periyar with kid 793காந்தியின் குட்டித் தலைவர்கள் இதற்கென்ன பரிகாரஞ் செய்கிறார்கள்?

இந்திய நாட்டின்கண் வாழும் மக்களே! “வைதீகம்” செய்யும் கொடுமைகளை பிறந்த நாள் முதல் இறக்கும் வரை கண்கூடாகக் காணும் மானிடர்களே! நம்மை ஆதிக்கத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் கொடுமை களை கண்ணுற்றும், போதாக்குறைக்குப் பிராமணர்கட்குத் தாசராய் அடிமை கொண்டு சுற்றித்திரியும் தலைவர்களே! காந்தியின் குட்டித்தலைவர் கள் என்று சொல்லி, ஊர் ஊராய் பிரசங்கம் செய்யும் ராஜகோபாலாச்சாரியின் அடிச்சுவட்டை பின்பற்றும் தலைவர்களே! அடியேன் கீழே கொடுக்கும் உறையை நன்றாய் கவனித்து சுயமரியாதைக்காரர்கள் சொல்வது உண்மையா - பொய்யா என்று ஆராய்ந்து அதன்பின் வசைப் புராணம் தொடங்குவதை ஆரம்பியுங்கள். கூலிக்கு உண்மையையும், மானத்தையும் விற்கும் பேர்வழிகளைக் கொண்டு, பத்திரிகை நிரப்ப வேண்டி, வியாசம் எழுதும் சாம்பராணிகளே! கவனியுங்கள்! மந்தப் புத்தியை அகற்றி சொந்தப் புத்தியை கொண்டு பார்த்தால் அடியேன் சொல்லுவது உண்மை என்பது நன்கு புலப்படும்; இனி நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தை ஆராய்வோம்.

தென்னிந்திய நாட்டிலே தஞ்சை, திருச்சினாபள்ளி ஜில்லாக்களின் இந்திய சட்டசபை அங்கத்தினரான திருவாளர் வைதீகம் கிருஷ்ணமாச்சாரி யார் இந்தியா சட்டசபையில் சாரதா மசோதாவிற்கு பங்கம் விளைவிக்க முயற்சி செய்து வருவதாகப் பத்திரிகைகள் மூலம் காணக்கிடக்கின்றது; ஐயோ! சிசுமணத்தால் பெண்மணிகள் அல்லற்படுவதை கண்ணாற் பார்த்தவர்கள் அறியக்கூடும். இக்கொடுமைகள் மேற்ஜாதி மக்களென்று பறை சாற்றும் பார்ப்பனர் ஜாதியில் கிடைப்பதைக் கிருஷ்ணமாச்சாரியார் பார்க்கவில்லை?

“கண்ணிருந்தும் குருடனிடத்தில் படும் கஷ்டம் தெரிந்தும், அதனை மற்றவர்கள், அல்லற்படுவதை கண்டு தக்க வழி கண்டுபிடித்து வெகு ஆண்டுகளாய் அமுலில் கிடந்த மசோதாவை நன்னிலைமைக்குக் கொண்டு வந்த திரு.ஹிரிவிலாஸ சாரதா அவர்கள் செய்த சாரதா சட்டத்திற்கு அழிவுதேட புறப்பட்ட வைதீகப்பித்தரே! பார்ப்பனர் ஏஜண்டே! நமது ஆசாரப்படி செய்யாது, சட்டசபையில் மெம்பராக வீற்றிருக்கும் மமதை கொண்ட வைதீகரே! எமது ஆர்ப்பாட்டம் எத்தனை நாளைக்கு நடைபெறும், அதோடு நில்லாது, நமது கோஷ்டிகளையும் தூண்டிவிட்டு, ஊர் ஊராகப் பிரசங்கம் புரியச் சொல்லி சாரதா சட்டத்தை அழிக்கப் பார்ப்பது உங்கட்குத் தருமமா? இதுதான் உயர் குலத்தில் உதித்தோமென்ற சொல்லிற்குப் பயனோ? என்னவிந்தை! என்ன கொடுமை!!! பார்ப்பனர்களே!! முப்பத்துமுக்கோடி இந்திய மக்களில் சிலராகிய தாங்கள் யாவரையும் அடக்கி ஆள எத்தனித்த காலம் மலை யேறிப் போய் விட்டது. ஜெகசால புரட்டு மாய்ந்ததென்பதை அறியுங்கள். புத்துணர்ச்சி பெற்ற மக்களுண்டென்பதை நன்கு நிதானப் புத்தியுடனிருந்து யோஜித்து நாங்கள் சொல்வது உண்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நாங்கள்தான் தேசத்தலைவர்கள், சுயராஜ்யமின்றி வாழ்வது கூடா தென்று பறைசாற்றும் தொண்டர்களே, சாரதா சட்டம் குலைய கெடுக்கும் பார்ப்பனர்களை என்ன செய்தீர்கள், பத்திரிகைகளில் பாரத நாட்டிற்குப் பாடுபடுவதாக வரைந்து கொண்டு, அங்கு நடக்கும் கொடுமைகளை கவனஞ் செலுத்தாது - கூலிக்கு ஆசிரியராய் அமர்ந்து “பத்திராதிபர்” என்ற மமதையால் எழுதிவிட்டால் போதுமா? புத்தியின்றி வாழும் மானிடர்கள் போன்று போக்குஇடம் கொடுத்து, பார்ப்பனர்கள் செய்யும் சாரதா மசோதா விற்குத் தடை செய்யும் திரு. கிருஷ்ணமாச்சாரியார் கூட்டத்திற்குத் தக்க சவுக்கடி கொடுக்க வேண்டாமா?

அப்படிக்கில்லாது நான்தான் காந்தியின் குட்டித் தலைவர், என் சொற்படிதான் நடக்க வேண்டும், தேசமே எமது ஆட்சி, ஆங்கிலேயர் இந்நாட்டைவிட்டு ஓடவேண்டும், சுயராஜ்யம் எங்கள் கையில் விரைவில் ஒப்படைக்க வேண்டும், இல்லாவிட்டால் லண்டன் சென்று போராடுவோம் என்றெல்லாமோ சொல்லும் எந்தாய் நாட்டில் வாழும் தேச பக்தர்களே! காந்தியின் பேரைச் சொல்லிக் கொண்டு நகர் நகராய் பணஞ்சேகரித்து அதற்குத் தலைவர் நாம்தானென்று சுற்றித் திரியும் மணிகளே! உலகமக்கட்கு அதாவது சிசுக்கட்கு உபசாரமாய் நடை முறையில் இருந்து வரும் மசோதாவிற்கு உலைவைக்கப் பார்க்கின் றார்களே இதற்கென்ன தேசத் தலைவர்கள் செய்கிறார்களென்பதே எமது கேள்வியன்றோ! இதற்கும் ஒன்றும் பரிகாரம் தேடாது மௌனஞ் சாதிப்பது தேசத் துரோகமில்லையா? 

பார்ப்பனர் அடிமைத்தனத்தில் சிக்கி வாழும் பார்ப்பனரல்லாத தேசபக்தர்களே! சுயமரியாதைக்காரனாகிய எம்மைக் கண்டு நீங்கள் ஆத்திரப் படலாம், பத்திரிகை முழுவதும் எழுதலாம், ஆனால், நாங்கள் உண்மையை உள்ளன்புடன் சொல்வோம். தக்கவிடை அளித்தாலும் பதிலுரை கொடுக்கவும் தயாரென்பதை சித்தத்துடன் தெரிவித்துள்ளேன்.

பார்ப்பனரல்லாத வாலிபர்களே! சுயமரியாதைத் தலைவர்களே! வாலிபர்களே! சட்டசபையில் கொண்டு போகத் தயாராயிருக்கும் திரு. கிருஷ்ணமாச்சாரியாரின் இளம் மணஞ்செய்து கொள்ளலாமென்று தக்க முகாந்திரத்துடன் சொல்லும் திட்டத்திற்குப் பயனளிக்காது பாடுபட முன் வாருங்கள், பார்ப்போம், பார்ப்போம், பார்ப்பனர்கள் அட்டகாசத்தைப் பார்ப்போம். பாரினில் தலை எடுக்காது ஆழ்த்தி வைப்போம். இனியும் விட்டுக் கொடுக்காது தலைகுனியும்படி செய்ய வேண்டுமாய் சுயமரியாதை வீரர்களை கேட்டுக் கொண்டு எனது கட்டுரையை முடித்துக் கொள்ளுகிறேன்.

வைதீகம் வீழ்க!

சாரதா சட்டம் நிலை பெறுக!

- சுயமரியாதைத் தொண்டன்.

(குடி அரசு - கட்டுரை - 27.09.1931)

Pin It