்வையையும் கொடுத்தார். எப்படி என்றால் ஒருவன் ஒரு பிரச்சினையில் கெட்டவனாக இருக்கின்றான் என்பதற்காக அவனை நாம் கெட்டவன் என்று சொல்ல முடியாது தோழர், மற்ற பிரச்சினைகளில் அவருக்கு நம்மிடம் ஒத்துப்போகும் பண்பு இருந்தால் அவரை நாம் அழைத்து பேசவைப்பதில் தவறில்லை என்று அவரது கம்யூனிச அறிவைக் காட்டினார். அதற்கு நான் அப்படி என்றால் நீங்க ராமதாசை கூட அழைத்துவந்து பேசவைக்கலாமே அவருகூட கல்வி தனியார்மையத்தை எதிர்க்கின்றார், மீத்தேன்வாயு திட்டத்தை எதிர்க்கின்றார் இன்னும் பல தமிழக மக்களுக்கு எதிரான பல பிரச்சினைகளில் குரல் கொடுக்கின்றார் என்று கேட்டேன். அந்த மார்க்சியவாதியிடம் பதில் இல்லை. இந்தப் பிழைப்புப் பிழைப்பதற்கு வேறு எதாவது தொழில்செய்து இவர்கள் பிழைக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றியது. நான் ஏதோ ஒரு சில நபர்களிடம் இப்படிப்பட்ட குணம் இருக்கின்றது என்று சொல்லவில்லை ஒட்டுமொத்த பார்ப்பன, பார்ப்பனிய கம்யூனிஸ்ட்கள் பல பேரிடம் ஏன் ஒட்டுமொத்த கட்சியே கூட அப்படித்தான் இருக்கின்றது என்று நம்மால் உறுதியாக சொல்லமுடியும்.
அதனால் உண்மையில் சாதியை அழித்தொழிக்க நினைக்கும் தோழர்கள் அதற்கான சரியான அமைப்பு எது என்று பார்த்து அதில் இணைந்து பணியாற்ற வேண்டும். இல்லை என்றால் உங்களது உழைப்பை ஒட்டச்சுரண்டி கொழுப்பதற்கே இங்கே பல கம்யூனிச வேடமணிந்த கும்பல்கள் சுற்றிக்கொண்டு இருக்கின்றது. நமக்கு மார்க்சும் தேவை, லெனினும் தேவை, ஸ்டாலினும் தேவை, மாவோவும் தேவை. இவர்களின் கொள்கைகளை எல்லாம் நாம் போற்றுகின்றோம் இவர்களது வழிமுறைகளை கடைபிடித்து இந்திய சமூகத்தை ஓர் ஏற்றத்தாழ்வற்ற பொதுவுடைமை பூமியாக மாற்ற சித்தமாக உள்ளோம். ஆனால் அம்பேத்கரையும், பெரியாரையும் ஒழித்துக்கட்டிவிட்டு காவி பயங்கரவாதிகளுக்குச் சேவை செய்யும் கீழ்த்தரமான வேலையை பார்ப்பன, பார்ப்பனிய கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து செய்வர்களே ஆனால் நாம் அதுபோன்ற அயோக்கியர்களை அம்பலப்படுத்தமால் இருக்க முடியாது. இந்திய சமூகத்தில் மார்க்சிய தத்துவம், அம்பேத்கரையும், பெரியாரையும் இணைத்துக் கொள்ளும் போதுதான் முழுமையடைகின்றது என்பதை இந்த மண்டைவீங்கி பார்ப்பன, பார்ப்பனிய அறிவாளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- செ.கார்கி