III
War
உலகின் மிகத் தொன்மையான நாடுகளில் லெபனானும் ஒன்று. ஏறத்தாழ 4000 ஆண்டுகளாக அந்த நாட்டின் பெயர் மாறாமலேயே இருக்கிறது. இந்த நாடு, 17 முறை படையெடுக்கப்பட்டு முழுமையாகவோ பகுதியாகவோ ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதன் தலைநகரும் உலகின் மிகப் பழமையான நகரங்களிலொன்றுமான பெய்ரூட், இதுவரை எட்டு முறை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கப்பட்டு, மீண்டும் ஏழு முறை மறு நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு சூலை - ஆகஸ்ட் மாதங்களில் இஸ்ரேல் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து இந்த நகரத்தை மீட்டெடுக்க, பல்லாயிரம் கோடி டாலர்கள் தேவைப்படும். மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று வந்ததன் காரணமாக, இந்த நகரம் பீனிக்ஸ் பறவையுடன் ஒப்பிடப்படுகிறது (அய்ரோப்பிய நாடுகளில் வழங்கும் ஒரு தொன்மத்தின்படி, பீனிக்ஸ் பறவையை (இது ஒரு கற்பனைப் பறவை) எத்தனை முறை தீயில் போட்டு எரித்தாலும் அது சாம்பலிலிருந்து உயிர்பெற்று எழுமாம்).

லெபனியர்கள் 18 தனித்தனி மத சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இவற்றில் முக்கியமானவர்கள் மரோனைட் கிறித்துவர்களும் ஷியா முஸ்லிம்களுமாவர். 1931 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதால், பிற மத சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. எனினும், நாட்டில் ஏற்பட்ட பல்வேறு வகையான மாற்றங்களின் காரணமாக, "ஷியா” பிரிவு முஸ்லிம்கள் ஏறத்தாழ 40 விழுக்காட்டினராக இருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.

எனினும் நவீன காலத்தில், "லெபனான்” என்னும் நாடு உலக வரைபடத்தில் இடம் பெற்றது 1920 ஆம் ஆண்டில்தான். இன்றுள்ள எல்லைகளுடன் கூடிய "லெபனான்” பல நூற்றாண்டுகளாகவே சிரியாவின் ஒரு மாவட்டமாகவே கருதப்பட்டு வந்தது. சிரியாவும்கூட ஓட்டோமன் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. முதல் உலகப் போரில் ஓட்டோமன் பேரரசு தோற்கடிக்கப்பட்ட பிறகு, மத்தியக் கிழக்கில் அந்தப் பேரரசின் கீழிருந்த பகுதிகளை பிரான்சும் பிரிட்டனும் தமக்கிடையே கூறு போட்டுக் கொண்டன. முதலில் சிரியாவிலிருந்த மலைப்பகுதிகளை (லெபனான் மலை என இதற்குப் பெயர்) ஒரு ஓட்டோமன் பேரரசுக்குள் சுயாதீனமுள்ள மாகாணமாக ஆக்குமாறு பிரான்ஸ், ஓட்டோமன் சுல்தானை நிர்பந்தித்தது. பின்னர் 1919 இல் இன்றைய லெபனானும் அதனை உள்ளடக்கிய சிரியாவும் பிரான்சின் காப்பாட்சி நாடுகளாயின (Protectorate). ஜோர்டான், எகிப்து, ஈராக் ஆகியவற்றை பிரிட்டன் எடுத்துக் கொண்டது. பிரான்சிலிருந்து சிரியா விடுதலை பெறுவதை ஊக்குவிக்கும் அரபு தேசிய இயக்கமொன்று வளராமல் தடுக்கும் பொருட்டு பிரான்ஸ், இன்றைய லெபனான் பகுதியில் வாழும் மரோனைட் கிறித்துவர்களின் பக்க பலத்துடன் அன்றைய சிரியாவிலிருந்து "லெபனானை” கத்தரித்து எடுத்து அதைத் தனி நாடாக அறிவித்தது.

1943 இல் லெபனானுக்கு "சுதந்திரம்” வழங்கிய பிரான்ஸ், அது எப்போதும் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்கும் வகையில் ஓர் அரசியலமைப்பை உருவாக்கியிருந்தது. இதன்படி இங்குள்ள முக்கிய மத சமுதாயங்களின் பிரதிநிதிகள் மட்டுமே அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிக்க முடியும். ஒரு மரோனைட் கிறித்துவர் மட்டுமே குடியரசுத் தலைவராக முடியும். இதன்படி 1952 இல் கமில் ஷாமோ (Camile chamoun) என்னும் மரோனைட் கிறித்துவர், லெபனானின் குடியரசுத் தலைவர் பதவியைப் பெற்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டிஷ், பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களின் அரசியல், பொருளாதார, ராணுவ வலிமை சரிந்து வரத் தொடங்கியதால் அவை விட்டுச் சென்ற இடங்களை நிரப்ப அமெரிக்கா தலையை நீட்டியது. 1958 ஆம் ஆண்டில் ஈராக்கில் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகள் பெற்ற வெற்றி தந்த உள்உந்துதல் காரணமாக, லெபனானில் வளர்ந்து வந்த தேசிய இயக்கத்தை முறியடிக்கும் பொருட்டு அமெரிக்கா, ஷாமோவின் வலதுசாரிப் பிற்போக்கு அரசாங்கத்திற்குப் பக்கபலமாக இருக்கும் பொருட்டு 20,000 அமெரிக்கப் போர் வீரர்களை அனுப்பியது. அச்சமயம் முஸ்லிம்கள் ஷாமோவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தனர். லெபனானில் மேற்கு நாட்டு சார்பானதும் மதச் சிறுபான்மையினரின் தலைமையில் இருப்பதுமான ஓர் அரசாங்கம் இருப்பது, அரபு தேசியம் அங்கு பரவுவதைத் தடுக்கும் என அமெரிக்கா கருதியது.

ஆனால், 1970 களின் தொடக்கத்திலேயே முஸ்லிம்கள் லெபனான் மக்கள் தொகையில் பெரும்பான்மையினராகியிருந்தனர். லெபனான் அரசமைப்பில் ஒரு மரோனைட் கிறித்துவரும், ஒரு சுன்னி முஸ்லிம் மட்டுமே முறையே குடியரசுத் தலைவராகவும் பிரதமராகவும் இருக்க முடியும் என்னும் விதிகளை எதிர்க்கத் தொடங்கினர். அச்சமயம் ஷியா முஸ்லிம்களுக்கு ஆட்சியில் எந்தப் பங்கும் இருக்கவில்லை. பல்வேறு மதக் குழுக்களிடையேயும் இனக் குழுக்களிடையேயும் இருந்து வந்த பகைமையுடன் பொருளாதார ஏற்றத்தாழ்வுப் பிரச்சனைகளும் சேர்ந்து நாட்டில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்தன. வர்த்தகம் மரோனைட் கிறித்துவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க, முஸ்லிம்களோ கைவினைஞர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணைத் தொழிலாளிகளாகவும் பிழைப்பை நடத்தி வந்தனர். நாட்டின் இயற்கை வளங்களில் முக்கியமானதாக இருந்த செவ்வகில் மரங்கள் முற்றாக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவிட்டதால், நாட்டின் பல பகுதிகள் வறட்சி நிலங்களாயின.

*******

நவீன லெபனான் தேசம் உருவாக்கப்பட்டு, இருபது ஆண்டுகள் முடிவடைவதற்கு முன் அது வேறொரு சிக்கலையும் எதிர்கொண்டது. இஸ்ரேலிய ஜியோனிஸ்டுகளால் விரட்டியடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள், லெபனானில் அகதிகளாகக் குடியேற அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் காரணம் 1973 இல் நடந்த அரபு - இஸ்ரேலியப் போரில் லெபனான் நடுநிலை வகித்ததுதான். இதை சாக்காகக் கொண்டு இஸ்ரேல் படைகள் லெபனானின் எல்லைக்குள் ஊடுருவி, சாதாரணக் குடிமக்கள் மீது குண்டு மழை பொழிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. கிறித்துவ பலாங்கெ குடிப்படைகள், பாலஸ்தீனர்களின் அகதி முகாம்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வந்தனர். பாலஸ்தீன அகதிகள் ஆயிரக்கணக்கில் லெபனானில் குடியேறியது, மக்கள் தொகையில் பல்வேறு மத, இன சமூகங்களுக்கு இருந்த எண்ணிக்கை விகிதத்தில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது; லெபனானின் உள்நாட்டுச் சிக்கல்கள் சர்வதேசப் பரிமாணம் பெறுவதற்கும் வழிவகுத்தது. 1975 இல் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது.

லெபனானின் உள்நாட்டுப் போரில் சிரியா முதலில் இடதுசாரி சக்திகளுக்கு ஆதரவு அளித்து வந்தது. ஆனால், 1976 இல் இடதுசாரி சக்திகள் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அரபு நாடுகளின் கழகத்தின் அமைதிப் படையின் ஒரு பகுதியாக லெபனானில் நுழைந்த சிரியப் படைகள், நாட்டில் அமைதியை நிலைநாட்டப் போவதாகவும் தேச ஒற்றுமையைப் பாதுகாக்கப் போவதாகவும் கூறின. உண்மையில் அவை, வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவு தருவதற்காகத்தான் இங்கு வந்தன. சிரியாவின் ஆளும் வர்க்கங்கள், லெபனானில் ஓர் இடதுசாரி அரசாங்கம் இருப்பதைவிட, இஸ்ரேலின் நேச சக்தியாக உள்ள ஒரு வலதுசாரி அரசாங்கம் இருப்பதே தமக்கு அனுகூலமானது எனக் கருதின.

சிரியாவிற்கு உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா, "அது லெபனானில் ஓர் ஆக்கப்பூர்வமான பாத்திரத்தை வகிப்பதாக'' பாராட்டியது! ஆனால், மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் விசுவாசமான "காவல் நாயாக” உள்ள இஸ்ரேலோ, லெபனானில் உள்நாட்டுக் குழப்பங்கள் நீங்கி அங்கு அமைதி திரும்புவதையோ, நிலைத்த தன்மை ஏற்படுவதையோ விரும்பவில்லை. அங்குள்ள பாலஸ்தீன அகதி முகாம்களில் கெரில்லாப் போராட்டப் பயிற்சி தரப்படுகிறது என்றும், அந்தப் பயிற்சி பெற்ற போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவுவார்கள் என்றும், எனவே அங்கிருந்த எல்லாப் பாலஸ்தீனர்களையும் வெளியேற்றுவதே தனது உடனடிக் குறிக்கோள் என்றும் கூறி, 1978 இல் அந்நாட்டின் மீது படையெடுத்து அதில் ஒரு சிறு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது.

1981 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்தன. இஸ்ரேல், லெபனான் மீது இன்னும் பெரிய ராணுவத் தாக்குதலை நடத்த முடிவு செய்தது. பிரிட்டனிலிருந்த ஒரு இஸ்ரேலிய அதிகாரியை லெபனீய இஸ்லாம் தீவிரவாதிகள் கொன்றுவிட்டார்கள் எனக் குற்றம் சாட்டி, 1982 இல் இஸ்ரேலின் படைகள் லெபனானில் முழு வீச்சில் ஆக்கிரமிப்பைத் தொடங்கின. லெபனானிலுள்ள பாலஸ்தீன விடுதலைப் போராளிகளை அங்கிருந்து வெளியேற்றுவதும் ஒரு வலதுசாரிப் பிற்போக்கு அரசாங்கத்தை அங்கு நிறுவுவதும்தான் இந்தப் படையெடுப்பின் உடனடிக் குறிக்கோள். இரண்டு வாரங்களுக்கு இஸ்ரேலியப் படைகள் நாட்டின் தென்பகுதி முழுவதையும் கைப்பற்றிக் கொண்டன. பெரும் ராணுவத் தாக்குதலை நடத்தி பெய்ரூட் நகரைச் சின்னாபின்னமாக்கின. லெபனான் நாட்டின் அரைவாசிப் பகுதி இத்தாக்குதலுக்குட்பட்டது. இந்தப் படையெடுப்பின் காரணமாக 40,000 லெபனியர்கள் உயிழந்தனர்.

யாசர் அராபத் உள்ளிட்ட பாலஸ்தீனப் போராளிகள் தாங்கள் பெய்ரூட்டை விட்டுப் போகத் தயாராக இருப்பதாகவும் அதற்குப் பதிலாக லெபனானில் உள்ள பாலஸ்தீனக் குடிமக்களைப் பாதுகாக்க அய்.நா. பாதுகாப்பு அவையின் ஆலோசனைப்படி இத்தாலிய, பிரெஞ்சு, அமெரிக்க நாடுகளின் கூட்டுப்படைகள் லெபனானுக்கு வருவதை ஏற்றுக் கொள்வதாகவும் வாக்குறுதி கூறினர். அதன்படியே அராபத்தும் பிற போராளித் தலைவர்களும் கடல் மார்க்கமாக டுனீஷியா நாட்டிற்குச் சென்றுவிட்டனர். ஆனால், இஸ்ரேலிய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் அதிதீவிர ஜியோனிச ஆயுதமேந்திய குழுக்கள், இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலுள்ள இரண்டு அகதி முகாம்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஒன்று மறியாத பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்தனர். இந்தப் படுகொலை இஸ்ரேலிய மக்களாலேயே கண்டனம் செய்யப்பட்டது. அன்றைய பிரதமர் மெனாகெம் பெகின் வேறு வழியின்றி ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தார். இந்த ஆணையம், அன்றைய இஸ்ரேலிய ராணுவத் தளபதி ஏரியெல் ஷாரோன் (Ariel Sharon) தான் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பு எனத் தீர்ப்பளித்தது. ஆனால், ஷாரோனுக்கு இஸ்ரேல் அரசாங்கம் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை. மாறாக, சில ஆண்டுகள் கழித்து அவர் இஸ்ரேலின் பிரதமரானார்.

1982 ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள், லெபனான் நாடாளுமன்றம் எனச் சொல்லப்பட்டு வந்ததன் எச்சம், குடியரசுத் தலைவர் பதவிக்கு இஸ்ரேலால் தெரிவு செய்யப்பட்ட பஷீர் கெம்யெல் என்பாரைத் தேர்ந்தெடுத்தது. ஆனால், பலாங்கெவின் கிழக்கு பெய்ரூட் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் அவர் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அடுத்த நாள் இஸ்ரேலியப் படைகள் பெய்ரூட் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டன. லெபனான் நாட்டின் பாதிப் பகுதியை இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நிலையில், பஷீர் கெம்யெலின் சகோதரர் அமின் கெம்யெல் நாட்டின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் புதிய குடியரசுத் தலைவரால் உள்நாட்டுக் குழப்பங்களைப் போக்க முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருந்த பலாங்கெ கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள், 1943 இல் பிரெஞ்சு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அரசமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்றும், ஒரு மத்திய அரசாங்கத்தின் தலைமையிலுள்ள கூட்டாட்சி அமைப்பை உருவாக்கும் பொருட்டு நாட்டை மத, இன அடிப்படையில் சிறு சிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

நிர்வாக அதிகாரப் பரவலை (decentralization) ஒப்புக் கொண்ட சுன்னி, ஷியா முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக நாட்டைப் பாகுபடுத்துவதை விரும்பவில்லை. ட்ருஸெ பிரிவினரோ தங்களுக்குக் கூடுதலான சுயாட்சி வேண்டும் எனக் கோரினர். 1983 மே மாதம் இஸ்ரேலும் லெபனானும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி பல்வேறு குழுக்களிடையே நடந்து வந்த மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்; இஸ்ரேல், சிரியா மற்றும் இதர நாட்டுப் படைகள் அனைத்தும் லெபனானை விட்டு வெளியேற வேண்டும்; இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுப்பதற்கோ அல்லது அங்கு நுழைவதற்கோ முயற்சி செய்யும் எந்தவொரு ஆயுதமேந்தியக் குழுக்களும் தனது நாட்டில் எந்த ஓர் அமைப்பையோ, தளங்களையோ உருவாக்கிக் கொள்வதையும், நாட்டிலுள்ள எந்தவொரு கட்டமைப்பையும் பயன்படுத்திக் கொள்வதையும் லெபனான் தடை செய்ய வேண்டும்.

1985 இல் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக தனது படைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போவதாகச் சொல்லப்பட்ட காலக்கெடு தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, தென் லெபனானில் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடித்து, அந்தப் பகுதி முழுவதிலும் தன்னுடன் நேசமாக இருக்கும் மக்கள் மட்டுமே இருக்கும்படி செய்யும் பொறுப்பை கிறித்துவக் குடிமக்கள் படையிரிடம் ஒப்படைத்தது. 1988 செப்டம்பரில் இஸ்ரேல் ஆதரவாளரும் மரோனைட் கிறித்துவர்களின் தலைவருமான தளபதி மிஷெல் அவுன் (Michel Aoun) குடியரசுத் தலைவரானார். லெபனானிலிருந்த பல்வேறு குழுக்களிடையே மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டுவந்த சவூதி அரேபியா, அல்ஜீரியா, மொரோக்கோ ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்தக் கழகத்தின் முன் முயற்சியால், சவுதி அரபிய நகரமான டைபெயில் (Taife) ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, லெபனானில் உள்ள பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் தங்களுக்கிடையிலான மோதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்; அரசமைப்பு முறை மாற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் இனி நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தேசத்தின் ஒற்றுமை குறித்து கிறித்துவ, முஸ்லிம் குழுக்களிடையே நடந்த பேச்சுவார்த்தையின் பயனாக, மரோனைட்டுகளின் மேலாதிக்கத்திற்கு முடிவு கட்டி, முஸ்லிம்களுக்குக் கூடுதலான அதிகாரத்தை தர இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். ஆனால், இந்தத் திட்டம் சவூதி அரேபியாவால் தீட்டப்பட்டது என்றும் அது சிரியாவின் சூழ்ச்சித் திட்டம் என்றும் கூறி தளபதி அவுன் அதை நிராகரித்தார். 1989 நவம்பரில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், முஸ்லிம்கள் மீது அனுதாபம் கொண்டிருந்த மரோனைட்டுமான ரெனெ மொவாட் (Rene Moawad) பதவி ஏற்பதற்கு முன்பே கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அதன் பிறகு மற்றொரு மரோனைட் கிறித்துவரான எலியாஸ் ஹ்ராவி (Elias Hrawi) என்பவர், சிரியப் படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த லெபனான் நகரமொன்றில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கிறித்துவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்கு வெளியே நடந்த இந்தத் தேர்தலை தளபதி அவுன் நிராகரித்தார்.

1990 இல் ஈராக் குவைத் மீது படையெடுத்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சிரியப் படைகள் அவுனின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளையும் ஆயுதமேந்தியக் குழுக்களையும் தாக்கத் தொடங்கின. அதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக மரோனைட் கிறித்துவர்களை ஆதரித்து வந்த அமெரிக்கா, சிரியாவிற்கு ஆதரவு தெரிவித்தது. அதற்குக் காரணம் தளபதி அவுன் சதாம் உசேனின் ஆதரவாளராகவும் சிரியா, வளைகுடாப் போல் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் இருந்ததுதான்! சிரியாவில் அன்று குடியரசுத் தலைவராக இருந்த ஹபெஸ்-அல்-அஸ்ஸாட் (Hafez-al-Assaat), அந்த வளைகுடாப் போல் ஈராக்குக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக, கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்க ஆதரவு அரேபிய வளைகுடா நாடுகள் கொடுத்ததாக அமெரிக்க வார ஏடான "நியூஸ் வீக்” கூறியது.

ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கம் 1990 டிசம்பரில் அமைக்கப்பட்டது. 1991 இல் சிரியாவில் லெபனான், சிரியா நாட்டுக் குடியரசுத் தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம், லெபனான் ஒரு தனி, சுதந்திர நாடு என்பதை அங்கீகரித்ததுடன் ராணுவப் பாதுகாப்பு, பண்பாட்டு, பொருளாதார விவகாரங்களில் இரு நாடுகளுக்குமிடையில் ஒத்துழைப்பு இருக்கும் எனக் கூறியது. லெபனீய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்களால் ஒப்புதல் வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய அரசாங்கம், பலாங்கெ கட்சி, சிரியாவுக்கு விரோதமானவையாக இருந்த பிற லெபனீய கிறித்துவ மற்றும் கிறித்துவரல்லாத ராணுவக் குடிப்படைகள் ஆகியவை நிராகரித்தன. இந்த ஒப்பந்தம் லெபனானின் உள் விவகாரங்களில் சிரியா கட்டுப்பாடு செலுத்த வழிவகுப்பதாக அவை கூறின. அந்த ஆண்டு சூலை மாதத் தொடக்கத்தில் லெபனான் சேனை, நாட்டின் தென் பகுதியிலுள்ள சிடோன் துறைமுகத்திற்கு அருகில் பி.எல்.ஓ. அமைப்பின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தைக் கைப்பற்றின. இந்தத் தாக்குதலின் காரணமாக, அந்தப் பிரதேசத்திலிருந்து கொண்டு இஸ்ரேலின் மீது பி.எல்.ஓ. தாக்குதல் தொடுப்பது சாத்தியமற்ற தாக்கப்பட்ட போதிலும், இஸ்ரேலுக்கு அது திருப்தியளிக்கவில்லை.

Child
நாட்டின் தென்பகுதியில் தான் உருவாக்கியிருந்த "பாதுகாப்பு வளையத்தி”லிருந்து தனது படைகளை ஒருபோதும் திரும்பப் பெறப் போவதில்லை எனக் கூறியது. நவம்பர் மாதத்தில் இஸ்ரேல் அந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள் தாக்குதலைத் தீவிரப்படுத்தி, அந்தப் பிரதேசத்திலிருந்து லெபனீயப் படைகள் 12 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என நிர்பந்தப்படுத்தியது. இதன் காரணமாக, ஏறத்தாழ ஒரு லட்சம் ஷியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. ஹிஸ்பெல்லா, அமல் (இது மற்றொரு இஸ்லாமியப் போராளிக் குழு), சிரிய, லெபனீய ராணுவங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகளின் காரணமாக, ஹிஸ்பெல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறியது.

ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை மரோனைட் கிறித்துவர்கள் புறக்கணிப்புச் செய்தனர். சிரியாவின் ஆதரவாளரும் சவூதி அரேபியரும் பின்னாளில் லெபனானில் குடியுரிமை பெற்றவருமான ரபிக் அல்ஹரிரி (Rafiq al-Hariri) பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் ஹிஸ்பெல்லா இயக்கம் பங்கேற்றது. சமுதாய ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வந்தன. இதற்கிடையே இஸ்ரேலிய விமானங்கள் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து பாலஸ்தீன அகதி முகாம்கள் மீதும் பி.எல்.ஓ. தளங்கள் மீதும் குண்டு வீச்சை நடத்திக் கொண்டிருந்தன.

1993 ஆகஸ்ட் மாதம், இஸ்ரேல் உருவாக்கியிருந்த ‘பாதுகாப்பு வளையத்'திலிருந்து லெபனியப் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் ஹிஸ்பெல்லா அமைப்பு முற்றாக நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்றும் இஸ்ரேல் கூறிய யோசனையை லெபனீய அரசாங்கம் நிராகரித்தது. ஹிஸ்பெல்லாப் போராளிகள், தென் லெபனானிலுள்ள இஸ்ரேலியப் படைகளை விரட்டியடிப்பதற்கான தாக்குதல்களைத் தொடங்கினர். 1997இல் லெபனீய கெரில்லாப் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்குமிடையே சண்டை வலுத்தது. அய்.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம் 425இன்படி, இஸ்ரேல் தனது படைகளை நிபந்தனையில்லாமல் உடனடியாக முழுமையாக திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியது. இஸ்ரேலோ, தனது படைகள் திரும்பப் பெறப்படுவதற்குக் கைம்மாறாக, தனது நாட்டின் பகுதிக்குள் கெரில்லாக்கள் தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்கு இரு நாடுகளும் இருதரப்பு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், இத்தகையதொரு ஒப்பந்தத்திற்கு சிரியா ஒருபோதும் சம்மதிக்கவில்லை. 1997இல் ஹிஸ்பெல்லாப் போராளிகளுக்கும் இஸ்ரேலியத் துருப்புகளுக்குமிடையே மீண்டும் மோதல்கள் வெடித்தன. அந்தத் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு லெபனானுக்கும் இஸ்ரேலுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தைகள் முறிந்தன. ஆனால், ஹிஸ்பெல்லாத் தாக்குதலின் தீவிரம், தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனைக்குட்படுத்துமாறு இஸ்ரேலை நிர்பந்திக்கத் தொடங்கியது.

அக்டோபர் மாதம் லெபனான் நாடாளுமன்றம் சிரிய ராணுவத்தின் ஆதரவு பெற்ற தளபதி எமைல் லஹூட் (Emile Lahoud) என்பாரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அதே ஆண்டில் நடந்த உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஹிஸ்பெல்லா பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றது. 1999 இல் இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தல் அங்கு ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது. புதிய இஸ்ரேலியப் பிரதமர் எர்ஹுட் பாரக் (Erthud Barak), சூலை 2000த்திற்குள் இஸ்ரேலியப் படைகள் தென் லெபனானிலிருந்து முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவித்தார். ஆனால், லெபனீயக் குடியரசுத் தலைவர் லஹூட், இஸ்ரேல், கோலான் குன்றுகளை சிரியாவிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்றும் தென் லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும் என்றும், அதன் பிறகுதான் போராளிகளின் தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலுக்குப் பாதுகாப்புத் தருவது பற்றி யோசிக்கப்படும் எனக் கூறிவிட்டார்.

இஸ்ரேலின் கூலிப்படையான தென் லெபனான் சேனை மே மாதம் திரும்பப் பெறப்படத் தொடங்கியபோது, அச்சேனைக்கும் ஹிஸ்பெல்லாப் போராளிகளுக்குமிடையே மோதல்கள் மீண்டும் வெடித்தன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இஸ்ரேலியக் கூலிப் படைகளை வெளியேற்றுவதில் ஹிஸ்பெல்லாப் போராளிகளின் உறுதிமிக்க தாக்குதல்களே தீர்மானகரமான காரணியாக இருந்தது. இதுதான் அந்த அமைப்பு ஷியா முஸ்லிம்களிடையே மட்டுமின்றி, லெபனீய தேச பக்தர்களிடையேயும் பெரும் செல்வாக்குடன் திகழ்வதற்கான காரணம். ஹிஸ்பெல்லாவை முழுமையாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் முயற்சி செய்வதற்கும் இதுதான் காரணம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவ, பொருளாதார உதவிகளுடன் மத்தியக் கிழக்கை இதுவரை ஆட்டிவந்த ஜியோனிச பாசிச அரசுக்கு மீண்டுமொரு முறை (அதாவது கடந்த சூலை - ஆகஸ்ட் போரில்) தோல்வியை ஏற்படுத்திய ஒரே அமைப்பு ஹிஸ்பெல்லாதான்.

- அடுத்த இதழிலும்

Pin It