விடுதலைப் பார்வையில் தலித் கலைகள்
தீண்டாமையின் ஓர் வடிவமாகவும், இழி தொழிலாகவும் "பறையடித்தல்' கருதப்படுவதால், அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என உறுதி கொண்டு பறையடிக்கும் தொழிலை அழித்தொழிக்கும் போராட்டத்தில் தலித் முன்னோடிகளில் சிலர் தீவிரமாகக் களமிறங்கினர். குறிப்பாக, வட தமிழகத்தில் இந்திய குடியரசுக் கட்சி, தமிழக மனித உரிமைக் கட்சி போன்ற இயக்கங்கள் இம்யற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டன. அவர்களின் முயற்சி வீண் போகவில்லை. பல கிராமங்களில் பறையடிக்கும் பழக்கத்தை ஒழித்தனர். இருப்பினும், அதையே தொழிலாகக் கொண்டிருப்போர் தொடர்ந்து பறையடிப்பதை நிறுத்த முடியவில்லை.
தமிழகத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் பறையிசை, சத்தமின்றி ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் பலத்த ஒலியுடன் பறையிசை அதிரத் தொடங்கியது. அண்டம் கிடுகிடுக்க ஆர்ப்பரித்து எழுந்த பறையொலி, சாதி இந்துக்களை அச்சுறுத்துவதற்கு முன் தலித்துகளில் சிலரை அச்சுறுத்தியது. எங்கே மீண்டும் பறையடிப்பை அடிமைத் தொழிலாக நம் தலைமேல் சுமத்தி விடுவார்களோ என்றெண்ணி, தங்களுடைய எதிர்ப்புக் குரல்களைத் தெரிவிக்க முன்வந்துள்ளனர்.
அவர்களுடைய நியாயமான உணர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் "பறை' குறித்த சில தகவல்களை, அந்த இசை ஏற்படுத்தியுள்ள விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முதலில், "பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். "பேசு' எனப்பொருள்படும் "அறை' என்ற சொல்லினின்று "பறை' தோன்றியது. (நன்னூல் : 458) பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி "பறை' எனப்பட்டது. "பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி' என முனைவர் வளர்மதி தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார்.
பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் "பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என அய்ந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. "பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது.
பெருகிவரும் புனலை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றி தோல்வியை அறிவிக்க, வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடை செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க, இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில் என வாழ்வியல் கூறுகளுடன் இணைந்து இயங்கியுள்ளது "பறை'. உற்பத்தி செய்யும் தொழிற் களங்களில்தான் நிகழ்த்துக் கலைகள் பிறந்தன உருவாயின எனக் கொள்ளலாம். ஆனால், இக்கலைகளை வளர்த்த பெருமை கோயில்களையே சாரும். ஏனெனில், கோயில் கொடைகள், விழாக்கள் நடைபெறும் நேரத்தில் தான் இக்கலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இன்று செத்த பிணத்திற்கு முன்பு அடிக்கப்படும் பறை, ஒரு காலத்தில் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தன்மையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருக்கொடி ஏற்றும் நாளில் பறை முழக்க நிகழ்ச்சி, முக்கியமான நிகழ்வாகும். இப்பறை முழக்கும் நிகழ்வுக்கு "திருப்பறையறைவு' எனப் பெயர் வழங்கப்பட்டது. இப்பறை இசைக்கும் நிகழ்வுக்குப்பிறகுதான் திருவிழா நடைபெறும். ஆக கோயில்களில் வாசிக்கப்பட்ட பறை இடைக்காலங்களில் நிறுத்தப்பட்டு பிணத்திற்கு முன் இசைக்கும் ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் பின்புலங்களை அலசி ஆராய வேண்டியுள்ளது.
புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்கூட தன்னுடைய வீரியமிக்க எண்ணங்களை பறை, முரசு, சங்கு போன்ற தமிழருக்குரிய கருவிகளைக் கொண்டு தமக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.
அன்னியர் நூலைத் தொடோம் என்ற சேதி
அறைந்திடடா புவி முற்றிலும் எங்கள்
அறுபது கோடித் தடக்கைகள் ராட்டினம்...
சுற்றும் சுற்றும் சுற்றும்
இன்னும் செல்லாது பிறர் செய்யும் சூழ்ச்சிகள்
என்று சொல்லிப் புயம்தட்டு அட
யானையின் மேல் வள்ளுவா சென்று நீ பறை
கொட்டு கொட்டு கொட்டு
நான்கு கோடித் தமிழர் பட்டாளம்
நாட்டை மீட்கக் கிளம்பிற்றுக் கண்டாய்
தீங்கு செய்யும் வடவரின் ஆட்டம்
செல்லாதென்று கொட்டு வெற்றிப்பறை!
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்புவோம்
இவ்வாறு பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து; தோலிசைக் கருவிகளின் தாய்; தமிழினத்தின் தொன்மையான அடையாளம்; உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்; தமிழர் வாழ்வியலின் முகம்; ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டுச் சின்னம்; கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம்; இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரல். இசையறிவை விளக்கும் இக்கருவி தாழ்ந்து வீழ்ந்தது எப்படி? ஒரே பதில் சாதி வெறி.
சாதிய படிநிலைக் கட்டமைப்பில் தலித் மக்கள் அடி மட்டத்தில் இருப்பதாகக் கருதப்படுவதுதான் காரணமே தவிர, பறையடிப்பதால் அவர்கள் கீழானவர்கள் என்று பொருள் கொள்ள முடியாது. தாழ்த்தப்பட்டோரை சரிசமமாக எண்ணுகிற மனநிலை, சாதி இந்துகளுக்கு எள்ளளவும் இல்லாதபோது அவர்கள் செய்கின்ற தொழிலை மட்டும் எப்படி உயர்வாகவோ, பெருமையாகவோ ஏற்றுக் கொள்வார்கள்? இந்திய சாதியச் சமூகத்தில் எந்த ஒரு தொழிலும் அல்லது உற்பத்தி செய்யப்படுகின்ற ஒரு பொருளின் தரம் அதற்கான அங்கீகாரம் என்பது அது பயன்படுத்தப்படும் தன்மை, சூழல், நபர் இவைகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. அதுபோலவே, தாழ்த்தப்பட்டோர் செய்யும் தொழிலும் அதே அளவுகோலால் கவனிக்கப்படுகிறது.
ஓர் இனத்தின் வாழ்வும் தாழ்வும், பெருமையும் சிறுமையும் அம்மக்களின் பண்பாட்டு அடையாளங்களில்தான் புதைந்து கிடக்கின்றன. இந்தியாவில் அய்ந்திலொரு பகுதி மக்களின் முகவரி அழிக்கப்பட்ட நிலையில் அம்மக்களின் பண்பாடுகளும் இழிவானது, அவமானச் சின்னமானது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. மண்ணைப் பிடுங்கி, அடிமைப்படுத்தியது போல் இன்று அவர்களின் சிந்தனையையும் அடிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளி விட்டனர்.
பறையடிப்பது இழிவான தொழில் என்பது சாதி இந்துக்களின் கருத்து. அக்கருத்தை சில தலித்துகளும் தலையாட்டி ஏற்றுக் கொள்கிறார்கள். சாதி இந்துக்களின் மனதில் இழிவு என்று பதிவு செய்யப்பட்டிருக்கும் செயலை, நாம் செய்யக் கூடாது என்று தலித்துகளில் சிலர் உறுதியாக இருக்கின்றனர்.
அமெரிக்க நிறவெறியால் வெள்ளையர்கள் அந்நாட்டின் பூர்வகுடி மக்களான கருப்பர்களைப் பார்த்து "கருப்பு அசிங்கமான நிறம், கருப்பர்கள் இழிவானவர்கள்' என எள்ளி நகையாடினர். வெள்ளையர்களின் இப்பிரச்சாரத்தைக் கண்டு கருப்பர்கள் முடங்கி அடங்கி ஒடுங்கி விடவில்லை. வெள்ளையர்களின் கருத்துக்கு எதிராக "கருப்பு மேன்மையானது, கருப்புதான் அழகு, கருப்பர்கள் அழகானவர்கள்; ஆற்றல் மிகுந்தவர்கள்' என மாற்றுக்கருத்தை முன்வைத்து அணிதிரண்டுப் போராடினர். கல்வியிலும், விளையாட்டிலும், அறிவிலும், ஆற்றலிலும் வல்லமை பொருந்தியவர்கள் கருப்பர்கள் என்பதை இன்று உலகுக்கே பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல பறையடிப்பது இழிவு என்று கருதினால், அந்த இழிவைத் துடைத்தெறிய வழிவகை காண வேண்டுமே தவிர அதை விட்டு விட்டு தப்பித்து ஓடி மறைவதால் முத்திரை குத்தப்பட்ட பார்வை நீங்கிவிடாது. பறையைக் கொண்டு அடிமைப்படுத்துகிற சமூகத்தில், அதையே தங்களை விடுவிக்கிற ஆயுதமாகக் கையாள்கிற வகையில்தான் "பறை' மீண்டும் கரங்களில் தவழ்கிறதே தவிர, செத்த பிணத்திற்கு முன்பு அடித்தாட வேண்டும் என்பதற்காக அல்ல.
பார்ப்பனியப் பண்பாடுதான் உயர்ந்தது என சாதியை ஏற்றுக் கொண்ட அனைத்துச் சாதியினரும் அக்கழிசடைப் பண்பாட்டைப் பின்பற்றி, தங்களையும் பார்ப்பனர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. அதற்கெதிரான பண்பாட்டை முன்னிறுத்த வேண்டியது, சாதியத்திற்கு எதிரானவர்களின் சமூகக் கடமையாக இருக்கிறது. மாட்டுக் கறி உண்பது, எப்படி இந்துத்துவத்திற்கு எதிரான பண்பாடாகக் கருதப்படுகிறதோ, அதுபோலவே பறையடித்தலும் இந்துத்துவத்திற்கு எதிரான ஒரு பண்பாட்டு யுத்தமாகவே இசைக்கப்படுகிறது. பறை இசைத்தல் என்பது மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கை அல்ல. மாறாக, அது சாதிகளற்ற சமத்துவ மானுட உலகைப் படைக்கும் ஆற்றல்மிகு பேரிசை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்னும் "பறை' என்பது ஏதோ சாவுக்கு மட்டுமே அடிக்கின்ற இசைக் கருவியாகப் பார்ப்பது தவறான அணுகுமுறையாகும். திருமணம், சடங்கு, காதுகுத்து, ஊர்வலங்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், கல்லூரி பல்கலைக் கழக நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள், கலை விழாக்கள் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பறை இடம் பெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, ஏராளமான ஒலி நாடாக்களில் பறையிசை இடம் பெற்றுள்ளது. வெகுசன ஊடக இசையில் பறையிசை தனக்கென ஓர் தனி இடம் பிடித்துள்ளது. தம்புராவும், வீணையும், மிருதங்கமும், தபேலாவும் ஆக்கிரமித்திருந்த தமிழ்த் திரையிசையில் பறையொலி இணைந்துள்ளது. தமிழ்த் திரையில் பறையாட்டக் கலைஞர்கள் அடித்தாடுவது போன்ற காட்சிகள் வந்து போகின்றன. குறிப்பாக "சங்கமம்' படத்தில் ஒரு பாடல் முழுக்க பறையிசை எழுப்புகின்ற ஓசை, ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமைந்திருக்கும்.
அதுபோலவே, "தென்றல்' படத்தில் ஒரு பாடல் முழுக்க பறையிசைக் கருவியின் பெருமைகளைக்கூறி பறையை வர்ணிக்கும் ஓர் அற்புதமான பாடலை வித்யாசாகர் அளித்திருக்கிறார். அண்மையில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில், அலங்காநல்லூர் பறையாட்டக் கலைஞர்கள் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். அதாவது, பாடல் ஒலிப்பதிவில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன.
ஒரே நேரத்தில் இசைக் கலைஞர்கள், பாடகர்கள், இவர்களைக் கொண்டு நேரடியாக ஒலிப்பதிவு செய்வது ஒரு முறை. இன்னொன்று தனித்தனியாக இசை, பாடல், இவைகளைக் கோர்த்து ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து ஒலிப்பதிவு செய்வது ஆகும். பொதுவாக, பறையிசைக் கலைஞர்கள் முதல் வகை ஒலிப்பதிவில்தான் அதிகம் பயன்படுத்தப்படுவார்கள்.
ஏனெனில், அவர்களால் இரண்டாம் வகை ஒலிப்பதிவு முறையில் இசைக்கத் தெரியாது என்பது இசையமைப்பாளர்களின் கருத்து. ஆனால், கடந்த சூன் 11 அன்று இசையமைப்பாளர்களின் எண்ணத்தை உடைத்தெறியும் வகையில், இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைக்கும் புதிய படத்தின் பாடலொன்றிற்கு பறையிசைக் கலைஞர்கள், தடுமாற்றமின்றி தெளிவான முறையில் பறையிசைத்து முடித்தார்கள்.
வட தமிழகத்திலுள்ள தலித்துகள், பறையிசைக் கருவியை அடிமைப்படுத்தப்பட்ட தீண்டாமையின் ஓர் வடிவமாகவே பார்க்கிறார்கள். ஏனெனில், "பறை'யடிப்பது, இப்பகுதிகளில் நிகழும் சாவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வேறு எந்த நகழ்வுக்கும் பறையைப் பயன்படுத்துவதில்லை. அதனால் பறையை இழிவான தொழில் கருவியாகப் பார்க்கிறார்கள். ஆனால், தென்மாவட்டத்தில் ‘பறை' சாவுக்கு மட்டுமல்ல; எல்லா நகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இழவுக்கு அடித்த தொழில் கலையை மேடையில் நிகழ்த்தும் ஆட்டக் கலையாக மாற்றி விட்டனர். வடமாவட்டங்களில் “பறை” மேடையேறும் நிகழ்ச்சியாக மாறவில்லை. வழக்கத்திலிருந்த தொழில் கலையை இப்பகுதி கலைஞர்கள் நிகழ்த்துக் கலையாக மாற்றி, அதற்கு வேறு முகத்தை ஏற்படுத்தி விட்டனர்.
"தலித் கலை விழா' தொடங்கி பத்தாண்டுகள் முடிந்த பிறகும் தலித் கலைகள் தலித் அல்லாதோரிடம் ஒரு சில அசைவுகளையும், மாற்றங்களையும் உருவாக்கியுள்ளன. தலித் கலைகளை ஏற்றுக் கொண்டு அவற்றைக் கற்றுக் கொள்ள முன்வந்துள்ளனர். இன்று தமிழகத்தில் தலித் அல்லாதோர் இக்கலைகளை கற்றுக் கொண்டு, கலைக்குழுக்களாகவும் இயங்கி வருகின்றனர். தலித் அல்லாதோரும் பறையடிக்கின்றனர். ஆனால், அவர்கள் சாவு நிகழ்வுகளுக்கு அடிப்பதில்லை. மேடை நிகழ்ச்சிகளில் மட்டுமே பறையடிக்கின்றனர். மேடை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தொலைக்காட்சி, திரையரங்கம் போன்ற வெகுசன ஊடகங்களிலும் நிகழ்த்தி வருகின்றனர்.
"பறை' மேடைக் கலையாக, நிகழ்த்துக்கலையாக பரிணாம வளர்ச்சி பெற்றதால் அதைக் கற்றுக் கொள்ளும் தேவையும் அதிகரித்திருக்கிறது. செவ்வியல், மேற்கத்திய கலைகளைக் கற்றுக் கொள்வதற்கு எவ்வாறு முறையான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதோ, அதுபோல பறையாட்டத்தைக் கற்றுக் கொள்வதற்கும் முறையான பயிலரங்குகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெறுகின்றன. இப்பயிலரங்குகளில் பறையாட்டக் கலைஞர்களே கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாக, கலை ஆசான்களாக அடையாளப்ப டுத்தப்படுகின்றனர். இதுபோன்ற அரிய வாய்ப்புகள், பறையாட்டக் கலைஞர்களிடையே புதிய ஆளுமைப் பண்புகளையும், தலை நிமிர்வையும் ஊட்டுகின்றன.
இதனால், பறையிசைக் கருவியின் விலையும் உயர்வடைந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன் ரூ. 100, ரூ. 150 என ஒரு பறையின் விலை இருந்தது. ஆனால், இன்று அதே பறை 700 ரூபாய் என உயர்ந்துள்ளது. பறை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கு இதன் மூலம் வருமானம் அதிகரித்திருக்கிறது. செவ்வியல் கலைகளும், மேற்கத்திய, மெல்லிசைக் கலைகளும் பயிற்றுவிக்கக்கூடிய அரசு இசைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பறையை ஒரு பாடமாகச் சேர்த்து பறையிசையை கற்றுக் கொடுக்க முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இசைக்கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் "பறை'யும் ஒரு பாடமாக இணைக்கப்பட்டிருப்பது, தொடர்ந்து பறையிசை முழங்கியதன் விளைவால் ஏற்பட்ட பயனாகும்.
இன்றும் சிலர், "பறை' நமது கைகளில் திணிக்கப்பட்ட ஒன்று என்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் நிலத்தோடும், உற்பத்தி உறவுகளோடும் தொடர்புடைய உழைக்கும் மக்கள் என்பதை ஏற்றுக் கொண்டால், அவர்கள் இசைக் குடிகள் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில், உழைக்கும் மக்களிடமிருந்துதான் இசையும், கலையும், இலக்கியமும் பிறக்கின்றன. தொழிற்களங்களில் ஒவ்வொரு தொழிலும் செயலும், சூழலும் எடுத்துக் கொள்ளும் கால அளவுதான் கலையை, இசையைத் தீர்மானித்திருக்கின்றன. எனவே, பறை நம்மீது திணிக்கப்பட்ட ஓர் இழிநிலைக் கருவியல்ல; மாறாக இசையறிவை விளக்கும் ஓர் தொன்மையான இசைக் கருவி.
எனவே, பறையை மீண்டும் கையிலேந்தி இசைப்பதா? அல்லது விட்டொழிப்பதா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. சாவுக்குப் பறையடிக்க யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூற முடியாது. சாதியத்தை ஆழமாய் உள்வாங்கிய பகுதிகளில் இந்நிலை இன்னும் நீடிக்கிறது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் பறையிசை விடுதலைத் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் உற்று நோக்க வேண்டியுள்ளது. சமகால பண்பாட்டுத் தளத்திலிருந்து "பறை'யை உற்று நோக்குவோருக்கு அது அடிமைப்படுத்தப்பட்ட கருவியா? அல்லது விடுதலைக்கான கருவியா? என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் எழலாம். ஆனால், பறை வெல்லும்போது தீர்வுகளும், தீர்ப்புகளும் மாற்றியமைக்கப்படும். மறுபார்வை விரியும்!