மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறது. அம்மாநிலத்தில் சிலிகுரி என்ற பகுதியில் பெங்கால் சவேரி என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்துக்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் திரிபுராவில் இருந்து வந்தவை. இதற்கு திரிபுராவிலேயே பெயர் சூட்டப்பட்டுவிட்டது. ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்ற இஸ்லாமியப் பெயரையும், பெண் சிங்கத்துக்கு சீதா என்ற ராமாயண பாத்திரப் பெயரையும் சூட்டியிருப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே பெண் சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பதுதான் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் கருத்து.

அக்பர் ராமாயணத்துக்கு எதிரானவரா? இந்துமதத்துக்கு எதிரானவரா? என்பதையும் வரலாற்றுரீதியாக நாம் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. ராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் இருந்து பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட மன்னர் தான் அக்பர். உத்தரவிட்டது மட்டுமின்றி பாரசீக மொழியில் ராமாயணத்தை விரும்பி படித்தார். அதற்கு ஜெய்க்பூர் மேனேஸ்க்ரிட் என்று பெயர் சூட்டப்பட்டது. அக்பரின் தாயாரான ஹமிதா பானுவும் வால்மீகி ராமாயணத்தை விரும்பி படித்தார். 1604இல் அவர் மரணமடையும் வரை அவர் பாரசீக மொழியில் ராமாயணத்தை படித்துக் கொண்டே இருந்தார். அவர் படித்த அந்த ராமாயணத்தின் பிரதி இப்போதும் கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. 1604ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது என்பது வரலாறு. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டில் (பிப் 11) இந்த வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றிருக்கிறது.

அபுதாபி என்ற இஸ்லாமிய நாட்டில் தங்களது கருத்துகளுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட இந்து கோயிலை கட்ட அந்த நாடு அனுமதித்து உள்ளது. உருவ வழிபாட்டின் பெருமையை பேச ஒரு அமைச்சர் முன்னிலையில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் இங்கே ஒரு உயிரியல் பூங்காவில் விலங்குகளில் ராமன், சீதை என்று இருப்பதைக் கூட இந்தமத வெறுப்பாக மாற்றும் அமைப்பாக விஷ்வ இந்து பரிசத் இருக்கிறது. கடவுள் – மதம் – ஜாதி இவைகளுக்கு அப்பாற்பட்ட விலங்குகளை கூட ஜாதியையும், ஆண் பெண் பேதத்தையும் திணிக்கும் ஒரு பண்பாடு தான் சனாதானப் பண்பாடு இருக்கிறது. இதுதான் இவர்கள் பேசுகிற இந்து பாரம்பரிய பண்பாடு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

விடுதலை இராசேந்திரன்

Pin It