மோடியின் பா.ஜ.க. ஒவ்வொரு நாளும் திணித்து வரும் இந்தி - இந்துத்துவா எதிர்ப்பை, தமிழ்நாடு, கருநாடகம், கேரள மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிவிட்டன. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. குழுக்கள் பா.ஜ.க.விடம் அடங்கிப் போய் சரணாகதி நிலையில் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளிக்கின்றனர். மாட்டிறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் மோடி ஆட்சியின் சட்டத்தை புறந்தள்ளிய கேரள அரசு, அந்த சட்டத்தை நீக்கி மாநிலத்துக்கு தனி சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. வீடுதோறும் மக்களை சந்தித்து இந்த சடங்கு கலாச்சாரங்களை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். ‘குடும்ப பிரபோதன்’ திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் பிரணாய் விஜயன், இது மனுதர்ம திட்டம் என்று அறிவித்தார். மீண்டும் ‘திராவிட நாடு கோரிக்கை எழும்’ என்று கேரளாவில் சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்கிவிட்டார்கள்.
இப்போது கருநாடக முதல்வர் சித்தராமய்யாவும் இந்திக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். கருநாடக அரசு மும்மொழித் திட்டத்தை ஏற்காது. கன்னடம் - ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கைத் திட்டத்தைத் தான் ஏற்கும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி விட்டார். பெங்களூருவில் மாநகர தொடர் வண்டி சேவை சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதற்கான தொடர் வண்டி நிலையங்களில் இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட் டிருந்தன. கன்னடர்களுக்கு இந்தி வேண்டாம் என்று சில கன்னட அமைப்புகள் பெயர்ப் பலகையில் இந்தி அழிப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. 1952ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் தேதி இதேபோல் தமிழ்நாட்டு தொடர் வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகளை தார்பூசி அழிக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். 600 தொடர்வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன. திருச்சி தொடர் வண்டி நிலையத்தில் பெரியார் இந்தியை தார்பூசி அழித்தார். அதே நாளில் தி.மு.க.வும் இதே போராட்டத்தை நடத்தியது. அப்போது ‘தமிழ்த் தேசியர்கள்’ சிலர் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடும் ம.பொ.சிவஞானம், இந்தியை ஆதரித்து பெரியார் இயக்கம் தார்பூசிய பெயர்ப் பலகையில் கெரசினை எடுத்துப்போய் தனது தொண்டர் களுடன் சென்று தாரை அழித்து மீண்டும் இந்தி எழுத்துகளைப் பளிச்சிட வைத்தார். பெரியார் இயக்கம் நடத்திய இந்தப் போராட்டத்துக்குப் பிறகுதான் தமிழக இரயில் நிலையங்களில் தமிழில் பெயர் எழுதுவது முதலிடம் பிடித்தது.
இப்போது பெங்களுரில் தொடங்கப்பட்ட மாநகரத் தொடர் வண்டி சேவை மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் ‘பெங்களூரு பெருநகர தொடர்வண்டி வாரியம்’ என்ற அமைப்பின் கீழ் இயங்குகிறது. இதன் தலைவர் மாநில முதல்வர் சித்தராமய்யா. இந்த தொடர்வண்டி சேவைத் திட்டத்துக்கு மாநில அரசு 50 சதவீதமும், மத்திய பா.ஜ.க. ஆட்சி 50 சதவீதமும் முதலீடு செய்துள்ளன. இந்த முதலீட்டு வாய்பைப் பயன்படுத்தி பெயர்ப் பலகைகளை இந்தியிலும் எழுத வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் நரேந்திரசிங் தோமர் என்பவர் இந்தியிலும் எழுத உத்தரவிட்டார்.
கன்னடர்கள் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் மாநில முதல்வர் சித்தராமய்யா தலையிட்டு இந்தி எழுத்துக்களை அழித்து விடுமாறு வாரியத்துக்கு அதன் தலைவர் என்ற முறையில் உத்தரவிட்டதோடு மத்திய பெருநகர வளர்ச்சித் துறை அமைச்சருக்கும் இந்தியை ஏற்க முடியாது என்று கடிதம் எழுதி இரு மொழிக் கொள்கையே எங்கள் கொள்கை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். “மத்திய அரசு 50 சதவீத முதலீடு செய்திருந்தாலும், மாநில அரசின் நிதி பங்களிப்பு கூடுதலானது. திட்டத்துக்கான முழுமையான பாதுகாப்பையும் மாநில அரசே வழங்குகிறது. இதற்காக நிதி நிறுவனங்களிடமிருந்து இத் திட்டத்துக்கு பெறப்பட்ட கடன் தொகையை திருப்பி அளிக்கப் போவதும் மாநில அரசுதான். இந்த சேவையில் இழப்பு ஏற்பட்டால் அதைத் தாங்கப் போவதும் மாநில அரசுதான். எனவே, இத் திட்டத்தில் இந்தியைத் திணிக்கும் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்தாக வேண்டும். எங்கள் நாட்டில் மக்களும் அறிஞர்களும் கலை இலக்கியவாதிகளும் மும்மொழித் திட்டத்தை எதிர்க்கிறார்கள். இந்தி எங்கள் பண்பாட்டுக்கு எதிரானது என்று கருதுகிறார்கள். ‘இந்தி’யில் எழுதினால் அது எங்கள் மக்களுக்கும் புரியாது, எங்கள் மக்களின் கலாச்சார மொழி உணர்வுகளை மதிக்க வேண்டியது எங்கள் கடமை” என்று கருநாடக முதல்வர் தனது கடிதத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டே அண்ணா முதலமைச்சராக இருந்தபோது இருமொழித் திட்டமே தமிழக அரசின் மொழிக் கொள்கை என்று அறிவித்து விட்டார். இந்தியாவின் ஆட்சி மொழி என்று அரசியல் சட்டம் அறிவித்துள்ள இந்தியை இந்தியாவின் இறையாண்மைக் குள் தமிழ்நாடு இருந்தாலும் இந்தியை ஏற்காது என்று அறிவித்து விட்டது. விருப்பமுள்ளவர்கள் இந்தி மொழி உள்பட எந்த மொழியையும் படிக்கலாம்; அது தனிப்பட்ட உரிமை.
இந்தி பேசும் மாநிலங்களை பெரும்பான்மையாகக் கொண்டு இந்திய ஆட்சி நடக்கிறது என்பதற்காக தமிழ்நாடு வேற்று மொழிக்கு ஒருபோதும் அடிமைப் பத்திரம் எழுதித் தர முடியாது என்பதே 1967ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பின்பற்றி வரும் உறுதியான மொழிக் கொள்கை.
• இந்தியோடு - இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் நீடிக்கும் என்று அரசியல் நிர்ணய சபையில் உறுதி தரப்பட்டது.
• இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற கொள்கை குறித்து அரசியல் நிர்ணய சபையில் 1949 ஆகஸ்ட் 22, 23, 24 தேதிகளில் கடுமையான விவாதங்கள் நடந்தன. தமிழ்நாட்டைச் சார்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற பார்ப்பனர்களே கூட. இந்தி ஆட்சி மொழியானால் திராவிட நாடு தனியாகப் பிரிந்து விடும். அதற்கான இயக்கம் தமிழகத்தில் உயிர்த் துடிப்புடன் இருக்கிறது என்று பெரியாரை முன் வைத்துத்தான் இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்துப் பேசினார்.
• இந்தியே ஆட்சி மொழி என்ற கருத்துக்கு ஆதரவாக 74 ஓட்டுகளும் எதிர்த்து 74 ஓட்டுகளும் சமமாக வீழ்ந்தன. அரசமைப்புச் சபைத் தலைவர் இராஜேந்திர பிரசாத் என்ற இந்தி வெறியர் (இவர் காயஸ்தா என்ற உயர்ஜாதிக்காரர் - இந்துத்துவ வெறியர்). தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள ‘இரண்டாவது வாக்களிப்பு உரிமை’ என்ற சிறப்பு உரிமையான, தனது சிறப்பு ஓட்டுரிமையைப் பயன்படுத்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் இந்தியை ஆட்சி மொழியாக்கினார். பிறகு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் நீடிக்கும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது.
• தமிழ்நாட்டில் 1938, 1948, 1965, 1986ஆம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.
• இந்தியோடு ஆங்கிலமும் நீடிக்கும் என்று 1968இல் சட்டப்பூர்வமாக திருத்தம் கொண்டு வரப் பட்டது.
• ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கிலம், தமிழ் என்ற இருமொழித் திட்டம் இருந்ததால் தமிழ் நாட்டுக்கு இந்தி ஆட்சி மொழி என்ற சட்டம் பொருந்தாது என்று இந்திய அரசு அதிகாரபூர்வமாகவே - ஒவ்வொரு ஆணையிலும் அறிவித்தது. 2007ஆம் ஆண்டு ஓசையில்லாமல் இந்த விதிவிலக்கை நீக்கினார்கள்.
இப்போது மோடி ஆட்சி என்ன செய்கிறது?
• இந்தியா முழுமையும் ஒரே நாடு; அது இந்து நாடு.
• இந்தியா முழுமைக்கும் ஒரே பண்பாடு; அது பாரதப் பண்பாடு; அந்தப் பண்பாட்டின் தாய் சமஸ்கிருதம்.
• இந்தியா முழுதும் பசுவை தெய்வமாகப் போற்ற வேண்டும். அதனால் மாட்டிறைச்சி சாப்பிடுவது குற்றம். மாட்டிறைச்சியை வைத்திருந்தாலே கொலை செய்வோம் என்று பசுமாட்டுக் கண்காணிப்பாளர்கள் சட்டங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு கொலை வெறியாட்டம் நடத்துகிறார்கள்.
• தமிழ்நாட்டு மைல் கற்களில் இந்தி எழுத்து; லாரி ஓட்டுனர்களுக்கு எப்படி இந்தி தெரியும்?
• தமிழ்நாட்டின் மத்திய அ ரசு அலுவலகங்களில் வேலை செய்யும் தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் இந்தி படித்தால்தான் பதவி உயர்வு; இந்தி படிக்க தனிப் பயிற்சி.
• தமிழ்நாட்டு சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடம்.
• தமிழ்நாட்டு தொடர்வண்டி நிலையங்களில் இந்தியில் தான் அறிவிப்பு. இது யாருக்குப் புரியும்?
• தமிழ்நாட்டின் அரசு வானொலியில் இந்தி செய்தி; இந்திக்காகவே தமிழ்நாட்டில் தனி ‘எஃஎம்’ (கு.ஆ.) அலை வரிசை; தமிழ் ‘எஃஎம்’ அலைவரிசை நிகழ்ச்சியில் இந்தியில் செய்திகள்.
இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்ற வாதம் சரியா?
• இல்லை; இல்லவே இல்லை.
• இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த பீகாரி களும், உ.பி.காரர்களும் தமிழ்நாட்டில்தான் வேலை நோக்கி படை எடுக்கிறார்கள். ஓட்டல்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், கட்டிட வேலைகள் என்று தமிழ்நாட்டில் வணிக - தொழில் நிறுவனங்களில் இலட்சக்கணக்கில் இந்தி பேசும் இளைஞர்களும் வடகிழக்கு மாநிலத்தவருமே குவிகிறார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் இந்தி பேசாத தமிழ் நாட்டுக்கு ஏன் அவர்கள் வேலை தேடி வருகிறார்கள்?
உயர் பதவிகளில் இந்திக்காரர்கள் ஆக்கிரமிப்பு
தமிழ்நாட்டில் தொடர்வண்டி டிக்கட் பரிசோதகர்கள், மத்திய அரசு நிறுவனங்களான வருமானவரி, சுங்கவரி, கலால் வரி துறைகள், கடவுச் சீட்டு வழங்கும் துறை, அஞ்சலகங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திக்காரர்கள் ஊழியர்களாகவும் அதிகாரிகளும் குவிக்கப்படுகிறார்கள். இதில் திட்டமிட்ட சதிகள் நடக்கின்றன. தமிழே பேசத் தெரியாத வடநாட்டுக்காரர்கள், தமிழ்த் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டு அஞ்சலகங்களில் வேலையில் சேர்ந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தன. தமிழ்நாட்டு அதிகாரிகள், தமிழ் படித்தவர்கள் வேலை வாய்ப்புகளை பறி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்கள் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் நமது தமிழர்களை பார்க்கவே முடியாது. இந்திக்காரர்கள்தான் நிரம்பி வழிவார்கள். இந்தி தெரிந்தால் உள்ளே வா; இல்லாவிட்டால் வெளியே போ என்று நம்மையே தமிழ்நாட்டு மத்திய அரசு அலுவலகங்களிலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்போகும் காலம் வந்து விடும்.
தமிழர்களே நாம் என்ன செய்யப் போகிறோம்?
கட்சியையும் ஜாதியையும் மதத்தையும் பேசிக் கொண்டே நமது உரிமைகளை இழந்து நிற்கப் போகிறோமா?
இந்த விழிப்புணர்வை உங்களிடம் உருவாக்கிடவே இந்தப் பயணம்.