மைசூர் சர்க்கார் ஆதிக்கத்தின் கீழுள்ள கோயில்கள் அனைத்தையும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திறந்துவிட வேண்டுமென்று மைசூர் சட்டசபை அங்கத்தினர் கூறினராம். “இவ்விஷயத்தில் பொது மக்களின் ஆதரவு ஒன்று திரட்டப்பட்டதும் எல்லாக் கோவில்களும் திறக்கப்படும்” என்று மைசூர் மந்திரி திரு. சேஷாத்திரி என்பவர் பதில் கூறினாராம்!
நல்ல போடு போட்டீரய்யா! நல்ல “பொதுஜன ஆதரவு,” அகப்பட்டது உங்களுக்கு! எங்கள் மந்திரிகள் கூட இதே சங்கதியைத்தான் சொல்கிறார்கள்.
பொது ஜனங்கள் 100-க்கு 100 படித்துக் கிழித்துவிட்ட மாதிரியல்லவா இவர்கள் பேசுகிறார்கள்? எந்தப் பொது ஜனங்கள் பிராமணன் மட்டும் கல்லையும் செம்பையும் கழுவி, மணியடித்து வயிறு வளர்க்க வேண்டும் என்று இவர்களிடம் மனுப் போட்டுக் கேட்டுக் கொண்டார்களோ? நான் கேட்கிறேன். அதைவிட, கடவுளே நேரில் வந்து சொல்லட்டும் என்று சொல்லித் தொலைக்கிறது தானே! அல்லது நந்தனாரைப் போலத் தீயில் போட்டு வாட்டி, பக்தி நிலை வந்து விட்டதா என்று தீட்சதர் பல்லால் கடித்துப் பார்த்த பிறகு, தீண்டப்படாதவர்களைக் கோவிலுக்குள் விடலாம் என்று சொல்லி விடுகிறது தானே!
"நெருப்பிலும் விழ வேண்டாம்! கோவிலுக்குள்ளும் போக வேண்டாம்; நம்ம கருப்பண்ணசாமியும் அய்யனாருமே போதும்! தொட்டாலும் செத்துப் போகாது! நம்ப மொழியிலே பேசினாலும் புரிந்து கொள்ளும்,” என்று தானே தோன்றும்? சாம்பானுக்கும் முனியனுக்கும் ஒரு சங்கதி! கோவில்கள் திறக்கப்பட்டதும் (ஒருவேளை திறக்கப்பட்டால்) உள்ளே வரப் பயந்து கொண்டு எங்கேயாவது பாதியில் நின்று தொலைக்கப் போகிறீர்கள்! சாமி கோபித்துக் கொள்ளும்! “என்ன ஆணவம் இவனுக்கு, நேரே நம்மிடம் வராமல் பெரிய மனுஷன் மாதிரித் தொலைவில் நிற்கிறானே!” என்று ஆத்திரப்படும். ஆகையால் மளமளவென்று நேரே உள்ளே போய் 'சாமி'யை இரு கைகளாலும் அன்போடு தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொள்ளுங்கள்! தெரியுமா? போகும்போது என்னையும் கூப்பிடுங்கள்!
- குத்தூசி குருசாமி (29-6-1946)
நன்றி: வாலாசா வல்லவன்