இடிப்பவர்களை விடவும் வேடிக்கை பார்ப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
எல்லாரும் கைக்கட்டி நிற்க இந்திய ஜனநாயகம் ஒரு பெண்ணின் வீட்டை இடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது, அவள் இஸ்லாமியப் பெண் என்கிற ஒரே காரணத்திற்காக.
அஃப்ரீன் பாத்திமா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மொழியியல் மாணவி. 2019-20 கவுன்சிலர் மற்றும் 2018-19 அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரி மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்.
மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறாள் என்கிற ஒரே காரணத்திற்காக அவள் வீடு இடிக்கப்படுகிறது.
அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் தீவிரவாதச் செயல் இது. சொந்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் அரசாங்கத்தைத்தான் கண்டிருப்போம், தங்களின் சொந்த மக்களுடையை வீட்டை இடிக்கும் மிக மோசமான அரசாங்கம் இது.
சனாதனத்திற்கு பல்லக்கு - சாமான்யர்களுக்கு புல்டவ்சர்
அகதிகளாக வந்தவர்களையே அரவணைத்து அவர்களுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகளுக்கு மத்தியில், சொந்த நாட்டு மக்களை மனசாட்சி இல்லாமல் பழி வாங்கிக் கொண்டிருக்கிறது தெரு ரவுடிகளைப் போல.
போர்க்களத்தில் ஆயுதங்களை இழந்த இராவணனைக் கொல்லாது,
"ஆள்ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல்"
“இன்று போய் நாளை வா” — என்று இராமன் இராவணனைச் சொன்னதாக கம்பன் கூறுகிறான். ஆயுதமின்றி இருந்தால் பொண்டாட்டியைக் கடத்தியவனாய் இருந்தாலும் எதிர்த்துப் போராடக்கூடாது என்கிற இராமனின் குணம் எங்கே? இராமபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தக் கோழைகள் எங்கே? இவர்கள் போலியான இராம பக்தர்கள்.
இராமனின் பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டு தனியாக வரும் இஸ்லாமியப் பெரியவரை ஜெய் ராம் சொல்லச் சொல்லி தாடியைப் பிடித்து இழுப்பதும், அவர்களை அடித்துக் கொல்வதும், ஹிஜாப் அணிந்து வரும் பெண்ணை பன்றிக் கூட்டம்போல கூடிக் கத்துவதும் , எதிர்த்துக் குரல் கொடுக்கும் சாமான்ய மக்களின் வீட்டை கோழைத்தனமாக இடிப்பதும் - இதுதானா உங்க இந்துத்துவ வீரம்?
வீரம்னா தம்மை எதிர்த்து நிற்கும் தன்னைப்போல வலிமையுடைய, இல்லை தனக்கு மேலே வலிமை பொருந்தியவனிடம் மோதுவதுதான்.
அங்கே சீனா நமது மண்ணை அபகரித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தட்டிக் கேட்க தைரியமில்லாத 56 இஞ்ச் மார்புகள் தன்னை எதிர்த்து நிற்கும் அப்ரின் பாத்திமா என்கிற இஸ்லாமியப் பெண்ணின் வீட்டை சிறுபிள்ளைத்தனமாக இடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது எவ்வளவு கேவலம் தெரியுமா? சிறுபான்மையினராக இருக்கும் ஒரு கூட்டத்தையே கண்டு இவ்வளவு பயமா இவர்களுக்கு?
நீங்கள் அவளது குரலை இடிக்க முடியாது. நீங்கள் அவளது கொள்கையை இடிக்க முடியாது. நீங்கள் அவளது நம்பிக்கையை இடிக்க முடியாது. வெறும் செங்கற்களை மட்டும்தானே... இடித்துக் கொள்ளுங்கள்.
அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் இறைவனுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை.
அநீதி இழைத்தவர்கள், வீட்டை இடித்தவர்கள் மட்டுமல்ல வேடிக்கை பார்ப்பவர்களும்தான்.
- ரசிகவ் ஞானியார்