தலித் மக்களின் வரலாற்று மாதம் இது. "வரலாறு மனிதனின் மன உறுதியை மட்டுமே நம்பியிருக்கிறது' என்ற ஸ்பானியக் கவிஞன் ஜார்ஜ் குயினின் சொற்களுக்கு ஏற்ப, தலித் மக்கள் தம் வரலாற்றை அகழ்ந்து எடுக்கவும், புதிதாகக் கட்டவும் முனைகிறார்கள். அகழ்ந்து எடுக்க வேண்டியதும்; கட்டப்பட வேண்டியதும்தான் தலித் மக்களின் வரலாறு. காலங்களின் இடிபாடுகளிலும், துரோகங்கள் மற்றும் அழித் தொழிப்புகளின் வஞ்சகத்திலும் அவர்தம் வரலாறுகள் இருட்டாக்கப்பட்டன. இருள் பூசப்பட்ட அவ்வரலாற்றின் ஒரு முனையிலிருந்து சூயனாய் முளைத்தெழும்பி உண்மைகளை வெளிச்சமிட வேண்டிய தேவை இன்று தலித் மக்களுக்கும், அறிவுசாலிகளுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும், தலைவர்களுக்கும் இருக்கிறது.

J.J.Doss
நாகரிகச் சமூகத்தின் முன்னால் ஒரு கதைச் சுருளைப் போல விரிந்து கிடக்கின்றன, வரலாற்றின் பக்கங்கள். அப்பக்கங்களிலே சில தனி மனித முயற்சிகளாலோ, அல்லது ஒரு கூட்டத்தின் முயற்சிகளாலோ பொற்காலமென ஒளியூட்டப்பட்டுள்ளன. சில பக்கங்களின் வரிகளில் இருள் கவிழ்ந்திருக்கிறது. இவைகளெல்லாம் இம்மாதத்தில் புரட்டப்படவும், அலசப்படவும் வேண்டும். வரலாற்றின் குடுவைகளுக்குள் பதப்படுத்தப்பட்டிருக்கும் காலப் பிரேதங்களை மீளவும் பரிசோதனை செய்வது, இம்மாதத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும். வரலாற்றினை இப்படியாக அறுத்துக் கூறுபோடும் வேலைக்கு, ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவரும் இன்று தயாராவது காலத்தின் தேவை. இந்த வரலாற்று மீளாய்வுப் பணிகள் முடுக்கிவிடப்படும் வரை, நிலவும் சமூக நிலைமைகளில் பெரும் மாற்றம் சாத்தியமில்லை.

"சிங்கங்கள் தங்கள் சொந்த வரலாற்றாசியரை உருவாக்கும்வரை, வேட்டையாடப்பட்டவர் கதை வேட்டையாடியவன் புகழ் பாடுவதாக இருக்கும்' என்ற சிணுவா ஆச்சுபேயின் வரிகளை இங்கே நினைத்துக் கொள்ளலாம். இன்று நிலைமை இத்துறையில் மேம்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தலித் மக்களின் வரலாற்று நூல்கள் சில, மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளன. தலித் மக்களின் தொடக்கக்காலப் போராளிகள் பலரது வரலாறுகள் தொகுக்கப்பட்டுள்ளன. தலித் வரலாற்றுத் துறையிலே காத்திரமான ஆய்வுகள் இன்று நடைபெறுகின்றன. இந்த மீளாய்வுப் பணிகளும், வரலாற்றினைத் தொகுத்தெழுதும் பணிகளும், பல்வேறு இடர்ப்பாடுகளைக் கொண்டது. ஆய்வுப் பணிகளில், தலித் வரலாற்று ஆய்வுப் பணி என்பது நெஞ்சுரம் வேண்டி நிற்பது மட்டுமல்லாமல், சலியாத முயற்சியையும், உழைப்பையும் வேண்டுவது.

தில்லி பல்கலைக் கழக விரிவுரையாளரும் ஆய்வாளருமான சகானா (பட்டாச்சார்யா), ஒருமுறை நேர்பேச்சில் சொன்ன செய்தி நினைவுக்கு வருகிறது. ஒரிசா மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள பார்ப்பனர்களின் வாழ்முறையை ஆய்வு செய்வதற்கு அவர் போனபோது, சுமார் அய்நூறு ஆண்டுகளுக்குரிய குடும்ப வரலாற்றுச் செய்திகளை ஆதாரங்களுடன் அம்மக்கள் வைத்திருந்தது, அவருக்குப் பெரும் வியப்பைத் தருவதாக இருந்திருக்கிறது. ஆனால், ஒரு தலித்தின் ஒரு தலைமுறை வரலாறுகூட இங்கே ஆவணங்களோடு இல்லை. புகைப்படங்களோ, குடும்ப நிகழ்வுகளின் எழுத்துப் பதிவுகளோ, நில ஆவணங்களோ எதுவுமே இல்லை. அவைகளைத் தேடிக் கண்டடைவது, ஒரு புதையலைக் கண்டடைவதற்குச் சமம்.

1940 களில் "உதயசூரியன்' என்ற பத்திரிகையை நடத்தியவரும், வடார்க்காடு மாவட்ட தோல்பதனிடும் தொழிலாளர்கள் சங்கத் தலைவரும், பெரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான ஜெ.ஜெ. தாஸ் அவர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்ட முனைந்தபோது, அந்தச் சிரமத்தை உணரமுடிந்தது. ஜோசப் ஜேசுதாஸ் என்கிற ஜெ.ஜெ. தாஸ், வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள வடக்குப் பட்டறையில் பிறந்தவர். பாலாற்றின் கரையை அணைத்தது போல தென்னைகளால் நிறைந்த அக்கிராமம், மிகவும் அழகு வாய்ந்தது. தென்னிந்தியத் திருச்சபை மிஷினரிகளின் மனித நேயச் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டுக் கிறித்துவர்களான குடும்பம் அவருடையது. யோசேப்பு (ஜோசப்), மயாள் என்றே புகழ் பெற்ற கிறித்துவ இணையன் பெயரை தாஸ் அவர்கள் பெற்றோரும் வைத்துக் கொண்டுள்ளனர். அவர் பிறந்த 1902 ஆம் ஆண்டில் ஜான் பாஷ்யம் என்கிற பாதிரியார், அந்த ஊரில் பணியாற்றியிருக்கிறார்.

மிஷினரிகள் தலித் மக்களிடையே செய்த தன்மையான வேலை, அம்மக்களுக்குக் கல்வியை அளித்ததே. அரண்மனைகளிலும், மடங்களிலும், செல்வந்தர்களின் வீடுகளிலும் தலித் மக்களால் தீண்டப்படாதபடி வைக்கப்பட்டிருந்தன ஓலைச்சுவடிகள். படிக்கும் ஒடுக்கப்பட்டவனின் நாவறுக்க கத்திகளைத் தீட்டிக் கொண்டும், கல்வியைக் கேட்கும் ஒடுக்கப்பட்டவனின் காதில் ஊற்ற ஈயத்தைக் காய்ச்சிக் கொண்டும் காலம் இருந்தது. இதை ஊடறுத்துதான் காகிதத்தில் அச்சிடப்பட்ட தமிழின் முதல் புத்தகத்தை தீண்டிப்படிக்கும் பேற்றினை, மிஷினரிகளால் தலித் மக்கள் பெற்றனர். இந்தப் பேறிலிருந்து ஜெ.ஜெ. தாஸ் அவர்களும் தப்பவில்லை.

ஊரின் கிறித்துவப் பள்ளியிலும், குடியாத்தத்தின் மிகப் பழைய பள்ளியான நகராட்சிப் பள்ளியிலும் தனது பள்ளிக் கல்வியை, அவர் முடித்தார். எப்.ஏ. என்றழைக்கப்பட்ட கல்லூரி முன்பருவக் கல்வியை வேலூர் ஊரிசு கல்லூரியிலே படித்தார். எப்.ஏ.வுக்குப் பிறகு அவர் பி.ஏ. ஹானர்ஸ் படித்ததாக சிலர் உறுதியற்றத் தகவல்களைத் தருகின்றார்கள். தாஸ் அவர்களின் உடன் பிறந்த ஒரே அண்ணனான தேவராசன் என்பவன் மகன் சுந்தரேசன், தாஸ் அவர்கள் நல்ல ஊதியத்தில் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றி வந்ததாகக் கூறுகிறார். ஆனால், தாஸ் அவர்களோடு தொழிற் சங்கத்திலே இணைந்து வட்டத் துணைச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய ஆம்பூர் சான்றோர் குப்பத்தைச் சேர்ந்த திரு. ஜெயபால், தாஸ் அவர்கள் நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் என்று கூறுகிறார். தாஸ் அவர்களுக்கு பொதுவுடைமை சிந்தனையில் ஈடுபாடு இருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது, கோலார் தங்கவயலில் தலைமறைவு வாழ்க்கையை நடத்தி விட்டு வந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். தாஸ் அவர்கள் தனது அரசுப் பணியை 1936 இல், தீராத வயிற்று வலி காரணமாக விட்டு விட்டு வந்திருக்கிறார். அவன் இந்தச் சுருக்கமான வாழ்வுப் பகுதியில் அவரைப் பற்றி அதிகமான செய்திகளை நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் இரண்டாம் கட்ட வாழ்வுப் பகுதி, உத்வேகம் கொண்டது. அவருடன் இணைந்து பணியாற்றிய, தலித் மக்களுக்காக தன்னியல்பான உணர்வெழுச்சியோடு சமூகச் சீர்திருத்தப் பணிகளைச் செய்த, இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சில முதிய தலைவர்களால் உற்சாகத்தோடும், ஆத்மார்த்தத்தோடும் அது விவரிக்கப்படுகிறது. நினைவுகளைத் தேக்கிய அவ்விவரணச் சொற்கள், அமிலத்தின் துளிகளைப் போல் நம்முன் விழுந்து பரவுகின்றன.

வட ஆர்க்காடு மாவட்டத்தின் முக்கிய சிறு நகரங்களான வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை ஆகியவற்றில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தோல் பதனிடும் தொழில் நடைபெற்று வருகின்றது. இச்சிறு நகரங்களில் கணிசமாக இருக்கும் இசுலாமியர்கள், இறைச்சிக்காகப் பயன்படுத்தும் ஆடு மாடுகளின் தோல்களை பதப்படுத்தி விற்று வருகிறார்கள். விலங்குகளின் தோல்களைப் பதப்படுத்த தலித் மக்களான ஆதிதிராவிடர்களும், அருந்ததியர்களுமே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இன்றளவும் தொடரும் இவ்வழக்கத்தில், கடும் உடல் உழைப்புடன் சுகாதாரமற்ற சூழலில் மேற்கொள்ளக்கூடிய பணிகளை தலித் மக்களும், மேற்பார்வை மற்றும் இதர வேலைகளை தலித் அல்லாதவர்களும், இசுலாமியர்களும் செய்கின்றனர். மரப்பட்டை, கடுக்காய், சுண்ணாம்பு ஆகியவைகளை பயன்படுத்தி செய்யப்பட்டுவந்த "திரேஸ்' வகை பதப்படுத்தும் முறை, 1970 இல் அறிமுகமான "குரோம்' என்ற வேதிப் பொருள் பதப்படுத்துதலால் பெரும் மாற்றம் அடைந்து, சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு காரணமானது. இன்று முறைப்படுத்தப்பட்டும், பெருமளவில் நவீனமடைந்தும் இருக்கின்ற இத்தொழில், தொடக்கக் காலங்களில் தலித் மக்களின் வியர்வையாலேயே வளர்ந்தது.

பச்சைத் தோல் ஒன்றை உலர்ந்த, பயன்படுத்தக்கூடிய தோலாக மாற்ற சுமார் நாற்பது நாள்களுக்கும் மேலாகும். இத்தொழில் பல்வேறு பணி நிலைகளைக் கொண்டது. நனவு அறுப்பு, சுத்தறுப்பு, தொட்டி, சுண்ணாம்புக்குழி, செல்லா மேட்டு வேலை, இளங்காரம் என்று வழக்குச் சொற்களைக் கொண்டு அழைக்கப்படும் பல்வேறு வேலைப் பிரிவுகளில் பச்சைத் தோலின் முடி நீக்குவதிலிருந்து, மேட்டு வேலை வரை நடைபெறும் வேலைகள் அனைத்தும் கடும் உடல் உழைப்பைக் கோருவதுடன் சுகாதாரமற்ற சூழலில் மேற்கொள்ளப்படுவது.

தொடக்கக்காலங்களில் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட தலித்துகள், முதலாளிகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டதாக வயதான தொழிலாளர்கள் நினைவுகூர்கிறார்கள். அதிகாலமே வேலைக்கு வந்துவிட வேண்டும். நேர அளவும், போதிய விடுறை நாட்களும் கிடையாது. சுண்ணாம்புக்குழியில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு கையுறைகளோ, காலுறைகளோ வழங்கப்படாது. சுண்ணாம்பு அரித்து புண் உண்டானாலும் வேலை செய்வதை நிறுத்தக்கூடாது. தொழிற்சாலைக்குள் இருகுவளை முறை உள்ளிட்ட சாதிய ஒதுக்குமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றன.

வேலைக்கு வர மறுத்த தலித் தொழிலாளர்களை அடித்து இழுத்துவர ஆட்கள் இருந்திருக்கிறார்கள். தலித் தொழிலாளர்களுக்கு தண்டனையாக கழுத்தில் இரும்பு வளையம் போடப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குள்ளே உயரமான உத்திரங்களில் தொழிலாளியைக் கட்டித் தொங்கவிட்டு, கீழே முட்களைப்போட்டு கொளுத்தியுள்ளார்கள். எதிர்க்கும் தொழிலாளர்கள் மேல் தோல்திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தொழிலாளியை சிறைக்கு அனுப்பி விட்டு, அவன் வீட்டிலும் நுழைந்து அழிம்பு செய்திருக்கிறார்கள்.

ராணிப்பேட்டையில் தோல்பதனிடும் தொழிலில் கொத்தடிமை முறை இருந்ததாகவும் சொல்கிறார்கள். தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற கூலியும், வேறு சலுகைகளும் இருந்ததில்லை. 1900 இலிருந்து ஏறக்குறைய 1945 வரையிலும் இந்நிலைமை நீடித்திருக்கின்றன.

dalit meeting
தொழிலாளர் நலனுக்கென பேசுவதற்கு அமைப்புகள் எதுவும் இல்லாதிருந்த காலம் அது. நிலைமைகள் மெல்ல மாற்றம் கொண்டு தொழிற்சங்கம் தோன்றத் தொடங்கியுள்ளது. 1939 ஆம் ஆண்டில் பதிவு பெற்ற சங்கமாக உருவான வடார்க்காடு மாவட்ட தோல்பதனிடும் தொழிலாளர் சங்கம், 1942இல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் பதிவு எண்: 315. 1951 இல் 1287 என்ற புதுப்பிக்கப்பட்ட பதிவு எண்ணுடன் இன்றளவும் இயங்கி வருகிறது. உதயேந்திரத்திலும், வாணியம்பாடியிலும் முதல் கிளைகள் கட்டப்பட்ட பிறகு, மாவட்டம் முழுக்க தோல்பதனிடும் தொழிற்சாலைகள் இருந்த இடங்களில் எல்லாம் கிளைகள் தோற்றம் கண்டிருக்கின்றன. இச்சங்கத்தைத் தொடங்கி, தொழிலாளர்களை முறைப்படுத்த ஜெ.ஜெ. தாஸ் அவர்களும், எம். ஆதிமூலம் அவர்களும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தாஸ் அவர்கள் பெரும் பொறுப்புகளுக்குப் பிறகு, சங்கச் செயல்பாடுகளை திரு. எம். ஆதிமூலம் அவர்களும், அவருக்குப் பிறகு திரு.பி. பெருமாள், திரு.நேசராஜ் போன்றோரும் மேற்கொண்டுள்ளனர்.

ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் முயற்சிகளுக்குப் பிறகு தொழிலாளர்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைகள் குறைந்து, கட்டுக்குள் வந்துள்ளன. தம்மைத் தாக்க வந்த முதலாளிகளின் கையாட்களை திருப்பித் தாக்க, தோலின் சுற்றை அறுக்க பயன்படும் இருபக்கம் பிடி கொண்ட "செல்லா' கத்திகளை தொழிலாளர்கள் சிலர் எடுத்துள்ளனர். பேரணாம்பட்டின் சீர்திருத்தச் செம்மல் என்று அழைக்கப்படும் பி. பெருமாள் அவர்கள், இப்படி ஒருமுறை "செல்லா' கத்தியை எடுத்துக் கொண்டு முதலாளிகளின் கையாட்களை தாக்கப்போனதாக சொல்கிறார் திரு. ராமசாமி. இவர் ஜெ.ஜெ. தாஸ் அவர்களோடு நெருக்கமாக இருந்தவராவார். ஜெ.ஜெ. தாஸ் அவர்கள் வரும் வரை கத்தியைக் கீழே போடமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார் அவர். வடஆர்க்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு. சுந்தர் அவர்கள், தன்னுடைய தந்தையார் நேசராஜ் அவர்களும்கூட, இப்படி எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சொல்கிறார்.

ஜெ.ஜெ. தாஸ் அந்த தொழிற் சாலைக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அச்சிக்கலைத் தீர்த்திருக்கிறார். இச்சம்பவத்தை நினைவுகூறும் பி. பெருமாள் அவர்களின் மகன் திரு. சவுந்தரபாண்டியன், இப்படிப் பல்வேறு சம்பவங்கள் அக்காலங்களில் நடந்ததாகக் கூறுகிறார். மாவட்டத்தில் எந்தத் தோல் பதனிடும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு எதிராக அநீதி நேர்ந்தாலும் ஜெ.ஜெ. தாஸ் அவர்கள், அங்கு விரைந்து போய் தடுத்திருக்கிறார். இந்தச் செயல் பணிகளில், பல முறை முதலாளிகளின் கையாட்கள் தாஸ் அவர்களைத் தாக்க முயன்றிருக்கிறார்கள். தாக்கப்பட்டிருக்கிறார் அவர். அவரைப் பாதுகாக்கவென்று எப்போதும் பத்து பேர் அவருடன் இருந்திருக்கிறார்கள். ஜெ.ஜெ. தாஸ், தொழிலாளர்கள் நலனுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்.

.
(அடுத்த இதழிலும்)

 

-அழகிய பெரியவன்
Pin It