slum_560

சூறையாடப்பட்ட வாழ்விலிருந்தே
பெறப்படுகிறது அடுத்த நொடிக்கான
பசியாற்றும் உணவு

கட்டாந்தரைகளைக் கொத்திக் களைத்த
கருவிகளைத் தாண்டி
துடித்துக் கொண்டிருக்கின்றது உடல்

ஒளிவீசும் அழகிய விளக்குகளுடைய நகரம்
அமைதியாக இருக்கிறது
தூக்கத்தின்மீது பசியைப் போர்த்திவிட்டு
குழந்தையைப் பார்த்திருக்கும் தாயைப் போல
உட்கார்ந்திருக்கின்றன
இருளை வெறிக்கும் விழித்த கண்கள்

தோண்டப்படுகின்ற
குப்பைகளிலிருந்தோ
கழிவுநீர்த் தொட்டிகளிலிருந்தோ
உயிரினை வாங்கும் நச்சுக்காற்றை
சுவாசிக்கும் தருணம் அசாதாரணமானது
அப்போதுதான்
புளிவிட்டு பிசைந்த
நேற்றுச் சோற்றை எடுத்துக்கொண்டு
பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லலாம்
பாடங்களிலிருந்து துரத்தப்பட்ட
மீதிச் சிறுவர்கள்
குப்பைகளைப் பொறுக்கி
கூலியில் மிட்டாய் வாங்கலாம்

எனினும் துரத்தப்படும் மரணத்திற்கெதிராய்
யாரோட முடியும்
முள் குத்திய கால்களோடு

Pin It