தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த பிஞ்சுக் குழந்தைகள் தங்களைச் சுற்றி நடப்பதை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் உலகம் தனியானது; வண்ணங்களால் நிரம்பியது. அவர்களுக்கு வளர்ந்த மனிதர்கள் பொருட்டல்ல, அவர்கள் உலகில் வார்த்தைகள் அர்த்தமற்றது, தனித்துவம் மிக்கது, அவர்களுக்குள் வேறுபாடுகள் இல்லை, மனிதர்களைப் போல கவலைகள், பொறாமைகள், வன்மங்கள் அறவே கிடையாது. மொழி, மதம், இனம், சாதி, வட்டாரம், கடவுள், பேய் என்ற நம்பிக்கைகள் கிடையாது. அவர்கள் குழந்தைகள். அவ்வளவே.

இந்த பூமிப்பந்தின் உயர்ந்த நடமாடும் பொக்கிஷங்களான குழந்தைகள், தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணமான விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது அந்தத் தெருவில் கையில் ஆயுதங்களுடன் புகுந்த வன்முறைக் கூட்டமொன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் வெட்டி வீசி எரிந்தனர். தங்கள் வன்மத்தை பிஞ்சு தேகங்களின் மீது கோடாரிகளால் எழுதினர். அந்தக் குழந்தைகள் செய்த குற்றம் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தது மட்டும்தான். இது ஏதோ ஒரு தெருவின் நெஞ்சைப் பதற வைக்கும் கதை மட்டுமல்ல... இந்தியாவின் பழமையின் சின்னமாக திகழ்ந்த பாபர் மசூதியை இடித்ததைத் தொடர்ந்து இந்திய நாட்டின் பல மாநிலங்களில் இத்தகைய கோரச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இதோடு நிற்காத அந்த மனசாட்சி அற்றவர்கள், உலகின் வன்முறைகள் பெண்கள் உடலை பயன்படுத்தி எழுதப்பட்டது என்பதை மீண்டும் நிரூபணம் செய்தனர்.

நாகரீக சமூகம் வெட்கித் தலைகுனிந்த இத்தகைய கொடூரங்களைச் செய்துவிட்டு, கொஞ்சமும் வெட்கமில்லாமல் இதை நிகழ்த்தியவர்கள் வாக்குகளை சேகரிக்க மக்களைச் சந்தித்தார்கள். வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தார்கள். இது எப்படி அவர்களால் முடிந்தது என்ற திகைப்பு பலருக்கு இருந்தது உண்மை. ஆனால் இவர்களுக்கு முன்பே இவர்களின் ஆதர்ச நாயகன் ஹிட்லர் இதை ஜெர்மனியில் நிகழ்த்திக்காட்டினான். அதைத்தான் அவர்கள் இங்கு செய்தார்கள். ஒரே வித்தியாசம் அவனுக்கு யூதர்கள் எனில் இவர்களுக்கு இஸ்லாமியர்கள். அரசியலில் மதமும், அதிகாரத்தில் மதமும், அதிகாரத்தை வெல்ல மதமும் பின்னிப் பிணைந்த கலவையின் வளர்ச்சி இது.

 மானுடத்தை தனது அதிகார வெறிக்காக, வெற்றிக்காக பலியிடும் மதவாதத்தின் கோரத்தாண்டவம் மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் குறைத்து மதிப்பிடப்படுகிறது. தமிழகத்தின் பல முன்னேற்றத்திற்கு பங்களிப்பை செய்துள்ள திராவிட இயக்கங்கள் அந்த முன்னேற்றங்களைவிட நூறு மடங்கு அதிகமாக பிற்போக்கு கருத்துருவாக்கங்களையும் செய்துள்ளார்கள். அதில் முக்கியமான ஒன்று பா.ஜ.கவுடன் வைத்த கூட்டு. இன்று பல இடங்களில் அந்த இயக்கம் வளர இவர்களின் நடவடிக்கையும் ஒரு முக்கிய காரணியாகத் திகழ்கிறது. 

 பா.ஜ.கவின் விஷத் தலைமையான ஆர்.எஸ்.எஸ் இன்று தமிழகத்தில் பல இடங்களில் கலாச்சார அமைப்பு என்ற பெயரில் தனது ஷாகாகளை நடத்தி வருகிறது. கலாச்சார அமைப்பு என்ற போர்வையில் ஆலய திருப்பணி என்ற பேரில் அவர்களால் அங்கீகாரத்தை உள்ளூர் அளவில் பெற முடிகிறது. அவர்கள் ஷாகா நடத்துவது பெரும்பாலும் தனியார் கல்வி நிலையங்களின் உள்ளேதான். தமிழகத்தில் உள்ள தொன்னூறு சதமான தனியார் கல்வி நிலைய தாளாளர்கள் திராவிட மற்றும் காங்கிரஸ் இயக்கங்களை சார்ந்தவர்களே. ஆனால் அவர்களுக்கு இந்த ஷாகாக்களின் நோக்கம் புரிய மறுக்கிறது. அல்லது சிலர் தெரிந்தே அனுமதிக்கின்றனர். இடதுசாரிக் கட்சிகள், பெரியார் திராவிடர் கழகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் மட்டுமே இதை எதிர்த்து பல இடங்களில் கள அளவில் கலகங்களை செய்துவருகின்றனர். 

 முதன் முதலில் இந்துஸ்தான் என்ற கோரிக்கையை வைத்து அதற்கு எதிராக பாகிஸ்தான் என்ற கோரிக்கை உருவாகக் காரணமாய் இருந்து, தங்கள் அதிகார அரசியல் வளர மத அடையாளத்தை முன்னிறுத்தினர். அன்று துவங்கிய அடையாள அரசியல் உயிர் விளையாட்டு இன்று பல வடிவங்களை வந்தடைந்துள்ளது. 1925ம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு துவக்கப்பட்ட அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய நாடு முழுவதும் 120 கலவரங்கள் நடந்தை வரலாறு குறித்து வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமுடியான இந்து மகாசாபா துவக்கப்பட்ட பின் அரசியல் சதுரங்கம் அவர்களால் சாதுர்யமாக விளையாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் காமராஜரை கொலைசெய்ய முயற்சித்து தோற்றவர்கள் பின்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி படுகொலையை திட்டமிட்டு கச்சிதமாய் அரங்கேற்றினர். அவர்களின் ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை அதிகார வர்க்கத்தில் தன்னுடைய ஆட்களை நுழைக்கும் வேலையை செய்துவருகிறனர்.

 இப்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் விதைத்த நச்சு விதை, வளர்ந்து விருட்சமாகி மிகப்பெரிய கலவரமாய் வெடித்த ஆண்டுகள் 1992 மற்றும் 2002. 1992 ஆண்டின் டிசம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான மதவெறியர்கள், 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பிரம்மாண்டமான பாபர் மசூதியை இடித்து நொறுக்கினர். அதன் பின் ஏற்பட்ட கலவரங்களில் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலிவாங்கப்பட்டன. மற்றொன்று 2002 ல் கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து நடந்த இன அழிப்புக் கலவரம். இந்த கலவரத்திற்கும் மசூதி இடிப்பிற்கும் இவர்களுக்கு பக்கபலமாய் இருந்தது மக்கள் பொதுபுத்தியில் விதைத்த மதவாத அரசியலும், அரசியலை கிரிமினல் மயமாக்கியதும், அரசியலில் மதத்தை கலந்ததும், அதிகார வர்க்கத்தில் தங்களுக்கு ஆதரவானவர்களை வைத்ததும், நிகழ்வுகளுக்கு உரமேற்றிய உலகமய நெருக்கடியும் ஆகும்.

உதாரணமாக பாபர் மசூதி இடிப்பை நிகழ்த்திய குற்றவாளிக் கூட்டணியை லிபரான் கமிஷன் கீழ்கண்டவாறு பட்டியலிடுகிறது.

 அரசியல் அதிகார முகமுடியுடன்: அடல் பிகாரி வாஜ்பாய் (முன்னாள் பிரதமர்), எல்.கே.அத்வானி (முன்னாள் துணைப் பிரதமர்), தாவு தயால் கன்னா (பாஜக), கல்யாண் சிங் (அப்போதைய உ.பி. முதல்வர்), கல்ராஜ் மிஸ்ரா (பாஜக), எம்.லோதா (பாஜக), சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக), விஜயராஜே சிந்தியா (பாஜக), ஸ்ரீசந்தர் தீட்ஷித் (பாஜக), சங்கர் சிங் வகேலா (அப்போதைய குஜராத் பாஜக தலைவர்; இப்போது காங்கிரஸ் மத்திய அமைச்சர்), ஆர்.கே.குப்தா (அப்போதைய உ.பி. நிதியமைச்சர்), ராம்சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக), ராஜேந்திர குப்தா (அப்போதைய உ.பி. அமைச்சர்), சூரிய பிரதாப் சாகி (அப்போதைய உ.பி. அமைச்சர்), பிரமோத் மகாஜன் (பாஜக), முரளி மனோகர் ஜோஷி (பாஜக), லால்ஜி தாண்டன் (அப்போதைய உ.பி. மின்துறை அமைச்சர்), லல்லு சிங் சவுகான் (அப்போதைய அயோத்தி எம்எல்ஏ), பரம்தத் திவிவேதி (அப்போதைய உ.பி. வருவாய்த்துறை அமைச்சர்), பிரபாத் குமார் (அப்போதைய உ.பி. முதன்மை உள்துறை செயலாளர்), 

 மதவாத அரசியலை கலச்சாரர அரசியல் என்ற முகமுடியுடன் : உமாபாரதி (விஎச்பி), வினய் கத்யார் (பஜ்ரங் தள்), பி.பி.சிங்கால் (விஎச்பி), தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ்), குர்ஜான் சிங் (விஎச்பி), கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்), எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸ்எஸ்), ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்), சுதர்சன் (ஆர்எஸ்எஸ் தலைவர்),  குஷபாவ் தாக்கரே (ஆர்எஸ்எஸ்), மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா), மகந்த் நித்யகோபால் தாஸ் (ராமஜென்மபூமி நியாஸ் தலைவர்), மகந்த் பரமஹம்ஸ் ராம்சந்தர் தாஸ் (விஎச்பி), ஓம் பிரதாப் சிங், ஓங்கார் பாவே (விஎச்பி), பிரவீன் தொகாடியா (விஎச்பி), புருஷோத்தம் நாராயண் சிங் (விஎச்பி), பேராசிரியர் ராஜு பையா (ஆர்எஸ்எஸ்), ராம்லால் வேதாந்தி (சந்த் சமாஜ்), சாத்வி ரிதம்பரா (சந்த் சமாஜ்), ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத்), ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர் (விஎச்பி), அசோக் சிங்கால் (விஎச்பி தலைவர்), சுவாமி சின்மயானந்த் (விஎச்பி), சுவாமி சச்சிதானந்த சாட்ஷி (விஎச்பி), சுவாமி சத்மித் ராம்ஜி (சந்த் சமாஜ்), சுவாமி சத்தியானந்த் ஜி (சந்த் சமாஜ்), சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்), விஷ்ணு ஹரி டால்மியா (விஎச்பி), பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத்), பைகுந்த் லால் சர்மா (விஎச்பி), 

 ஆதரவு கள கொலையாளிகள் : பால் தாக்கரே (சிவசேனா தலைவர்), ஜெய் பகவான் கோயல் (சிவசேனா), மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா), மோர்பந்த் பிங்கலே (சிவசேனா), சதீஷ் பிரதான் (சிவசேனா), யோத் நாத் பாண்டே (சிவசேனா) 

 அதிகார வர்க்க குற்றவாளிகள் : ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி.), அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசாபாத் கூடுதல் எஸ்.பி.), அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்), சீத்தாராம் அகர்வால் (மாவட்ட ஆணையர்), ஸ்ரீவத்சவா (பைசாபாத் மாவட்ட ஆட்சியர்), சம்பத் ராய் (அயோத்தி நகர கட்டுமானப் பிரிவு மேலாளர்), டி.பி.ராய் (பைசாபாத் மூத்த எஸ்.பி.), திரிபாதி (உ.பி. காவல்துறை டிஜிபி),பாஜ்பாய் (பைசாபாத் போலீஸ் டிஐஜி), சக்சேனா (அப்போதைய உ.பி. தலைமைச் செயலாளர்).

 இந்தக் கூட்டணியால்தான் மிகப்பெரும் மதவெறிக் கலவரங்களுக்கு காரணமாகிய நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த பாபர் மசூதி இடிப்பு குறித்து 17 ஆண்டுகள் விசாரணை நடத்திய லிபரான் கமிஷன் கடந்த (2009) ஜூன் மாதம் 30-ம் தேதி தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தது. அதில்தான் மேற்கண்ட 68 நபர்களும் குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இன்னும் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் இருக்கக் கூடும். 900 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக தவிர இதர எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 24ம் தேதி மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையிலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்தார்.
 
 பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சுதர்சன், குஷபாவ் தாக்கரே, பாஜக தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, பிரமோத் மகாஜன், விஜயராஜே சிந்தியா மற்றும் 11 அதிகாரிகள் உட்பட 68 பேருக்கு தொடர்பு இருப்பதாக லிபரான் கமிஷன் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதுடன் நிற்கவில்லை. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தும் இத்தகைய நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை மத்திய அரசு இயற்ற வேண்டுமென்றும் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கையுடன் ப.சிதம்பரம் தாக்கல் செய்த நடவடிக்கை குறித்த அறிக்கையில், மதவெறி வன்முறைகளைத் தடுக்க வகை செய்யும் மசோதாவைக் கொண்டு வர வேண்டுமென்ற நீதிபதி லிபரானின் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

 ஆனால் அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் குறித்து இந்த அறிக்கை எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. இந்திய நாட்டின் மதச்சார்பற்ற சக்திகள், மதவெறி சக்திகள் மசூதியை இடிக்கப் போகிறார்கள் என தொடர்ந்து சொல்லிவந்த போதும் நரசிம்மராவ் கையில் ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்தும் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்தார். அத்வானியின் ரத யாத்திரையை பீகாரில் லாலு தடுத்து நிறுத்திய அனுபவம் இருந்தும் அவர் செயல்படவில்லை. லாலு என்கிற மாநில முதல்வருக்கு இருந்த அக்கறை கூட இந்த நாட்டின் பிரதமர் நரசிம்மராவுக்கு இல்லை. இதைவிட செயல்படா தன்மைக்கு எடுத்துக்காட்டு வேறெதும் இல்லை. ஆனால் லிபரான் கமிஷன் இதை கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் எப்போதுமே பெரும்பான்மை மதவாதத்திற்கு அடிபணிந்தே சென்றுள்ளது. இதற்கு அவர்கள் மகாத்மா என்று போற்றி வணங்கும் காந்தி கொலை வழக்கே சரியான சாட்சி. அவர்களின் இந்த மிதவாத மதவாதம்தான் நரசிம்மராவை செயல்படாத தன்மைக்கு தள்ளியது. பெரும்பான்மை மதத்தின் வாக்குகள் குறித்து அவர்களுக்கு இருந்த அக்கறை மனித உயிர்களின் மீது இல்லாமல் போனதுதான் படுகொலைகள் அரங்கேறக் காரணமாய் இருந்தது. இப்போதும் அவர்கள் புரிந்து கொண்டதாய்த் தெரியவில்லை. 

 இந்த அறிக்கை தாக்கல் செய்வதற்கு முதல் நாள் `இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக சில பகுதிகள் வெளியிடப்பட்டன. இது நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இந்த அமளியின் நோக்கம் அறிக்கையைவிட அமளியை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டும் என்பதுதான். நமது ஊடகங்களும் அதையே செய்தன. குற்றவாளிகள் யார் என தெரிந்துவிட்டது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மசூதி இடிபடும்போது வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது எதுவும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையே அனைவரிடமும் உள்ளது. எதிர்கால இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைகாணும் தேசமாக நடை போட வேண்டுமெனில் உரிய நடவடிக்கை அவசியம். காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்கள் போராட்டங்களே இதை சாதிக்கும். மக்கள் போராட்டங்களைத் திசைதிருப்ப தினம் தினம் பரபரப்பு செய்திகள் நமக்காக காத்திருக்கும். நாம்தான் செய்திக்குள் உள்ள அரசியலை புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் இங்குதான் அரசியல் தேவையற்றது எனும் ஊடக அரசியல் நடந்துகொண்டே இருக்கிறது.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Pin It