தலித் என்பதாலேயே சாதி இந்து ஆண்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகின்ற பெண்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். பெண் என்பதால் அவர்கள் சொந்த சாதி ஆண்களாலும் ஒடுக்கப்படுகிறார்கள். எனவே, ஒரு தலித் பெண் இரண்டு முனைகளிலிருந்தும் கொடுமைகளை சந்திக்கிறார். தலித் பெண்களின் சிக்கல்கள் பிற பெண்களின் சிக்கல்களைக் காட்டிலும் வேறுபட்டவை என்று நீண்ட காலமாக தலித் மக்களுக்கான மனித உரிமைப் போராளிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்து பொதுப்புத்தியால் பீடிக்கப்பட்டிருக்கும் நமது சமூகம், இந்த உண்மையை உள்வாங்காமல் இருக்கிறது. அதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட, தலித் கிறித்துவர்களால் நிர்வகிக்கப்படுகிற ஒரு கல்லூரியிலேயே இவ்வுண்மையை உள்வாங்கவில்லை என்பதுதான் வெட்கக்கேடானது.

வேலூர் ஊரீஸ் கல்லூரிதான் அது. பாரம்பரியம் மிக்கதும், நூற்றாண்டைக் கடந்ததுமான அக்கல்லூரியில்தான் – ஒரு தலித் மாணவி வன்கொடுமைக்கும், பாலியல் கொடுமைக்கும் அண்மையில் உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கொடுமை நடந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் பொதுமக்கள் மத்தியிலும், மதப்பீடங்களின் மத்தியிலும் சலனமே இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆகஸ்ட் 28 அன்று இரவு ஏழரை மணியளவில், ஊரிஸ் கல்லூரியின் தமிழ்த்துறை விரிவுரையாளர் மணிவண்ண பாண்டியன் மாணவியர் விடுதிக்குச் சென்றார். கல்லூரி விடுதி இருக்கும் ‘டிபோர்' வளாகத்திலேயே விடுதி காப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரின் வீடுகள் இருக்கின்றன. மணிவண்ண பாண்டியன் அக்கல்லூரியின் என்.சி.சி. அலுவலராகவும் இருப்பவர். வேறு எந்தக் கல்லூரியிலும் நடக்காத ஒரு விதிமீறல் ஊரிஸ் கல்லூரியில் நடைமுறையில் இருந்துள்ளது. அது, இக்கொடுமை வெளிச்சத்துக்கு வந்த பிறகுதான் தெரியவந்தது. மணிவண்ண பாண்டியனே மாணவியர் விடுதிக்கும் காப்பாளராக செயல்பட்டு வந்திருக்கிறார். மாணவியர் விடுதியில் தனியாக இருந்த ஒரு தலித் மாணவியின் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்ட மணிவண்ண பாண்டியன் அம்மாணவியின் உடையை கிழித்து, வன்புணர்ச்சிக்கு முயன்றார். அம்மாணவி அலறி சத்தம் போட்ட வுடன் அவர் விடுதியிலிருந்து ஓடிவிட்டார்.

பயத்தாலும் அவமானத்தாலும் ஒடுங்கிப் போயிருந்த மாணவி, விடுதி வளாகத்திலேயே இருந்த கல்லூரி முதல்வரின் வீட்டுக்குச் சென்று புகார் செய்தார். முதல்வர் டேனியல் எழிலரசு மறுநாள் விடுதிக்கு வந்து விசாரிப்பதாகச் சொல்லி மாணவியை அனுப்பிவிட்டார். ஆனால் அவர் மறுநாள் காலை சொன்னபடி விடுதிக்கு வரவில்லை. அன்று மாலை வந்து மாணவிகளை சந்தித்த கல்லூரி முதல்வர், ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலயத்துக்குப் போய்விட்டதாகவும், மாணவியர் ஒழுக்கத்துடனும், போராடாமலும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு ஜெபம் செய்து விட்டுப் போய்விட்டார்.

மாணவிகளுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற வேண்டி சக மாணவர்களின் உதவியை அவர்கள் நாடினர். அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்களை சந்தித்தும் உதவி கோரினர். பாதிக்கப்பட்ட மாணவியை, இளங்கோவன் திங்கட்கிழமை (31.8.2009) அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரனிடம் அழைத்துச் சென்றார். மாவட்ட ஆட்சித் தலைவர் மிகுந்த அக்கறையுடன் அம்மாணவியிடம் விசாரித்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜா திருவேங்கடத்திடம் மாணவியை அனுப்பி வைத்தார். சமூக நலத்துறை அலுவலர் சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று, அதை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பினார். வாக்குமூல அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாணவியிடம் வன்கொடுமை புரிந்த மணிவண்ண பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, காவல் துறை கண்காணிப்பாளருக்கு நேர்முகக் கடிதம் (D.O.) ஒன்றை எழுதினார்.

அடுத்த நாள் (1.9.09) குற்றமிழைத்த விரிவுரையாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கல்லூரி முதல்வர், துணை முதல்வர், காசாளர் ஆகியோரைப் பதவி நீக்கம் செய்யக் கோரியும், மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும் மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் வாயில்களைப் பூட்டிய மாணவர்கள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் கல்லூரிக்குள்ளாகவே, தன்னெழுச்சியுடன் இவ்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பட்டாபி தலைமையில் காவலர்கள் அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

போராடும் மாணவர்களை, வெளியிலிருந்து வந்த மணிவண்ணபாண்டியனின் ஆட்களும், அவருக்கு ஆதரவு தரும் வழக்குரைஞர் சவுந்தரராஜனும் மிரட்டியதோடு, வெளியாட்களும், ஆசிரியர்கள் இருவரும் தாக்கினர். கல்லூரியில், வேதியியல் துறைக்கு எதிரில், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முன்பாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மணிவண்ண பாண்டியனை கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும் மாணவர்கள் விடுத்த கோரிக்கை கல்லூரிக்குள்ளிருந்த யாராலும் செவிமடுக்கப்படவில்லை. போராட்டம் வலுக்க, கோட்டாட்சியரும், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளரும் மருத்துவ விடுப்பில் இருந்த பேராசிரியர் அய். இளங்கோவனை அழைத்து, மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் பெறப்பட்டு, மணிவண்ணபாண்டியன் கைது செய்யப்பட்டார்.

மணிவண்ணனை கல்லூரி நிர்வாகம் பிணையில் எடுத்ததுடன், அவருக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து வருகிறது. ‘வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒழுக்கங் கெட்டவர். அவர் ஒரு பாலியல் தொழிலாளி. அவரைக் கண்டிப்பதற்கே மணிவண்ணபாண்டியன் விடுதிக்கு சென்றார். அம்மாணவி அதைத் திசைதிருப்பி, ஆசிரியரைக் குற்றவாளியாக்கி விட்டார்' என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. அக்கல்லூரியின் தலைவரும், பேராயருமான ஒய். வில்லியம் அவர்களேகூட மாணவிக்காகப் பரிந்து நிற்காமல், அம்மாணவியை ‘ஒழுக்கங்கெட்டவர்' என சொல்லியிருக்கிறார்.

இச்சிக்கல் தொடர்பாக செப்டம்பர் 2 முதல் 14 ஆம் தேதிவரை மூடப்பட்டிருந்த கல்லூரி, எந்த சங்கடமும் இன்றி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. மாணவர் போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து கூடிய நிர்வாகக் குழு, மணிவண்ணபாண்டியனைத் தற்காலிக பணி நீக்கம் செய்ததுடன் உண்மை அறியும் குழு ஒன்றையும், சமாதானக் குழு ஒன்றையும் அமைத்தது. இக்குழுக்கள் வெறும் கண் துடைப்புக்குத்தான். அவை எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த 14 அன்று நடைபெற்ற ஆசிரியர் பொதுப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர் இளங்கோவன், குற்றமிழைத்த ஆசிரியர் மீது நிர்வாகம் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார். அக்கூட்டத்தில் இச்சிக்கலைத் தொடர்ந்து தமது பதவியைத் துறப்பதாக கல்லூரியின் துணை முதல்வர் மனோஜ் செல்லதுரை அறிவித்தார்.

இக்கொடுமையைக் கண்டித்து மாணவர்களும், ஒரு சில பேராசிரியர்களும் மட்டுமே போராட முன்வந்திருக்கிறார்களே தவிர, அக்கல்லூரியின் நிர்வாகமும், பெரும்பாலான ஆசிரியர்களும், சி.எஸ்.அய். வேலூர் மண்டலப் பேராயமும் எதையுமே செய்ய முன்வரவில்லை. ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான் என்று பேசியும் பிரசங்கித்தும் வருகின்ற அவர்கள், பாதிக்கப்பட்ட ஏழை தலித் பெண்ணுக்காகப் பேச முன்வரவில்லை. வன்கொடுமைக்கு ஆளான பெண், பெற்றோரை இழந்தவராவார். அவர் தனது அத்தையின் அடைக்கலத்தில் இருந்து வருகிறார். பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணைக் கல்லால் அடிக்க வந்தவர்களை நோக்கி, “உங்களில் குற்றம் செய்யாதவர் முதலில் இப்பெண் மீது கல் எறியட்டும்” என்றார் ஏசு. ஆனால் காமவெறிபிடித்த ஓர் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவியை ‘விபச்சாரி' என்று எதிர்ப் பிரச்சாரம் செய்யத் தொடங்கி யுள்ளது கிறித்துவக் கல்லூரி நிர்வாகம்.

நியாயம் கேட்கும் மாணவர்களிடையே உரையாற்றும் அய்.இளங்கோவன்மணிவண்ணபாண்டியன் தனது வழக்குரைஞரான சவுந்தரராஜனுடன் இணைந்து முழு நேரமாக இந்த எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மணிவண்ணபாண்டியனின் மனைவி ஜாஸ்மின், தங்களின் வீட்டில் நுழைந்து மாணவர்கள் சேதப்படுத்தியதாக ஒரு பொய்ப்புகாரை, பாகாயம் காவல் நிலையத்தில் அளித்திருக்கிறார். அப்புகாரில் மணிவண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட மாணவர்கள் சதீஷ் மற்றும் சந்தோஷையே முதல் குற்யறவாளிகளாக சேர்த்திருக்கிறார். வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக, குற்றவாளி மீது உடனடி நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கிறார், மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜா திருவேங்கடமும் இதில் உதவியிருக்கிறார்.

15.9.2009 அன்று கல்லூரி முதல்வர், கல்லூரி செயல்படும் என்று தன்னிச்சையாக அறிவித்தார். இதைக்கண்டு வெகுண்டெழுந்த மாணவர்கள் அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அன்று கல்லூரி ‘காபு' அரங்கத்தில் நடைபெற்ற மாணவர்களின்பொதுப் பேரவைக் கூட்டத்தில் விடுதி மாணவி நிஷா, கல்லூரி முதல்வரிடம் “உங்கள் மகளுக்கோ, சகோதரிக்கோ, மனைவிக்கோ இது போன்றதொரு வன்கொடுமை நடந்திருந்தால் நீங்கள் ஜெபம் மட்டும்தான் செய்வீர்களா? சொல்லுங்க சார்?” என்று கேட்ட கேள்விக்கு முதல்வரிடமிருந்து பதில் ஏதுமில்லை. அரங்கம் நிசப்தமானது.

16.9.2009 அன்று வேலூர் மாவட்ட ‘ஜேக்டோ' அமைப்பினர் மணிவண்ணபாண்டியனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ராணிப்பேட்டை ‘பெல்' நிறுவனத்தின் தலித் மற்றும் பழங்குடியின ஊழியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தைச் சேர்ந்த லோகநாதன், சந்திரசேகர், ரவி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.

இச்சிக்கலில் தொடக்கம் முதலே பேராசிரியர் இளங்கோவன் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆதரவு செயல்பாடுகளோடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘ஆசிரியர் அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை'யும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அக்குழு பேராயர் ஒய். வில்லியம் அவர்களை சந்தித்து, மணிவண்ண பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு தரவும் வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக மாதர் சங்கமும், குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் லதாவும் மாணவிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இச்சிக்கலில் மணிவண்ணபாண்டியனின் ஆதரவு வழக்குரைஞரான சவுந்தரராஜன், அவர் சார்ந்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மணிவண்ணபாண்டியனுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறித்தும், அப்பெண்ணுக்கு ஆதரவாக நிற்கும் பேராசிரியர் இளங்கோவனைக் குறித்தும் கீழ்த்தரமான அவதூறுகளைப் பரப்பி வருவதுடன், பொய்ப்பிரச்சாரத்தையும் செய்து வருகிறார்.

கடந்த வாரம் ஆரணியில் நடைபெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் அய்க்கியப் பேரவையில் வழக்குரைஞர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு செய்த பொய்ப்பிரச்சாரம் எடுபடவில்லை. கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கமே நாம் நிற்க வேண்டும் என்று மாவட்டக் குழு சொன்னதை அவர் ஏற்கவில்லை. அவர் தன்னிச்சையாக ஏற்படுத்திக் கொண்ட ‘டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வழக்குரைஞர்கள் சங்கம்' என்ற அமைப்பின் மூலம் அய். இளங்கோவனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவானவர்களையும் தாக்கி அறிக்கை விட்டிருக்கிறார்.

அந்த வழக்குரைஞரின் பொய்ப் பிரச்சாரமும், அவதூறும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் கவனத்துக்கு இச்சிக்கலின் விவரம் கொண்டு செல்லப்பட்டது. பேராசிரியர் அய். இளங்கோவனும், ‘ஜேக்டோ' செய்தித் தொடர்பாளர் ராமமூர்த்தியும் 23 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்தனர். அனைத்தையும் கேட்டறிந்த திருமாவளவன், கட்சி நிர்வாகிகள் வழியே வழக்குரைஞர் சவுந்தரரõஜனை கண்டித்ததுடன், பாதிக்கப்பட்ட தலித் மாணவிக்கு தமது அமைப்பு துணை நிற்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.

இந்நிலையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம்', ‘வழக்குரைஞர் அணி' மற்றும் ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' – வேலூர் மாவட்டம்” என்ற பெயரில் பேராசிரியர் இளங்கோவனுக்கு எதிராகவும், அவதூறாகவும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகவும், மணிவண்ண பாண்டியனுக்கு ஆதரவாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டு ஊரிஸ் கல்லூரி மற்றும் சி.எஸ்.அய். தேவாலயங்களில் விநியோகிக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

ஆதரவற்ற ஏழை தலித் மாணவிக்கு எதிராக ஆணாதிக்கமும், மத நிறுவனத்தின் சுயநலமும், கல்லூரி நிர்வாகத்தின் தடித்தனமும், சுரணையற்ற மக்களின் அலட்சியமும் நிற்கிறது. ஆயினும் ஆதரவு சக்திகளின் துணையோடு போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கோருவது இதைத்தான் : மணிவண்ணபாண்டியன் எனும் காமுகன் தண்டிக்கப்பட வேண்டும். காமுகனுக்குத் துணைபோகும் கல்லூரி முதல்வர், காசாளர் மீது கல்லூரி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். சுரணையற்ற சுயநலக் கல்லூரி நிர்வாகம் சீரமைக்கப்பட வேண்டும்.

தலித்துகள் அடர்த்தியாக வாழும் வேலூர் மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக அம்மாவட்டத்தின் தலைநகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் ஒரு தலித் மாணவியை, அக்கல்லூரி நிர்வாகமே ‘விபச்சாரி' என்று பட்டம் சூட்டுகிறது; அதைக் கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள் மீதும், 35 ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூக மாற்றத்திற்காகத் தன்னலமற்றுப் போராடி வரும் பேராசிரியர் அய். இளங்கோவனுக்கு எதிராகவும் அவதூறுகளைக் கிளப்பி, பாதிக்கப்பட்ட மாணவியின் பிரச்சினையை திசைதிருப்புகிறது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்காமல் இம்மாவட்ட சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் வெகுண்டெழுந்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை இப்போராட்டம் ஓயாது என்பது மட்டும் உறுதி.

- நல்லான்

Pin It