தமிழகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிஜேபியின் பினாமியான எடப்பாடி அரசால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அதிமுக என்ற பிற்போக்கு பாசிசக் காட்சி இன்னும் சாமானிய மக்கள் மத்தியில் தனக்கு ஓட்டு கிடைத்துக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் எம்.ஜி.ஆர் என்ற ஊதி பெரிதாக்கப்பட்ட போலி பிம்பத்தின் புனித நினைவுகளை திரும்ப அந்தச் சாமானிய மக்கள் மத்தியில் பதிய வைக்கவும், அதன் மூலம் மக்கள் மத்தியில் கடும் வெறுப்புக்கு உள்ளாகி இருக்கும் தங்கள் அரசுக்கான ஆதரவை வலுப்படுத்திக் கொள்ளவும் முயன்று வருகின்றது. எம்.ஜி.ஆர் இறந்து வரும் டிசம்பர் 24 ஆம் தேதியுடன் முப்பது ஆண்டுகள் முடிவடையப் போகின்றது. எம்.ஜி.ஆரின் சமகாலத் தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இப்போதுள்ள தலைமுறைவரை எம்.ஜி.ஆரை பாரிவள்ளல் அளவுக்கு தர்ம சிந்தனை படைத்த நபர் என்றும், ஏழைகளின் வறுமைத் துயர் துடைப்பதற்கென்றே தன் வாழ்நாளை அர்பணித்துக்கொண்டவர் என்றும் இன்றும் கருதிக்கொண்டு இருக்கின்றார்கள்.

bimbachiraiஇப்படி எம்.ஜி.ஆரைப் பற்றி மக்கள் மத்தியில் ஆணித்தரமாக உருவாக்கி பராமரிக்கப்படும் பிம்பம் உண்மையில் அவருக்குப் பொருத்தமானதுதானா? அதில் ஏதாவது குறைந்தபட்ச நியாயமாவது உள்ளதா? என நம்மில் இன்னும் எம்.ஜி.ஆரை புனிதராகக் கருதிக் கொண்டிருக்கும் பலர் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. அப்படி ஆய்வுக்கு உட்படுத்தி திரை எம்.ஜி.ஆருக்கும், நிஜ எம்.ஜி.ஆருக்கும் உள்ள பாரிய பிம்ப இடைவெளியை நாம் புரிந்து கொள்ள விரும்புவோம் என்றால், நமக்கு மிகச்சிறந்த கையேடாக மறைந்த தோழர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்கள் ஆங்கிலத்தில் (THE IMAGE TRAP) எழுதி தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் 'பிம்பச் சிறை' என்ற நூல் உதவும். இப்போது இந்த நூலின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த நூலின் கருத்துகள் இந்தக் காலத்துக்கும் பொருந்துவதுதான். இது எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையையும், அதன் வழியே அவர் கட்டமைத்த பிம்பத்தையும் பற்றிய ஆய்வாக இருந்தாலும் இதே ஆய்வை நாம் ரஜினிக்கும், கமலுக்கும், விஜய்க்கும் இன்னும் அரசியலில் கால் ஊன்ற சினிமாவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த நினைக்கும் அனைவரைப் பற்றியும் தெளிவாக உணர்ந்துகொள்ள இந்நூல் நமக்கு மிகவும் உதவும்.

எம்.ஜி.ஆர். திரையில் தனக்கான பிம்பத்தை திட்டமிட்டு மிகத் தெளிவாக கட்டமைத்தார் எனினும், அவர் கட்டமைத்த பிம்பத்தை எப்படி தமிழக மக்கள் மனதளவில் ஏற்றுக்கொண்டு எம்.ஜி.ஆரை தங்களில் ஒருவராக, தங்களை மீட்க வந்த மீட்பாராக கருதினார்கள் என்பதை சமூகத்தின் சிந்தனையில் ஏற்கெனவே படிந்திருக்கும் மரபுக்கூறுகளில் இருந்து தோண்டி எடுப்பதில் தான் பாண்டியனின் ஆய்வு தனித்து நிற்கின்றது. நிச்சயம் இது ஓர் அசாத்தியமான உழைப்பை தனக்குள் பொதிந்துவைத்திருக்கும் ஆய்வு நூல். நிச்சயம் இந்த நூலை நீங்கள் வாசித்து முடித்த பிறகு ஒட்டுமொத்த திரை பிம்பங்களைப் பற்றியும் நீங்கள் மறு பரிசீலினை செய்ய நேரும் என்பதில் மாற்றுக் கருத்துகள் கிடையாது.

எம்.ஜி.ஆரை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ள அடிப்படைக் காரணமாக இருந்தது தமிழ்நாட்டில் ஏற்கெனவே நிலவிவந்த வீர மரபுக் கதைகளை கொண்டாடும் பழக்கம் என்று பாண்டியன் குறிப்பிடுகின்றார். சின்னதம்பி, சின்னநாடன், மதுரைவீரன், முத்துப்பட்டன், காத்தவராயன் போன்றவர்களைப் பற்றிய வீர மரபு கதைப் பாடல்கள் தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களில் கொண்டாடப்பட்டு வந்ததையும், ஆனால் அதன் தீவிர சாதி எதிர்ப்பு வடிவம் காரணமாக ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான கதைப் பாடலாக அவை மாறாமல் இருந்ததையும் இந்த இடத்தில்தான் மேல்தட்டு ஆதிக்க சாதிகளால் எம்.ஜி.ஆர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும் பாண்டியன் சரியாகவே சுட்டிக்காட்டுகின்றார். ஆனால் வீரமரபு கதைப் பாடல்களின் தீவிரத்தன்மை நீக்கப்பட்ட, நீர்த்துபோகச் செய்யப்பட்ட எம்.ஜி.ஆரின் வீரக் கதைகளில் சாமானிய எளிய மக்கள் தங்களைப் பறிகொடுத்து, அவரை தங்கள் வீர நாயகனாக ஏற்றுக் கொண்டதாகவும் தரவுகளுடன் நிறுவுகின்றார்.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் வரும் நிலபிரபுத்துவ எதிர்ப்பு, முதலாளிய எதிர்ப்பு, பெண்களை தெய்வங்களாகப் போற்றுவது போன்றவை எந்த அளவிற்குச் சமூகத்தில் ஏற்கனவே நிலவும் ஆதிக்க சக்திகளையும், ஆணாதிக்க வெறியையும் நிலை நிறுத்தின என மிக விரிவான தரவுகளுடன் நிரூபிக்கின்றார். “தொழிலாளி திரைப்படத்தில்(1964) ஒரே கையெழுத்தில் தன்னுடைய தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பும் தன்னுடைய பேருந்து முதலாளி, இறுதியில் தொழிலாளர் கூட்டுறவுக்குத் தலைமை தாங்குகின்றார். படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் முதலாளிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பும் பொழுது, எம்.ஜி.ஆர் பொறுமையாக அவர்களைத் திருத்தி ‘முதலாளி ஒழிக' என்று கோஷம் போடாமல் அவரைச் சீர்திருத்த பாருங்கள்!" என்கின்றார். தன்னுடைய எல்லாச் சொத்துக்களையும் இழந்து தொழிலாளர் கூட்டுறவில், இணைந்த பின்னும் எம்.ஜி.ஆர் தொழிலாளிக்கு உரிய பழைய நன்றியோடு அவரை முதலாளி என்றே அழைக்கிறார்”.

தன்னுடைய திரைப்படங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பார்ப்பனிய கருத்தியலை ஆணித்தரமாக வலியுறுத்தும் எம்.ஜி.ஆர் நிஜவாழ்க்கையில் எப்படி அடுத்தவர் மனைவியை அபகரிக்கும் நபராக இருந்தார் என்பதை பாண்டியன் சுட்டிக்காட்டுகின்றார். எம்.ஜி.ஆர்-ஜானகியை திருமணம் செய்துகொள்ளும்போது ஜானகியின் கணவர் உயிரோடு இருந்தார் என்பதையும், எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதியும் உயிருடன்தான் இருந்தார் என்பதையும் பதிவு செய்கின்றார். அப்படி அடுத்தவர் மனைவியை அபகரிக்கும் எம்.ஜி.ஆர் தன்னுடைய திரைப்படங்களில் கற்பைப் பற்றி தமிழ்ச்சமூகத்திற்கு வகுப்பெடுத்தது கேலிக்கூத்தானது ஆகும். இன்று திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி மேடைகளில் மிக தரக்குறைவாக விமர்சனம் செய்யும் அதிமுகவினர் தனது கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் இந்த யோக்கியதையை பற்றி நினைத்துப் பார்ப்பது கூட கிடையாது. அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் தன்னுடைய திரைப்படங்களில் எந்த விதவைப் பெண்களையும், ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களையும் எப்போதுமே திருமணம் செய்துகொண்டதாக காட்சி வைத்ததே கிடையாது என்பதையும் பெரும்பாலான திரைப்படங்களில் அடங்காத பெண்களை அடக்கி அவர்களை தன்னை காதலிக்கும் படி செய்து, அவர்களுக்கு கணவனுக்கு அடங்கிய மனைவியாக எப்படி நடந்துகொள்வது என்ற ஆணாதிக்க கருத்தியலையே அவர் வற்புறுத்தியதையும் பல்வேறு காட்சிகளில் இருந்தும் பாடல்களில் இருந்தும் எடுத்துக்காட்டுகின்றார்.

விவசாயிகளின் தோழனாக பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் வாகைக்குளத்தில் விவசாயிகளைச் சுட்டுக் கொன்றதையும், மீனவனின் நண்பனாக படகோட்டியில் நடித்த எம்.ஜி.ஆர் அப்பாவி மீனவர்களை சுட்டு வீழ்த்தியதையும் , வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கொடுமையான நிலச்சுவான்தார்களை எதிர்த்துப் போராடிய மார்க்சிய- லெனினிய அமைப்பைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் 22 பேரை துடிக்க துடிக்க என்கவுன்டர் செய்ததையும், ஒரு வருடத்திற்கும் மேலே முதல் தகவல் அறிக்கையே தராமல் 1.5 லட்சம் மக்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்ததையும் குறிப்பிட்டு எம்.ஜி.ஆரின் பாசிச குணத்தை பாண்டியன் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

இது மட்டுமில்லாமல் எம்.ஜி.ஆர் எப்படி தன்னுடைய வயதான தோற்றத்தையும், சொட்டை தலையையும் மறைக்க மிக மோசமான அடாவடித்தனத்தில் ஈடுபட்டார் என்பதையும் குறிப்பிடுகின்றார். “கோயம்புத்தூரில் 1981-ல் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு மாணவர் தலைவர் அவருக்கு மாலையிட, அது அவரின் தொப்பியை சற்றே சாய்த்துவிட்டது. எம்.ஜி.ஆர் தன்னுடைய ஆத்திரத்தை மறைக்க முடியாமல், பொதுமக்களின் முன்னால் அந்த இளைஞரை மீண்டும், மீண்டும் அறைந்தார். கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தை விட்டு தொப்பி, கண்ணாடி இல்லாமல் சட்டை அணியாமல் வெளியே வந்த எம்.ஜி.ஆரை ஒரு புகைப்படக்காரர் அப்படியே புகைப்படமெடுத்தார். எம்.ஜி.ஆரின் பாதுகாவலர்கள் அவரை இழுத்து, கேமராவிலிருந்து நெகட்டிவை எடுத்து அதை வெயிலில் காட்டி நாசப்படுத்தினார்கள்”. இப்படியாக “எப்பொழுதும் அணிந்திருக்கும் விக், விலங்கு முடிகளால் ஆன தொப்பி ஆகியவை பாரம்பரியக் காரணங்களாக அறியப்பட்ட ஆண்மையின்மை மற்றும் முதுமையின் அடையாளமான அவருடைய வழுக்கைத்தலையை மறைத்தன. அவரின் கண்களைச் சுற்றி விழுந்த சுருக்கத்தை அவர் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி மறைத்தது. மக்கள் முன் எப்பொழுதும் அதிக ஒப்பனை அணிந்தவாறே அவர் தோன்றினார்”.

இதை அப்படியே மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நாம் பொருத்திப் பார்க்கலாம். ஜெயலலிதாவின் வயது முதுமையால் சுருங்கிப்போன முகத்தையும் நரைத்துப்போன தலையையும் அவர் உயிருடன் இருந்த போதும் யாரும் பார்த்தது இல்லை, அவர் இறந்த பின்னரும் யாரும் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு தன்னுடைய பிம்பத்தை கடைசி வரை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தங்களின் வயது முதுமையால் ஏற்பட்ட இயல்பான தோற்றத்தைக் கூட பொதுமக்கள் பார்த்து தங்களை குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்று நினைத்த இவர்களைத்தான் பொதுமக்கள் தங்களின் ‘இதய தெய்வமாக’ கருதினார்கள், கருதிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதும் மிகவும் வருத்தத்திற்கு உரியது.

எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் ஏழை எளியமக்களின் பொற்காலமாக சித்தரிக்கும் மோசடிகள் இன்றளவிலும் நடைபெற்று வருவதை நம்மால் பார்க்க முடிகின்றது. திரைப்படங்களில் மது அருந்துவதை ஒழுக்கக்கேடாக கருதிய எம்.ஜி.ஆரின் ஆட்சியில்தான் மது ஆறாக தமிழ்நாட்டில் ஓடியது. மாநிலத்தின் மொத்த கலால் வரியில் மதுவின் மூலம் மட்டும் 13.9 சதவீதம் 1980-1985 காலகட்டத்தில் கிடைத்துள்ளது. இந்த கலால் வரியில் 80 சதவீதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக பயன்படுத்தும் நாட்டுச்சரக்குகளான பட்டைச்சாராயம் மற்றும் கள் மூலமே கிடைத்துள்ளது. 1981-82 இல் 110 கோடியாக இருந்த வருமானம் 1984-85 காலகட்டத்தில் 202 கோடியாக உயர்ந்துள்ளது. அது மட்டும் அல்லாமல் விவசாயத் துறை, தொழிற்துறை என்று எதுவுமே வளர்ச்சியடையவில்லை. வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட்ட மானியம் கூட பணக்கார விவசாயிகள், பம்ப்செட் உரிமையாளர்களையுமே சென்று சேர்ந்தது அவர்களும் கூட அதிமுகவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். 1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத்தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் ஒதுக்கிய நிதியில் 17.04 லட்சம் நிதியை செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியை தேவையில்லை என்றும் திருப்பி செலுத்தி தான் திரைப்படத்தில் மட்டுமே அடிமைகளை மீட்டெடுக்கும் மீட்பான் என்பதை எம்.ஜி.ஆர் நிரூபித்தார்.

இப்படிப்பட்ட எம்.ஜி.ஆரைத்தான் இன்னும் சாமானிய மக்கள் தங்களுக்கான தலைவராகக் கொண்டாடி வருகின்றனர். எம்.ஜி.ஆர் தன்னைச் சுற்றி திட்டமிட்டு கட்டமைத்த பிம்பம் அவர் இருந்த போதும் அவருக்கு ஓட்டுகள் பெற்றுத்தர பயன்பட்டது, அவர் இறந்த பின்பும் அவர் உருவாக்கிய கட்சிக்கு ஓட்டுக்களை பெற்றுத் தந்து கொண்டு இருக்கின்றது. ஆளும் வர்க்கம் பட்டாளி மக்களின் எதிர்ப்பில் இருந்து தங்களையும் தங்களை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் பெரும்முதலாளிகளையும் காப்பாற்ற செய்யும் சில சில்லரை சலுகையைத்தான் எம்.ஜி.ஆரும் செய்தார். சத்துணவு திட்டம் விரிவாக்கம் போன்றவை அப்படிப்பட்டதுதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளும் திராணியற்ற அரசியல் அறிவற்ற மக்கள் எம்.ஜி.ஆர் திரையில் செய்தது போலவே தன்னுடைய சொத்துக்களை எல்லாம் ஏழைகளுக்கு தந்து ஏழைகளுக்காகவே வாழும் தர்ம பிரபுவாகவே அவரை எண்ணினர். மக்களின் இந்த முட்டாள் தனம் தான் அவரை கடவுளைப் போன்று வணங்க வைத்தது. அவருக்கு கோயில் எல்லாம் கட்ட வைத்தது. ஏற்கெனவே அவர்களிடம் இருந்த மனிதரை கடவுளாக வணங்கும் பழக்கும் எம்.ஜி.ஆர் போன்ற போலிகளை, ஏழைகளை நம்ப வைத்து கழுத்தறுக்கும் மோசடிப் பேர்வழிகளை கடவுளாக வணங்க அவர்களை இட்டுச்சென்றது.

இந்தப் புத்தகம் திராவிட இயக்க பிம்ப அரசியலை புரிந்துகொள்ள உதவுவதோடு எப்படி திட்டமிட்ட முறையில் மக்களிடம் வலிந்து பிம்ப அரசியல் திணிக்கப்படுகின்றது என்பதையும் மிக விரிவாக அலசி ஆராய்கின்றது. இந்தப் புத்தகம் ஒவ்வொரு பெரியாரிய, மார்க்சிய இயக்கத் தோழர்களும் படிக்க வேண்டிய புத்தகம் ஆகும். காரணம் எப்படி பார்ப்பனக் கருத்தியலை தூக்கிப்பிடித்த பாரதியை விமர்சனமே இல்லாமல் சி.பி.எம் ஏற்றுக்கொண்டு கொண்டாடுகின்றதோ, அதே போல எம்.ஜி.ஆர் என்ற பாசிஸ்டை எந்த விமர்சனமும் இல்லாமல் பெரியார் கொள்கைகளை கடைபிடிப்பதாய் சொல்லும் பல பேர் கொண்டாடி வருகின்றனர். இரண்டுமே நேர்மையற்ற பிழைப்புவாதிகளின் செயல் என்பதால் இதைக் குறிப்பிடுகின்றேன். திரைப்பட கதாநாயகர்களின் முகத்தில் பெரியாரையும், மார்க்சையும் தேடிக்கொண்டு இருக்கும் சீரழிந்து போன சிந்தனைவாதிகளும் படிக்க வேண்டிய புத்தகம். இன்றைய காலத் தேவைக்கு மிக முக்கியமான புத்தகம் என்பதால் தோழர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தை வாங்கி நிச்சயம் படிக்க வேண்டும்.

கடைசியாக… இந்தப் புத்தகம் வெளிவந்து ஏறக்குறைய 24 ஆண்டுகள் கழித்தே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என நினைக்கும் போது மிக வேதனையாக உள்ளது. இந்தப் புத்தகத்தை எழுதிய எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழர் என்பதும் அதைவிட வேதனையானது. அறிவுஜீவிகள் எல்லாம் தங்களுடைய படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதினால்தான் புகழ் கிடைக்கும் என நினைப்பது ஏற்கெனவே பிற்போக்குக் கருத்தியலை மட்டுமே டன் கணக்கில் வைத்திருக்கும் தமிழுக்கு அழிவைதான் கொண்டுவரும். ஆங்கிலத்தை நன்றாகப் படித்து புரிந்துகொள்ள முடிந்தவர்கள் மட்டுமே இது போன்ற புத்தகங்களை படிக்க முடியும் என்றால், ஆங்கிலத்தை பெரும்பாலும் சாராமல் தமிழில் கிடைக்கும் தரவுகளை மட்டுமே நம்பி எழுதுபவர்கள் என்ன செய்வது?

மிக சிறப்பாக பூ.கொ.சரவணன் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தை பிரக்ஞை பதிப்பகம் வெளியிட்டு இருக்கின்றது. விலை ரூ.225. அவர்களின் தொலைபேசி எண்:044-23342771, 9940044042, 9841494448

- செ.கார்கி

Pin It