செல்வம் பொழியும் அமரிக்கர் தேசத்தில் இன்று கோடிக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுவதுடன், 10 லக்ஷக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பெருத்த கலவரம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் அமரிக்க குடி அரசு தலைவர் வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுப்பதற்காக ஒரு காரியம் செய்து வருகிறார். அதாவது தொழிலாளிகளின் வேலை நேரத்தைக் குறைத்து அதிக தொழிலாளிகளுக்கு வேலை ஏற்படும்படி செய்து வருகிறார். எப்படியெனில் ஒரு தொழில்சாலையில் ஒரு தொழிலாளி வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை செய்து வந்ததை இப்போது மாற்றி வாரம் ஒன்றுக்கு ஒரு தொழிலாளி 36 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்றும், பழய கூலியே கொடுக்கப்பட வேண்டும் என்றும் உத்திர விட்டுவிட்டார்.periyar kamarajarஅதன் பயனாக ஒரு மாகாணத்தில் பருத்தி இயந்திரத் தொழில் இலாக்காவில் மாத்திரம் 10000 பதிறாயிரம் பேருக்கு புதிதாக வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது போல் இன்னும் அநேக இலாக்காவில் ஏற்பாடு செய்வதன் மூலம் பல லக்ஷக்கணக்கான பேர்களுக்கு வேலை ஏற்பட்டு விடுமாம்.

ஆனால் நமது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க கதர் திட்டம் போடப்பட்டு பொது ஜனங்கள் பணத்தைக் கோடிக்கணக்காக வசூலித்து பாழாக்கப்படுகிறது. இதுவரை வசூலித்த சுமார் 2 கோடி ரூபாய்களைக் கொண்டு குறைந்த அளவு சுமார் 50 மில்லுகளாவது கட்டப்பட்டிருக்குமானால் அதைக் கொண்டு ஒரு லக்ஷம் பேருக்கு நிரந்தர வேலை கொடுத்து இருக்கலாம் என்பதோடு அவற்றின் லாபத்தால் வருஷம் 2 மில்கள் கட்டப்பட்டு அதிலும், வருஷ வருஷா வருஷம் 2000, 3000 பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டே வந்திருக்கலாம். இதனால் வேலை இல்லாப் பஞ்சம் நீங்குவதோடு 12 மணி நேரம் நூல் நூற்றால் 12 தம்பிடி வரும்படி வரக்கூடிய கேவலத் தன்மை நீக்கிக் குறைந்த அளவு மாதம் 1க்கு 10 ரூபாய்க்கு குறையாத வரும்படியையும், தொழிலாளிகள் அடைந்து வரலாம்.

இந்தப்படி செய்தால் பணக்கார முதலாளிகளினுடையவும், பார்ப்பனர்களுடையவும் ஆதரவு தோழர் காந்தியாருக்கோ காங்கிரசுக்கோ இல்லாமல் போய் விடும். ஆதலால் "காந்தியும் காங்கிரசும்" உள்ளவரை வேலை இல்லாத் திண்டாட்டம் நீங்கி விடும் என்று எண்ணுவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்ளுவது போலவே முடியும்.

(பகுத்தறிவு கட்டுரை 09.09.1934)

Pin It