(இடஒதுக்கீட்டு எதிர்ப்புக் கிளர்ச்சியை ஊதி விடுவதில் தொலைக் காட்சிகளும், பத்திரிகைகளும் பெரும் பங்காற்றி வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் கடந்த ஏப்.29-ம் தேதி இந்த ஊடகங்களைக் கண்டித்து சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊடகங்களின் சாதிக் கண்ணோட்டத்தை விளக்கி, சித்தார்த் வரதராஜ் என்ற பத்திரிகையாளர் மிகச்சிறந்த கட்டுரை ஒன்றை ‘இந்து’ ஏட்டில் (ஜூன் 3) எழுதியிருக்கிறார். கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் தமிழில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது.)

கட்டுரையாளரான சித்தார்த் வரதராஜ் டெல்லியில் ஆங்கில பத்திரிகையில் தலையங்கம் எழுதும் ஆசிரியராகப் பணியாற்றிய போது, பல்கலைக் கழக மருத்துவ விஞ்ஞான கல்லூரியில் படிக்கும் தலித் மாணவர்கள் சிலர் அவரை சந்தித்து, தங்கள் கல்லூரி விடுதிகளில் நடக்கும் தீண்டாமை கொடுமையை விவரித்துக் கூறினார். விடுதியில் தலித் மாணவர்கள் தனியாக தங்க வைக்கப்பட்டனர்.

பிற சாதி மாணவர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடவும் தடை போடப்பட்டிருந்தது. சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் சாதியைச் சொல்லி திட்டுவார்கள். இவ்வளவு அவமானங்களையும் சகித்துக் கொண்டு, படிப்பதற்குக் காரணம் எப்படியாவது டாக்டராக வேண்டும் என்ற தங்களது பெற்றோர்களது விருப்பத்தை நிறை வேற்றுவதற்குத்தான் என்று, மாணவர்கள் குமுறலுடன் கூறினர்.

ஒரு செய்தியாளரை நேரில் அனுப்பி, விவரங்களை சேகரிக்குமாறு, பத்திரிகை நிறுவனத்திடம், தலையங்க எழுத்தாளர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பத்திரிகையின் செய்திப் பிரிவு கண்டுகொள்ளவே இல்லை. பிறகு, தலையங்க எழுத்தாளரே, அந்த விடுதிக்கு நேரில் சென்று, விசாரணை நடத்தி ‘தீண்டாமை’க் கொடுமைகள் நடப்பது உண்மைதான் என்பதை நேரில் அறிந்தார். அதை ஒரு கட்டுரையாக்கி, தான் பணியாற்றிய பத்திரிகை நிறுவனத்திடம் தந்தார்.

பல நாட்கள் வரை அக்கட்டுரையை வெளியிடாமல், கிடப்பில் போட்டுவிட்டனர். இதற்கிடையே அந்த மருத்துவக் கல்லூரி தலித் மாணவர்கள், போராடத் துவங்கினர். அவர்கள் போராட்டம் துவங்கிய ஒரு மாதத்துக்குப் பிறகுதான், தலையங்க எழுத்தாளர் (சித்தார்த் வரதராசன்) தந்த செய்திக் கட்டுரை மிகவும் வெட்டி, சுருக்கி, சிதைத்து அந்த ஏட்டில் வெளியிடப்பட்டது. இதை எழுதியுள்ள, இக்கட்டுரையாளர், தலித் மாணவர்கள் என்றால், ஊடகங்கள் எந்த அளவு அலட்சியம் காட்டுகின்றன என்பதற்கு இந்த சம்பவத்தை உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தலித் மாணவர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாவதில் இப்படி அலட்சியம் காட்டிய ஏடுகள் தான், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் நடத்திய ஒரு மாத வேலை நிறுத்தத்தை அதீத ஆர்வத்துடன் மிகையாக்கி செய்திகளை வெளியிட்டன. அதே நேரத்தில், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை இருட்டடிப்பு செய்தன.

இந்த டாக்டர்கள் எத்தகைய போராட்டத்தை நடத்தினார்கள்? துடைப்பத்தால் தெரு கூட்டினார்கள்; செருப்புக்கு பாலிஷ் போட்டார்கள்; இது எதை உணர்த்துகிறது? பிற்படுத்தப் பட்டவர்களே, சமூகத்தில் உங்கள் தொழில் இதுதான் என்பதையே இதன் மூலம் உணர்த்தினார்கள். தொலைக்காட்சிகள், எந்த விமர்சனமும் இல்லாமல், இதை அப்படியே ஒளிபரப்பின.

இந்தப் போராட்டங்களை ‘வீரதீரச் செயல்களாக’ ஊடகங்கள் சித்தரித்தன. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினால், “போக்குவரத்துக்கு இடையூறு; அன்றாட வாழ்க்கை பாதிப்பு” என்று செய்திகளைப் போடு வார்கள். ஆனால், ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய மறுத்து, போராடிய டாக்டர்களை, “வீரர்கள்”, “கதாநாயகர்களாக” சித்தரிக்கிறார்கள்.

நாட்டில் பெரும்பகுதி மக்கள் செய்து வரும் தொழிலை அவமதிக்கக் கூடிய ஒரு போராட்ட வடிவத்தை, இந்த மருத்துவர்கள் கையில் எடுத்த போது, இத்தகைய டாக்டர்களிடம் என்ன ‘தகுதி’யிருக்கிறது என்ற கேள்வியை, எவராவது கேட்பார்களா? எந்தப் பத்திரிகையாவது எழுதியதா?

ஆனால், ‘போராடும் மன நோயாளியாக’ மாற்றுவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி, இந்த ஊடகங்கள், போராட்டத்தைத் திணித்தன! போராட்டம் தீவிரமாக நடந்த நிறுவனங்களில் ஒன்று அகில இந்திய மருத்துவக் கழகம்! இதே நிறுவனத்தில் கடந்த ஆண்டு, மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். ஏழை நோயாளிகளுக்கும், பணக்காரர்களிடம் வாங்குவது போலவே கூடுதல் கட்டணம் வாங்குவதை எதிர்த்து, டாக்டர்களில் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தம் செய்தனர்.

அப்போது, மருத்துவமனை வளாகத்துக்குள் போராடக் கூடாது என்று, நிர்வாகம் எச்சரித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வளாகத்துக்குள் போராட்டம் நடத்தத் தடை வாங்கியது. அதே வளாகத்துக்குள் தான், இப்போது இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் டாக்டர்கள், துணிப் பந்தல்களை அமைத்து, குளிரூட்டப்பட்ட குடிநீர் வசதிகளுடன் வெளியிலிருந்து ஆதரவாளர்களைத் திரட்டி வந்து போராட்டம் நடத்தினார்கள்.

(இந்தப் போராட்டத்துக்கு பெரும் தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் செலவிட்ட தொகை ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது ) தகவல் தொழில் நுட்ப மய்யங்களில் பணியாற்றுவோரை, அந்நிறுவனங்கள், விடுமுறை கொடுத்து, டாக்டர்களோடு சேர்ந்து போராடுவதற்கு அனுப்பி வைத்தன! (ஆனால், தங்களது நிறுவனங்களில், வேலை நிறுத்தத்தை, இந்த நிறுவனங்கள் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.)

ஊடகங்களில் - பத்திரிகையானாலும், தொலைக்காட்சியானாலும், முன்னேறிய சாதியினர்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஊடகங்களில் பணியாற்றுவோர் பற்றிய புள்ளி விவரங்கள் ஏதும் இல்லை. 1996-ல் பி.என்.யூனியல் என்பவர் நடத்திய ஆய்வில், டெல்லியில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளராக ஒரு ‘தலித்’ கூட இல்லை.

‘ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்’ சங்கம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில் - டெல்லியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவு. முஸ்லீம்களில் 3 சதவீதம் பேர் கூட இல்லை. பழங்குடியினர் சமூகத்தில் ஒருவர்கூட இல்லை. இதனால்தான் ஊடகங்களின் பார்வை கிராமங்களின் மீதோ - சமூகத்தில் பெரும்பாலான ஏழை, பின்தங்கிய மக்கள் பிரச்சினை மீதோ திரும்புவது இல்லை.

வசதி படைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, வசதி படைத்த கல்வி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பெறும் கல்விதான் தரமானதா என்று போராடும் மாணவர்கள் கேட்கும் கேள்வி நியாயமானது. இது மிக முக்கிய சமூகப் பிரச்சினை. இது தொடர்பான ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமளிக்காமல், போராடும் மாணவர்களை கண்மூடித்தனமாக ஆதரித்து, ஊடகங்கள் செயல்பட்டதால், விவாதக்களம் சுருக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு எழுதியிருக்கிறார் சித்தார்த் வரதராஜ்.

Pin It