தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் (2011-2016) பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 94 சதவீதம் வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விடுதலையிலேயே முடிந்திருக்கின்றன. ஜே.பி. அஜீஅரவிந்த் என்ற சமூக செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கு (சமூகநீதி மற்றும் மனித உரிமைக்கான காவல்துறை இயக்குனரகம்) எழுதிக் கேட்டு இத்தகவல்களைப் பெற்றுள்ளார்.

6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. காவல்துறை இந்த வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டாததும், காவல்துறையில் நிலவும் தலித் மக்களுக்கு எதிரான ஜாதிய மனப்பான்மையும் இதற்கு முக்கிய காரணம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரி ‘தலித்’ சமூகத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும் என்று சட்டம் கூறினாலும் சட்டம் இந்த விதியை கட்டாயப்படுத்தவில்லை. நீதித் துறையில் தலித் நீதிபதிகள் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதும் இதற்குக் காரணம் என்கிறார், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன்.

Pin It