மயிலாப்பூர் அக்கிரகாரத்தின் செல்லப்பிள்ளை எஸ்.வி. சேகர். இப்போது தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதியின் செல்லப்பிள்ளையாகிவிட்டார். எஸ்.வி. சேகர் நாடகம் ஒன்றில் பேசிய கலைஞர் கருணாநிதி, எஸ்.வி. சேகர், நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் போல் நாட கங்களை நடத்துவதாகப் பாராட்டியிருக்கிறார். நல்லவேளை! இந்த செப்பு மொழிகளையெல்லாம் கேட்க வாய்ப்பில்லாமல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மரணமடைந்து விட்டார்.

நடிகவேள் நூற்றாண்டு விழா கூட வந்து போய்விட்டது. அவருக்கு ஒரு விழா நடத்தக்கூட கலைஞர் கருணாநிதிக்கு மனம் வரவில்லை. அப்படிப்பட்டவர் இப்போது பார்ப்பன காமெடியன் எஸ்.வி.சேகரோடு ஒப்பிட்டு நடிகவேளை அவமானப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்நாடக வரலாற்றில் புரட்சிகர அத்தியாயங்களுக்கு சொந்தக்காரர் நடிகவேள்! அவரின் நாடக அரங்குகள், அக்கிரகாரத்தை அலற வைத்தன. அவர் தடைகளை எதிர்கொண்ட கலகப் புயல்! பெரியாரின் கொள்கைகளை மேடைகளில் நாடகமாக்கிய கொள்கைக்காரன். நாடக வசனங்களை காவல்துறையிடம் காட்டி, ஒப்புதல் பெற வேண்டும் என்ற நாடகக் கட்டுப்பாடு சட்டத்தை அன்றைய காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்ததே - நடிகவேள் எம்.ஆர். ராதா நாடகத்திற்காகத்தான். நாடகத் தடைச் சட்டம் வந்த பிறகு மட்டும் - அவர் கைது செய்யப்பட்டது 52 தடவை. நடிகவேள் நாடகங்கள் - கீழ்க்கண்ட பாடல் வரிகளுடன் தான் தொடங்கும்.

“வளமார் திராவிடர் வாழ்ந்த கதையினை அறிந்திருப்பாய் தமிழா

வம்புகள் மிகுந்த ஆரியரால் அது அழிந்த நிலை கண்டு வைக்கம் தனியே வீரப்போரிட்டார் வாழ்வளித்த நம் பெரியார்”

வம்புகள் மிகுந்த ஆரியத்துக்கு எதிராக நாடக மேடையைச் சூடற்றிய சுமரியாதைக்காரன் தான் நடிகவேள்! யார் இந்த எஸ்.வி.சேகர்? நகைச்சுவை என்ற பெயரில் தமிழின உணர்வுகளை ‘நக்கலடித்தவர்’ இந்தப் பூணூல் திருமேனி! இன்னும் முதுகில் முப்புரி நூலை தொங்கவிட்டுக் கொண்டு திரிபவர்.

கொலைக்குற்ற விசாரணையில் இருக்கும் காஞ்சி சங்கரனின் அறிவிக்கப்படாத செயலாளர். கொலை வழக்கில் ஜெயலலிதா காஞ்சி சங்கரனைக் கைது செய்ய உத்தரவிட்டதால் அ.தி.மு.க.  பார்ப்பனத் தலைமைக்கு எதிராகவே போர்க் கொடி உயர்த்தியவர். ஜெயலலிதா தலைமை மீது இந்த பார்ப்பன நடிகருக்கு கருத்து மாறுபாடு உருவானதே சங்கராச்சாரியைக் கைது செய்ததால்தான்! இப்போது தி.மு.க. ஆட்சியில் சங்கராச்சாரி வழக்கு ‘புஸ்வானம்’ ஆகிவிட்டது. அரசு சாட்சிகளே பல்டி அடிக்கின்றன. அரசு வேடிக்கை பார்க்கிறது.

“கலைஞர் பதவியிலிருந்தால் காஞ்சி சங்கராச்சாரி ஸ்வாமிகளை கைது செய்திருக்கவே மாட்டார், இதை கலைஞரே என்னிடம் தெரிவித்தார்” என்று ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ வார ஏட்டுக்கு சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்ததும் இதே சேகர் தான்! தமிழ்நாடு “பிராமண சங்க”த்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அந்த சங்கத்தின் மாநாடுகளில் பங்கேற்றுப் பேசி வருபவர்.

பெரியார் படத்துக்கு தி.மு.க. ஆட்சி நிதி வழங்கியதை எதிர்த்து சட்டசபையில் கிண்டல் செய்தவர்; சத்தியமூர்த்தி அய்யர் வரலாற்றைப் படம் எடுத்தால், அரசு நிதி அளிக்குமா என்று கேள்வி எழுப்பியவர். (இதற்காக எஸ்.வி.சேகர் உருவ பொம்மைகளை பெரியார் திராவிடர் கழகம் எரித்து போராட்டம் நடத்தியது)

‘கலகக்காரர் பெரியார்’ நாடகத்தை தோழர் ராமசாமி - தமிழகம் முழுதும் நடத்தியபோது கோவை மாநகராட்சி அரங்கிலும் நடத்த திடடமிடப்பட்டிருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன் அதே கோவை மாநகராட்சி அரங்கில் எஸ்.வி. சேகர் நாடகம் நடந்தது. அதில் பேசும்போது, “மக்கள் வரிப் பணத்தில் நடத்தப்படும் மாநகராட்சி அரங்குகளில் பெரியார் நாடகத்தை அனுமதிக்கக் கூடாது” என்று வாய்க் கொழுப்போடு (அப்போது நடந்தது பார்ப்பன ‘அம்மா’ ஆட்சி என்ற திமிரில்) பேசியவர் இதே நடிகர் தான்.

தலித் ஒருவர் மடாதிபதியாக வருவதை நியாயப்படுத்தி, ‘ஞான பீடம்’ என்ற நாடகம் ஒன்று சென்னையில் நடந்தது. அந்த நாடகத்தை எழுதி இயக்கியவரும் மாலி என்ற பார்ப்பனர்தான். உடனே எஸ்.வி.சேகர், பார்ப்பனர் ஒருவர் இப்படிப்பட்ட நாடகத்தை நடத்தலாமா என்று காஞ்சி ஜெயேந்திரனிடம் ‘கோள்’ மூட்டினார். காஞ்சி ஜெயேந்திரன் மாலியை தனது மடத்துக்கு அழைத்து, “இது போன்ற நாடகங்களை நிறுத்து; எஸ்.வி. சேகரைப் போல் நாடகம் போடு” என்று மிரட்டினார். முற்போக்கு எழுத்தாளர்கள் - இந்த மிரட்டலைக் கண்டித்து ஒரு கூட்டமே நடத்தினார்கள். அப்படி சங்கராச்சாரியால் பரிந்துரைக்கப்படும் எஸ்.வி. சேகர் நாடகங்களைத்தான் நடிகவேள் ராதாவுடன் ஒப்பிட்டுப் பாராட்டுகிறார், கலைஞர்!

ஜெயலலிதா இவரை மயிலாப்பூர் சட்டமன்ற வேட்பாளராக அறிவித்தவுடன், முதல் ஆசியை வாங்குவதற்கு “பிராமண சங்கத் தலைவரிடம்” தான் ஓடினார். அதை புகைப்படம் எடுத்து, பத்திரிகைகளுக்கும் அனுப்பினார்.

விஜய் தொலைக்காட்சியில் இந்தப் பார்ப்பன நடிகர் தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்கியபோது, அதில் பெரியார் இயக்கத்தையும் தி.மு.க.வையும் கிண்டல் செய்வதற்கும், சங்கராச்சாரியின் பெருமையைப் பரப்புவதற்குமே பயன்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேட்டி கண்ட தலைவர்களை எல்லாம் கிண்டல் கேலி செய்து கோமாளிகளாக்கிக் காட்டவே விரும்பினார். ஆனால் இதே நிகழ்ச்சியில் காஞ்சி ஜெயேந்திரன் பேட்டிக்கு வந்தபோது, ஜெயேந்திரனின் காலடியில் தரையில் அமர்ந்து பேட்டி கண்டு தனது பார்ப்பன பக்தியை வெளிப்படுத்தினார்.

ஜெயலலிதாவின் அடக்குமுறையை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராடிய போது எந்தெந்த பகுதியில் அரசு ஊழியர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை ‘அம்மா’ ஆட்சி கவனிக்கும் என்று மிரட்டினார். தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் தனது முதல் பேச்சைத் தொடங்கும்போது, “சோதிடம், வாஸ்து, கடவுள், மதம் போன்ற சகலத்திலும் எனக்கு நம்பிக்கை உண்டு; இதை அங்கீரித்து வாக்களித்த மயிலாப்பூர் தொகுதி மக்களுக்கு முதல் நன்றி” என்றுதான் பேச்சையே தொடங்கினார்.  - இவர்தான் எஸ்.வி.சேகர்.

“அம்மா”வின் ஆணையை ஏற்று சங்கராச்சாரி மடத்துக்குப் போனதோடு சபாநாயகராக இருந்த காளிமுத்து, ஜெயேந்திரனைப் பாராட்டிய, சங்கராச்சாரியை பெரியாரோடு ஒப்பிட்டுப் பேசியபோது எதிர்த்த அதே கலைஞர்தான் இப்போது சந்தர்ப்பவாத அரசியலுக்காக எஸ்.வி. சேகரையும், நடிகவேள் ராதாவையும் ஒப்பிட்டு உள்ளம் பூரிக்கிறார். இன்னும் மார்பில் பூணூல் போட்டுக் கொண்டு தன்னை ‘பிராமணனாக’ அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இந்த காமெடி நடிகர் தி.மு.க.வில் சேரப் போகிறாராம். கலைஞரும் கதவைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இப்படித்தான் அண்ணா காலத்தில் வி.பி.இராமன் என்ற பார்ப்பனர் தி.மு.க.வில் நுழைந்தார். விளைவு... கட்சிக்குள் பிளவு. சம்பத் தனிக்கட்சிக் கண்டார். எம்.ஜி.ஆர். காலத்தில் ஜெயலலிதா என்ற பார்ப்பனர் நுழைந்தார். அதன் விளைவுகளையும் தமிழகம் பார்த்தது. ஏற்கனவே பார்ப்பனியத்தை உள்வாங்கிக் கொண்டு வரும் தி.மு.க. - இப்போது பார்ப்பனர்களுக்கும் பட்டுக்கம்பள வரவேற்பு தரத் தயாராகிவிட்டது.

தமிழ் செம்மொழி மாநாட்டிலும், ‘தினமணி’, ‘தினமலர்’, ‘இந்து’ குடும்பங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டாகிவிட்டது.

தி.மு.க.வுக்கு என்று கொள்கை அடையாளம் எதையாவது கலைஞர் மீதப்படுத்தப் போகிறாரா? குடும்பம் மட்டுமே அவரது அடையாளமாக மிஞ்சப் போகிறதா?

கலைஞரின் ‘அரசவை’யில் முன்னோடும் குழுவாக விரைந்தோடி செயல்படும் ‘மூவர் அணி’ - இதைப் பற்றி எல்லாம் அவசரக் கூட்டங்களைக் கூட்டிப் பேச மாட்டார்களோ!

- விடுதலை இராசேந்திரன்