I

     தீண்டாமை எப்போது தோன்றிற்று? மிகப் பண்டையக் காலம் முதலே தீண்டாமை இருந்து வருவதாக வைதீக இந்துக்கள் சாதிக்கின்றனர். தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை பிற்காலத்தைச் சேர்ந்த ஸ்மிருதிகள் மட்டுமின்றி, காலத்தால் அவற்றுக்கு முற்பட்டவையும் சில எழுத்தாளர்களின் கூற்றுப்படி கிறித்து பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முந்தியவையுமான தர்மசூத்திரங்களும் ஆதரித்திருப்பதாக இவர்கள் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ambedkar 400தீண்டாமையின் தோற்றம் பற்றி ஆராய முற்படும்போது பின்கண்ட கேள்வியுடன் ஆரம்பிக்க வேண்டும்: அநேகர் கூறுவது போல் தீண்டாமை அத்தனைப் பழமையானதா?

இந்தக் கேள்விக்கு விடைகாணுவதற்கு தர்மசூத்திரங்களை ஆராய வேண்டும். அப்போதுதான் தீண்டாமையையும் தீண்டாதோர்களையும் அவை எந்த அர்த்தத்தில் குறிப்பிடுகின்றன என்பதைத் தீர்மானிக்கமுடியும். தீண்டாமையை இன்று நாம் எந்த அர்த்தத்தில் புரிந்து கொண்டிருக்கிறோமோ அந்த அர்த்தத்தில் அவை அவற்றுக்குப் பொருள்கொள்கின்றனவா? அவை குறிப்பிடும் வகுப்பினர் இன்று நாம் பயன்படுத்தும் தீண்டப்படாதோர் என்ற பதத்துக்குரிய அதே தீண்டப்படாத மக்கள்தானா?

முதலில் முதல் கேள்வியை எடுத்துக்கொள்வோம். தர்ம சூத்திரங்களைப் பற்றி ஆராயும்போது அந்த சூத்திரங்கள் அஸ்பிரஷ்யாக்கள் என்னும் வகுப்பினரைப் பற்றிப் பேசுகின்றன என்பதை அந்த ஆய்வு காட்டுகிறது என்பதில் ஐயமில்லை. அஸ்பிரஷ்யாக்கள் என்னும் பதம் தீண்டப்படாதோரைக் குறிக்கிறது என்பதிலும் ஐயமில்லை. எனினும் தர்மசூத்திரங்களின் அஸ்பிரஷ்யாக்களும் இன்றைய இந்தியாவின் அஸ்பிரஷ்யாக்களும் ஒரே மக்கள்தானா என்னும், கேள்வி இங்கு இயல்பாகவே எழுகிறது. அதிலும் அந்த யாக்கள், அந்த்யஜாக்கள், அந்த்யவாசின்கள், பாஹ்யாக்கள் போன்ற இதர பல்வேறு பதங்களை தர்ம சூத்திரங்கள் பயன்படுத்தியிருப்பதைக் கொண்டுபார்க்கும்போது இந்தக்கேள்வி இன்னும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்தப் பதங்கள் பிற்கால ஸ்மிருதிகளும் இந்தப் பதங்களை எவ்விதம் பயன்படுத்தி இருக்கின்றன என்பதை ஓரளவு தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். பின்வரும் அட்டவணை இந்தக் குறிக்கோளைக் கொண்டதே ஆகும்.

I.அஸ்பிரஷ்யாக்கள்

தர்மசூத்திரங்கள்

ஸ்மிருதிகள்

1.   விஷ்ணு V.104.

1.   கார்த்தியாயன சுலோகங்கள் 433, 783

  1. அன்த்யாக்கள்

தர்மசூத்திரங்கள்

ஸ்மிருதிகள்

1.   வாசிட்டம் (16-30)

2.   ஆபஸ்தம்பம் (III.1)

1.   மனு IV.79; VIII.68

2.   யாக்ஞவல்கியம் I.148-197

3.   அத்திரி 25

4.   லிகிதம் 92.

III. பாஹ்யாக்கள்

தர்மசூத்திரங்கள்

ஸ்மிருதிகள்

1.   ஆபஸ்தம்பம் 1.2.3.9.18

2.   விஷ்ணு 16.14

1.   மனு 28

2.   நாரதம் 1.155

 

IV.அந்த்வாசின்கள்

தர்மசூத்திரங்கள்

ஸ்மிருதிகள்

1.   கௌதமம் XXXI; XXIII 32

2.   வாசிட்டம் XVIII.3

1.   மனு IV.79; X 39

2.   மகாபாரதம் சாந்தி பருவம் 141; 29-32

3.   மத்யமங்கிராஸ் யாக்ஞவல்கியத்தைப் பற்றி மித க்ஷரத்தில் மேற்கோள். 3.280

  1. அந்த்யஜாக்கள்

தர்மசூத்திரங்கள்

ஸ்மிருதிகள்

1.   விஷ்ணு 36.7

1.   மனு IV.61; VIII. 279

2.   யாக்ஞவல்கியம் 12.73

3.   பிரிஹத்யாம ஸ்மிருதி (யக்ஞவல்கியத்தைப் பற்றி மிதக்ஷரம் மேற்கோள் III.260)

4.   அத்திரி. 199

5.   வேதவியாசம் 1.12.13

 II

     அடுத்த கேள்வி அந்த்யாக்கள், அந்த்யஜாக்கள், அந்த்யவாசின்கள், பாஹ்யாக்கள் என்னும் பதங்கள் குறிக்கும் வகுப்பினரையே சொல்லிணக்கத்தின்படி தீண்டப்படாதோரைக் குறிக்கும் அஸ்பிரஷ்யாக்கள் என்னும் பதமும் குறிப்பிடுகின்றனவா? வேறுவிதமாகச் சொன்னால் இவை எல்லாம் ஒரே வகுப்பைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்கள்தானா?

     இந்தக் கேள்விக்கு பதிலளிக்க தர்மசூத்திரங்களால் இயலவில்லை என்பது துரதிருஷ்டவசமானதாகும். அஸ்பிரஷ்யாக்கள் எனும் பதம் (ஒரு முறை சூத்திரத்திலும் ஒரு முறை ஸ்மிருதியிலும்) இரண்டு இடங்களில் வருகிறது. ஆனால் இதில் என்னென்ன வகுப்புகள் அடங்கியுள்ளன என்ற விவரங்களை இவற்றில் எதுவும் தரவில்லை. அந்த்யாக்கள் எனும் பதத்தின் கதையும் இதேதான். அந்த்யாக்கள் என்னும் சொல் (சூத்திரங்களில் இரு இடங்களிலும் ஸ்மிருதிகளில் நான்கு இடங்களிலும்) மொத்தம் ஆறு இடங்களில் வந்த போதிலும் இந்த அந்த்யாக்கள் என்பவர்கள் யார் என்பது ஓரிடத்தில்கூட விளக்கப்படவில்லை. இது போன்றே பாஹ்யாக்கள் என்னும் பதம் (சூத்திரங்களில் இரண்டு இடங்களிலும் ஸ்மிருதிகளில் இரண்டு இடங்களிலும்) நான்கு இடங்களில் வருகிறது. எனினும் இந்தப் பதத்தில் என்னென்ன வகுப்புகள் இடம்பெற்றுள்ளன என்பதை இவற்றில் எதுவுமே குறிப்பிடவில்லை. அந்த்யவாசின்கள், அந்த்யஜாக்கள் என்ற பதங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதற்கும் தர்மசூத்திரங்களைப் பொறுத்தவரையில் இவர்களைப் பற்றி பேச்சுமூச்சுவிடவில்லை. எந்த விவரங்களையும் தரவில்லை. ஆனால் ஸ்மிருதிகளில் இவர்களைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. அந்த்யவாசின்கள் பற்றிய விவரங்கள் மத்யமங்கிராஸ் என்ற ஸ்மிருதியிலும் அந்த்யஜாக்கள் பற்றிய தகவல்கள் அத்ரி ஸ்மிருதியிலும் வேதவியாச ஸ்மிருதியிலும் இடம் பெற்றிருக்கின்றன. அவர்கள் யார் என்பதை பின்கண்ட அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அந்த்யவாசின்கள்

அந்த்யஜாக்கள்

மத்யமங்கிராஸ்

அத்ரி

வேதவியாசம்

1.   சண்டாளர்

2.   சுவபாகர்

3.   ஷத்தர்

4.   சூதர்

5.   வைதேகர்

6.   மகதர்

7.   அயோகவர்

1.   நடர்

2.   மேதர்

3.   பில்லர்

4.   இரசகர்

5.   சார்மகர்

6.   புருதர்

7.   கயவர்த்தர்

1.   சண்டாளர்

2.   சுவபாகர்

3.   நடர்

4.   மேதர்

5.   பில்லர்

6.   இரசகர்

7.   சார்மகர்

8.   விராத்யர்

9.   தாசர்

10. பாட்டர்

11. கோலிகர்

12. புஷ்கர்

அந்த்யவாசின்கள், அந்தயஜாக்கள் ஆகிய பதங்களைப் பயன்படுத்துவதில் எத்தகைய துல்லியமோ ஒத்திசைவோ இல்லை என்பதை மேலே உள்ள அட்டவணையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, மத்யமங்கிராஸ், வேதவியாச ஸ்மிருதிகளின்படி சண்டாளரும் சுவபாகரும் அந்த்யவாசின்கள், அந்த்யஜாக்கள் ஆகிய இரு பிரிவுகளின் கீழும் வருகின்றனர். ஆனால் மத்யமங்கிராஸை அத்ரியுடன் ஒப்பிடும்போது அவை வேறுபட்ட வகைப் பிரிவுகளில் வருகின்றன. அந்த்யஜாக்கள் எனும் பதத்துக்கும் இது பொருந்தும். எடுத்துக்காட்டாக 1. சண்டாளரும் 2. சுவபாகரும் வேத வியாச ஸ்மிருதியின்படி அந்த்யஜாக்கள்; ஆனால் அத்ரி ஸ்மிருதியின் பிரகாரமோ அவ்வாறு இல்லை. இதேபோன்று, அத்ரி ஸ்மிருதியின்படி 1. புருதர்களும் 2. கயவர்த்தர்களும் அந்த்யஜாக்கள்; ஆனால் அதே சமயம் வேதவியாச ஸ்மிருதியின்படியோ அவர்கள் அந்த்யஜாக்கள் அல்ல. இவ்வாறே வேதவியாச ஸ்மிருதியின் பிரகாரம் 1. விராடர்களும், 2. தாசர்களும், 3. பாட்டர்களும், 4. கோலிகர்களும், 5. புஷ்கர்களும் அந்த்யஜாக்கள்; அத்ரி ஸ்மிருதியின்படியோ அப்படி இல்லை.

இதுவரை பார்த்தவற்றைச் சுருக்கிக் கூறுவோம்: அஸ்பிரஷ்யாக்கள் வகைப்பிரிவில் யார் யார் அடங்குவார் என்பதை நிர்ணயிப்பதில் தர்மசூத்திரங்களும் சரி, ஸ்மிருதிகளும் சரி நமக்கு உதவவில்லை. இதேபோன்று, அந்த்யவாசின்கள், அந்த்யஜாக்கள், பாஹ்யர்கள் ஆகியோர் அஸ்பிரஷ்யாக்கள் வகைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை உறுதிபடுத்துவதற்கும் தர்மசூத்திரங்களும் ஸ்மிருதிகளும் கைகொடுக்கவில்லை. இவர்களில் எந்த வகுப்பினரேனும் அஸ்பிரஷ்யாக்கள் அல்லது தீண்டப்படாதோர் பிரிவில் வருகின்றனரா என்பதை நிர்ணயிப்பதற்கு வேறு ஏதேனும் மார்க்கம் இருக்கிறதா? இந்த வகுப்பினர் ஒவ்வொருவரைப் பற்றியும் கிடைக்கக்கூடிய எத்தகைய தகவல்களையும் ஒன்றாக சேகரிப்பது உசிதமாக இருக்கும்.

பாஹ்யாக்கள் விஷயம் என்ன? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் தீண்டத்தகாதவர்களா? அவர்களைப் பற்றி மனு குறிப்பிடுகிறார். அவர்களது நிலையைப் புரிந்து கொள்வதற்கு மனுவின் சமூக வகைப் பிரிவு ஏற்பாட்டைப் பற்றி இங்கு சுருக்கமாகவேனும் கூறுவது அவசியம். முதலில் அவர் 1. வைதேகர்களுக்கும் 2. தஸ்யூக்களுக்கும் இடையே ஒரு பரந்த பிரிவினையைச் செய்கிறார். பின்னர் வைதீகர்களை பின்கண்ட நான்கு உபபிரிவுகளாகப் பிரிக்கிறார். 1. சதுர்வருண அமைப்புக்குள் இருப்பவர்கள், 2. சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள், 3. விராத்தியர், 4. பதிதர்கள் அல்லது பிரஷ்டர்கள். (பார்க்க மனு 1, 45)

ஒருவன் சதுர்வருண அமைப்புக்குள் இருக்கிறானா அல்லது அதற்கு வெளியே இருக்கிறானா என்பது அவனது பெற்றோர்களது வருணத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயமாகும். அவன் அதே வருணத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவனாக இருந்தால், சதுர்வருண அமைப்புக்குள்ளே இருப்பவனாகிறான். அவ்வாறில்லாமல் வேறுபட்ட வருணங்களைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவனாக இருப்பின் அவன் சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவனாகிறான். அவன் கலப்புத்திருமணங்களிலிருந்து பிறந்த வழித்தோன்றல் ஆகிறான்; இதனை மனு வருணசங்கரம் என்று கூறுகிறது. சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்களை மனு மேலும் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கிறார்; 1. அநுலோமர், 2. பிரதிலோமர். இவர்களில் அநுலோமர் (மேலது) என்பவர்கள் உயர் குலத்தைச் சேர்ந்த தந்தையருக்கும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த தாய்களுக்கும் பிறந்தவர்கள். அநுலோமர்களும் பிரதிலோமர்களும் சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருக்கும் காரணத்தால் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள். எனினும் மனு அவர்களையும் வேறுபடுத்திக் காணமுற்படுகிறார். அநுலோமர்களை வருண பாஹ்யாக்கள் அல்லது சுருக்கமாக பாஹ்யாக்கள் என அழைக்கிறார்; பிரதிலோமர்களை ஹீனர்கள் எனக் குறிப்பிடுகிறார். ஹீனர்கள் பாஹ்யாக்களைவிடத் தாழ்ந்தவர்கள். எனினும் பாஹ்யாக்களையோ அல்லது ஹீனர்களையோ மனு தீண்டத்தகாதவர்கள் எனக் கூறவில்லை.

அந்த்யாக்கள் ஒரு பிரிவினராக மனு IV.79ல் குறிப்பிடப்படுகின்றனர். ஆயினும் மனு அந்தப் பிரிவில் அடங்கியுள்ள வகுப்புகளைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை. மேதாதிதி தமது விளக்க உரையில் அந்த்யாக்கள் என்றால் மேதர்கள் போன்ற மிலேச்சர்கள் என்று பொருள் கண்டிருக்கிறார். புஹ்லர் அந்த்யாக்கள் என்பதை கீழ்ச் சாதிக்காரர்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

இவ்வாறு, அந்த்யாக்கள் என்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று கூறுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை. கிராமத்தின் எல்லைகளில் அல்லது முடிவில் (அந்தா) வசித்துவந்த மக்களைக் குறிப்பிடும் பெயராக அநேகமாக இது இருக்கக்கூடும். அவர்கள் ஏன் கீழானவர்களாகக் கருதப்பட்டனர் என்பதை விளக்கும் ஒருகதை பிருகதாரண்யக உபநிடத்தில் காணப்படுகிறது. (1.3). இதனை கானே குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கதை வருமாறு:

“தேவர்களும் அசுரர்களும் ஒரு சமயம் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது உத்கிதானத்தின் மூலம் தாங்கள் அசுரர்களைவிட மேம்பட்டவர்களாக முடியும் என்று தேவர்கள் எண்ணினர். இதில் ஓர் இடத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது: ‘இந்த தேவதை (பிராணன்) மரணம் என்னும் பாபத்தை அந்தத் தேவதைகளிடம் எறிந்து அதனை அந்தத் தேவதைகள் இருக்கும் முடிவிடங்களுக்கு அனுப்பிவைத்தது; ஆதலால் ஆரியக் கட்டுக்கோப்புக்கு வெளியே உள்ள மக்களிடமோ அல்லது திசம் அந்தத்துக்கோ (குடியிருப்பு எல்லைகள்) சொல்லக்கூடாது, அவ்வாறு சென்றால் நாம் இறந்துவிடுவோம் என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.”

மேலே மேற்கோள் காட்டிய பகுதியில் வரும் திசம் அந்தம் என்ற சொற்றொடருடன் அந்த்யா என்பதன் பொருளை இணைத்துப் பார்ப்போம். எவ்விதத்திலும் வலிந்து பொருள்கொள்ளாமல் ‘குடியிருப்பு எல்லைகள்’ என்னும் சொற்றொடரை கிராமத்தின் புற எல்லைகள் என்று மொழிப்பெயர்த்தோமானால், அந்த்யா என்பது ஆரம்பத்தில் எதைக் குறித்து என்பதற்கான விளக்கத்தை நாம் பெறமுடியும். அந்த்யாக்கள் என்பவர்கள் தீண்டப்படாதவர்கள் என்பது அது குறிக்கவில்லை. மாறாக, அவர்கள் கிராமத்தின் புற எல்லைகளில் வசித்து வந்தார்கள் என்பதையே குறிக்கிறது. (கானே – தர்ம சூத்திரங்களின் வரலாறு II, பாகம் I, பக். 167)

அந்த்யஜாக்களைப் பொறுத்த வரையில், அவர்களைப் பற்றி நமக்குத் தெரிய வந்துள்ள விஷயங்களே அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்ற கருத்தை மறுதலிக்கப் போதுமானவையாக உள்ளன. பின்கண்ட விவரங்கள் இவ்வகையில் நம் கவனத்திற்குரியவை: (மேற்படி நூல் தொகுதி II, பாகம் I, பக். 70)

மகாபாரதம் சாந்தி பருவத்தில் (109.9) அந்த்யஜாக்களைப் பற்றிய ஒரு குறிப்பு காணப்படுகிறது. அதில் அவர்கள் படை வீரர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். சரஸ்வதிவிலாசத்தில் அந்த்ஜயா என்னும் பதத்தில் ஏழு பிரிவு இரசகர்களை பிரகிருதிகளாகப் பிதாமகர் குறிப்பிடுகிறார். பிரகிருதிகள் என்பது சலவையாளர்கள் போன்ற தொழில் பிரிவினர்களைக் குறிக்கிறது என்பது இரண்டாம் பில்லமா சகவருடம் 922ல் வெளியிட்ட தகட்டுப் பொறிப்பிலிருந்து தெள்ளத்தெளிவாகிறது; பதினெட்டுப் பிரகிருதிகளுக்கு ஒரு கிராமம் மானியமாகக் கொடுக்கப்பட்டதை இது தெரிவிக்கிறது. சிரேனிஸ் என்பது இரசகர் முதலிய பதினெட்டு சாதிகளைக் குறிக்கிறது என்றும், இவை அனைத்தும் கூட்டாக அந்த்யஜாக்கள் என அழைக்கப்படுகின்றன என்றும் வீரமித்ரோதயம் கூறுகிறது. இவற்றை எல்லாம் கொண்டு பார்க்கும்போது, அந்த்யஜாக்களை எவ்விதம் தீண்டத்தகாதவர்கள் எனக் கருத முடியும்?

அடுத்து அந்த்யவாசின்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் யார்? அவர்கள் தீண்டப்படாதவர்களா? அந்த்யவாசின் என்னும் பதம் இரண்டு வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு அர்த்தத்தில் அது குருவின் இல்லத்தில் தங்கிப்படிக்கும் ஒரு பிரமசாரியைக் குறிக்கிறது. (அமரகோஷ் II காண்ட பிரம்மபர்கம் பாடல் II) இத்தகைய ஒரு பிரமசாரி அந்த்யவாசின் எனப்படுகிறான். கடைசியாகப் பரிமாறப்பட்டவனையும் ஒரு வேளை இது குறிக்கலாம். ஒரு பிரமசாரியை அந்த்யவாசின் என அழைப்பதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், இந்தச் சொல் எவ்வகையிலும் தீண்டாமையைக் குறிக்காது என்பது ஐயத்துக்கு இடமற்றது. பார்ப்பனர்களும், சத்திரியர்களும், வைசியர்களும் மட்டுமே பிரமசாரிகளாக இருக்கமுடியும் என்கிற போது, இது எப்படி சாத்தியமாகும். இன்னொரு அர்த்தத்தில் இவை ஒரு மக்கள் தொகுதியைக் குறிக்கின்றன. ஆனால் இந்த அர்த்தத்தில் கூட அது தீண்டப்படாதவர்களைக் குறிப்பது சந்தேகமே.

வாசிட்ட தர்ம சூத்திரத்தின்படி (18.3) இவர்கள் ஒரு சூத்திர தந்தைக்கும் வைசிய தாய்க்கும் பிறந்தவர்கள். ஆனால் மனுவோ (V.39) இவர்கள் சண்டாளர் தந்தைக்கும் நிசாடர் தாய்க்கும் பிறந்தவர்கள் என்று கூறுகிறார். இவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்தவரையில், இவர்கள் அந்த்யஜாக்களின் ஓர் உபபிரிவினர் என்று மிதக்ஷரா கூறுகிறார்; அதாவது அந்த்யவாசின்கள் அந்த்யஜாக்களிடமிருந்து வேறுபட்டவர்களல்லர் என்று இதற்குப் பொருள். எனவே, அந்த்யஜாக்களுக்கு எது பொருந்துமோ அது அந்த்யவாசின்களுக்கும் பொருந்தும் என்றாகிறது.

III

     அந்த்யவாசின்கள், அந்த்யாக்கள், அந்த்யஜாக்கள் என அழைக்கப்படும் மக்களின் சமூகநிலை குறித்த பண்டைய இலக்கியங்களிலிருந்து பெறப்படும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, தீண்டப்படாதவர்கள் என்ற சொல்லின் இன்றைய அர்த்தத்தில் அவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லமுடியாது என்பது தெள்ளத்தெளிவாகிறது. எனினும் இதுகுறித்து இன்னமும் ஓரளவு ஐயப்பாடு கொண்டிருப்பவர்களைத் திருப்தி செய்யும்பொருட்டு, இந்த விஷயத்தை வேறொரு கண்ணோட்டத்திலிருந்து ஆராய்வது உசிதமாக இருக்கும். அவர்கள் அஸ்பிரஷ்யாக்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பதை உண்மை என்றே எடுத்துக்கொண்டு, தர்மசூத்திரங்கள் காலத்தில் இந்தச்சொல் எதை அர்த்தப்படுத்திற்று என்று ஆராய முற்படுவோம்.

     இந்த நோக்கத்தோடு, பிராயச்சித்தத்துக்கு சாஸ்திரங்கள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த விதிமுறைகளை ஆராய்ந்து பார்த்தோமானால், அஸ்பிரஷ்யா என்னும் பதத்துக்கு இப்போதுள்ள அதே அர்த்தத்தை தர்மசூத்திரங்கள் காலத்திலும் அது கொண்டிருந்ததா என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

அஸ்பிரஷ்யா என்றழைக்கப்படும் வகுப்புக்கு உதாரணமாக சண்டாளர் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். முதலாவதாக சண்டாளர் என்பது ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களைக் குறிக்கவில்லை என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். இது ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபடும் பலதரப்பட்ட மக்களினங்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். சண்டாளர்களில் ஐந்து வகையான வேறுபட்ட பிரிவினர்கள் இருக்கிறார்கள் எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவர்கள் வருமாறு: 1. சூத்திர தந்தைக்கும் பார்ப்பன தாய்க்கும் பிறந்தவன் (எல்லாத் தர்ம சாஸ்திரங்களின்படியும் மனுஸ்மிருதி உட்பட அனைத்து ஸ்மிருதிகளின்படியும்) 2. திருமணமாகாத பெண்ணுக்குப் பிறந்தவன் (வேத வியாச ஸ்மிருதியின்படி.) 3.சகோத்தர மாதுக்குப் பிறந்தவன், (வேத வியாச ஸ்மிருதியின்படி.) 4. துறவியாகி பின்னர் மீண்டும் இல்லறத்தானாக மாறியவனுக்குப் பிறந்தவன். (பராசுர மாதவ்யத்தில் கூற்றுவன் மேற்கோள் காட்டியபடி.) 5. நாவிதத் தந்தைக்கும் பார்ப்பனத் தாய்க்கும் பிறந்தவன். (அனுசாசன பருவம் (29.17). அவன் மதங்கன் என்றும் அழைக்கப்படுகிறான்.) சண்டாளர்களில் யார் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று கூறுவது கடினம். எனினும் எல்லா வகையான சண்டாளர்கள் விஷயத்திலும் பிராயச்சித்தம் செய்வது அவசியம் என்று எடுத்துக்கொண்டு பார்ப்போம். பிராயச்சித்தத்துக்கு சாஸ்திரங்கள் நிர்ணயித்துள்ள விதிமுறை யாது?

கௌதமர் தமது தர்ம சூத்திரத்திலும் இது பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். (அத்தியாயம் XIV, சுலோகம் 30):

“சாதிநீக்கம் செய்யப்பட்டவன், சண்டாளன், நிறைமாத கர்ப்பிணி, மாதவிடாயாயிருக்கும் மாது ஆகியோர்களையோ அல்லது பிணத்தையோ, ஒருவன் தொட்டாலோ அல்லது இவர்களை எல்லாம் தொட்டவர்களைத் தொட்டாலோ அவன் கட்டிய துணிகளுடன் குளித்துத் தனது தீட்டைப்போக்கிக்கொள்ள வேண்டும்.

     வாசிட்ட தர்ம சூத்திரம் நிர்ணயித்துள்ள விதிமுறை வருமாறு அத்தியாயம் IV. சுலோகம் 37:

“யாகக்கம்பம், சிதை, இடுகாடு, மாதவிடாய் ஆனப் பெண், தாமதமாகக் கருத்தரித்த பெண், அசுத்தமான மனிதர்கள் அல்லது சண்டாளர்கள் போன்றோரை ஒருவன் தொட்டுவிட்டால் அவன் தனது உடலையும் தலையையும் நீரில் அமிழ்த்திக் குளிக்க வேண்டும்.”

     வசிட்டர் கூறுவதை போதாயநரும் ஏற்றுக்கொண்டு தமது தர்மசூத்திரத்தில் பின்வருமாறு கூறுகிறார் (பிரஸ்னம் 1, அத்தியாயம் 5, காண்டம் 6, சுலோகம் 5):

“புனிதத் தலத்தில் இருக்கும் விருட்சம், ஈமத்தீ, வேள்விக்கம்பம், சண்டாளன் அல்லது வேதத்தை விற்பவன், பார்ப்பனன் இவர்களை ஒருவன் தொட்டால் உடுத்தியிருக்கும் ஆடையோடு குளிக்க வேண்டும்.”

     மனுதர்மத்தில் பின்கண்ட விதிமுறைகள் அடங்கியுள்ளன:

V.85. சண்டாளனை, மாதவிடாய் ஆனப்பெண்ணை, சாதிநீக்கம் செய்யப்பட்டவனை, பேறுகால நிலையிலுள்ள பெண்ணை, பிணத்தை அல்லது பிணத்தைத் தொட்டவனை பார்ப்பனன் தொட்டுவிடும்போது அவன் குளித்துவிட்டால் தீட்டு அகன்றுவிடும்.

V.131. நாய்களால் கொல்லப்பட்ட ஒரு விலங்கின் இறைச்சி தூய்மையானது, அதேபோல் புலால் உண்ணும் பிராணிகளாலோ அல்லது சண்டாளர்கள் போன்ற கீழ்சாதியினர்களாலோ (தஸ்யர்கள்) கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியும் தூய்மையானது என்று அறிவித்திருக்கிறார் மனு.

V.143. ஒருவன் எந்த பொருளையும் எவ்வகையிலேனும் கொண்டு சொல்லும்போது தூய்மையற்ற ஒரு மனிதனாலோ, பொருளாலோ தொடப்படுவானேயானால், அப்போது அவன் அந்தப் பொருளை கீழே விடாமல் சடங்கோடு சுத்திசெய்துகொண்டால் அவன் தூய்மையடைந்துவிடுகிறான்.

     தர்மசூத்திரங்களிலும் மனுதர்மத்திலும் காணப்படும் இந்த வாசகங்களிலிருந்து பின்கண்ட விஷயங்கள் தெளிவாகின்றன:

  • சண்டாளனைத் தொடுவதால் தீட்டு ஏற்படும் என்பது பார்ப்பனர்களால் மட்டுமே அனுஷ்டிக்கப்பட்டது.
  • குறிப்பிட்ட சடங்குகளின்போது மட்டுமே அனேகமாக தீட்டு கடைப்பிடிக்கப்பட்டது.

IV

     இந்த முடிவுகள் சரியானவை என்றால், இது தூய்மையின்மை சம்பந்தப்பட்டதே அன்றி தீண்டாமை சம்பந்தப்பட்டது அல்ல. தூய்மையற்றோருக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான வேறுபாடு மிகத்தெளிவானது. தீண்டப்படாதோர் எல்லோருக்குமே தீட்டு உண்டாக்குகின்றனர்; தூய்மையற்றவர்களோ பார்ப்பனர்களை மட்டுமே தீட்டுப்படுத்துகின்றனர். தூய்மையற்றவர்களைத் தொடுவது சில விசேட சடங்குகளின்போது தீட்டு உண்டாக்குகிறது. தீண்டப்படாதவர்களை தொடுவதோ எல்லா சமயங்களிலும் தீட்டாகிறது.

தர்மசூத்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வகுப்பினர் தீண்டப்படாதவர்கள் என்ற கோட்பாட்டை முற்றிலும் மறுதலிக்கும் மற்றோர் ஆதாரமும் இருக்கிறது; இந்த ஆதாரத்தை இதுவரை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அரசு ஆணையில் வெளியிடப்பட்டிருக்கும் வகுப்புகளின் பட்டியலை (இரண்டாவது இயலில் இது தரப்பட்டிருக்கிறது) ஸ்மிருதிகளிலிருந்து பெறப்பட்டு இந்த இயலில் தரப்பட்டிருக்கும் பட்டியலுடன் ஒப்பிடுவதுதான் அந்த ஆதாரம். இந்த ஒப்பீடு என்ன காட்டுகிறது? அது என்ன காட்டுகிறது என்பதை பின்வருமாறு எவருமே காண முடியும்.

முதலாவதாக: ஸ்மிருதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வகுப்புகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 12 தான்; ஆனால் அதே சமயம் அது ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வகுப்புகளின் எண்ணிக்கை 429 ஐ எட்டுகிறது.

இரண்டாவதாக: அரசு ஆணையில் இடம்பெற்றிருக்கும் வகுப்புகள் ஸ்மிருதிகளில் காணப்படவில்லை (அரசு அணையில் இடம்பெற்றிருக்கும் 429 வகுப்புகளில் 3 தான் ஸ்மிருதிகள் தரும் பட்டியலில் காணப்படுகின்றன.). மொத்தம் 429 வகுப்புகளில் 427 வகுப்புகளை ஸ்மிருதிகள் அறியமாட்டா.

மூன்றாவதாக: ஸ்மிருதிகளில் காணப்படும் பல வகுப்புகள் அரசு ஆணையில் இடம்பெறவில்லை.

நான்காவதாக: இரண்டு பட்டியல்களிலும் ஒரே ஒரு வகுப்பு தான் இடம்பெற்றுள்ளது. அதுதான் சார்மகர் வகுப்பு (இரு பட்டியல்களிலும் இடம் பெற்றிருக்கும் வேறு இரு வகுப்புகளும் உள்ளன. அவை 1.நடர் 2.இரசகர். ஆனால் அரசு ஆணையின்படி அவர்கள் நாட்டின் ஒரு சில பகுதிகளில்தான் தீண்டப்படாதவர்களாக இருக்கின்றனர். சமர்கள் இந்தியா முழுவதும் தீண்டப்படாதவர்களாவர்).

தூய்மையற்றவர்கள் என்பவர்கள் வேறு, தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் வேறு என்பதை ஒப்புக்கொள்ளாதவர்கள் இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் இவற்றை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த உண்மைகள் மிக முக்கியமானவை, ஆழமானவை; இந்த உண்மைகளைக் கிரகித்துக் கொண்டவர்கள் மேலே கூறிய இருபிரிவினரும் முற்றிலும் வெவ்வேறானவர்கள் என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

முதல் உண்மையை எடுத்துக்கொள்ளுங்கள். அது மிக முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகிறது.

இரு பட்டியல்களும் ஒரே இனமக்களைக் குறிப்பிடும்போது அவர்கள் ஏன் இவ்விதம் பெரிய அளவுக்கு வேறுபட வேண்டும்? சாஸ்திரங்களில் இடம்பெற்றிருக்கும் வகுப்பினர்கள் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் காணப்படாதது ஏன்? இதேபோல், அரசு ஆணையில் குறிப்பிடப்படும் வகுப்பினர்கள் சாஸ்திரங்கள் தரும் பட்டியலில் ஏன் இடம்பெறவில்லை? இது நாம் எதிர்நோக்கும் முதல் சிக்கலாகும்.

இரு பட்டியல்களும் ஒரே இனமக்களைக் குறிப்பிடுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளும்போது பிரச்சினை மிகவும் கடுமையாகிறது. அவை ஒரே இன மக்களை குறிப்பிடுகின்றன என்றால் ஆரம்பத்தில் 12 வகுப்பினர்களை மட்டுமே பீடித்திருந்த தீண்டாமை 429 வகுப்புகளுக்குப் பரவிவிட்டது என்றாகிறது; தீண்டாமை சாம்ராஜ்யம் இவ்விதம் விரிந்துபரந்து விஸ்வரூபம் எடுத்தது ஏன்? சாஸ்திரங்கள் இயற்றப்பட்ட போது இந்த 429 வகுப்புகளில் எதுவுமே இல்லை என்று கூறமுடியாது. இந்த வகுப்புகள் அனைத்துமே அப்போது இருந்திருக்காதுபோனாலும் குறைந்தபட்சம் அவற்றில் ஒரு சில வகுப்புக்களாவது இருந்திருக்கவேண்டும். அப்படி இருந்திருக்க வேண்டியவைகூட சாஸ்திரங்களில் ஏன் குறிப்பிடப்படவில்லை?

இரண்டு பட்டியல்களும் ஒரே இன மக்களையே குறிப்பிடுகின்றன என்ற அடிப்படையில் பார்க்கும்போது, இந்தக் கேள்விகளுக்கு எத்தகைய திருப்திகரமான பதிலும் அளிப்பது கடினம். ஆனால் அதேசமயம் இந்தப் பட்டியல்கள் இரண்டு வேறுபட்ட இனமக்களைக் குறிக்கின்றன என்று எடுத்துக்கொள்ளும்போது, இந்தக் கேள்விகள் யாவும் மறைந்துவிடுகின்றன. உண்மையில் இந்த இரண்டு பட்டியல்களும் முற்றிலும் வெவ்வேறானவை; ஏனென்றால் சாஸ்திரங்கள் தரும் பட்டியல் தூய்மையற்றவர்களின் பட்டியல்; ஆனால் அரசு வெளியிடும் பட்டியலோ தீண்டப்படாத வகுப்பினரின் பட்டியல். இதனால்தான் இந்த இரு பட்டியல்களுமே வேறுபடுகின்றன. இந்த இரு பட்டியல்களுக்கும் இடையேயான வேறுபாடு ஒரு முக்கியமான விஷயத்தை வலியுறுத்துகிறது: அதாவது சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வகுப்பினர்கள் தூய்மையற்ற வகுப்பினரே ஆவர், அவர்களை தற்கால தீண்டப்படாதவர்களுடன் சேர்த்துக் குழப்புவது தவறு.

அடுத்து இரண்டாவது விஷயத்துக்கு வருவோம். தூய்மையற்றவர்களும் தீண்டப்படாதவர்களும் ஒன்றுதான் என்றால் 429 வகுப்பினரில் 427 வகுப்பினர்வரை ஸ்மிருதிகளுக்குத் தெரியாதிருப்பது ஏன்? வகுப்பினர்கள் என்ற முறையில் இவர்கள் ஸ்மிருதிகள் காலத்திலும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் இப்போது தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்கள் என்றால் அக்காலத்திலும் தீண்டப்படாதவர்களாகவே இருந்திருக்க வேண்டும். அப்படியிருந்தும் ஸ்மிருதிகள் இவர்களைக் குறிப்பிட ஏன் தவறிவிட்டன?

இனி மூன்றாவது விஷயம் என்ன? தூய்மையற்றவர்களும் தீண்டப்படாதவர்களும் ஒன்றுதான் என்றால், ஸ்மிருதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த வகுப்பினர்கள் அரசுப்பட்டியலில் ஏன் இடம்பெறவில்லை? இந்த கேள்விக்கு இரண்டு பதில்கள் தான் இருக்க முடியும். ஒருசமயம் தீண்டப்படாதவர்களாக இருந்தவர்கள் பின்னர் அவ்வாறு தீண்டப்படாதவர்களாக இருக்கவில்லை என்பது ஒரு பதில். இரண்டாவது பதில் இரண்டு பட்டியல்களும் முற்றிலும் வேறுபட்ட வகைகளைச் சேர்ந்த வகுப்பினர்களின் பெயர்களைக் கொண்டுள்ளன என்பதாகும். முதல் பதில் ஏற்புடையதன்று. ஏனென்றால், தீண்டாமை நிரந்தரமாக இருந்து வந்திருக்கிறது. காலம் அதனைத் துடைத்தழித்திடவோ, அந்நோயைக் குணப்படுத்திடவோ முடியாது. எனவே இரண்டாவது முடிவுக்குத்தான் வருவது சாத்தியம்.

இப்போது நான்காவது விஷயத்துக்கு வருவோம். இரண்டு பட்டியல்களிலும் சாமர்கள் மட்டும் இடம்பெற்றிருப்பது ஏன்? இரு பட்டியல்களிலும் இடம்பெற்றிருப்பது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் அல்ல என்பதுதான் இதற்குப் பதிலாகும். இது உண்மையான பதில் என்றால், சாமர்கள் மட்டுமின்றி ஸ்மிருதிகள் தந்துள்ள பட்டியலிலுள்ள இதர எல்லா வகுப்பினர்களும் இரண்டு பட்டியல்களிலும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இடம் பெற்றிருக்கவில்லை. எனவே, இரண்டு பட்டியல்களுமே இரண்டு வெவ்வேறு வகையைச் சேர்ந்த மக்களை தம்முள் பெற்றுள்ளன என்பதுதான் உண்மையான பதிலாகும். தூய்மையற்றவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்போரில் சிலர் தீண்டப்படாதோரின் பட்டியலில் காணப்படுவதற்குக் காரணம் ஒரு சமயம் தூய்மையற்றவர்களாக இருந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக மாறியதே ஆகும். இரு பட்டியல்களிலும் சாமர்கள் இடம்பெற்றிருப்பதை தூய்மையற்றவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்ற கருத்துக்கு ஆதாரமாகக் கொள்ளமுடியாது. மாறாக, சாமர்கள் ஒரு சமயம் தூய்மையற்றவர்களாக இருந்து பின்னர் தீண்டப்படாதவர்களானார்கள். எனவேதான் அவர்கள் இரு பட்டியல்களிலும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தூய்மையற்ற வகுப்பினர்களாக ஸ்மிருதிகளில் கூறப்பட்டிருக்கும் பன்னிரண்டு வகுப்பினர்களில் சாமர்கள் மட்டும் தீண்டப்படாதோர் நிலைக்கு ஏன் தாழ்த்தப்பட்டிருகிறார்கள் என்பதற்கு விளக்கம் கூறுவது அப்படி ஒன்றும் கடினமல்ல. சாமர்கள் மாட்டிறைச்சி உண்பதுதான் அவர்களை ஏனைய தூய்மையற்ற வகுப்பினர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. பசு புனிதமான பிராணியாக உயர்த்தப்பட்டு, பசு இறைச்சி உண்பது பாவமாக்கப்பட்டபிறகும் தூய்மையற்றோரில் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தவர்கள்தான் தீண்டப்படாதவர்களாயினர். அப்படிப் பார்க்கும்போது தூய்மையற்றோரில் சாமர்கள் தான் மாட்டிறைச்சி உண்ணும் ஒரே வகுப்பினர். இதனால்தான் அவர்கள் இரு பட்டியல்களிலும் இடம்பெற்றிருக்கின்றனர். சாமர்கள் பற்றிய கேள்விக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்தப் பதில் இரண்டு அம்சங்களில் தீர்மானமானது, தெளிவானது, ஐயத்துக்கிடமற்றது. முதலாவதாக, தூய்மையற்றவர்கள் தீண்டப்படாதோரிடமிருந்து மாறுபட்டவர்கள் என்பதை அது திட்டவட்டமாக நிலைநாட்டுகிறது. இரண்டாவதாக, மாட்டிறைச்சி உண்பது தீண்டாமைக்கு அடிப்படையான காரணம் என்பதையும், அதுதான் தூய்மையற்றவர்களையும் தீண்டப்படாதவர்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதையும் அது உறுதிப்படுத்துகிறது.

தீண்டாமையும் தூய்மையின்மையும் ஒன்றல்ல என்ற இந்த முடிவு தீண்டாமை தோன்றிய காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறில்லாமல் தீண்டாமை தோன்றிய காலத்தை நிர்ணயிக்கும் வேறு எந்த முயற்சியும் நம் நோக்கத்தை நிறைவேற்றாது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 15)