"உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு'
என வாணிபம் தொடங்கி
"அடைந்தால் திராவிட நாடு
இன்றேல் சுடுகாடு' என
இரண்டையும் அடையாதவரின்
இயக்கத்தில் இணைந்து
எந்தக் கட்சி ஆளும் கட்சியோ
அதைத்தான் எப்போதும்
ஆதரிக்க வேண்டும்
என்னும் உன்னதக் கொள்கையை
நிறுவியவரின் நாளேடு;
சகிக்கமுடியாத நாற்றத்தோடு
தினமும் மலம் தள்ளும் ஊடகம்;
"இந்த இதழை வாங்கினால்
சோப்பு சீப்பு கண்ணாடி
குங்குமம் முதல் கைக்குட்டை வரை
எல்லாமே இலவசம்'
என உலகெங்கும் இல்லாத
புது உத்தி கண்டறிந்தவர்களின்
"இந்தியாவின் நம்பர் ஒன்';
எங்கும் இலவசம்
எல்லாம் இலவசம் என
"வள்ளல் பெருமக்கள்' வழங்கும்
வண்ண மூடப் பெட்டிகளில்
ஆணாதிக்க நாயகர்கள்
நடிகைகளின் புட்டத்தைத் தடவும்
காட்சிகளைக் கொஞ்ச நேரமும்
கற்புக்கரசிகளின் சோகத்தொடர்களை
கொஞ்ச நேரமும் காட்டி
பார்வையாளர்களின், விற்பனையாளர்களின்
எண்ணிக்கை பெருக்கும்
கலாச்சாரக் கொள்ளையர்கள்
இவர்கள் எல்லோருக்கும்
கடந்த சில ஆண்டுகளாகவே
பிப்ரவரி வந்துவிட்டால்
திடீரென்று முளைக்கும்
ஊருக்குப் பத்துப் பேர் கூடத் தேறாத
பண்பாட்டுக் காவலர்கள் நடத்தும்
"போராட்டங்கள்'
அன்றாடச் செய்திகளாகிவிடும்.
இந்துத்துவாவின் எண்ணற்ற
வானரப் படைகளில்
எண்ணிக்கை மிகவும் குறைந்தவற்றுக்கே
இந்தப் "போராட்டக் கடமை'.
இந்த ஆண்டு என்றுமில்லாத
வேடிக்கையாய் எண்ணிச் சரியாக
பத்துப் பேர் கொண்ட "சிவ சேனை'
மெரினா காந்தி சிலைக்குக் கீழே
"மகாத்மா பாதுகாத்த இந்தியப் பண்பாட்டை
மேனாட்டு வேலண்டின் துறவியிடமிருந்து
காப்பாற்றியே தீருவோம்'
எனக் கதறிய நிகழ்ச்சிக்கு
திராவிடப் பண்பாட்டை முரசொலிக்க வந்து
உயிர் நீப்பதற்கென்றே அமைச்சரானவர்
நிறுவியமின்னணு ஊடகத்தில்
நாள் முழுக்க விளம்பரம்
அந்தப் பத்து முட்டாள்களுக்கும்
காந்தியை கொன்றது
தங்கள் மூதாதையர்களிலொருவர்தான்
என்பது தெரியாமலிருக்காது
மற்றொரு தகவலை அவர்கள்
அறியாமலிருக்கலாம்: "மடையர்களே
நீங்கள் இப்போது கொண்டாடும்
மகாத்மாவின் மகன் தேவதாஸ் காந்தி
முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே
காதல் திருமணம், கலப்புத் திருமணம்
செய்து கொண்டவர்
இன்னொரு மகன் குடித்துக்
கும்மாளமிட்டுப் பின்னர் மதமும்
மாறிப்பின்னர் திரும்பி வந்தவர்'.
காதலிருவர் கருத்தொருமித்து
ஆதரவு பெற்றதே இன்பம் –
இது தமிழர் பண்பாடு.
கழுதைகளுக்கும் நாய்களுக்கும்
முடிச்சுப் போடுபவரைக்
குறை சொல்வானேன்?
தத்தம் உறவினர்களுக்கு
மணம் முடிப்பதும்
அதில் மகிழ்வதும்
அவரவர் உரிமை!

Pin It