வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகில் உள்ள மேல்பட்டியில் ‘தமிழ்ப்பாண்பாட்டு இயக்கத்'தின் சார்பில் 13.2.2010 அன்று அழகிய பெரியவனின் எழுத்துகள் மீதான விமர்சன அரங்கு நடைபெற்றது. ‘உனக்கும் எனக்குமான சொல்' என்கிற கவிதை நூலுக்கு தமிழக அரசின் பரிசை அழகிய பெரியவன் இவ்வாண்டு பெற்றார். அச்சிறப்பு நிகழ்வையொட்டி இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலக்கியம், பண்பாடு, கல்வி மேம்பாடு, சமூக மாற்றம், தமிழ், மனித உரிமை ஆகிய தளங்களில் கவனம் செலுத்தி இயங்கத் தொடங்கியிருக்கும் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளர்களான உதயகுமார், சேகர், சண்முகம், சீனிவாசன், ஜோதிபாசு, எலிசா, ராஜன்பாபு ஆகியோர் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர். கவிஞர் யாழன் ஆதி, தே. அலெக்சாண்டர், ஜீவாகரன், சண்முகம் சீனிவாசன், மு.சேகர், ஜோதிபாசு ஆகியோர் அழகிய பெரியயவனின் எழுத்துகளை திறனாய்வு செய்தனர்.

புரட்சியாளர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அர்ச்சுணன் தனது வாழ்த்துரையில், ‘படைப்பாளிகளே தமிழின் முகவரிகள்' என்றார். புனிதபாண்டியன், பேராசிரியர் அய். இளங்கோவன் ஆகியோர் தமது வாழ்த்துரைகளில் எழுத்தாளர்கள் சமூக அக்கறையுடன் தொடர்ந்து இயங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். எல். மாறன், கோ. கல்யாணராமன், அருள்திரு. சர்மா நித்தியானந்தம், தே. இளவரசன், பழ. ராஜேந்திர பிரசாத், மறைமலை, ஏனோக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் அழகிய பெரியவனின் பெற்றோர்க்கு சிறப்பு செய்யப்பட்டது. அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் விழாவுக்கு வந்திருந்தது பெருஞ்சிறப்பாக இருந்தது. 

தொன்போஸ்கோ தீபிகா, தமிழ்நாடு அரசு செய்தி ஊடகத்துறை ஆகியவற்றுடன் பன்னாட்டு அமைப்புகள் உள்ளிட்ட மேலும் பதிமூன்று அமைப்புகள் இணைந்து சென்னையில் நடத்திய உலகக் குறும்பட விழாவில் ‘நடந்த கதை' எனும் தமிழ்க் குறும்படம், சிறந்த இந்தியக் குறும்படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளது. ‘நடந்த கதை' அழகிய பெரியவனின் ‘குறடு' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அருள் சங்கர் தயாரித்த இக்குறும்படத்தை பொன். சுதா இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியான இக்குறும்படம், மிகக் குறுகிய காலத்திலேயே மிகவும் கவனிக்கப்படும் படமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக திரையிடப்பட்டு வருகிறது. திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம், விடுதலைக் குயில்கள் கலை இலக்கிய இயக்கம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து இக்குறும்படத்தை பல்வேறு இடங்களில் திரையிட்டு வருகின்றனர். இக்குறும்படம், போளூர் ‘வியா' அமைப்பினர் நடத்திய கிராமிய குறும்பட விழா, திராவிடர் கழகம் பெரியார் திடலில் நடத்திய பெரியார் திரை 2010, கூடல் தென்திசை குறும்பட விழா, திருவள்ளுவர் கலைப்பண்பாட்டு இயக்க குறும்பட விழா ஆகியவற்றில் முதல் பரிசைப் பெற்றிருக்கிறது.

Pin It