தமிழ்நாட்டிலிருந்து உயர்கல்வி பயிலச் செல்லும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பார்ப்பன உயர்கல்வி நிறுவனங்கள் காட்டும் பாகுபாடு - திணிக்கும் மனஅழுத்தத்தால் உயிர்ப் பலியாகி வருகிறார்கள்.

தில்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் எம்.டி. எனப்படும் முதுநிலை பொது மருத்துவ படிப்பில்முதலாம் ஆண்டு படித்து வந்த திருப்பூர் மருத்துவ மாணவர் சரத்பிரபு (24) தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி தனலட்சுமி. செல்வமணி காங்கயம் சாலையில் சொந்தமாக டையிங் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு சரத்பிரபு என்கிற மகனும், சினேகபொன்மணி என்கிற மகளும் உள்ளனர்.

சரத்பிரபு கோவை மருத்துவக்கல்லூரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்முடித்துவிட்டு கேரள மாநிலம் திருச்சூரில் நீட் கோச்சிங் முடித்து கடந்த2017 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் எம்.டி., பொது மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாயன்று இரவு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தொலைபேசியில் சரத்பிரபு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் புதன்கிழமை காலை அவரது அறையில் சரத் பிரபு இறந்து கிடப்பதாக, உடன் படிக்கும் மருத்துவ மாணவர் அரவிந்தன், சரத் பிரபுவின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளார்.

அதேசமயம், அவர் படித்து வந்தகல்லூரி நிர்வாகத்தினர் புதனன்று காலை 8 மணியளவில் சரத்பிரபுவின் தந்தை செல்வமணியை தொலை பேசியில் தொடர்புகொண்டு சரத்பிரபு மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். பிறகுஒரு மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் எவ்வாறு இறந்தார் என்பதுகுறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்காத நிலையில், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் உடனடியாக தில்லிக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.

சரத்பிரபுவின் சித்தப்பா ஜெயகாந்தன் கூறியதாவது:

எங்களிடம் புதன்கிழமை காலை சரத்பிரபுவுடன் படிக்கும் மாணவன் அவர் அறை கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் அவரை மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாகவும், அந்த மருத்துவ மனையில் சரத் பிரபு இறந்து விட்டதாகவும் கூறினார்.

அவர் தற்கொலை செய்யும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. அனைத்து தேர்விலும் முதன்மை மதிப்பெண் எடுக்கும் சரத்பிரபு, எங்கள் வீட்டில் அனைவரும் ஒரு நல்ல மருத்துவர் உருவாகி விட்டார் என்று நினைத்தோம், ஆனால் இன்று இவருக்கு இந்த நிலை உருவாகியுள்ளது அதிர்ச்சி யளிக்கின்றது. மருத்துவமனையில் சுமார் 18 மணி நேரம் வரை வேலை கொடுப்பதாக சமீபத்தில் வீட்டிற்கு வந்தபொழுது கூறினார். அவருடைய இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்றார்.

ஏற்கெனவே கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி திருப்பூர்மருத்துவ மாணவர் சரவணன் டில்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் எம்.டி. முதலாம் ஆண்டு சேர்ந்த சில வாரங்கள் ஆன நிலையில், மர்மமான முறையில் மரணமடைந்தார். ஒன்றரை ஆண்டு காலத்தில் மீண்டும் அதேபோல் மருத்துவ மாணவர் சரத் பிரபு இறந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எய்ம்ஸ் சரவணனின் தந்தை கணேசன் கூறியதாவது:

தனது மகன் சரவணனைப் போல் திருப்பூரைச் சேர்ந்த மற்றுமொரு மருத்துவ மாணவர் சரத் பிரபுஇறந்திருப்பதை அறிந்து எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணனின் தந்தை கணேசன் சரத் பிரபுவின் வீட்டிற்கு புதன்கிழமை வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது மகன் கடந்த 2016 ஆம் ஆண்டு எய்ம்ஸ் கல்லூரியில் படிக்கச் சென்ற போது விஷ ஊசி போட்டு கொன்று விட்டு தற்கொலை என கூறினார்கள். நாங்கள் வழக்கு தொடர்ந்தபொழுதுதான் தற்கொலை அல்ல கொலை என்று தெரியவந்தது.

தமிழ்நாட்டில் இருந்து வெளியே படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்நிலை தொடர்கிறது. தமிழக அரசும், மத்திய அரசும் இப்பிரச்சனையில் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை. எனது மகன் கொலை செய்யப்பட்டபொழுது நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற நிகழ்வை தடுத்திருக்கலாம் என்றார்.

மேலும் சரவணன் கொலை தொடர்பாக நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அங்கு எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்றினோம். அங்கும் எந்த நடவடிக்கை இல்லாததால் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளோம். நீதிமன்றம் எங்களுக்கு நீதி கொடுக்க நினைத்தாலும் காவல் துறையினர் தரப்பில் இந்த வழக்கிற்கு எவ்வித ஒத்துழைப்பும் இல்லை என்று கூறினார்.

சரவணனும் சரத்பாபுவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள், தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டில் பயின்று தகுதி அடிப்படையில் போட்டியிட்டு உயர் மருத்துவப் படிப்புப் படிக்கச் சென்றவர்கள், பார்ப்பனப் பிடியில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் மன உளைச்சலால் அவமதிப்பால் அவர்கள் வாழ்க்கையே முடித்து வைக்கப்படுகிறது.

செய்தி அறிந்தவுடன், திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் முகில்ராசு, கழகத் தோழர்களுடன் சரத்பிரபு இல்லத்துக்கு விரைந்தனர். அவர்கள் உறவினர்களிடம் நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்தனர்.

அன்று மாலையே (ஜன.17) திருப்பூரில் கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர்க் கழகம் சார்பில் உயர் கல்வி பயிலச் செல்லும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பார்ப்பனர் பிடியில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், அவர்கள் மீது காட்டப்படும் வெறுப்பு பாரபட்ச செயல்பாடுகளால் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி மரணத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு வருவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

17.1.2018 புதன் கிழமை மாலை 4 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கனல் மதி (மாவட்ட அமைப்பாளர் தமிழ்நாடு மாணவர் கழகம்) தலைமை தாங்கினார். தேன்மொழி (மாவட்ட செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), சு. துரைசாமி (பொருளாளர் தி.வி.க.), வீ. சிவசாமி (தமிழ்நாடு அ றிவியல் மன்றம்), முகமது அஸ்லாம் (தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி), அருண் (தமிழ்நாடு மக்கள் கட்சி), செந்தில் (எப்டி எல் - வட சென்னை மாவட்டகழகச் செயலாளர்), முகில் இராசு (திருப்பூர் கழக மாவட்ட தலைவர்), பரிமளராசன் (கழக முகநூல் பொறுப்பாளர்), விசயகுமார் (கழக இணையதள பொறுப்பாளர்), அகிலன் (கழக மாவட்ட அமைப்பாளர்), முத்து (மாநகர அமைப்பாளர்) ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ் செழியன் (அமைப்பாளர் தமிழ்நாடு மாணவர் கழகம்) கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

தோழர்கள் உரையில்: டெல்லி யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு ஜன.17 அன்று காலை சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்ததைக் கண்டித்தும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் டெல்லியில் கொல்லப்படுவதைக் கண்டித்தும், மாணவர் சரத் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மத்திய பாஜக பார்ப்பனீய ஆட்சி தமிழக மருத்துவப் பொது சுகாதார அமைப்பின் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் ஒன்றாகவே இந்தப் படுகொலையை நாம் பார்க்கவேண்டும். தமிழக மருத்துவ அமைப்பை சீர்குலைக்க நீட் தேர்வை கொண்டுவந்ததைப் போலவே இந்தத் தொடர் படுகொலையை அணுகவேண்டும் என்றும் போராட்ட களத்தில் தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

அய்தராபாத் பல்கலையில் முதுகலை பயின்ற ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர், ஜே.என்.யூ-யில் பயின்ற முத்துகிருட்டிணன் என்ற தலித் மாணவரும் மரணத்தைத் தழுவினர்.

மோடி அரசு கொல்ல சதி : தொகாடியா அலறல்

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகிலஇந்தியத் தலைவர் பிரவீன் பாய் தொகாடியா என்ற பார்ப்பனர் 15.1.2018 அன்று திடீரென மாயமானதாக கூறப்பட்டது. குஜராத் போலீசார்தான் அவரை கைது செய்திருப்பதாக விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.இந்நிலையில் தொகாடியா, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக, சுயநினைவில்லாத நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே பிரவீன் தொகாடியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது குரலை அடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் தொகாடியா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் போலீசார் தன்னை மிரட்டியதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்கவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தப்பித்து வந்தேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். “அவர்கள் (மோடி அரசு) என்னை என் கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தனது நண்பர்களிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது” என்றார்.

Pin It