வரவேற்பு வைபவங்கள் எல்லாம் முடிந்த பிறகு நமசிவாய வைத்தியரின் வீட்டுக்குள்ளே மாமல்லரும் பரஞ்சோதியும் பிரவேசித்தார்கள்.

பல்லவ சாம்ராஜ்யத்தின் குமார சக்கரவர்த்தி திடீரென்று தங்கள் சின்னஞ்சிறு இல்லத்துக்குள் பிரவேசிக்கவே, அந்த வீட்டாரெல்லோரும் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்கள். தளபதிக்குரிய வீர உடை தரித்திருந்த காரணத்தினால் பரஞ்சோதியை நிமிர்ந்து பார்த்துப் பேசக்கூட அவர்களுக்குக் கூச்சமாயிருந்தது. பரஞ்சோதிக்கோ அதைவிடக் கூச்சமாயிருந்தது.

கூடத்தில் போட்டிருந்த ஆசனம் ஒன்றில் யாரும் சொல்லாமல் தாமே மாமல்லர் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். நிலைமையை ஒருவாறு அறிந்து கொண்டார். கண்களில் கண்ணீர் ததும்ப நின்ற மூதாட்டிதான் பரஞ்சோதியின் தாயார் என்று ஊகித்துத் தெரிந்து கொண்டு, "எங்கள் வீர தளபதியைப் பெற்ற பாக்கியசாலியான தாயைத் தரிசிக்க வேண்டும் என்று எனக்கு எவ்வளவோ ஆவலாயிருந்தது; அந்த பாக்கியம் இன்று கிட்டிற்று!" என்று சொல்லிவிட்டு பரஞ்சோதியைப் பார்த்து, "தளபதி! இது என்ன? அன்னைக்கு நமஸ்காரம் செய்யும். தொண்டை மண்டலத்துக்குப் போனதனால் மரியாதை கூட மறந்து போய்விட்டதென்றல்லவா நாளைக்கு எல்லாரும் குறை சொல்லுவார்கள்?" என்றார்.

உடனே பரஞ்சோதி முன்னால் சென்று அன்னையின் பாதங்களில் நமஸ்காரம் செய்தார். நமஸ்கரித்த குமாரனை வாரி எடுத்து உச்சி முகர வேண்டுமென்ற ஆசை அந்த அம்மாளுக்கு எவ்வளவோ இருந்தது. ஆனால் குமார சக்கரவர்த்தி அங்கு வீற்றிருந்ததும், தன் குமாரன் போர்க்கோல உடை தரித்திருந்ததும் அவளுக்குத் தயக்கத்தை உண்டு பண்ணிற்று. பிறகு, நமசிவாய வைத்தியருக்கும் பரஞ்சோதி நமஸ்காரம் செய்துவிட்டுத் திரும்பி வந்து மாமல்லரின் பக்கத்திலே அமர்ந்து உச்சி மோட்டைப் பார்த்தார்.

நமசிவாய வைத்தியர், மாமல்லரை நோக்கி, "இந்தக் குடிசைக்குத் தாங்கள் வந்தது எங்களுடைய பாக்கியம்!" என்றார்.

மாமல்லர் அவரை நோக்கி, "ஓகோ! நமசிவாய வைத்தியர் என்பது தாங்கள் தானே? தங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். தங்கள் குமாரி என் சிநேகிதரை ரொம்பவும் பயப்படுத்தி வைத்திருக்கிறாள் போலிருக்கிறது. அதோ அந்தக் கதவண்டை நிற்பவள்தான் தங்கள் புதல்வி? பார்த்தால் வெகு சாதுவாகத் தோன்றுகிறாள். ஆனால் பல்லவ சைனியத்தின் தலை சிறந்த தளபதியை, - வாதாபியின் யானைப் படையைச் சிதற அடித்த தீரரை, - கங்க நாட்டானையும், பாண்டியராஜனையும் புறமுதுகிடச் செய்த மகாவீரரை, ரொம்பவும் பயப்படுத்தியிருக்கிறாள். இனிமேலாவது அப்படியெல்லாம் செய்ய வேண்டாமென்று தங்கள் குமாரியிடம் சொல்லுங்கள். பரஞ்சோதியை இங்கே அழைத்து வருவதற்கு நான் என்ன பாடுபட வேண்டியிருந்தது தெரியுமா? கையைப் பிடித்துப் பலாத்காரமாய் அழைத்து வரவேண்டியிருந்தது. அம்மா! தாங்களே கேளுங்கள், தங்கள் புதல்வர் இங்கே வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாரா, இல்லையா என்று! கேளுங்கள், அம்மா!" என்று மாமல்லர் கூறியபோது பரஞ்சோதியின் அன்னை மகனை அன்பும் கர்வமும் ததும்பிய கண்களால் பார்த்து, "குழந்தாய்! மாமல்லர் பிரபு சொல்வது உண்மையா? எங்களையெல்லாம் வந்து பார்க்க உனக்குப் பிடிக்கவில்லையா?" என்றாள்.

"ஆம், அம்மா! பல்லவ குமாரர் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லுவதில்லை. ஆனால் ஏன் எனக்கு இங்கு வந்து உங்களையெல்லாம் பார்க்கப் பிடிக்கவில்லையென்று அவரையே கேளுங்கள்!" என்றார் பரஞ்சோதி.

அன்னை கேட்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளாமல் மாமல்லரே சொன்னார்: "தங்கள் அருமை மகன் காஞ்சிக்குப் போய்க் கல்வி கற்றுப் புலவராகத் திரும்பி வருகிறேன் என்று தங்களிடம் வாக்குறுதி, கூறிவிட்டுப் புறப்பட்டாராம். அந்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லையாம். போனபோது எப்படிப் போனாரோ அப்படியே திரும்பி வந்திருக்கிறார். அதனால் உங்களையெல்லாம் நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாயிருக்கிறதாம் எப்படியிருக்கிறது கதை?"

இவ்விதம் மாமல்லர் சொன்னதும் பரஞ்சோதியின் தாயார் மகனுக்கு அருகில் வந்து உட்கார்ந்து அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, "அப்பா! குழந்தாய்; நீ படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? ஏதோ சிவபெருமான் அருளால் நீ உயிரோடு நல்லபடியாய்த் திரும்பி வந்தாயே அதுவே எனக்குப் போதும். அந்நாளில் உனக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வந்த அண்ணாவிமார்களை நீ அடித்து விரட்டினாயே, அதற்காகவெல்லாம் நான் உன்னை எப்போதாவது கோபித்ததுண்டா?" என்றாள்.

இதைக் கேட்ட மாமல்லர் சிரித்துக் கொண்டே சொன்னதாவது: "என்ன? என்ன? உபாத்தியாயர்களை அடித்து விரட்டினாரா உங்கள் மகன்! நல்ல வேளை! நான் பிழைத்தேன்! இந்தச் சாதுப் பிள்ளைதான் என்னைத் தனக்குப் படிக்கக் கற்றுக் கொடுக்கும்படி தொந்தரவு செய்தார். அவர் சொல்வது உண்மை என்று எண்ணிக் கொண்டு நான் பாடம் கற்பிக்க ஆரம்பித்திருந்தேனானால் என்னையும் அப்படித்தானே அடித்துத் துரத்தியிருப்பார்? பிழைத்தேன்!" என்று சொல்லி மீண்டும் சிரித்தார் நரசிம்மவர்மர்.

பரஞ்சோதி அவரைப் பரிதாப நோக்குடன் பார்த்துக் கூறினார்: "பிரபு! இது ஏதோ சிரிப்பதற்குரிய விஷயமாக நினைக்கிறீர்கள். உண்மையில் அப்படியல்ல. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு ஆகையால், என் தாயார் நான் கல்வி கல்லாமல் திரும்பி வந்திருப்பதைப் பொறுக்கிறாள். ஆனால் என் மாமாவைக் கேளுங்கள். படிப்பில்லாத இந்த மூடனுக்கு அவர் தமது மகளைக் கட்டிக் கொடுப்பாரா என்று கேளுங்கள்!...."

நமசிவாய வைத்தியரும் அந்தப் பரிகாசப் பேச்சில் கலந்து கொள்ள எண்ணி "என்னைக் கேட்பானேன்? கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிற பெண்ணையே கேளுங்களேன்? அவளுக்குச் சம்மதமாயிருந்தால் எனக்கும் சம்மதந்தான்!" என்றார்.

அச்சமயம் ஏதோ கதவு திறந்த சத்தம் கேட்கவே எல்லாரும் அந்தப் பக்கம் நோக்கினார்கள். உமையாள் கதவைத் திறந்து கொண்டு உள் அறைக்குப் போய்க் கொண்டிருந்தாள்.

"எல்லாரும் சேர்ந்து பரிகாசம் செய்தால், குழந்தை என்ன செய்வாள்?" என்று உமையாளின் தாயார் முணுமுணுத்தாள்.

பிறகு நமசிவாய வைத்தியர், சக்கரவர்த்தி குமாரரைப் பார்த்து, "பரஞ்சோதியின் பராக்கிரமச் செயல்களைக் குறித்து அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறோம். அவனால் இந்தச் சோழ நாடே பெருமை அடைந்திருக்கிறது. மறுபடியும் இந்தப் பக்கம் எப்போது வருவானோ என்னவோ என்று எல்லாரும் ஏக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். ஏதோ எங்கள் அதிர்ஷ்டம் இவ்வளவு சீக்கிரத்தில் அவன் இங்கு வரலாயிற்று. அவனோடு தாங்களும் விஜயம் செய்தது, எங்கள் பூர்வ ஜன்ம தவத்தின் பலன் என்றுதான் சொல்ல வேண்டும். புவிக்கரசராகிய தாங்கள் வந்திருக்கும் சமயத்தில் நாவுக்கரசர் பெருமானும் இவ்வூருக்கு வந்திருக்கிறார். இப்பேர்ப்பட்ட நல்ல சந்தர்ப்பம் மறுபடி எங்கே கிடைக்கப் போகிறது? இப்போதே ஒருநாள் பார்த்துச் சுப முகூர்த்தத்தில் விவாகத்தை நடத்தி விடுவோம். உமையாளையும் உங்களுடனேயே அழைத்துப் போய் விடுங்கள்!" என்று நமசிவாய வைத்தியர் கூறி நிறுத்தினார்.

அப்போது மாமல்லர், "பார்த்தீரல்லவா தளபதி! எப்படியும் உமக்குக் கல்வி கற்பித்துப் புலவராக்கி விடுவது என்று வைத்தியர் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிகிறது. வேறு எந்த உபாயமும் பயன்படாமற் போகவே, அவருடைய மகளைக் கொண்டே உமக்குக் கல்வி போதிக்கத் தீர்மானித்திருக்கிறார். ஆகா! கடைசியாக, நீர் அடித்துத் துரத்த முடியாத உபாத்தியாயர் ஒருவர் உமக்கு ஏற்படப் போகிறாரல்லவா?" என்றதும் ஸ்திரீகள் உள்பட எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள்.

பிறகு, குமார சக்கரவர்த்தி நமசிவாய வைத்தியரைப் பார்த்து, "ஐயா! அதெல்லாம் முடியாது. பல்லவ சாம்ராஜ்யத்தின் வீர தளபதிக்குத் தலைநகரத்திலே சக்கரவர்த்தியின் முன்னிலையிலேதான் கல்யாணம் நடைபெற வேண்டும். இது என் தந்தையின் ஆக்ஞை. காஞ்சிக்கு நாங்கள் போனவுடனே ஆள் விடுகிறோம், எல்லாரும் வந்து சேருங்கள். இன்னும் ஒரு விஷயமும் சொல்லி வைக்கிறேன். அப்படி ஒருவேளை உங்களுடைய குமாரி கல்வி கேள்விகளில் வல்ல புலவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தால் அதற்கும் வழி இருக்கிறது. காஞ்சியில் எங்கள் குலகுரு ருத்ராச்சாரியார் இருக்கிறார்; வயது தொண்ணூறுதான் ஆகிறது. தாடி ஒரு முழ நீளத்துக்குக் குறையாது. அவர் அறியாத கலையோ அவர் படியாத ஏடோ ஒன்றும் கிடையாது. அவரை வேண்டுமானாலும் உங்கள் புலமை மிகுந்த மகளைக் கல்யாணம் செய்து கொள்ளச் செய்கிறேன்!" என்று பலத்த சிரிப்புக்களிடையே கூறி விட்டு, "தளபதி! வாரும், போகலாம்! திருநாவுக்கரசரைத் தரிசித்து விட்டு வரலாம்!" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.

மாமல்லரும் பரஞ்சோதியும் நாவுக்கரசர் பெருமானை அவர் தங்கியிருந்த திருமடத்தில் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவுடன், பரஞ்சோதியின் தாயார் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு, "இங்கே வா, தம்பி! ஒரு சமாசாரம்!" என்று உள் அறைக்கு அவரை அழைத்துக் கொண்டு போனாள்.

அங்கே தரையில் படுத்துத் தேம்பிக் கொண்டிருந்த உமையாளைக் காட்டி, "பார்த்தாயா உன்னுடைய பரிகாசப் பேச்சு இந்தப் பெண்ணை என்ன பாடுபடுத்தியிருக்கிறது! இப்படி செய்யலாமா, அப்பா!" என்றாள்.

பரஞ்சோதி மனம் இளகியவராய், "ஐயோ! இது என்ன பழி; நான் ஒன்றும் பரிகாசம் செய்யவில்லையே?" என்றார்.

"செய்ததையும் செய்துவிட்டு இல்லை என்று சாதியாதே! இந்தக் குழந்தை என்ன சொல்லுகிறாள் தெரியுமா? நீ காஞ்சிப் பட்டணத்துக்குப் போய் அரண்மனை உத்தியோகமும் சக்கரவர்த்தியின் சிநேகிதமும் சம்பாதித்துக் கொண்டாயாம். இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள உனக்கு இஷ்டம் இல்லையாம். அதனாலேதான் இப்படியெல்லாம் பேசுகிறாயாம்!"

"ஐயோ! அப்படி இல்லவே இல்லை, அம்மா!"

"இல்லையென்றால் நீயே இந்தப் பெண்ணுக்குச் சமாதானம் சொல்லித் தேற்று. நான் எவ்வளவோ சொல்லியும் இவள் கேட்கவில்லை!" என்று கூறிவிட்டு, பரஞ்சோதியின் தாயார் வெளியேறினாள்.

அன்னையின் கட்டளையைச் சிரமேற்கொண்டு பரஞ்சோதி உமையாளைத் தேற்றத் தொடங்கினார். ஆனால் உமையாள் அவ்வளவு சீக்கிரம் தேறுகிறதாகக் காணவில்லை. வெகு நேரம் பரஞ்சோதி தன்னைத் தேற்ற வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டதாகத் தோன்றியது. தேறுவது போல் ஒருகணம் இருப்பாள், மறு கணத்தில் மறுபடியும் விம்மவும் விசிக்கவும் தொடங்கி விடுவாள். உமையாள் பட்டணத்து நாகரிகம் அறியாத பட்டிக்காட்டுப் பெண்தான். ஆனபோதிலும் தன்னுடைய மனோரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு உபாயம் அவளுக்குத் தெரிந்திருந்தது. பரஞ்சோதி சீக்கிரம் வெளியில் போவதற்கு முடியாத வண்ணம் வெகுநேரம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியத்தை அவள் உண்டு பண்ணிக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு நீளமான நாடகத்துக்கும் ஒரு முடிவு உண்டு அல்லவா? அவ்விதம் இந்தப் பொய்ச் சோக நாடகத்துக்கும் முடிவான மங்களம் பாட வேண்டிய சமயம் வந்த போது உமையாள் பரஞ்சோதியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். தன்னையே அவர் மணந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான்.

அவ்வாறு சத்தியம் செய்து கொடுத்த பின் பரஞ்சோதி கூறினார்: "ஆனால், உமா! ஒன்று சொல்கிறேன், நம் கல்யாணம் உன் தந்தை சொன்னது போல் அவ்வளவு சீக்கிரமாக நடைபெறாது. வெகு காலம் நீ காத்திருக்க வேண்டியிருக்கலாம். என் சிநேகிதர் மாமல்லருக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ, அப்போதுதான் நமது கலியாணமும் நடைபெறும். அவருக்கு முன்னால் நான் இல்லறத்தை மேற்கொள்ள மாட்டேன்!"

"தங்களுக்காக அவசியமானால் யுக யுகமாக வேண்டுமானாலும் காத்திருக்கிறேன்!" என்றாள் உமா.

முந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்
Pin It