தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் / எழுத்தாளர் பேரவை சார்பில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவும், சமூகப் பணியாளர் எஸ். நடராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழாவும், பேரவை உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவும் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் 26.3.2011 அன்று நடைபெற்றது.விழாவிற்கு பேரவையின் தலைவர் கொடிக்கால் சேக் அப்துல்லா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் யாக்கன் வரவேற்புரை ஆற்றினார். சமூக மாற்றத்திற்கு குரல் கொடுக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும், சமூக மாற்றத்திற்காகப் பணியாற்றும் மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்குவது பணி, இனி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்றும் யாக்கன் குறிப்பிட்டார்.

nallakannu_v_rajendran_600

மூத்த பத்திரிகையாளர்களுக்கு "சமூக மாற்றத்தின் குரல்' என்ற விருது வழங்கப்பட்டது. அருந்ததியர் வரலாற்றை எழுதிய எழில் இளங்கோவன், "சிந்தனையாளன்' இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கும் கவிஞர் தமிழேந்தி, "எழுச்சி' இதழின் பொறுப்பாசிரியர் மு.பா. எழிலரசு, "சமநிலைச் சமுதாயம்' இதழின் ஆசிரியர் ஜாபர் சாதிக் பாக்கவி, "தலித் முரசு' ஆசிரியர் குழுவை சேர்ந்த ஜெயராணி ஆகியோரின் இதழியல் பணிகளைப் பாராட்டி, இவ்விருது வழங்கப்பட்டது.

பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றியவரும், தொழிற்சங்க பொதுச் செயலாளராக இருந்து மாபெரும் போராட்டங்களை நடத்தியவரும், பஞ்சமி நிலமீட்பு இயக்கம், தாத்தா ரெட்டமலை சீனிவாசன் பேரவை போன்ற இயக்கங்களை நடத்தியவரும், பொதுப் பிரச்சனைகளில் முன்னின்று பணிகளை ஆற்றக்கூடிய தோழருமான எஸ். நடராஜன் அவர்களுக்குப் பாராட்டும் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஒரு சமூகப் போராளி வாழுங்காலத்திலேயே பாராட்டப்படுவது என்பது, அவருடைய பணிகளுக்கு கிடைக்கின்ற அங்கீகாரமாகும். அதை சிறப்பாக தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் / எழுத்தாளர் பேரவை செய்திருக்கிறது.

வாழ்த்துரை வழங்கிய ஓவியா, பொதுப் பணியாற்றக் கூடியவர்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுடைய வீட்டுப் பெண்கள் படும் துயரங்கள் அவலங்கள் குறித்த பதிவுகள் வர வேண்டும் என்றார். விருது பெற்ற அனைவரையும் புனித பாண்டியன் பாராட்டியதோடு, சாதி ஒழிப்பு குறித்த கருத்துகளில் பொதுவுடைமையாளர்களின் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பேசியது – சாதி ஒழிப்புக் களத்திற்கான புதிய உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறது.

ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, நடராஜன் அவர்களின் தொழிற்சங்கப் பணிகளையும் அவரின் பொதுவுடைமைப் பணிகளையும் நினைவு கூர்ந்தார். திரைப்பட இயக்குநர் ஜனநாதன், அவருக்கும் நடராஜனுக்கும் உள்ள தோழமை உறவைக் குறித்து உரையாற்றினார். ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ. வினோத் சிறப்புரையாற்றினார். இறுதியாக உரையாற்றிய பெரியார் தி.க. பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், இந்தியாவில் நடைபெறும் எல்லா பிரச்சினைகளுக்கும் சாதிதான் காரணமாக இருக்கிறது. அதை ஒழிப்பதற்கான பணியில்தான் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

எஸ். நடராஜன் அவர்களின் நேர்காணல் அடங்கிய குறுநூலை வெளியிட்டு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கட்டுபாட்டு குழுத் தலைவர் நல்லக்கண்ணு வாழ்த்துரை வழங்கினார். அரங்கு நிறைந்திருந்த பார்வையாளர்கள் இறுதிவரை அமர்ந்து, நிகழ்வினை உற்று கவனித்துக் கொண்டிருந்ததை, சமூக மாற்றத்திற்கான அடையாளங்கள் தென்படுகிறதென்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

Pin It