உ.பி. பார்ப்பன சீர்திருத்தவாதி சச்சிதானந்தின் வரலாற்றுப் பதிவுகள்
சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கான சூழலையும், தலைவிரித்தாடிய பார்ப்பன ஜாதிய ஆதிக்க வெறியையும் அக்காலத்தில் சென்னையில் தங்கிப் படித்த உ.பி. பார்ப்பன சீர்திருத்த சிந்தனையாளர் சச்சிதானந்த் நூலாக பதிவு செய்துள்ளார்.
பார்ப்பனிய கொடுமைகளை தோலுரித்த பார்ப்பனர்-அக்யேயாவின் நினைவுப் பக்கங்களில் இருந்து சில குறிப்புகள்:
சச்சிதானந்த ஹீரானந்த் வாத்சுயாயன் கவிஞர், பத்திரிகையாளர், புதின எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். 1911ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பஞ்சாபி பிராமண குடும்பத்தில் பிறந்த இவர் 1987ஆம் ஆண்டிலேயே காலமாகி விட்டார். பகத் சிங், சந்திரசேகர ஆசாத், சுகதேவ், யாஷ்பாலுடன் தலைமறைவாக இருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட இவர், பயணக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், நினைவுக் கட்டுரைகள் எண்ணற்றவற்றை எழுதியுள்ளார். அதில் மிகக் குறிப்பிடத்தக்க குறிப்புகள் அவர் சென்னையில் கல்லூரி படித்த காலம் குறித்து எழுதியவை.
பார்ப்பன குடும்பத்தில் பிறந்த அவர், கல்லூரி காலத்தில் சென்னையில் தங்கியிருந்தபோது பார்ப்பனர்கள் பிற சமூகத்தினர் மீது திணித்த சமூக அநீதிகளைக் கண்டு கொந்தளித்து, அவர்களிடம் இருந்து விலகி, பொது சமூகத்தோடு கலந்துறவாடியதையும், அந்த கால கட்டத்தில் நிலவிய பார்ப்பனியக் கொடுமைகளையும் தனது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார். அக்யேயா என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட இவரை குறித்து அக்சயா முகுல் என்பவர் 2022-இல் நூல் ஒன்றை எழுதியுள்ளார். “This excerpt is from Writer, Rebel, Soldier, Lover: The Many Lives of Agyeya” என்ற அந்த நூலில் இருந்து சச்சிதானந்தின் கல்லூரி காலம் குறித்து இடம் பெற்றிருக்கும் சில முக்கியப் பகுதிகளை இந்த கட்டுரையில் காணலாம்.
1920ஆம் ஆண்டில்தான் செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் மூலம் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை அமலுக்கு வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒத்துழையாமை இயக்கம் வேகம் பெற்றது. காந்தியின் செயல்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தேசிய இயக்கத்தில் முன்னணியில் காங்கிரஸ் அப்போது இருந்தாலும் ஜாதியம் பற்றிய அதன் தெளிவற்ற பார்வை, தேர்தல் புறக்கணிப்பு ஆகியவற்றால் மெட்ராஸ் மாகாணத்தில் ஓர் நெருக்கடியை சந்தித்தது.
சமூகப் புரட்சியாளர் பெரியார் காங்கிரஸ் கட்சியிலும், பொது அரசியலிலும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை தகர்க்க பெரும் சவாலோடு இயக்கத்தை முன்னெடுத்தார். பார்ப்பனர் அல்லாதோருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் தீர்மானங்களை பெரியார் வலியுறுத்தியதால் காங்கிரசுடன் பிளவு ஏற்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டார். கடவுள், மதம், காந்தி, காங்கிரஸ், பார்ப்பனிய எதிர்ப்பால் தமிழ்நாட்டின் சமூக அரசியலில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார் பெரியார்.
இந்த காலகட்டத்தில்தான், அதவாது 1925 ஆம் ஆண்டு, தனது 14 வயதில் சென்னைக்கு வந்தார் சச்சிதானந்த். மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் அறிவியல் துறையில் இடைநிலை பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக அவர் சென்னை வந்தார். அந்த சமயத்தில் மாணவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளால் அணி திரட்டப்பட்டது கல்லூரி நிர்வாகத்திற்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. சச்சிதானந்தின் முதல் 2 ஆண்டு கல்லூரி படிப்பில் சாதி மத அரசியல் தொடர்பான பெரும் எழுச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.
எனினும் பல சிறிய சம்பவங்கள் பார்ப்பனராக அவருக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள் பற்றிய அனுபவங்களை முதன்முதலில் உணர்த்தின. பிராமணிய அடையாளத்தை சச்சிதானந்தாவின் தந்தை வீட்டிலேயே திணித்தார். ஆனால் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் சச்சிதானந்தா கண்ட ஜாதிய பிரிவினை அவருக்கு விரும்பத் தகாததாக இருந்தது.
இவர் தம்பு செட்டி தெருவில் உள்ள விடுதியில் 46 மாணவர்களுடன் தங்கியிருந்தார். அனைவருமே பார்ப்பனர்கள். பார்ப்பனர்கள் மட்டுமே தங்கக்கூடிய விடுதி அது. கல்லூரி காலத்தில் இவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு டென்னிஸ். வளாகத்தில் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாத மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருமே இணைந்து டென்னிஸ் விளையாடினர். ஆசிரியர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். விளையாட்டின்போது கீழ் ஜாதி மாணவர் களுடன் பார்ப்பன மாணவர்கள் கை குலுக்கிக் கொண்ட பின்னர் மறாக்காமல் கை கழுவிக் கொள்வர். பார்ப்பன மாணவர்கள் உணவு உண்ணும்போது அங்கு கீழ் ஜாதி மாணவர்கள் வந்துவிட்டால், அந்த உணவை நாய் தீண்டியதைப் போல கருதி, உண்ணுவதை நிறுத்திவிட்டு எழுந்து விடுவார்கள். இதனை கண்டு சகித்துக்கொள்ள முடியவில்லை என சச்சிதானந்த் குறிப்பிடுகிறார்.
விடுதியில் சூழல் மெல்ல மேம்பட்டாலும் 2 மாதங்களுக்குப் பிறகு சச்சிதானந்தா அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார். அங்கு தங்குவதற்கான உரிமை இருந்தபோதிலும், துளியும் விருப்பம் இன்றி வெளியேற முடிவெடுத்ததாக சச்சிதானந்த் கூறுகிறார். ஜாதி வெறி பிடிக்காத வேறொரு விடுதிக்கு செல்ல விரும்பியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அங்கிருந்து வெளியேறிய சச்சிதானந்த் 1919-இல் கட்டப்பட்ட கல்லூரி பூங்கா விடுதிக்கு மாறினார். கல்லூரியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அந்த விடுதி இருந்தது. விடுதியை கட்டியவர் கல்லூரியின் நான்காவது முதல்வரான வில்லியம் மில்லர். இவர் 2 விடுதிகளை உருவாக்கினார். பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனரல்லாதோர் இணைந்து தங்குவதற்கான விடுதி ஒன்று. மற்றொன்று கிறிஸ்தவ மாணவர்களுக்கான தனி விடுதி. விடுதிகள் இரண்டுதான் என்றாலும் உணவுக் கூடங்கள் மூன்று இருந்தன. பார்ப்பனர்களுக்கு ஒன்று, கிறிஸ்தவர்களுக்கு ஒன்று, மற்ற ஜாதியினருக்கு ஒன்று இருந்தது. பார்ப்பனரல்லாதாருக்கான விடுதி மற்றும் உணவகத்தை தேர்ந்தெடுத்தார் சச்சிதானந்த். அது அவருக்கு இருவகையில் மகிழ்ச்சிகரமாய் அமைந்தது. ஒன்று, ஜாதிய வெறியர்களை அங்கு தவிர்க்க முடிந்தது. மற்றொன்று தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டவர்களோடு தோளோடு தோள் சேர்ந்து உறவாடவும், அவர் களோடு தட்டுகளை பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
புதிய விடுதியின் தளர்வான சூழல் நிம்மதியாக இருந்தது என எழுதினார் சச்சிதானந்த். “எல்லோரும் இகழ்ந்தவர்களிடையே நான் வாழ வேண்டும், அவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும், அவர்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என விரும்பியதாக அவர் குறிப்பிடுகிறார். பிறப்பில் இருந்தே சைவ உணவுகளை மட்டுமே உண்டு பழகியவரான சச்சிதானந்த் அங்கு இறைச்சி உணவுகளையும் உண்ணப் பழகிக் கொண்டார்.
கல்லூரிக்குள் மட்டும் சச்சிதானந்த் பார்ப்பனிய மேலாதிக்கத்தை காணவில்லை. வெளியே எங்கு பார்த்தாலும் பார்ப்பனிய மேலாதிக்கம் மிக மோசமாக இருந்தது. மலபாரில் ஜாதிய வீரியம் எவ்வளவு கொடூரமாக இருந்தது என்ற கதைகளை கேட்டார். விடுமுறை கால பயணங்களின் போது, சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுப் பாதைகளில் தடை விதிக்கப் பட்டிருந்ததை கண்டார். பாலங்கள் வழியே பயணிக்க பெரும்பாலும் உயர் ஜாதியினருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், தாழ்த்தப் பட்டவர்கள் ஆற்றை கடந்தே செல்ல வேண்டியிருந்த கொடுமைகளையும் கண்டார். பார்ப்பனர்கள் குடியிருக்கும் பகுதியில் பிறர் நிலம் வாங்க முடியாத சூழல் இருந்ததையும் தெரிந்து கொண்டார்.
ஒரு தாழ்த்தப்பட்டவர் சென்று கொண்டிருக்கும் போது பார்ப்பனர் அவ்வழியே வருவதை பார்த்து விட்டால், கைகளை மேலே உயர்த்தி அசுத்தமானவன் வருகிறேன் என்றி கத்த வேண்டும். அதைப் பார்த்து அந்த பார்ப்பனர் அருகில் வர மாட்டார் என்ற கொடுமைகள் எல்லாம் இருப்பதையும் பார்த்ததாக சச்சிதானந்த் குறிப்பிடுகிறார்.
சச்சிதானந்தின் ஒருமுறை பயணத்தின்போது, தங்கியிருந்த இடத்திற்கு அருகில் சாலையோரம் முனகல் சத்தம் வருவதை கேட்டுள்ளார். ரத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய அப் பெண்ணை மீட்டு தங்கியிருந்த ஆர்ய சமாஜிற்கு அழைத்துச் சென்றார். மருத்துவ உதவிகள் அளித்தும், மறுநாள் காலையில் அப்பெண் உயிரிழந்தார். கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் அப்பெண் உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் என்னவென்று அப்போது தெரியவில்லை. ஆனால் அப்பெண்ணின் பெயர் அவரின் ஜாதியை தெரிய வைத்தது.
பின்னாளில் கொலைக்கான காரணம் குறித்து யூகித்த அவர், பார்ப்பனர்களே அடித்துக் கொன்றிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வருகிறார். தாழ்த்தப்பட்டவரின் அருகில் சென்றாலே தீட்டு என்றால், அந்த பெண்ணை அடித்துக் கொல்ல எத்தனை பார்ப்பனர்கள் அருகே சென்று அடித்திருப்பார்கள், அப்போது தீட்டாகவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பிக் கொண்டார்.
சென்னையில் கல்லூரி படித்த காலம் சச்சிதானந்திற்கு, ஜாதிய கட்டமைப்பு பற்றிய மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அவருக்கு கிடைத்த உன்னதமான, நீடித்த நட்புகளை குறித்தும் அவர் பதிவு செய்துள்ளார். அந்த நட்புகள் தனது கொள்கைகளுக்கு ஊட்டமளித்தன, ஜாதியம் குறித்து எழுத வைத்தன என்றும் அவர் குறிப்பிடுகிறார். “எப்போதாவது ஒரு பெரும் வன்முறையிலோ அல்லது பேரெழுச்சியிலோ ஜாதியும் மதமும் செத்துவிடும், சகோதரத்துவம் எழும்” என்ற நம்பிக்கையையும் அவர் தனது எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறி ஏன் சுயமரியாதை இயக்கம் கண்டார்? பார்ப்பனரல்லாதோரின் விடுதலைக்காக ஏன் வாழ் நாளெல்லாம் ஓடி உழைத்தார்? அன்றைய காலகட்டத்தில் பார்ப்பனியம் எவ்வளவு வீரியத்தோடு ஜாதிய நஞ்சை கக்கியது? என்றெல்லாம் புரிந்து கொள்ள ஒரு பார்ப்பனராய் சச்சிதானந்த் நேரடி சாட்சியம். பார்ப்பனியத்தின் கொரூரத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வதை விட பார்ப்பனர்கள் புரிந்துகொண்டு மனம் திருந்துவது வரலாற்றில் அரிதினும் அரிதாகவே நடந்திருக்கிறது. அதில் சச்சிதானந்தின் நேர்மை வரவேற்புக்குரியது.
(தகவல்கள்: பிரண்ட்லைன் இதழ்)
தமிழில் : ர.பிரகாஷ்