மதுரை, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத்துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி அவர்கள் அதே கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவிகளிடம் பேசும் உரையாடல் ஒன்று வெளிக் கசிந்துள்ளது. அதில் நீங்கள் கொஞ்சம் வளைந்து கொடுத்தால் உங்களுக்கு 85 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் தர என்னால் முடியும். நாளைய பிஹெச்டி தேர்வுகளிலும் நீங்கள் தேர்வதை இப்போதே நான் உறுதி செய்ய முடியும். மாதாமாதம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு தானாகச் சேர்ந்துவிடும். இன்னும் பெரிய இடத்திற்கு உங்களை உயர்த்திக் கொள்ள இது நல்ல வாய்ப்பு. காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் பொறுப்பில் இருப்பவருக்காகத்தான் பேசுகிறேன். காமராஜர் பல்கலைக்கழகத்தை எல்லா வகையிலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான செட் தேர்வு, தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வகளிலும் உங்களை வெற்றி பெறச் செய்ய முடியும். இதை நீங்கள் பெற்றோருக்குத் தெரிந்தும் செய்யலாம் தெரியாமலும் செய்யலாம். பெற்றோரிடமும் பேசுங்கள் என்கிறார்.

nirmala devi

 கல்வி கூடங்களில் இது போன்ற பாலியல் சீண்டல்கள், அணுகுமுறைகள் இதற்கு முன்னும் நடந்துள்ளன. அப்படி நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பிறகாவது அதற்கான காரணங்களைக் களையவும் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கல்வி நிலையங்கள் என்ன செய்துள்ளன என்ற கேள்வி இங்கே முதன்மையானது. இதற்கு பதிலளிக்கும் பொறுப்பில் உள்ள பள்ளிக் கல்வி அமைச்சகம் இதற்காக இதுவரை விடுத்துள்ள அறிக்கை, எடுத்த நடவடிக்கை ஏதாவது உண்டா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தது கடும் கண்டனத்துக்குரியது. அவரின் பேராசிரியர் பதவி நிரந்தரமாகப் பறிக்கப்பட வேண்டும்.இதில் நமக்கு எவ்வித மாற்றோ தடுமாற்றமோ இல்லை. அதேநேரம் சிலவற்றை இந்தச் சமூகத்துக்குச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பேராசிரியர் நிர்மலாதேவி புகைப்படம் இன்று அத்துணை ஊடகங்களிலும் செய்திதாள்களிலும் சமூக வலைதளங்களிலும் நிரம்பிவழிகின்றன. இதற்கு முன் பலவிதமாகப் பாலியல் தொல்லைகள் தந்த ஆண் ஆசிரியர்களின் புகைப்படங்கள் இந்த அளவிற்குக் காட்டப்பட்டதே இல்லை. பொருளியல் இலாபம் தவிர இதில் எல்லாப் பலனும் அடையப் போகிறவர்கள் அவரை ஏவிய ஆண்களே! அதுவும் உயர்ந்த மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் ஆண்களே! அவர்கள் யாரெனக் கண்டறிந்து, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் உறுதியான பிறகேனும் இந்த ஊடகங்கள் அந்த ஆண்கள் மீது இந்தளவு வெளிச்சம் பாய்ச்சுவார்களா என்று பார்ப்போம். ஆங்கில செய்தி ஊடகங்கள் கூட நிர்மலா தேவியின் கண்களை மறைத்து முகத்தை வெளியிடுகிறார்கள். தமிழ் ஊடகங்கள் அது குறித்து எந்த அறத்தையும் பின்பற்றவில்லை என்பது மிகுந்த வலி ஏற்படுத்துகிறது.

நாளை குற்றம் உறுதியான பின் நிர்மலா தேவியைத் தூக்கிலிடப் போகிறோமா என்ன? அனைத்திலிருந்தும் மீண்டு மீண்டும் இந்த சமூக வாழ்வில் அவரும் கலக்கப் போகிறவர்தான். தண்டனைகள் மனித அறம் மீட்கும் நடவடிக்கை தவிர வேறில்லை. அப்படி வாழப்போகிறவர் என்பதை உணர்ந்து இப்போதிருந்தே செயல்பட வேண்டும். அவருக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தக் குற்றமும் செய்யாமல் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதைக் கருதிப் பார்க்க வேண்டும். அவர்கள் கூனிக்குறுகி வாழ்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. கடைசிக்கு அவர்களை மனதில் நிறுத்தியாவது ஊடகங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். எல்லாம் கைமீறிப் போய்விட்டது என்றாலும் இப்போக்கு கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.

      நிர்மலா தேவி அவர்கள் சென்ற 16 ஆம் நாள் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்தளவு இவரால் அந்த மாணவிகளுக்குச் செய்துதர முடியும் என்றால் அந்த உயர் பொறுப்பில் உள்ள காமராஜர் பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர் யார்? அல்லது யார் யார்? ஆளுநருக்கு எவ்வளவு அருகில் நின்று காணொளி எடுக்கிறேன் என்றால் செல்வாக்கைப் புரிந்து கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார். காமராஜர் பல்கலைக்கழக உயர் பொறுப்பில் இருப்பவர்களின் காம இச்சையைத் தீர்க்க தன் மாணவிகளை இணங்கச் செய்யும் முயற்சியில் உதவிப் பேராசிரியர் ஈடுபடுகிறார். பல்கலைக்கழக உயர் பொறுப்பில் இருப்பவர்கள் யாருடைய இச்சை தணிக்க இப்படிச் செய்தார்கள். சாதாரணப் பெண்கள் அரசு வேலைக்காகப் பெரும் கனவுகளோடு தேர்வுகளுக்கு முட்டிமோதி படித்து வருகிறார்கள். நன்கு படித்துவிட்டு வேலை கிடைக்காததற்கு முன்பே திருமணம் ஆகி ஒரு பக்கம் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டும் மறுபக்கம் வீட்டு வேலைகள் செய்து கொண்டும் குடும்ப வருவாய்க்கு நம்பிக்கையோடு பணித் தேர்வுக்காக வகுப்புகளுக்குப் போய் வருகிறார்கள். இப்படி பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை நீங்கள் படுக்கைக்கு வாருங்கள் எல்லாம் மிக எளிதாகக் கிடைக்கும் என்று பேரம் பேசப்படுகிறது. அப்படியானால் எவ்வளவு பெரிய கைகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். இதுவரை அந்தப் பெரும் பொறுப்பில் உள்ள மனிதர்கள் வலையில் எத்துணை அப்பாவிப் பெண்கள் வீழ்ந்திருப்பார்கள் என்றும் அஞ்ச வேண்டியுள்ளது. இவ்வளவு அரிப்பு பிடித்தவர்கள் இதுவரைக்கும் சொரியாமல் இருப்பார்கள் என்பது நம்பவதற்கில்லை.

                ஆளுநருக்கு மிக நெருக்கமாக இருப்பதை நிர்மலா தேவி அவர்கள் கோடிட்டுப் பேசுகிறார். இதைப் புரோகித்தே செய்தாரா என்பதைக் கண்டறிந்து சொல்லட்டும். ஆளுநரோடு நெருக்கம் எனக் காட்டிக்கொள்ள முனைவதைப் பார்த்தால் அவர் சொல்லும் அந்த உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆளுநரின் செல்வாக்கில் திளைப்பவர்கள் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இந்தக் காமக் களியாட்டங்களுக்கு ஆளுநரின் நெருக்கங்கள் அவர் பெயர் சொல்லி ஈடுபடும் போது அந்த வளையத்திற்குள் ஆளுநரும் வந்துவிடுகிறார். ஆளுநர் நம்மைக் காப்பார், அவரின் துணை நமக்கு உண்டு என்ற துணிவு அவர்களுக்கு இருப்பதை இவை உறுதி செய்கின்றன. எப்படிப் பார்த்தாலும் இப்படி ஒரு குற்றச்சாட்டில் ஆளுநர் பெயர் அடிபட்டவுடன் தாத்தா ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும்?

முதலில் அறப் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும். இதுதான் முதற்கட்டமாக ஒரு பெரிய மனிதர் செய்திருக்க வேண்டிய கண்ணியமான நடவடிக்கை. ஆனால் 17 ஆம் நாளே செய்தியாளர் சந்திப்பு வைக்கிறார். அவரே விசாரணைக் குழு அமைக்கிறார். விரைவில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். நிர்மலா தேவியை ஆளுநரோடு நேரடியாகப் பேசாத கட்டத்தில் நான் நிர்மலா தேவியைப் பார்த்ததே இல்லை என்கிறார். நான் வகிக்கும் பொறுப்பரிந்து கேள்வி கேளுங்கள் எனக் கடிந்து கொள்கிறார். திருடன் புதருக்குள் இல்லை எனத் திருடனே உளரும் நிலையை இது நினைவுபடுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை.

இதற்கிடையில் நிர்மலா தேவி அவர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். இதில் கண்டறிய வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன. ஆனால், இவர் மாணவிகளை இப்படி ஒரு வழிக்கு அழைத்ததை இனிக் கண்டறிய ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் ஊரே கேட்டுவிட்டது. குற்றத்தின் மூலவர்களை நடுச்சந்தியில் நிறுத்தியாக வேண்டும். ஆனால், குற்றத்தில் முக்கியப் பங்கு வகித்த அதுவும் பேராசிரியர் பொறுப்பின் கண்ணியத்தைச் சிதைத்த இவரின் மீது கூடுதலான நடவடிக்கை வேண்டும். கல்விப் பணியில் இனி அவரின் சேவை தேவையே இல்லை. அவர் முதலில் குற்றம் உணரட்டும். நல்ல விழுமியங்கள் பெற்று மீளட்டும். அதற்கே கூட தண்டனைகள் ஆழமானதாகவும் கடுமையானதாகவும் இருக்க வேண்டும்.

 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தர காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் செல்லத்துரை கணிதத்துறைப் பேராசிரியரின் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார். செல்லத்துரை அவர்கள் தில்லியில் நின்று இது குறித்துப் பேசும் போது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்களை நிர்மலா தேவி குறிப்பிடுகிறார். அவரின் உள்நோக்கம் கண்டறியப்பட வேண்டும் என்கிறார். விசாரணைக் குழு அமைத்தவர் அதற்கு முன்னமே தீர்ப்பையும் வழங்கிவிட்டார். தனது பல்கலைக்கழக உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஆளுநரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள். நிர்மலா தேவி அவர்கள் உள்நோக்கத்தோடு பேசியிருக்கிறார். காவல்துறை அல்லது புலனாய்வு அமைப்பிடம் இவர்களைக் குறிப்பிட்டிருந்தால் அது உள்நோக்கம் எனச் சொல்லலாம். அவர் மாணவிகளிடம் ரகசியமாகப் பேசும்போது இந்தப் பெரிய மனிதர்களைக் குறிப்பிடுவது எப்படி உள்நோக்கமாகும். எப்படியோ விசாரணைக் குழு அமைத்தவர் தீர்ப்பை அல்லது தீர்ப்பின் கோணத்தை முன்னமே முடிவு செய்துவிட்டார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை ஆளுநரே வேந்தர் ஆவார். விசாரணை குழு ஆளுநரின் கவனமின்றி அமைக்கப்பட்டதை ஆளுநரே குறிப்பிடுகிறார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். சந்தானம் தலைமையில் ஆளுநர் ஒரு விசாரணைக் குழு அமைத்துள்ளார். ஆளுநர் மீது ஒரு பெருத்த சந்தேகம் உள்ள கட்டத்தில் அவரே ஒரு விசாரணைக்கு வழி காட்டுவதென்பது, சம்மு காசுமீரில் சிறுமி ஆசிபா கோயிலினுள் வைத்து கடுமையான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக அதை சிபிஐ க்கு மாற்ற பாஜக பட்டபாட்டுடன் ஒப்பிடத்தான் வேண்டியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் மேலோங்கி நிற்கும் போது நீதி துறையும் ஆளும் வர்க்கத்திற்குச் சார்பாக இருக்கும் என பெரியார் கூறியது நினைவுக்கு வருகிறது.

காமராஜர் பல்கலைகழக நிர்வாகத்தின் மீது குற்றம் படிந்திருக்கும் நிலையில் அதன் துணைவேந்தர் செல்லத்துரையே விசாரணைக் குழு அமைப்பது அறமில்லை. அவரும் விசாரணைக்கு உட்பட வேண்டியவர். அவர் எப்படி விசாரணை நடத்த குழு அமைக்க முடியும். அதேபோல்தான் ஆளுநரும். ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை. டிஜிபி ராஜேந்திரன் அவர்களும் சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார். எல்லாம் நடக்கட்டும். இங்கே அனைத்தையும் விட முக்கியம் நிர்மலா தேவியின் உயிர்!

பொது மக்கள் கூடும் தொடர்வண்டி நிலையத்தில் அத்தனை பேர் முன்னிலையில் சுவாதி என்ற பெண் கொடூராமாகக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் எந்த உண்மைகளும் கண்டுபிடிக்கப்படாமல் அதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவரும் தற்கொலை என்ற பெயரில் வழக்கையே கொலை செய்தார்கள். வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என நாம் கருதினால் ஆளும் வர்க்கம் வழக்கையே கொலை செய்கிறது. வழக்குக் கொலைக்கு வழக்கின் உயிர் சாட்சி கொலை செய்யப்பட வேண்டும். நிர்மலா தேவி அவர்கள் தேசிய கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் என்று வாய் திறந்திருக்கிறார். தனது வழக்குரைஞரிடம் சிறைக்குள் எனக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக அச்சம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் பதற்றமும் எச்.ராஜா கொண்டிருக்கும் கலவரமும் இது அதிகாரத்தின் கொடுமுடியை எட்டும் என்ற சந்தேகத்தை வலுவாகியுள்ளன.

 இந்த வழக்கு நேரடியாக அதிகாரவர்கத்தில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்டது என்பதால் சென்னை உயர்நீதி மன்ற மேற்பார்வையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும். அதைவிட பேராசிரியர்சிவக்குமார் அவர்கள் முன்மொழிந்துள்ளது போல் திரு வசந்திதேவி அவர்களைக் கொண்டு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். திரு சகாயம், அரி.பரந்தாமன் போன்ற நேர்மையாளர்கள் தலைமையில் கூட அமைக்கலாம். அதற்கு நீதிமன்றம் தானே முன்வந்து வழிவகை காண வேண்டும். அதை நோக்கி நாம் குரல் எழுப்ப வேண்டும்.

                உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகியின் கீழ் நடக்கும் இந்துத்துவா அத்துமீறல்கள் பெண்களுக்கு எதிராக எப்படிக் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்கூடாக பார்க்கிறோம். சம்மு காசுமீரிலும் இந்துத்துவ பாசக எப்படி இந்துத்துவப் பாலியல் கொடூரத்தைக் காக்க நிற்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது நீதிமன்றம் வரை தொடர்வதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழக அரசு இவர்களால் நடத்தப்படும் அரசுதான் என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை. நிர்மலா தேவி பாசக உறுப்பினர், பாசக ஆளுநர், பாசகவினரின் பதற்றம் இது இந்துத்துவத்திற்கு எதிரான வழக்கு. இதில் பாசகவின் தன்மானமும் எதிர்காலமும் அடங்கியுள்ளது. இதில் எந்த எல்லை வரைக்கும் பாசக போகும் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.

நிர்மலா தேவி அவர்களைக் கைது செய்து ஒரு இரவு முழுவதும் விசாரணை நடந்துள்ளது. இந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள், அந்த உரையாடல்கள் தேவை ஏற்படின் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும். பொது மக்களுக்கு உண்மைகள் அப்படியே வெளிக் கொணரப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நிர்மலா தேவியின் உயிர்க்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது. அதுவே இந்த வழக்கின் ஆதாரம். நிர்மலா தேவியின் உயிர் காப்போம் என்பதே நமது குரலாக ஒலிக்கட்டும்.

பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகள் இவற்றில் பயிலும் மாணவர்கள் எதிர்காலச் சமூகத்தின் வேர்கள். அந்த வேர்களைப் பொசுக்கும் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை. மாணவிகளின் வறுமைச் சூழலைப் பயன்படுத்தி இப்படிச் செய்வது அவர்களை நஞ்சாக்கி அதன்வழி சமூகத்தை நஞ்சாக்கும் குற்றம். துணைவேந்தர்களும் வேந்தரும் இனி பல்கலைகழகங்களுக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டவர்கள். இதுவரைக்கும் துய மனிதர்களாய் இயங்கியவர்களுக்கும் இவர்கள் மூலம் அவப்பெயர் ஏற்படுகிறது. இனி துணைவேந்தர்கள் பேராசிரியர்களின் ஒழுக்கம் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும். இந்தப் பதவி நியமனங்களில் மக்கள் கண்காணிப்பு இருந்தாக வேண்டும். அவர்களைப் பரிந்துரைப்பவர்கள் மக்களால் நன்கு அறியப்பட்ட, மக்கிளிடம் நற்பெயர் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்தச் சமூகக் கண்காணிப்புக்கு உரிய வழிவகை காண வேண்டும். அடுத்தத் தலைமுறையை இந்தப் பெரிய மனிதர்களிடம் இருந்து முதலில் காக்க வேண்டும். இந்த மாணவிகள் அச்சமின்றி இதை வெளிக்கொணர்ந்தது பாராட்டுக்குரியது. பொதுவாக ஒவ்வொரு கல்லூரி பல்கலைகழக மாணவர்களும் அரசியலாக்கப்பட வேண்டும். முற்போக்கு அரசியலுக்குள் இவர்களைக் கொண்டு வந்து சேர்த்தால் எந்தக் கொம்பனும் இப்படி மாணவிகளை அணுகவும் அஞ்சுவான். ஒவ்வொருவரும் அரசியலாவோம். குறிப்பாக மாணவிகள் இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய அரசியல் பயில வேண்டும். அதற்கு பெண்கள் அமைப்புகள் விரிந்தகன்று களப் பணியாற்ற வேண்டும். அதை நோக்கி வேகமாய் முன்னேறுவோம்!

- சுதா காந்தி, மனிதி

Pin It