இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையான மதுரை நகரம் எனக்குப் பரிச்சயமானது திரைப்படக் கொட்டகைகள் மூலம்தான். பாடல் பெற்ற திருத்தலங்கள் போலக் கொட்டகைகள் எங்கும் பரவியிருந்தன. தூங்காத நகரமாக அறியப்பட்டிருந்த மதுரை நகரின் கண்கள் போல, திரையரங்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் திரைப்படம் அறிமுகமான போது, தமிழரின் மனங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றின என்பது முக்கியமான கேள்வி. 1960களில் திரைப்படம் பார்ப்பது கெட்ட வழக்கம், பாதகங்களில் ஒன்று என்பது போன்ற பொதுப்புத்தி நிலவியது. அதிலும் குழந்தைகளும், இளம் பெண்களும் திரைப்படம் பார்க்கவே கூடாது என்று பெரியவர்கள் உறுதியாக இருந்தனர். என்றாலும் கொட்டகைகள், மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தன. ஒளிக்கற்றைகள் மூலம் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் எல்லோரையும் கவர்ந்து இழுத்தன; ஏதோ ஒரு மாயவிளைவைப் பார்வையாளரிடம் ஏற்படுத்தின. என்றாலும் திரையரங்குப் பக்கம் திரும்பிப் பார்க்காத பெரியவர்கள் எழுபதுகளில் கூட கணிசமாக இருந்தனர்.

அறுபதுகளில் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் எம்.ஜி.ஆர்., X சிவாஜி என்ற முரணில் வேறுபட்டனர் ; மோதிக் கொண்டனர். மதுரை நகரில் முக்கியமான தெருக்களில் ரசிகர் மன்றங்கள் இருந்தன. மாலைவேளையில் தேநீர்க்கடையின் முன்னர் நின்று அரட்டையடிக்கும் ஒத்த கருத்துடையவர்கள், தங்கள் அபிமான நடிகரின் பெயரால் மன்றம் அமைத்துக் குழுவாகச் செயற்பட்டனர். எம்.ஜி.ஆர், சிவாஜி பெயரில் நிறைய ரசிகர் மன்றங்கள், ரசிகர் மன்றத் தலைவர், செயலர், பொருளாளர், உறுப்பினர் போன்ற பதவிகள், வேலைவெட்டி எதுவுமற்ற இளைஞர்களுக்குக் கௌரவத்தைத் தந்தன; அடையாளத்தைத் தந்தன. தங்களுடைய அபிமான நடிகரின் திரைப்படம் வெளியிடப்படும்போது, திரையரங்க வாயிலில் அந்த நடிகரின் வண்ணப்படத்துடன் தங்கள் பெயர் களையும் எழுதி வைக்கும் தட்டிகள் மூலம் உற்சாகமடைந்தனர். திரையரங்க முன் வராண்டாவில் தொங்கவிடப்பட்ட கண்ணாடி பிரேமுக்குள் நடிகரின் படமும், கீழே மன்ற நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. சில போட்டோக்களில் நடிகர் புன்னகைத்துக் கொண்டிருக்க, அருகில் மன்ற நிர்வாகிகள் அடக்க ஒடுக்கத்துடன் நிற்பார்கள். மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றம், மாவட்ட தலைமை ரசிகர் மன்றம், எம்.ஜி.ஆர்., பாதுகாப்புப்படை ரசிகர் மன்றம், நீரும் நெருப்பும் ரசிகர் மன்றம்..... இவை போன்ற பெயர்களின் மூலம், ஒவ்வொரு ரசிகர் மன்றமும் தனித்தியங்க முயன்றன.

மதுரையில் விக்டோரியா எட்வர்டு ஹால் எனப்படும் அரங்கு, இரவில் ரீகல் தியேட்டராக உருமாறும். அந்தத் திரையரங்கிலும், பரமேஸ்வரியிலும் ஆங்கிலப் படங்கள்தான் திரையிடப்படும். ஆங்கிலத்திரைப்படம் பெரும்பாலும் 90 நிமிடங்கள் தான் திரையிடப்படும். எனவே லாரல்-ஹார்டி, சார்லி சாப்லின் போன்றோர் நடித்த நகைச்சுவைத் துண்டுப் படங்களும் கார்ட்டூன் படங்களும், தொடக்கத்தில் காட்டப்பட்டன. ஆங்கிலப் படக்கதா நாயகர்களுக்கும் மதுரையில் ரசிகர் மன்றங்கள் இருந்தன. சீன்கானரி, யூல்பிரினர், கிரிவிரிபெக், மார்லண் பிராண்டோ போன்றவர்கள் நடித்த ஆங்கிலத் திரைப்படங்கள், திரையிடப்படும் போது, திரையரங்குகளில் அந்த நடிகர்களின் நிழற்படங்களுடன் மன்ற நிர்வாகிகள் அடங்கிய போட்டோக்கள் தொங்கவிடப்பட்டன. இந்தி நடிகை மும்தாஜ் பெயரிலும் மதுரையில் ரசிகர் மன்றம் இருந்தது. திரைப்படத்தின் இடைவேளையில், மன்றத்தினரின் போட்டோக்களை மேய்ந்திடும் கூட்டம் எப்பவும் இருக்கும். அழகிய நடிகையின் பக்கத்தில் ஒடுங்கி நிற்கும் ரசிகரைப் பொறாமையுடன் பார்ப்பவர்கள் கூட்டத்தில் இருப்பார்கள். சிலருக்கு அது ஏதோ ‘தந்திரவேலை’ எனச் சந்தேகம் தோன்றும்.

நடிகைகளுள் ராதாவிற்கு ஐம்பதுக்கும் கூடுதலான ரசிகர் மன்றங்கள் இருந்தன. ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் வெளியானபோது, ‘அபிராமி’ திரையரங்க முன் முற்றம் முழுக்கப் பல்வேறு போட்டோக்களில் நடிகை ராதா சிரித்துக் கொண்டிருந்தார். அப்புறம் திரைப்படத்தில் யார் தலையைக் காட்டினாலும், அவர் பெயரில் மாவட்டத் தலைமை ரசிகர் மன்றம் தொடங்குவது மதுரை ரசிகர்களிடையே மோஸ்தரானது. இப்படியே போனால், நடிகர் 'தவகளை’ பெயரில் கூட ரசிகர் மன்றம் உருவாகலாம் என்று நண்பர்கள் பேசிக்கொண்டோம். தமிழகத்தில் மதுரையில்தான்

ரசிகர் மன்றங்கள் பெரிய அளவில் இருந்தன. மாவட்டத் தலைவர், சின்ன மன்றத்தினைத் திறந்துவைக்க வரும்போது, மைக்செட் முழங்க உற்சாக வரவேற்பு கிடைக்கும். அவர் ஏதோ குட்டி 'தாதா’ போலக் கம்பீரமாக வருவார். லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் போன்று அன்றைய ரசிகர் மன்றங்கள் செயல்பட்டன. சில ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பள்ளிக்கூட மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்குதல், ரத்ததான முகாம் நடத்துதல் என சமூக சேவையிலும் ஈடுபட்டனர். என்றாலும் ரசிர் மன்றத்தினரை 'விசிலடிச்சான் குஞ்சுகள், 'வீணாய்ப் போனவர்கள்’ எனக் கீழ்த்தரமாக விமர்சிப்பது பெரிய அளவில் நடைபெற்றது. எதிரணி ரசிகர் மன்றத்தினர் கொண்டாடும் அபிமான நடிகரின் வால்போஸ்டர் மீது சாணி தடவுதல், கிழித்தெறிதல் மூலம் ஏற்படும் வில்லங்கமான செயல்கள், ரசிகர் மன்றம் என்றால் கௌரவமான பிம்பத்தைத் தரவில்லை.

தெருக்களில் சுவர்கள் மீது ஒட்டப்பெறும் திரைப்படப் போஸ்டர்கள், வெகுசனப் பண்பாட்டில் முக்கியமான இடம் வகித்தன. திரைப்படக் காட்சிகள், இடம் பெற்றுள்ள போஸ்டர் முன் நின்று உற்றுப்பார்த்துக் கிளுகிளுப்பு அடையும் ஆட்கள் இருந்தனர். பெரிய கொங்கைகளை முன்தள்ளியவாறு அச்சிடப்படும் நடிகைகளின் படங்களைப் பார்த்துச் சிலர் உணர்ச்சிவயப்பட்டனர். ஒவ்வொரு வாரமும், இரண்டாவது வாரம், மூன்றாவது வாரம் என ஒட்டப்படும் போஸ்டர்கள் ரசிகர்களின் நாடி நரம்பினை முறுக்கேற்றின. அதிலும் 25 நாட்கள், 50 நாட்கள், 100 நாட்கள், வெள்ளிவிழா என அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் ரசிகர்களுக்கு போதையைத் தந்தன. திரைப்படப் போஸ்டர்கள் உருவாக்கிய ரசிக மனநிலைபற்றிச் சொல்வதற்கு நிரம்ப விஷயங்கள் உள்ளன.

திரைப்படம், படப்பதிவு இன்று தொடங்குகிறது என்று தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரத்துடன் வெளியாகும் அறிவிப்பு, ரசிகர்களின் நரம்புகளை முறுக்கேற்றி விடும். திரைப்படத்தைத் தயாரிப்பது எந்த நிறுவனம் என்பது தொடங்கி, மதுரையில் எந்த நிறுவனம் படத்தைத் திரையரங்கில் விநியோகிக்கப்போகிறது என்பது வரை நுட்பமான தகவல்களை, விளம்பரத்தின்மூலம் வாசித்து, ரசிகர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வார்கள். திரைப்படத் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து எப்பொழுது வெளியாகுமோ என்று மனத்தவிப்புடன் ரசிகர்கள் இருந்தனர். பெரும்பாலும் பொங்கல், தீபாவளி நாளில் புதுப்படங்கள் வெளியாகும். அவற்றில் எந்த நடிகரின் படம் வெற்றியடையும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

திரைப்படம் வெளியாவதற்குச் சில நாட்களுக்கு முன்னரே பகலிலும், இரவிலும் பட விநியோகஸ்தர், விளம்பரம் மூலம் ‘தூள்’ கிளப்புவார். சுமார் 10ஜ்8 அளவிலான திரைப்பட விளம்பரத் தட்டிகள் இரண்டினைக் கூம்பு வடிவில் இணைத்து, கீழே இரு சக்கரங்களில் நகரும் வண்டியில் வைத்து, ஏழெட்டு வண்டிகளை ஒன்றின் பின்னால் ஒன்றாகத் தள்ளிக்கொண்டு வருவார்கள். ஊர்வலத்தின் முன்னர் பேண்டு வாத்தியம் அல்லது கொட்டு மேளம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இதே ஊர்வலம் இரவு வேளையெனில் தட்டிகளின் இருபுறமும் ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்குகள் ஏந்திய சிலர் நடந்து வருவார்கள். வழியெங்கும் திரைப்படம் பற்றிய துண்டுப்பிரசுரம் தெருவிலிருப்போருக்கு வழங்கப்படும். பெரிய நடிகரின் திரைப்பட வெளியீடு எனில், ஊர்வலத்தின் முன்னால், கரகாட்டக் கலைஞர்கள் ஆடிக்கொண்டு நடந்து போவார்கள்.

திரைப்படம் வெளியாகும் திரையரங்கின் முன்னர் வண்ணக் காகிதக் கொடிகள் குறுக்கிலும் நெடுக்கிலும் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் அரங்கின் முன்னர் கூடிநின்று கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதிலும் ஏற்கெனவே படத்தின் பாடல்கள் இசைத்தட்டுகள் மூலம் பிரபலமாகி இருந்தால் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு கூடிவிடும். எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் வெளியீடானது, ஓரிரு தடவைகள் தள்ளிப்போகும். இதனால் எப்போது தங்கள் அபிமான நடிகரின் படம் திரையிடப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் வேறு பிரபலமாகி எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தால், ரசிகர்களின் மனப் பதற்றம் அளவற்றுப் பெருகிவிடும். திரைப்படக் காட்சியைப் பெரிய அளவில் வரைந்து திரையரங்க வாயிலில் வைக்கப்படும் காட்சியானது, ரசிகர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தும். நடிகரின் பத்தடி உயரமான கட் - அவுட்டிற்கு பெரிய மலர் மாலை, எலுமிச்சைகளைச் சேர்த்து மாலை அணி வித்தலைப் பெரும் சாதனையாகச் சில ரசிகர்கள் செய்தனர். இன்னும் சிலர் கட் - அவுட்டின்மீது குடம் குடமாகப் பாலை ஊற்றிப் பாலாபிஷேகம் செய்து தங்களுடைய வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

காலையில் 10-30 மணிக்கு முதல் காட்சியாகப் பிரபல நடிகரின் புதுத் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது என்பதை அறியும் ரசிகர்கள் முதல்நாள் மாலையிலிருந்தே திரையரங்க வாயிலில் இருக்கும் கவுண்டர் முன்னர் காத்துக் கிடப்பார்கள். இரவு முழுக்கத் தூங்காமல், அல்லது அரைகுறையாகத் தூங்கி நுழைவுச் சீட்டுக்காகக் காத்திருப்போரில் திருமணமானவர்களும் கலந்து இருப்பார்கள். சென்ட்ரல் திரையரங்கில் 0.90 காசு நுழைவுச் சீட்டு வாங்குவதற்காகக் காத்திருக்கும் கல்பாவிய சின்னச் சந்தில் மூத்திர வீச்சமடிக்கும் அந்த வாடையைச் சகித்துக்கொண்டு பன்னிரண்டு மணிநேரம்கூடக் காத்திருக்கும் ரசிகர்கள் இருந்தனர். இரவில் பனி கொட்டினாலும் அல்லது மழை தூறினாலும் வரிசையில் காத்துக் கிடப்பது தவமிருப்பது போலிருக்கும். காலையில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்னர் திரையரங்கு வாயில் போர்க்களம் போலக் காட்சியளிக்கும். சீருடை அணிந்த காவலர்கள் கையில் கம்புடன் வரிசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பார்கள்.

எம்.ஜி.ஆர். படத்திற்குத்தான் நீளமான வரிசை இருக்கும்; தள்ளுமுள்ளு இருக்கும். கையில் கம்புடன் குட்டையான ஆள் ஒருவர், வரிசையில் ஒழுங்கு மீறும்போது, சகட்டுமேனிக்கு வன்முறையைப் பிரயோகித்து ஒழுங்கை நிலைநாட்டுவார். எப்படியோ இடித்துத் தள்ளிக் கவுண்டருக்குள் நுழைந்து நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள், ஏதோ சாகசம் புரிந்தவர்கள் போலத் திரையரங்கினுள் நுழைவார்கள். திரைப்படம் திரையில் தோன்றியது முதலாக ‘விசில்’ ஒலி காதைப் பிளக்கும். ஒரே கைதட்டல் வேறு கேட்கும். முதல் காட்சியில் அபிமான நடிகர் தோன்றும்போது, காகிதம் அல்லது பூக்களை ஒளிக்கற்றை மீது எறிந்துவிட்டு, பெஞ்சின் மீது ஏறி நின்று கூச்சலிடுவார்கள். முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்தேன் என்ற பெருமையுடன் திரையரங்கினை விட்டு வெளியேறுகிறவர்களின் முகத்தில் பெருமை பொங்கும். திரையரங்க வாயிலில் காத்திருக்கும் கும்பலில் சிலர், ‘படம் எப்படி?’ என்று ஆவலுடன் விசாரிப்பார்கள். ‘படம் வெள்ளிவிழாதான், ‘பாட்டு, சண்டை தூள்’ என்று சொல்வதைக் கேட்டவுடன், அடுத்த காட்சிக்காகக் காத்திருப்போர் மிகவும் சந்தோஷமடைவார்கள்.

எழுபதுகளின் இறுதியில் ‘16 வயதினிலே’, ‘உதிரிப்பூக்கள்’, ‘அவள் அப்படித்தான்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற படங்கள் வெளியானபோது, நானும் என் நண்பர்களும் முதல் நாளிலே திரையரங்குக்குச் சென்று படம் பார்த்திருக்கிறோம். வித்தியாசமான திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரைப்படத்துறை மாறி விடும் என்று பாமரத்தனமாக நாங்கள் நம்பிய காலமது. மதுரையில் ‘கல்பனா’ திரையரங்கில் ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் முதல் காட்சிக்குப் போயிருந்தேன். கறுப்பு வெள்ளையில் பேச்சு, சாப்பாடு என்று விரிந்த காட்சிகளினால் பொறுமையிழந்த ரசிகர் கூட்டம் ‘ஹோ’ வெனக் கத்தி, பெஞ்சுகளைத் தூக்கிப் போட்டது. ‘காதல் இளவரசன் திருமுருக கிருபானந்த வாரியாருக்கு...’ என யாரோ கத்த, கும்பல் ‘ஜே’ போட்டது. அப்புறம் 'கனவுக்கன்னி கே.பி.சுந்தரம்பாளுக்கு.....” எனக் கத்திட, ‘ஜே’ திரையரங்கம் முழுக்க ஒலித்தது. சிலர் எழுந்துபோய் வாயிலில் தொங்கிய திரைச் சீலைகளை ஒதுக்கித் தள்ளிவிட திரையில் படம் எதுவும் தெரிய வில்லை. ஒருவழியாகப் படம் முடிந்து வெளியே வரும்போது, எனக்கு அருகில் நடந்து வந்த இளைஞர்கள், அடுத்த காட்சிக்காக வரிசையில் காத்திருப்பவர்களின் காலைத் தொட்டுக் கும்பிட்டுப் ‘படத்துக்குப் போகாதீங்க... கொத்துப் புரோட்டா போட்டுட்டானுக” என்றனர்.

மதுரையிலுள்ள திரையரங்குகளில் பொதுவான அம்சம், படம் பிடிக்கவில்லை என்றால் ‘கட்டை’யைக் கொடுப்பது இயல்பாக நடக்கும். படம் மெலோடிராமாவாக - இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்போல- மெல்ல நகரும்போது, திடீரென ஒரு குரல்கேட்கும், ‘பருத்திப்பால்’ என்று. எங்கும் சிரிப்பொலி படரும். அப்புறம் ‘கட்டிலு... கட்டிலு....’ என யாராவது கூச்சலிடுவார்கள். மீண்டும் சிரிப்பலை. எங்கும் திரைப்படம் ஏதாவது ‘கமெண்ட்’ அடிப்பது பெரும்பாலும் வரவேற்கக் கூடியதாகவே இருக்கும்.

திரைப்படம் என்பது தமிழர் வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவியிருந்தது என்பதற்கு அத்தாட்சி, புதிதாகத் ‘திருமணம்’ ஆன தம்பதியினர் புதுப்படத்திற்குச் செல்வது என்பது கட்டாயம். சிலவேளைகளில் தம்பதிகள் தனித்தோ அல்லது பெருங்கும்பலுடனோ திரையரங்கினுக்கு வருவார்கள். பொதுவாக, மாலைக் காட்சிக்கு நுழைவுச் சீட்டுக் கிடைப்பது சிரமம். எனவே ‘பிளாக்’கில் கூடுதல் கட்டணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிக்கொள்வது நடைமுறையில் இருந்தது. அதிலும் வணிக நிறுவனங்கள் நிறைந்த மதுரையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் ‘நுழைவுச் சீட்டு’ வாங்குவது கஷ்டம். ஒரு திரையரங்கில் ‘அரங்கு நிறைந்தது’ என்ற அறிவிப்பு தொங்கவிடப்பட்டவுடன், பக்கத்திலிருக்கும் வேறொரு திரையரங்கை நோக்கிப் படையெடுப்பார்கள். நுழைவுக் கட்டணம் பெண்களுக்கு 0.55 பைசா; ஆண்களுக்கு 0.80, 0.90 பைசா, மாடியிலிருந்து பார்க்க 1.15, 1.45, 2.30. மதுரையிலுள்ள தங்கம் தியேட்டர் ஆசியாவிலே மிகப்பெரியது. 0.90 காசு டிக்கட்டை மூன்று கவுண்டர்களில் கொடுப்பார்கள். அது மட்டும் ஆயிரம் இருக்கைகள் இருக்கும். தங்கம் தியேட்டரில் ‘அரங்கு நிறைவது’ அடிக்கடி நடைபெறாதது. வெள்ளிவிழா காணும் எம்.ஜி.ஆர். படங்களே தங்கம் தியேட்டரில் எழுபது நாட்கள் திரையிடப்பட்டால் அதிசயம்தான்.

இன்று ‘கிரிக்கெட்’ பற்றிய பேச்சு இளைஞர்களிடையே நிலவுவதுபோல, எழுபதுகளில் கூட திரைப்படம் பற்றிய பேச்சுகள் இருந்தன. தங்களுக்குப் பிடித்த நடிகர் நடித்து வெளியான திரைப்படங்களைப் பற்றிய புள்ளி விவரங்கள் பேசுபொருளாக இருக்கும். தமிழகமெங்கும் திரையிட்ட எல்லாத் திரையரங்குகளிலும் நூறு நாட்கள் ஓடிய படம் ‘மதுரைவீரன்’, சிந்தாமணியில் திரையரங்கில் படம் ஒரு மாதம் ஹவுஸ்புல் காட்சியாகத் திரையிடப் பட்டது. படத்தின் ஒரு மாதவசூல் பற்றிய கணக்கு, நாடோடி மன்னன் திரைப்படம் யாழ்ப்பாணத்திலும் பெற்ற வசூல்.... இப்படியான பேச்சுகளைப் பேசுவதில் கில்லாடிகளாக இருந்தனர். இவை மட்டுமின்றி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் பற்றியும் அலுக்காமல் பேசித்திரிந்த ரசிகர்களின் மூளைக்குள் ‘திரைப்படக் களஞ்சியம்’ கணினியின் நினைவகம் போலப் பதிந்திருந்தது.

திரைப்படம் நூறு நாட்களைக் கடந்து திரையிடப்படுமென்ற நிலையில், நூறாவது நாளை விமரிசையாக ரசிகர்கள் கொண்டாடினர். திரையரங்கை வண்ணத் தோரணங்களால் அலங்கரித்தனர்; நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு மலர்மாலை அணிவித்தனர். அன்றைய நாளில் திரைப்படம் காணவரும் பார்வையாளர்களுக்கு ‘சாக்கலேட்’ வழங்கினர். சில முக்கியமான திரைப்படங்கள் வெற்றியடைந்த போது, நூறாவது நாளில், படத்தின் இடைவேளையில் நடிகர் நடிகைகள் நேரில் தோன்றிப் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

ஆட்டுக்கார அலமேலு படம் பெரிய வெற்றி பெற்றபோது, அந்தப் படத்தில் நடித்த ‘ஆடு’, திரையரங்க வாயிலில் கட்டப் பட்டிருந்த கொச்சை நாற்றமடித்த ஆட்டுக் கிடாயினைச் சுற்றி நின்று பலரும் வேடிக்கை பார்த்தனர்.

தெய்வத்தை முன்னிறுத்திய ‘அம்மன்’ படம் வெளியானபோது, படத்தின் இடையே, பரபரப்பான காட்சியில் ‘சாமி’ வந்து ஒருபெண் ஆடினாள். அந்தச் செய்தி தினசரியில் செய்தியாக வெளியானது. அன்று அந்தப் படத்தின் மாலைக்காட்சியில் ஏழெட்டுப் பெண்களுக்குச் ‘சாமி’ வந்துவிட்டது. சில பெண்கள் தலையை விரித்துப் போட்டு, ஓவெனக் கத்திக் குலவையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரையிலுள்ள பண்டிமுனி கோவிலில் (நடைபெறும்) அருள் வந்து பெண்கள் ஆடும் காட்சி, திரையரங்கில் தினமும் காட்சிகள் தோறும் அரங்கேறியது. ‘பக்திக்குரிய இடம் கோவில் மட்டுமல்ல திரையரங்கும்தான்’ என்ற புதுமொழி எங்கும் பரவியது. திரைப்படத்துடன் தொடர்புடையவர்களுக்கு நல்ல லாபம் அந்தப் படத்தின் மூலம்.

வார இறுதிநாட்கள் மட்டுமின்றி, கோவில் திருவிழா, கல்யாணம், சடங்கு போன்ற விழாக்களிலும் திரைப்படத்திற்குச் செல்லுவது பெரு வழக்கமாக இருந்தது. சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்குவதையட்டி சுற்றிலுமுள்ள கிராமத்தினர்- சில லட்சங்கள்- ஒரே நாளில் மதுரையில் கூடினர். சாமியைத் தரிசிப்பதைவிடத் திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த நடிகரின் படங்களைக் கண்டு ரசிப்பதில் பலரும் ஆர்வம் காட்டினர். ஒரே நாளில் மூன்று திரைப்படங்களை விடிய விடியப் பார்த்துவிட்டு, மறுநாளில் அலுப்புடன் ஊருக்குச் செல்கிறவர்களின் மனம் களிப்பினால் ததும்பியது. சில மாதங்கள் பாடுபட்டுச் சேர்த்த பணத்தைத் திரைப்படங்கள் காண்பதற்கும், சித்திரைக் கண்காட்சியிலும் செலவழித்து விட்டுத் திரும்புகிற இளைஞர்களுக்கு, அந்தக் கோடைக்காலம் முழுக்க மரத்தடிகளில் அமர்ந்து கதைப்பதற்கு விஷயங்கள் நிரம்ப இருக்கும்.

கிராமப்புறங்களில் திருமண மண்டபங்கள் இல்லாத காலகட்டத்தில், திருப்பரங்குன்றத்திலுள்ள மண்டபங்களிலோ அல்லது மதுரையிலுள்ள மண்டபங்களிலோ ஓரளவு வசதியானவர்களின் வீட்டுத்திருமணங்கள் நடைபெற்றன. அப்பொழுது மதுரைக்குள் மட்டும் நகரப் பேருந்துகள் இயங்கின. எனவே சுற்றுப்புறக் கிராமத்தினர் புறநகர்ப் பேருந்து மூலம் முதல்நாள் மாலை வேளையில் மண்டபத்திற்கு வந்து விடுவார்கள். இரவு உணவிற்குப் பின்னர் கல்யாணக் கோஷ்டியினர்-மாப்பிள்ளை உள்பட - திரைப்படத்திற்குச் செல்லுவார்கள். எந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது என்பது முக்கியமல்ல. ஏதோ ஒரு குப்பைப் படம் எனினும் எல்லோரும் சேர்ந்து திரையரங்கில் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு மண்டபத்திற்கு நடந்து வருவார்கள். சிறுவர் சிறுமியரைப் பொறுத்தவரையில், திருமணக் கொண்டாட்டம் என்ற நிகழ்வுடன் திரைப்படம் என்ற அம்சமும் சேர்ந்துகொண்டது இயல்பாக நடந்தேறியது.

திரையரங்க உரிமையாளர்களுக்குச் சமூகத்தில் நிரம்ப மரியாதை இருந்தது. என்னுடன் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் மதுரையிலுள்ள சென்ட்ரல் தியேட்டர் உரிமையாளரின் மகன் என்பதைச் சக மாணவர்கள் முக்கியமான செய்தியைப்போலப் பரிமாறிக் கொள்வார்கள். எழுபதுகளில்கூட வாரஇறுதி நாட்கள் தவிர, மற்ற நாட்களில் மதியம், மாலை, இரவு என மூன்று காட்சிகள் தான் நடத்தப்பட்டன. பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் அரசதிகாரி அனுமதிபெற்று ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து காட்சிகள் நடைபெற்றன. இரவுக்காட்சி 10.45 க்குத் தொடங்கி செய்திச் சுருள், விளம்பரங்கள் முடிந்து முதன்மைப் படம் தொடங்கிட 11.10 ஆகிவிடும். இரவுக்காட்சி முடிய நள்ளிரவு தாண்டி 2.00 மணியாகிவிடும். அதற்குப் பின்னர் சைக்கிளிலோ அல்லது நடந்தோ வீட்டிற்குப் போவதற்கு அதிகாலை 3.00 மணிகூட ஆகிவிடும். மதுரையைச் சுற்றிலும் பத்துமைல் தொலைவிலுள்ள கிராமங்களில் வாழும் இளைஞர்கள், சைக்கிளுக்கு இருவர் என ‘டபுள் பெடல்’ போட்டு இரவுக்காட்சியைப் பார்த்துவிட்டுத் தங்கள் வீட்டிற்குப் போவார்கள். இதனால் சில திரையரங்குகளில் சைக்கிளில் வருகின்றவர்களுக்கு முன்னுரிமை தந்து நுழைவுச் சீட்டு வழங்கினர்.

திரையரங்கம் என்பது ஒளியின் வழியே நடைபெறும் மாயத்தினால் உயிர்பெற்று எழும் பிம்பங்கள் தரும் போதையும் களவும் பலருக்குக் கிளுகிளுப்பை ஏற்படுத்தின. சிலருக்குச் ‘சண்டை’யை உருவாக்கிடும் களமாக விளங்கின. அற்ப விஷயத்துக்காகக்கூடச் சகப்பார்வையாளர்மீது வன்முறையைப் பிரயோகித்து அடித்து நொறுக்குகிறவர்கள் இருந்தனர். வெறுப்பையும் கசப்பையும் வெளிப்படுத்திடும் ரசிகர்களை நெறிப்படுத்திட பெரும்பாலான திரையரங்குகளில் ‘அடியாட்கள்’ இருந்தனர். சிறு சச்சரவுகளையும் கலாட்டாக்களையும் தடுத்து ஒழுங்கை நிலைநாட்டிட, திரையரங்க நிர்வாகத்தினர் நிரந்தரமாகச் சிலரைப் பணியில் வைத்து இருந்தனர். எல்லாவற்றுக்கும் காவல்துறையை அழைப்பது இயலாதது. காவலர்கள் வந்து அமைதியை நிலைநாட்டுவதற்குள் ‘கத்திக்குத்து’கூட நிகழ்ந்து விடும். எனவே பல்வேறு தரப்பினர் வந்து குழுமும் திரையரங்கில் இப்பவும் எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் நிகழும் சூழலில், ‘அடியாட்கள்’ நிரம்ப உதவினார்கள். இத்தகையோர் பார்க்க ஆள் ஒல்லியா இருந்தாலும், துணிந்து கையை நீட்டுவார்கள்; அப்புறம் ‘ஙோத்தா, ஙொக்க’ என அநாவசியமாகக் கெட்ட வார்த்தைகளைச் சப்தமாகச் சொல்வதில் நிபுணர்கள். திரையரங்கில் பெறும் ஊதியம் மிகக்குறைவாக இருப்பினும், இத்தகைய வேலையில் சேர்ந்தோர், ‘அதிகார போதை’ காரணமாக, வேறு எங்கும் வேலைக்குச் செல்லாமல், பகல் முழுக்கச் சோம்பித் தூங்குவார்கள். கேளிக்கை மையமான திரையரங்கு புகழ், பெருமை, அதிகாரம், வன்முறை சார்ந்த சமூக நிறுவனமாகித் தனது கரங்களை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.

மதுரையிலுள்ள பழமையான திரையரங்குகளான ‘இம்பீரியல் தியேட்டர்’, ‘சிடி சினிமா’ பற்றிச் சொல்ல வேண்டியது அவசியம். போன நூற்றாண்டில் மதுரைக்கு மின்சாரம் அறிமுகமானபோது, ஜெனரேட்டர் மூலம் இம்பீரியல் தியேட்டரில் படங்கள் திரையிடப்பட்டன என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். திரையில் மௌனப் படம் ஓடும்போது, திரைக்கருகில் நீளமான கம்புடன் நின்று காட்சியைப் பற்றி விவரிக்கும் ‘வருணனையாளர்’ பற்றி ப.சிங்காரம் தனது ‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் குறிப் பிட்டிருக்கிறார். மீனாட்சியம்மன் கோயிலுக்கருகில் சிறிய வீடு போன்ற அமைப்பிலிருந்த இம்பீரியல் தியேட்டர் எழுபதுகளில் கூட இயங்கியது. ரிக்ஷா ஓட்டுநர்கள், சுமை தூக்குவோர், கை வண்டி ஓட்டுநர் போன்ற அடித்தட்டு ஆண்கள் கூட்டம் திரையரங்கில் நிரம்பி வழியும். மாடிக்கு 0.70 காசு நுழைவுச் சீட்டுத்தான். நான் அந்தத் தியேட்டரின் விநோதத் தன்மையினால் ஈர்க்கப்பட்டு சில தடவைகள் போயிருக்கிறேன்.

எங்கும் வெற்றிலைச்சாறு படிந்து அழுக்காக இருக்கும். கஞ்சா புகை நெடி நீக்கமற நிறைந்து, சற்று நேரத்தில் நமது தலையும் சுழலும். காலுக்கடியில் பெருச்சாளிகள் ஓடிக்கொண்டிருக்கும். யாராவது சீட்டுகளுக்கு இடையில் ‘ஒன்று’-க்கு இருந்திருப்பார்கள். இருக்கைகள் மூட்டைப் பூச்சிகளால் மொய்க்கப்பட்டிருக்கும். தியேட்டரை விட்டு வெளியேறும்போது ஆடைகளை உதறிவிட்டுத்தான் வெளியே வரவேண்டும். எழுபதுகளில் பல திரையரங்குகள் மூட்டைப் பூச்சிகளை உற்பத்தி செய்து பரப்பும் மையங்களாக விளங்கின. ‘சிடிசினிமா’ என்பது விளக்குத்தூணுக்கு அருகில் பெரிய வீடு போலிருக்கும். பழைய படங்கள் அந்த இரு திரையரங்குகளிலும் திரையிடப்பட்டன. அவற்றைக் காண நிரந்தர வாடிக்கையாளர் இருந்தனர். எந்தத் திரையரங்குகளிலும் சீட்டுக் கிடைக்காமல், எப்படியும் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறியுடன் கிளம்பியவர்களின் புகலிடமாக இத்தகைய திரையரங்குகள் இருந்தன. எண்பதுகளில் இம்பீரியல் தியேட்டர் இடிக்கப்பட்டு, வணிகக் கட்டடம் கட்டப்பட்டுவிட்டது. சிடிசினிமா இன்று அதே கட்டடத்தில் கார் நிறுத்துமிடமாக உருமாறி விட்டது.

மதுரை மேலமாசி வீதியில் எண்பதுகளில் கூடச் செயற்பட்ட ‘சாந்தி’ திரையரங்கின் பூர்வீகப் பெயர் ‘சந்திரா டாக்கீஸ்’. அது பல்வேறு நாடகக் கம்பெனிகள் மாதக்கணக்கில் நாடகம் போடுமிடமாக இருந்துள்ளது. நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ். சகோதரர்கள், கண்ணையா போன்ற நாடகக்குழுக்களின் நாடகங்களைக் கண்டு களிக்குமிடமாக விளங்கிய பெரிய நாடகக் கொட்டகை எனப் பொது மக்களால் அழைக்கப்பெற்ற சந்திரா டாக்கீஸ், இன்று பெரிய கார் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுவிட்டது. வெளியே நின்று அந்தக் கட்டடத்தைப் பார்க்கும்போது, ‘ஏதோ’ நடந்து முடிந்ததன் சாட்சியாகப் பொலிவிழந்து இருப்பதைக் கண்டறியலாம்.

மதுரை நகரமெங்கும் வலைப்பின்னல்களாகப் பரவியிருந்த தேவி தியேட்டர், நியூசினிமா, கல்பனா, அலங்கார், சிந்தாமணி, ஸ்ரீமீனாட்சி, சென்ரல், தங்கம், பரமேஸ்வரி, ரீகல் போன்றவை வெறுமனக் கட்டடங்கள் மட்டுமல்ல. ஒளிக்கற்றை உருவாக்கும் மாயக்கணத்தில் செயலிழந்தது, விநோத உலகினுக்குள் பயணிக்கும் மக்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றின. சிந்தாமணி, நியூசினிமா, தேவி போன்ற திரையரங்குகள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று எழுபதுகளில் இறுதியில் யாராவது கூறியிருந்தால், அவனைப் பைத்தியக்காரனின் உளறலாக எல்லோரும் கருதியிருப்பார்கள். ஆனால் என்ன ஒரு மாயப்புனைவு நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்தான் காணாமல் போய்க்கொண்டிருக்கும் திரையரங்கு. இது ஏதோ மதுரை நகரத்துக் காட்சிமட்டுமல்ல, தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளின் நிலைமையும்கூடத்தான்.

அந்தப் பெரிய கட்டடம் விரைத்து நிற்கின்றது. முன்னால் பெரிய காம்பவுண்டுச் சுவர். கவுண்டரில் நுழைந்து, சிறிய பொந்திற்குள் காசைத் திணித்து, நுழைவுச் சீட்டை வாங்கி, வாயிலில் நிற்பவரிடம் தந்து, மறுபாதியைச் சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்தி மங்கலான இருளுக்குள் நுழைந்து, இருக்கையைத் தேடி உட்கார்கிறேன். கிசுகிசுப்பான தொணியில் பேச்சுகள். காத்திருத்தல் காரணமாக ‘எப்போ’ என்ற மனப் பரபரப்பு; உடலில் மெல்லிய உஷ்ணம் பரவுகிறது. எதிரே பரந்த வெண்திரை. திடீரென மின்சார மணியின் ஒலி. ஆங்காங்கே கைதட்டல். எல்லோருடைய கண்களும் வெண்திரையில் உறைந்துள்ளன. வானத்திலிருந்து வரவிருக்கும் தேவனைப் பார்ப்பது போன்ற ஆவலில் கவனம் முழுக்க ஒரு முகப்படும்போது, திரையரங்க விளக்குகள் முழுக்க அணைகின்றன. ஏதோ நடக்கப் போகிறதென்ற புதிராக நகரும் கணங்களுக்கிடையில், வண்ணங்களில் ஒளிர்ந்திடும் திரை அதியற்புதமாக எல்லோருக்குள்ளும் புனைவுகளை உருவாக்குகின்றது. எங்குமான பேரிருள் சூழ்ந்துள்ள வேளையில், ஒளியின் வழியே புனையப்படும் கதையுலகு, நம்முடன் வந்துள்ள எல்லோரையும் மறக்கடிக்கிறது. நானும் திரைப்புனைவுமென ஒரு புள்ளியில் இணைந்து மெய்மறந்து போகிறேன். வெப்பம் தகிக்கும் தட்பவெட்பநிலை கூட உறுத்தாத சூழலில் மனமெங்கும் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன.... இடைவேளையில்தான் கால்கள் தரையில் பரவுகின்றன. இப்படியாகத் திரைப்படம் நமக்குள் உருவாக்கிய புனைவுகளின் அடித்தளமான திரையரங்குகள் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இன்றைய மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் அவற்றுக்கு மாற்றாகுமா என்பதைக் காலம்தான் பதிலாகச் சொல்லும்.

(உங்கள் நூலகம் செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)

Pin It